மே தினம் : வாகன ஓட்டுநர்கள் – டெக்னீஷியன்கள் சங்கத் தொழிலாளர்களின் சூளுரை !

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் சார்பில், சென்னை சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் சார்பில், சென்னையில் சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தோழர் இல.தெய்வீகன் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் இல.பழனி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மே தின வரலாறு குறித்தும் அதன் தேவை இன்றுவரை உலகம் முழுவதும் இருந்து வருவதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசிய தோழர் இல.பழனி, மேலும், தொழிலாளர் பிரச்சினைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் துறைசார்ந்த விசயங்களிலிருந்து முதலாளி, போலீசு, தொழிலாளர் துறை, நீதிமன்றம் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை பல்வேறு ஆதாரங்களிலிருந்து அம்பலப்படுத்தினார். மேலும், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல; மாணவர்கள், விவசாயிகள், என உழைக்கும் மக்கள் அனைவருக்குமே இந்த அரசமைப்பு எதிரானதாக அமைந்திருப்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அனைவரும் தனியார் சுயநிதி பள்ளிக் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்கள். வரம்பற்ற வேலை நேரம்; உரிமைகள் ஏதுமற்ற நவீன கொத்தடிமைகளாக நிர்வாகத்தால் நடத்தப்படுவதற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பியவர்கள். சங்கம் அமைத்ததற்காக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள்; வேலை பறிக்கப்பட்டவர்கள்.

வேலை பறிப்பு மற்றும் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், நிர்வாகம் நடத்திய உள்துறை விசாரணைகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைகள், நிர்வாகத்தின் கையாளாகவே நின்று அவர்கள் வழங்கிய தொழிலாளர் விரோத தீர்ப்புகள்… உரிமைக்காகத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் போது போலீசும், நீதித்துறையும் தொழிலாளர்களை கையாண்ட விதம் என நுனி முதல் அடிவரை அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதை தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்தவர்கள்.

தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்கி, புதிய ஜனநாயகத்தைப் படைக்க மே நாளில் சூளுரைத்தனர் இத்தொழிலாளர்கள்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க