தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் ஆரியப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர் ஜெயராமன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு முழக்கமிட்டவாறு மக்களோடு சென்று கொண்டிருந்த தோழர் ஜெயராமனை போலீசு சுட்டது. தலையின் வலது பக்க மூளையில் குண்டு பாய்ந்தது. அதில் படுகாயமடைந்த தோழர் ஜெயராமன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2018, மே – 23-ம் தேதி மரணமடைந்தார்.

தோழர் ஜெயராமன்

தோழர் ஜெயராமன் உசிலை பகுதியில் செயல்பட்டு வந்த விவிசாயிகள் விடுதலை முன்னணியின் அரசியல் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் இணைந்தார். பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட துவங்கினார்.

ஆரியப்பட்டி கிராமம் முழுவதும் அமைப்பு கொள்கைகளை மக்களிடம் எடுத்து பேசுவது, ஊரின் இரு பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது என்று முழு மூச்சாக மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அமைப்பின் செயல்பாடுகளுக்கு குடும்பத்துடன் வருவார். கடைசியாக தோழர் ஜெயராமன் தனது குடும்பத்துடன் ஆகஸ்டு 5, 2017-ல், தஞ்சையில் நடந்த “விவசாயிகளை வாழவிடு” மாநாட்டில் கலந்து கொண்டார்.

தோழர் வாழ்ந்த கிராமத்திற்கு சென்றோம். வீட்டின் முன்பு தென்னங்கீற்றால் ஒரு பந்தல் போடப்பட்டு கிராமத்தினர் அனைவரும் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

தோழர் ஜெயராமன் வீட்டின் முன்பு

அனைவருடைய முகத்திலும் கவலை. ஓட்டை உடைசலுடன் ஒரு சிறிய ஓட்டு வீடு. வீட்டில் உருண்டு படுக்க கூட இடமில்லை. தட்டு, முட்டு சாமான்கள் அனைத்தும் சிறிய அறையில் ஓரமாக அடைந்து கிடந்ததன. அந்த அறையிலே சமைத்து சாப்பிட்டு உறங்குவது தான் அந்த எளிய குடும்பத்தின் வாழ்க்கை. கடின உழைப்பாளியான தோழர் ஜெயராமன் கடந்த ஆண்டு பசுமை திட்டத்தின் கீழ் வீட்டை கட்ட முயன்றிருக்கிறார். அதுவும் முடிக்கப்படாத நிலையில் பாதியில் நிற்கிறது. அந்த வீட்டின் உள்ளே நுழைந்ததும் தோழர் பகத்சிங்கின் படம் சுவரில் ஒட்டி இருந்ததை காண முடிந்தது. தோழர் மக்களை எந்த அளவிற்கு நேசித்தார் என்பதை புரிந்துகொள்ள அவருடைய எளிய வாழ்க்கையே நமக்கு உணர்த்துகிறது.

பழைய வீட்டின் ஓரமாக தோழர் ஜெயராமனின் தாய் மற்றும் தந்தை நான்கு நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் உடைந்து போயிருந்தனர். அவர்கள் அருகில் கவலையும் கண்ணீருமாக உட்கார்ந்திருந்தார், தோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மா

தோழர் ஜெயராமன் குடும்பம் (இடமிருந்து வலமாக), தாய் தேனம்மாள்,தந்தை நந்தன், மனைவி பாலம்மாள். மகள் நந்தினி, தங்கை பாண்டியம்மாள்.

கடைசியாக உங்க கணவரை எப்பொழுது பார்த்தீர்கள்?

செவ்வாய் கிழமை காலையில பார்த்தேன் (22.05.2018). நாலு மணிக்கு எழுந்திரிச்சி கிளம்பினார். போயிட்டு வரேன்னு சொன்னார். அவ்ளோதான்.

போராட்டத்துக்கு போனது உங்களுக்கு தெரியுமா?

தெரியும். போராட்டத்துக்கு போறதா முதல்ல அவர் நினைக்கல. ஜோலி நெறையா இருக்குன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் தான் காலையில எழுந்து கிளம்பி போராட்டத்துக்கு போறேன், கதவ சாத்திக்கன்னு சொல்லிட்டு போனார்.

நீங்களும் இதுக்கு முன்னாடி அமைப்பு நடத்துற வேற போராட்டத்துல கலந்துகிட்டிருக்கிங்களா?

ஆமா. நாங்க எல்லா போராட்டத்துக்கும் போவோம். ஊர் மக்களும் வந்திருக்காங்க.

மருத்துவமனையில உங்க கணவரை பார்த்திங்களா?

பார்த்தேன். இரண்டு நாள் கூட இருந்தேன். பிரேத சோதனை இடத்துக்கு கொண்டு போன பிறகுதான் வீட்டுக்கு வந்தேன். காப்பாத்த முடியாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. நாங்க போயி முதல்ல கேட்டதுக்கு குண்டு சிதறி போச்சி, நாலு பக்கமும். காப்பாத்த முடியாது. எதோ முயற்சி பண்றோம். அது உங்களுக்கு நல்ல நேரம் இருந்தா உண்டு. இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

comrade jayaraman wife and daughter
தோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மாள் மற்றும் மகள் நந்தினி

தோழருகிட்ட ஏதாவது பேசனிங்களா?

