காவிரி உரிமைக்காக 10.05.2018 அன்று திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடைவிதித்துள்ளது மாநகர காவல்துறை.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், மோடி அரசும் கூட்டு சேர்ந்து அடுத்தடுத்து தமிழகத்துக்கு எதிராக அநீதி இழைத்து வருகிறது. உலகுக்கே உணவளித்த டெல்டா உழவர்களை தண்ணீருக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இப்பொதுக்கூட்டத்தை எவ்வாறேனும் தடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்த காவல்துறை, 23 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தந்து  விளக்கம் கேட்டது. உதாரணத்திற்கு சில:

  1. கலை நிகழ்ச்சியில் பாடப்பட இருக்கும் பாடல்களில் பாடல் வரிகள் விவரம் தெரிவிக்கவும்.
  2. எவ்வளவு நபர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்? ஆண்கள் மற்றும் பெண்களின் தோராய எண்ணிக்கை எவ்வளவு? அவர்களது பெயர்கள் மற்றும் முகவரியினை தெரிவிக்கவும்.
  3. வெளிமாவட்டங்களிலிருந்து எவ்வளவு பேர் (ஆண், பெண்) எத்தனை வாகனங்களில் வந்து கலந்துகொள்வார்கள்? அவ்வாறு வரும் நபர்களில் முக்கிய பிரதிநிதிகளின் பெயர், முகவரி தெரிவிக்கவும் மற்றும் அவ்வாறு வரும் வாகனங்களின் பதிவு எண் என்ன? எந்த மாதிரியான வாகனங்கள் என்கிற விவரம் தெரிவிக்கவும்.

இவை ஜனநாயக விரோதமானது என்றாலும் பதிலளிக்காவிட்டால் அதையே காரணம் காட்டி பொதுகூட்டத்துக்கு அனுமதி மறுப்பார்கள் என்பதால் ஒரு பதிலை தயாரித்து ஒப்படைத்தோம். அதன் பிறகும் பதிலளிக்காமல்  கடைசி நேரத்தில் 08.05.18 இரவு 10 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் அளித்தது காவல்துறை.

அதில், “கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான, முழுமையான பதில் அளிக்கப்படவில்லை. தங்கள் அமைப்பால் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. தாங்கள் அனுமதி கோரியுள்ள பொதுக்கூட்டத்தின் கோரிக்கையான ‘காவிரி உரிமைப் பற்றிய விளக்கம்’ சம்மந்தமாக மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. தங்கள் அமைப்பின் மீது பதியப்பட்ட வழக்குகளில் இருந்து தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது. எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக தாங்கள் கோரியுள்ளபடி பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

குற்றவாளி ஜெயாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வந்ததற்காக 3 கல்லூரி மாணவிகளை கொளுத்திய அந்த கட்சியின் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக சொல்லி எமக்கு பேச்சுரிமை மறுக்கப்படுகிறது.

போலீசு பாதுகாப்போடு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியுமென்றால் ஓட்டுக்கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்கள் கிரிமினல் குற்றவழக்கு பின்னணியுடன் இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்க அனுமதி வழங்குவது எப்படி? சொத்துக் குவிப்பு வழக்கின் A1 குற்றவாளி ஜெயாவை, அவர் குற்றவாளி எனத்தெரிந்த பின்பும் 3 முறை ஆட்சியில் அமர்த்தி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க துணைபோனது எப்படி? தற்போது, அந்த கிரிமினல் குற்றவாளியின் புகைப்படத்தை சட்டசபையில் திறப்பதற்கும், மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கும் அனுமதி வழங்கியது எப்படி? ரத்தம் குடிப்பதற்காகவே ரத யாத்திரை நடத்தும் இந்துத்துவ கும்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது எப்படி? ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதித்துள்ளனரே எப்படி?

இந்த அடிமைக் கும்பல் ஆட்சியில் நீடிப்பதே சட்டவிரோதம். இந்த சட்டவிரோத கும்பல்தான் போராடுபவர்களினால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிறது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது என நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

இந்த சட்டவிரோத ஆட்சியை தக்க வைக்கவே தமிழகத்தின் உரிமைகளை காவிகளின் காலடியில் அடகுவைக்கிறது அடிமை எடப்பாடி கும்பல். தான் அடிமையானதோடு மட்டுமல்லாமல் தன்மானத்திலும், சுயமரியாதையிலும், சமூக நீதியிலும் முன்மாதிரியாகத் திகழும்  தமிழகத்தையும் சேர்த்து அடிமையாக்க எத்தனிக்கிறது. மோடி – உச்ச நீதிமன்ற கூட்டுச்சதியின் மூலம் தமிழகத்தின் உரிமைகளை பறித்துவிட்டு, அதை எதிர்த்துப் பேசவும், போராடவும் தடைவிதிப்பது பாசிச ஆட்சியின் வருகையை உணர்த்துகிறது.

ஜல்லிக்கட்டில் டெல்லியை பணிய வைத்தோம். ஆனால், காவிரி, நீட், கெயில், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்… என அனைத்திலும் டெல்லியிடம் தமிழகத்தை மண்டியிடு என நிர்ப்பந்திக்கிறது ஒரு எடுபிடி கும்பல். நாம் என்ன செய்யப் போகிறோம்?

தகவல்:
மக்கள் அதிகாரம் – திருச்சி
9445475157.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க