ஜார்கண்ட் மாநிலத்தில், மேற்கு வங்கத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள பாகூர் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் 16 வயதே ஆன இளம்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக 19 வயது நிரம்பிய ஒரு இளைஞன், வீட்டில் யாருமில்லாதபோது அங்கு சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்ததோடன்றி தீவைத்து எரித்தும் விட்டான்.
70 சதவீத தீக்காயங்களுடன் மேற்குவங்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் இப்போது தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்.
கடந்த வெள்ளிக்கிழமை (04.05.2018 ) அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இதே ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் 16 வயதான மற்றொரு இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

சத்ரா மாவட்டத்தில் 03.05.2018 வியாழன் அன்று 16 வயதான அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கியது ஒரு கும்பல். இதற்குப் பின் நடந்த கிராம பஞ்சாயத்தில், அந்தக் கிராம பஞ்சாயத்தார் கொடுத்த தீர்ப்பு என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50,000 இழப்பீடும் கூடுதலாக 100 தோப்புக்கரணமும் என்பது தான். இந்த தண்டனையைக் கூட குற்றவாளிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆத்திரமடைந்த அந்த பாலியல் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைத் தாக்கியது மட்டுமன்றி தனியாக வீட்டிலிருந்த அந்தப் பெண்ணை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றுள்ளனர். இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி ஆசிஃபா, உன்னாவ் என்று பெண்களுக்கெதிராக பல வன்கொடுமைகள் நடந்தபோதிலும் பெயரளவுக்குச் சட்டங்களை இயற்றிவிட்டு, பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அறிக்கை விட்டுவிட்டு அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை அப்படியே அமுக்கப்பார்க்கிறது மோடியின் அரசு.
இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு 40,000 பாலியல் குற்ற வழக்குகள் பதியப்படுகின்றன என்கிறது புள்ளிவிவரம். உண்மை இதைப்போல நூறு மடங்கிற்கும் அதிகமாகவே இருக்கும்.
சிறுபான்மை மதத்தினர், ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடி மக்கள் ஆகியோர் மட்டுமின்றி, பெண்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பனிய பாசிசத்தின் கருத்து. இந்தக் கருத்தை பல்வேறு வடிவங்களில் சமூகம் முழுவதிலும் பரப்புகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
மோடியின் மேக் இன் இந்தியா படுதோல்வியடைந்து விட்டது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பார்ப்பனிய பிற்போக்கு கருத்துக்களை சமூகம் முழுவதும் சங்க பரிவாரம் பரப்புவதால், ரேப் இன் இந்தியா உலக சாதனை படைத்துவிடும்.
– வினவு செய்திப் பிரிவு
மேலும் படிக்க…
India teen fights for life after being raped, set on fire: police
Why do they cover the face of criminals?