பேசினேன். நான் வந்திருக்கேன்னு சொல்லி கூப்பிட்டேன். எந்த முழிப்பும் இல்ல. எந்திரிக்கல. தொட்டு பார்த்தப்ப கொஞ்ச உணர்வு இருந்துச்சி.

தோழர் என்ன வேலை செய்ஞ்சார்?

காட்டு வேலைக்கு போறது, களை வெட்டுறதுல இருந்து எல்லா வேலையும் செய்வார். இப்ப கொஞ்ச நாளா காட்டு வேலை இல்லாததால ஜவுளி வியாபாரம் பண்ணிட்டிருந்தார்.

இனி குடும்பத்தை எப்படி காப்பாத்த போறீங்க?

காட்டு வேலைக்கு தான் போகணும். ஒரு நாளைக்கு நூறு ரூபா தருவாங்க. அதுவும் எப்பவும் வேலை இருக்காது.

தூத்துக்குடி போராட்டம் பத்தி தோழர் என்ன சொன்னார்?

நூறு நாள் மக்க போராட்டம் பண்ணுறாங்க. எல்லாம் நல்லதுக்காகத்தானே பண்றாங்க. அதனால தான் இவரும் போராட்டத்துக்கு போனாரு. போராட்டம் நடக்குதுன்னு தெரிஞ்சி தான் எல்லாரும் போனாங்க.

துப்பாக்கி சூடு தகவல் கேட்டதும்…

அதிர்ச்சியா இருந்துச்சி. முதல்ல அவரு இல்ல வேற ஆளுன்னு சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் போன் பண்ணிதான் சொன்னாங்க. (மேற்கொண்டு சொல்ல முடியாமல் அழுகிறார்)

அவரு இயற்கையாவே எல்லா போராட்டத்துக்கும் போறவரு. அப்படி போயிட்டு இறந்துட்டாரு. என்ன ஒரு கஷ்டம்னா கொஞ்சம் செய்முறை இல்லாம இருக்கு. பொண்ணு படிக்கணும். வீடு கட்ட வாங்குன கடன் இருக்கு.

தூத்துக்குடி மருத்துவமனையில மக்கள் என்ன சொன்னாங்க?

அந்த ஆலையை கட்டாயம் மூடியே ஆகணும். அந்த ஊர் மக்களுக்கு மட்டுமில்ல. எல்லா ஊர் மக்களுக்கும் அதுதான் நல்லது. அவரு இருந்த பெட்டு முழுக்க பாதிக்கப்பட்டவங்க. என் கண் முன்னாடியே ரெண்டு பேர் இறந்துட்டாங்க.

ஸ்டெர்லைட் ஆலையை அரசாங்கம் மூட மாட்டேன்னு சொல்லுதே?

அதனால தான் இன்னும் போராட்டம் பண்றாங்க. போராட்டம் பண்றது தான் நல்லது. அவன் காசு கொடுத்து மடக்கத்தான் பார்ப்பான். ஆலையை மூடமாட்டன். போராட்டம் பண்ணாத்தான் மூட முடியும்.

இனிமே  நீங்க தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துக்குவிங்களா?

மக்கள் கூப்பிட்டா கலந்துக்குவோம். அதுக்கு மேல நடக்கறது நடக்கட்டும்.

கடைசியா உங்க கணவரோட கலந்துக்கிட்ட போராட்டம் எது?

தஞ்சாவூர்ல நடந்த விவசாயிக மாநாட்டுல நாங்க குடும்பத்தோட கலந்துகிட்டோம்.

போலிசு, அதிகாரிகள் வந்து ஏதாவது விசாரிச்சாங்களா?

வந்தாங்க. இங்க ஊர்ல இருக்கவங்க கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்ப நான் இங்க இல்ல. தூத்துக்குடி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அங்கேயும் பாடியை வாங்கிக்க சொன்னாங்க. நான் பாடியை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் பாடியை வாங்கும் போது அவரோட பாடியும் வரட்டும். எந்த நோக்கத்துக்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேர்ற வரைக்கும் பாடியை வாங்க மாட்டோம்.

தோழர் ஜெயராமன் மகள் நந்தினி, கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் B.A முதலாம் ஆண்டு படிக்கிறார்.

“எங்க அப்பா அமைப்புக்கு போறதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்னு தெரியாது. ஆனா அமைப்புக்கு வந்த பிறகு எங்கள நல்லபடியாத்தான் பாத்துகிட்டார். டி.வியில செய்திய பார்த்து எங்களுக்கு விளக்குவார். நோட்டிசு எல்லாம் கொடுத்து என்ன படிக்க சொல்லுவாரு. மக்கள் படுற கஷ்டத்தை சொல்லுவாரு.

