மே நாளை வேதாரண்யம் வட்டார விவசாயிகள் போராட்ட தினமாகக் கடைபிடித்தனர். காவிரியில் நீரில்லை என்பது மட்டுமல்ல, நூறு நாள் வேலையும் இல்லை என்ற காரணத்தால் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இப்பகுதி மக்களை போராட்டத்துக்கு ஒன்று திரட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.

ஆதனூர், அண்டர்காடு, கோவில்தாழ்வு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டனர். “விவசாயிகளை சாகடிக்காதே! காவிரி மேலாண்மை வாரியம் அமை! நூறு நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்து! மீத்தேன் திட்டத்தை கைவிடு !” என்ற முழக்கங்களுடன் வேதாரண்யம் கடைவீதியில் திரண்டனர் மக்கள்.

திரண்டு வரும் மக்களை அச்சுறுத்துவதற்கு ஏழு வாகனங்களில் போலீசு தயாராக நின்ற போதிலும் மக்கள் பின்வாங்கவில்லை. பேரணியின் முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டது. ”சாலைமறியல் வேண்டாம். அதிகாரிகள் வந்திருக்கின்றனர் . பேச்சுவார்த்தை நடத்துங்கள்” என்றனர் போலீசு அதிகாரிகள். அதை ஏற்க மறுத்த பெண்கள் சாலையை மறித்து போராடத் தொடங்கினார்கள். ”சாலை மறியல் செய்தால் கைது செய்வோம்” என்றார் ஒரு போலீசு அதிகாரி. ”கைது பண்ணினா என்ன, கழுத்தையா அறுப்பே” என்று பெண்கள் பதிலடி கொடுத்தனர்.

சாலை மறியல் செய்தால் கைது செய்வோம் என்றார் ஒரு போலீசு அதிகாரி. கைது பண்ணினா என்ன, கழுத்தையா அறுப்பே என்று பெண்கள் பதிலடி கொடுத்தனர்.

தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைக்க, ”நீங்கள் மக்களிடம் நேரடியாகப் பேசுங்கள்” என்றார் அமைப்பாளர் தோழர் தனியரசு. “எல்லோருக்கும் நூறு நாள் வேலை கொடுக்க முடியாது நாற்பது பேருக்குத்தான் தர முடியும்” என்றார் அதிகாரி. ”ஒவ்வொரு தேர்தலுக்கும் 40 பேர் மட்டும் ஓட்டு போட்டால் ஒத்துக்கொள்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினார் ஒரு மூதாட்டி. ”4 நாள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் வேலைக்கு உத்தரவாதம் தருகிறோம்” என்று அவகாசம் கேட்டனர் அதிகாரிகள். “4 நாட்களுக்குள் வேலை கொடுக்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்கள் மக்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிப்பது பற்றியும், மீத்தேன் திட்டம் திணிக்கப்படுவதையும் விளக்கிப் பேசினர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல்:
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க