தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்தும் அதிகாரவர்க்கத்தின் திமிர்த்தனமான அறிக்கைகள் குறித்தும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர் சென்னைவாசிகள்
பன்னீர்செல்வம் – கட்டிட மேஸ்திரிதூத்துக்குடியில 100 நாளு போராட்டம் பண்ணும்போது இந்த மந்திரிகளும் அதிகாரிகளும் ஏசி ரூம்ல கல்லாக்கட்டிக்கினு உக்காந்திருந்தானுங்க..
போராட்டம் வன்முறைக்குப் போயிடுச்சி… சுட்டோம்.. னு சொல்றானுங்க. நாளைக்கு நம்மளுக்கும் இதே கதிதான். ரேஷன் இல்ல. தண்ணி இல்ல, கரண்ட்டு இல்லனு போராடுனாலும் சுடுவானுங்க
தயாள குமார் – சினிமா கார்பெண்டர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிச்சிட்டு எதுக்கு இருக்குறானுங்க.. சுடுறதுக்கா? ஸ்டெர்லைட்டால மக்களுக்கு என்ன பிரச்சினைன்னு பாத்து அவங்களுக்கு வழிகாட்ட வேண்டிய வேலையிலதான அவனுங்க இருக்கானுங்க? சுட்டுட்டு திமிரா பேசுறானுங்க.. இவனுங்க அண்ணனையும் தம்பியையும் சுட்டா விட்றுவானுங்களா? ஜனங்க அடிமை மாதிரி கல்கூட எடுத்து வீசாத சாவனுமா?
சரவணன் – டப்பிங் ஆர்ட்டிஸ்ட்மாவோயிஸ்ட்டு ஊடுருவிட்டாங்கன்னு சொல்றான். நீ சரியில்லன்னா, அவுங்க வராங்க என்ன தப்பு? போலீசு சுட்டுக் கொன்னவங்க எல்லாம் வாலிப பசங்க.. எதிர்கால சந்ததிகள். குறிபாத்து கொலை பண்றானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துலயும் இதுதான் பண்ணாங்க. எதிர்கால தமிழகம் அடிமைகளா வாழனும்னு திட்டம் போட்டு செய்யுறானுங்க. இவ்வளவு படுகொலை நடந்தபிறகும் எல்லா எதிர்க்கட்சியும் டிராமா பண்றாங்க.. வெறும் அறிக்கையும் அடையாளப் போராட்டமும் விடுறாங்க.
மணி – டீக்கடைக்காரர்:
ஸ்டெர்லைட்டு மண்ணுல எதிர்காலத்துல யாரும் இருக்கக்கூடாது. அந்த ஆலையைத் தவிர 10 வருசத்துக்கு பிறகு எதுவும் இருக்காது. அதான் அவனுங்க திட்டம். ”144 தடையிருக்கு.. யாரும் வீட்ட விட்டு வெளிய வராதீங்க”ன்னு மைக்குல சொல்லிட்டு உள்ள இருக்கவங்களையும் வீடு பூந்து சுடுறான். யார ஏமாத்தறான்?
சின்னதம்பி – ஏசி மெக்கானிக்:
நான் அந்த ஊருக்காரன்தான்.. இப்ப அடிக்க வந்தவன் எல்லாரையும் அங்கேயே புடுச்சி வைக்கனும். அவனுங்கள சுட வேண்டியது இல்ல.. ஒரு வருசம் குழந்தை குட்டியோட அவனுங்கள அங்கேயே வாழச் சொல்லணும்.
கார்த்திக் – ஃபோரம் மால் ஊழியர்
ஏசி ரூம்ல மெட்ராசுல உட்கார்ந்து இருக்கவங்களுக்கே எவ்ளோ நோய், எவ்ளோ ஆஸ்பத்திரி ? அந்த இருக்க ஜனங்க நோயப் பத்தி சொன்னா மட்டும் சுட்டுடுவாங்களா? நாம எல்லாரும் சேர்ந்து அவங்கள காப்பாத்தணும். ஒரே வழி மொத்தமா எல்லாரும் அங்கங்க ரோட்டுல உட்காரணும். பிரச்சினை முடியற வரைக்கும் எழுந்திரிக்க கூடாது.
வேல்ராஜ் – பால் முகவர்:
நான் அந்த ஊருக்காரன்தான். இப்பவும் என் மாமா, சித்தப்பா அங்கதான் இருக்காங்க. பேப்பர்ல சொல்றதவிட சாவு எண்ணிக்கை அதிகம்னு அவங்க போன்ல சொன்னாங்க. குழந்தைக்கு பால் வாங்க, மருந்து வாங்கக் கூட வீட்டிலிருந்து வெளியே போக முடியலன்னு அழுவறாங்க. ஆம்பளைங்க மொத்தமா ஊரவுட்டு தலைமறைவா போறாங்க. அங்க இருந்தா செத்திருவோம்னு .. சொல்றாங்க.
-வினவு புகைப்படச் செய்தியாளர்