வடசென்னை பழைய வண்ணாரப் பேட்டை, தெருவுக்கு தெரு மக்கள் சிறு தொழிலில் தினக்கூலி வேலையில் மூழ்கி வாழ்கிறார்கள். அவர்களின் பணிச் சூழலும் உழைப்பின் கடுமையும் பார்ப்பவர்களுக்கே மூச்சு முட்டுகிறது.
ஏழைக் குழந்தைகள் முதல் தொழிலாளிகள் வரை விரும்பி சாப்பிடும் பட்டர் பிஸ்கட்டுகள் இங்கு மணக்க மணக்க சுடச்சுட தயாராகிறது. அந்த பிஸ்கட் அடுமனையை நீங்களும் பாருங்கள்…
நெய் பிஸ்கட், கிரீம் பிஸ்கட், சால்ட் பிஸ்கட், ராகி பிஸ்கட், முந்திரி பிஸ்கட், எள்ளு பிஸ்கட் என்று முப்பதுக்கும் மேற்பட்ட வகைவகையான பிஸ்கட்டுகள்.
இங்கு இருக்கும் தொழிலாளிகள் பத்து ஆண்டுகள் முதல் அறுபது ஆண்டுகள் வரை தொழில் அனுபவம் உடையவர்கள். பத்து பதினைந்து வயதில் தொழிலில் நுழையும் உழைப்பாளிகளின் குழந்தைகள். அறுபது வயதான பின்னும் அதே சுறுசுறுப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எடுபிடி வேலை செய்யும் ஹெல்பர்களாக இத்தொழிலுக்கு வருபவர்கள் முதலில் பிஸ்கட் காலி தட்டுகள், டின்களை அடுக்கி வைப்பவர்களாகவும் போகப்போக பிஸ்கட் மாவு மிக்சிங் கலையில் வல்லுநர்களாகிறார்கள். பின்னர் பிஸ்கட் அச்சு வடிப்பதில் கைதேர்ந்தவர்களாகவும் கடைசியில் ஓவன் ஆபரேட்டர்களாகவும் தொழிலில் உச்சத்தை தொடுகிறார்கள்.
இருநூறு டிகிரி உள்வெப்பத்தில் வைக்கப்படும் பதமான மாவு அடுத்த கால் மணிநேரத்தில் மொறு மொறு பிஸ்கட்டுகளாக உருமாறி, மணக்க மணக்க வெளியே வருகிறது.
பிஸ்கட் தயாரிப்பையும் அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் விளக்குகின்றனர் கேளுங்கள்…
பிஸ்கட்டுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் தரமான மைதா மற்றும் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் வனஸ்பதி. “குழைந்தைகள் பண்டம் என்பதால் இப்பொருட்களை நாங்கள் மிகவும் கவனமாக தயார் செய்வோம்.
இங்கு தயார் ஆகும் பிஸ்கட்டுகள் மறுநாளே கடைக்கு சென்று விடும். அதிகபட்சமாக ஒரு வாரத்தில் விற்றுத்தீர்ந்து விடும். மீண்டும் புது பிஸ்கட்டுகள் தான் உங்களுக்கு கிடைக்கும். ஓல்டு ஸ்டாக் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இரண்டு நாளைக்கு ஒருமுறை நாங்கள் சில்லைறை கடைகளுக்கு சரக்கு போட்டுக்கொண்டே இருப்போம். அதனால் குழந்தைகளுக்கு இதனை நீங்கள் நம்பிக் கொடுக்கலாம்.
ஆனால் பிராண்டு பெயர்களில் வரும் குட்டே , மில்க் பிக்கி, பிளாக் மேஜிக், மேரி பிஸ்கட் அனைத்தும் குறைந்தது பத்து நாட்களுக்கு பிறகு தான் தயாரிப்பில் இருந்து வெளியே வருகிறது. அந்த பிஸ்கட் விற்று தீருவதற்கு குறைந்தது ஒரு மாதமாகும்.
