வேல்முருகன் கைது | வாழ்வுரிமைக்காகப் போராடுவது தேசத் துரோகமா ?

வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது, தனித்ததொரு நடவடிக்கையல்ல. தமிழகத்தில் வாழ்வுரிமைக்காகவும், மாநில உரிமைக்காகவும், இந்து மதவெறி பாசிசத்துக்கு எதிராகவும் நடக்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

பத்திரிகைச் செய்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் நெய்வேலியில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் பேசியதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் தேசத் துரோகக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜனநாயக விரோதமான இந்தக் கைதை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அவர் மீதும் மற்றும் பலர் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

நெய்வேலியில் நடந்த முற்றுகைப் போராட்டம் தமிழகத்தின் பறிக்கப்படும் காவிரி உரிமையை மீட்பதற்கான மாநில உரிமைப் போராட்டமாகும். இதில் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக உரிமையை அடகு வைக்கும் செயலாகும். வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது, தனித்ததொரு நடவடிக்கையல்ல. தமிழகத்தில் வாழ்வுரிமைக்காகவும், மாநில உரிமைக்காகவும், இந்து மதவெறி பாசிசத்துக்கு எதிராகவும் நடக்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

தமிழகத்தில் பல்வேறு மக்கள் விரோத நாசகாரத் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருகிறது. அவற்றை ஆளும் அ.தி.மு.க. அரசு முழுவதும் அடிபணிந்து நடைமுறைப்படுத்துகிறது. காவிரி, மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் விரிவாக்கம் என ஏராளமான மக்கள் போராட்டங்கள் எழுந்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக தமிழகத்தையே சுடுகாடாக்கும் இத்தகைய திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஒன்றிணையாமல் தடுப்பதற்கும் போராட்டங்களில் முன்னின்று ஆதரித்து வழிநடத்துகின்ற இயக்கங்களையும் முன்னணியாளர்களையும் மிரட்டி, முடக்க முயலும் மோடி அரசின் பாசிச அடக்குமுறை நடவடிக்கைகள்தான் இத்தகைய கைதுகள்.

எனவே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் ஒருங்கிணைந்து மத்திய, மாநில அரசுகளின் பாசிச ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

2 மறுமொழிகள்

  1. போலீஸ்கார் மற்ற சமூக விரோதிகளை விரைவில் கைது செய்யுங்கள், வேண்டாம் இந்த வன்முறையாளர்கள், போராட்டம் என்ற பெயரில் மக்களின் உயிருக்கு ஆபத்தை கொண்டு வரும் சமூக விரோதிகளை expose செய்யுங்கள் போலீஸ்கார்

  2. வாழ்வாதாரத்துக்காக போராடிய அப்பாவி மக்களை சுத்தத்துடன் தேச துரோகம்!.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க