முதல்ல அந்த ஆலையை மூடச்சொல்லுங்கள். அதற்காகத்தான் அப்பா உயிரை விட்டார். அந்த ஆலையை மூட வேண்டும். இது திட்டமிட்டு சுட்டிருக்கிறார்கள். எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் சுட்டதால் தான் இந்த இழப்பு. நாங்க இதுக்கு முன்னாடி போராட்டத்துக்கு போயிருக்கோம். மூணு நாள் அடைச்சி வைப்பாங்க. ஆனா இப்படி சுட்டது கிடையாது.

அகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்.

கலெக்டர் உட்பட எல்லோரும் திட்டம் போட்டு தான் செய்ஞ்சிருக்காங்க. எங்க பஞ்சாயத்து நடந்தாலும் கலெக்டர் அங்க இருந்து தானே ஆகணும். எதுக்கு அந்த இடத்தை விட்டுட்டு போகணும்? எல்லாமே திட்டமிட்டு செஞ்சிருக்காங்க. இதற்கு காரணமானவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்.

போலீசு நடந்துகிறதை பொருத்துத்தான் நம்ம போராட்டத்தை நடத்தணும். இங்க அகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்? – என்கிறார் நந்தினி.

குடும்பத்தின் தலைமகன் இறந்து போன நிலையிலும், உற்றார் உறவினர் துக்கம் விசாரிக்க வந்து கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் நிலை குலையவில்லை. உழைத்தால்தான் வாழ்க்கை எனும் நிலையிலும் அந்தக் குடும்பம் தனது சமூகக் கடமையில் இருந்தும், பொறுப்புணர்விலும் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கவில்லை.

உழைக்கும் மக்களிடம் தான் சோகம், மரணம் எல்லாம் காவியத்துயரமாக கடைபிடிக்கப்படுவதில்லை. போராட்டமே வாழ்க்கை என்பதை அவர்கள் எல்லாத் தருணங்களிலும் உணர்ந்தே இருக்கிறார்கள். வாழ்வில் அனைத்து வசதிகளும் இருந்தும், பொது வாழ்க்கைக்கோ இல்லை அரசியல் போராட்டங்களுக்கோ, இத்தகைய அரசியல் அமைப்புகளில் பணியாற்றுவதற்கோ தயங்கும் நண்பர்கள் இம்மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்!  இதே நிலையை தூத்துக்குடியில் கொல்லப்பட்ட  மக்கள் குடும்பங்களிலும் பார்க்கலாம். அவர்களும் இதே போல ஸ்டெர்லைட்டை மூடுவதைத்தான் முதன்மையாக பேசுகிறார்கள்!

13 அல்லது அதிகம் பேர்களைச் சுட்டுக் கொன்ற அரசு இந்த உணர்வையும், உணர்ச்சியையும் என்ன செய்ய முடியும்? இதை அழிப்பதற்கு போலீசிடமும், இராணுவத்திடமும் எந்த ஆயுதமும் இல்லை.

நேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்.

8 மறுமொழிகள்

  1. இவர்களைப் போன்ற போராட்டத்தில் குண்டடிப்பட்டும் உயிர் துறந்தும் வாழ்வாதார சிக்கலில் உள்ளவர்களுக்கு உதவிட எண்ணுகிறேன். இவர்களின் தொடர்புகளை பதியவும்

  2. தமிழ் மண்ணின் சுற்று சூழல் காக்க தன் உயிரை ஈந்த நம் மக்களின் தியாகம் வீண் போகாமல் காப்போம். அரசின் நயவஞ்சக கண்துடைப்பு ஸ்டெர்லைட் சீல் வைப்பு ஏமாற்று நடவடிக்கைகளுக்கு நாம் ஏமாறாமல் தொடர்ந்து நடத்துவோம் மக்களுக்கான போராட்டத்தை….. மக்களுக்காக…. மே 22 இனி சுற்றுசூழல் தியாகிகள் தினமாகட்டும்… ஆண்டு ஆண்டு தோறும் அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து மக்கள் போராட்டத்தை தொடருவோம்…. இன்னும் கனிம வள கொள்ளைகளுக்கு எதிராக பல்வேறு வேட்டியப்பன் மலைகள் பல உள்ளன…. களங்களும் பல உள்ளன…

  3. மேலும், கொலைகாரர்களுக்கு குரல் கொடுக்கும் , H ராஜ , ரஜனி போன்றவர்களும் தேச துரோகிகளே !

  4. தோழர் ஜெயராமன் மகள் நந்தினி அவரக்ளை B.A படிக்க வைக்க ஆகும் முழு செலவையும் அவர் மேற்படிப்பு அல்லது தொழிற்சார் படிப்பை படிக்கவும் உதவி செய்ய விழைகிறேன். அவருக்கு நேரடியாக உதவ வங்கி தகவலை கொடுத்தால் மற்றவர்களும் உதவ முன்வருவார்கள்.

Leave a Reply to Ram Kar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க