அதன் பேக்கிங் கண்ணை பறிக்கும் வண்ணம், குழந்தைகளின் மனசை தூண்டுகிறது. அதற்காக டி.வி. விளம்பரம், நடிகைகள் விளம்பரம் என்று பணத்தை கொட்டுகிறார்கள்.
கொடுக்கும் பிஸ்கட்டை எடை குறைத்து கொடுத்து விளம்பர செலவை சாதுர்யமாக எடுத்து விடுகிறார்கள்.
உதாரணத்திற்கு பத்து ரூபாய்க்கு எங்கள் பட்டர் பிஸ்கடின் எடை 120 கிராம் இருக்கும். ஆனால் அதே பத்து ரூபாய்க்கு அவர்கள் எழுபது கிராம் பிஸ்கட் தான் கொடுப்பார்கள்.
அதில் அளவுக்கு அதிகமாக கோக்கோ பவுடரும் மற்றும் சர்க்கரை பாகும் சேர்த்து குழந்தைகளின் நாக்கை தூண்டுகிறார்கள்.
இன்னும் ஒவ்வொரு பிராண்டு பிஸ்கட்டும் அவர்களுடைய தனிப்பட்ட பார்முலா என்று பல ரகசிய கலவைகளை சேர்க்கிறார்கள். அதனுடைய ரகசியம் யாருக்கும் தெரியாது.
குழந்தைகள் இப்பொழுது சோற்றையும், காய்கறியையும் வேப்பங்காயாக ஒதுக்கும் ரகசியம் அந்த தனிப்பட்ட பார்முலா தான்.
நாங்கள் இப்பொழுது பிராண்டு பிஸ்கட்டோடு மார்க்கெட்டில் நிற்க முடியாமல் குறைந்த முதலீட்டைக்கொண்டு தள்ளாடுகிறோம். இருந்தாலும் சோர்ந்து விடாமல் தொழிலை காப்பாற்ற புதுப்புது வியாபார உத்திகளை கையாளுகிறோம்.
இப்பொழுது “ஜார் பிஸ்கட்டுகள்” அறிமுகப்படுத்துகிறோம். தினமும் பழைய கண்ணாடி பாட்டில்களில் அடுக்கி வைத்துவிட்டு வருவதற்கு பதில் இப்பொழுது ஒவ்வொரு முறையும் பிஸ்கட்டுடன் புது ஜார்களில் கொடுக்கிறோம்.
சரக்கு தீரும் வரை பளபளப்பாக இருப்பதால் போட்டியில் நிற்க முடிகிறது. ஆனால், எப்படியும் நாங்கள் பிழைக்கக் கூடாது என்று மோடி புதுபுது உத்திகளை கொண்டு எங்களை போண்டியாக்குகிறார்.
ஜி.எஸ்.டி., ரூபாய் நோட்டு செல்லாது என்று பல ரூபத்தில் எங்களை தாக்குகிறார்கள். அவர் இந்த நாட்டு பிரதமர் என்று சொல்லிக்கிகொண்டு கார்ப்பரேட்டுகளின் சேல்ஸ் ரெப்பாக வேலை செய்கிறார். என்ன செய்வது..” என சொல்லிக்கொண்டே சிரிக்கிறார்.
– வினவு புகைப்பட செய்தியாளர்.
// இந்த நாட்டு பிரதமர் என்று சொல்லிக்கிகொண்டு கார்ப்பரேட்டுகளின் சேல்ஸ் ரெப்பாக வேலை செய்கிறார். என்ன செய்வது..” என சொல்லிக்கொண்டே சிரிக்கிறார்.// … அவர் மட்டுமா சிரிக்கிறார் … இந்த நாடே சிரிக்கிறது …!!!
மிக அருமையான புகைப்படம் கட்டுரை வாழ்த்துக்கள் நண்பரே