பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !

பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள். - ஆகக் கொடூரமானது எது? லத்திக் கம்பா, துப்பாக்கித் தோட்டாவா, இந்தப் பொய்யா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி போலீசு அதிகாரிகள் எழுதிக் கொடுத்த அறிக்கையை, சட்டமன்றத்தில் எடப்பாடி தட்டுத் தடுமாறிப் படித்த கண் கொள்ளாக் காட்சியை இன்று லைவ் டெலிகாஸ்டில் பார்த்திருப்பீர்கள்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை எண்ணிக் குமுறுவதா, வெக்கமானம் ஈவிரக்கம் இல்லாத இந்த மழுங்கச் சாமியை “முதல்வர்” என்று அழைக்க நேர்ந்த அசிங்கத்தை எண்ணிப் புழுங்குவதா,

இந்த மொக்கையின் அதிகாரத்துக்கும் பயந்து சலாம் போட்டு, எல்லா உளறல்களையும் பயபக்தியுடன் லைவ் செய்கின்ற சானல்கள், கூச்சமே இல்லாமல் தங்களை சுதந்திர ஊடகம் என்று கெத்தாக சொல்லிக் கொள்ளும் மானக்கேட்டை எண்ணி நோவதா?

ஊடக அசிங்கம் தான் இருப்பதிலேயே மிகப்பெரிய அசிங்கம் என்று தோன்றுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு ஒரு துணை தாசில்தார் உத்தரவிட முடியுமா? என்று இன்றைக்கு இரவு விவாதம் நடத்தக் கூடும். 144 தடை உத்தரவு இருக்கும்போது ஒரு முதலமைச்சரே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு, கெடுபிடியான சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில், துணை தாசில்தார் என்ன, கலெக்டரின் டவாலிகூட துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட முடியும்.

“ஏன் துப்பாக்கிச் சூடு நடத்த நேர்ந்தது” என்று முதல் தகவல் அறிக்கைகளில் போலீஸ் விளக்கியிருக்கிறது.  அதிலிருந்து சில முத்துகளைக் கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

“பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள்.”
“ஒலிபெருக்கியின் மூலம் எச்சரித்தும் அந்தக் கும்பல் அதனைப் பொருட்படுத்தவில்லை”
“144 உத்தரவு இருக்கிறது கலைந்து செல்லுங்கள் என்றோம் கேட்கவில்லை”
“கண்ணீர்ப் புகை குண்டு வீசினோம். அவர்களோ பயங்கரமான ஆயுதங்களால் போலீசை தாக்கினார்கள். போலீசுக்கு எதிராக கொலைவெறியை வெளிப்படுத்தினார்கள்”
“கலைந்து செல்லவில்லையென்றால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வரும் என்று எச்சரித்தோம். கேட்கவில்லை”
“ஸ்டெர்லைட் ஆலையை மூடாத கலெக்டர் ஆபீசை கொளுத்த வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் இருப்பவர்களை சேர்த்து கொளுத்த வேண்டும் என்றும் கோசமிட்டுக் கொண்டே ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்.”
“இது கண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களும் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் தங்களின் உயிருக்கு பயந்து அஞ்சி நடுங்கி அலுவலகத்திற்குள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள்.”
“கலவரக் கும்பல் காவல்துறையினர் மீதும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மீதும் ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகளான இவர்களை அடித்துக் கொல்லுங்கடா என்று ஆவேசமாக கொலைவறித் தாக்குதல் நடத்தினர்”
“காயம் பட்டவர்களை ஆம்புலன்சில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு போலீசார் முயற்சித்தபோது, கலவரக்காரர்கள் ஆம்புலன்சையும் தாக்கினார்கள்”
“சுமார் 400 ஆண்களும் 100 பெண்களும் கையில் பெட்ரோல் குண்டுகள், தீப்பெட்டிகள், உருட்டுக்கட்டைகளுடன், இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் நுழைந்து போலீசை தாக்கத் தொடங்கியதால் திரேஸ் புரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த நேர்ந்தது”

இப்போது சொல்லுங்கள் !

ஆகக் கொடூரமானது எது? லத்திக் கம்பா, துப்பாக்கித் தோட்டாவா, இந்தப் பொய்யா?

அல்லது இந்தப் பொய் குறித்துப் பல ஊடகங்கள் கடைப்பிடிக்கும் சாமர்த்தியமான மவுனமா?

This slideshow requires JavaScript.

  • வினவு செய்திப் பிரிவு.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க