குடிமக்களிடையே அச்சத்தை உருவாக்கவே அரசு தேசத்துரோக சட்டத்தை பயன்படுத்துவதாகவும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்துவருவதாகவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, த வயர் இணையதளத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தி வயர் இணையதளத்தின் கரண் தப்பாருக்கு அளித்த நேர்காணலில், ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு 1962 இல் உச்ச நீதிமன்றத்தில் கேதார் நாத் சிங் வழக்கில், வன்முறையைத் தூண்டினால் மட்டுமே 124 A பிரிவு பொருந்தும் என வாசித்ததாக கூறுகிறார்.

வன்முறைக்கான தூண்டுதல் இல்லாமல் பிரிவு 124A அதாவது தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்த முடியாது எனக் கூறுகிற குப்தா, நாடு முழுவதும் உள்ள நீதிபதிகள் இது குறித்து அறிந்து கொள்ளாமல் இருப்பதாகவோ அல்லது புறக்கணிப்பதாகவோ தெரிகிறது என்கிறார்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ சிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு !

ஆனால், உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து எந்த சந்தேகமும் குழப்பமும் வேண்டாம் என பலமுறை சுட்டியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதன் பொருள் பிரிவு 124 ஏ இனி அச்சில் கூறப்படுவது போல் இருக்கக்கூடாது, பயன்பாட்டில் குறைக்கப்படவேண்டும், கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதாகவும் என்கிறார் தீபக் குப்தா.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதும் தேசத் துரோக சட்டம் தவறாகவும் தொடர்ச்சியாக தவறான நோக்கத்தில் பயன்படுத்துவது குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தானாக முன்வந்து ஏன் பேசக்கூடாது என்கிற கரண் தப்பாரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் நீதிபதி குப்தா, உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து பொதுநல மனு தாக்கல் செய்யப்படும்போது மட்டுமே அதுகுறித்து தலைமை நீதிபதி பேச இயலும் என்கிறார்.

தேசத்துரோக வழக்கும் நீக்கப்பட வேண்டும் எனக் கூறுகிற குப்தா, தானே தலைமை நீதிபதியாக இருந்தாலும்கூட தேசத்துரோக சட்டத்தின் செல்லுபடி தன்மை குறித்து சுய அதிகாரங்களைப் பயன்படுத்தி கேள்வி எழுப்ப முடியாது என்கிறார்.

சுயாதீன அமைப்பாக உச்சநீதிமன்றம் இல்லை என்பதை உணர்த்துகிற குப்தா, சமீபத்திய மூன்று தேசத்துரோக வழக்குகள் குறித்து நேர்காணலில் பேசுகிறார். முதலில், திஷா ரவி வழக்கு. ஒரு டூல் கிட்டை திருத்துவதோ அல்லது அதன் உள்ளடக்கங்களை ட்வீட் செய்வதோ நிச்சயமாக தேசத்துரோகம் அல்ல என்கிறார் குப்தா. டூல் கிட்டை ஆய்வறிந்ததில், அதன் உள்ளடக்கத்தில் தேசத்துரோக அல்லது குற்றவியல் கருத்துக்கள் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

தீபக் குப்தா

பொயடிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் உறுப்பினர்களுடன் திஷா ரவி ஒரு இணைய கலந்துரையாடலில் ஈடுபடுவது தேசத்துரோகமோ அல்லது குற்றமோ அல்ல எனவும் அவர் கூறினார். அந்த அமைப்பும்கூட தடை செய்யப்பட்டதல்ல என்கிறார்.

காலிஸ்தான் வேண்டும் எனக் கேட்பது அல்லது தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது தேசத்துரோகமா என்கிற கரண் தப்பாரின் கேள்விக்கு, “நிச்சயமாக இது தேசத்துரோகமோ அல்லது குற்றமோ அல்ல” என்கிறார்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் பேரணியின்போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் தவறாக ட்விட் செய்துவிடுகிறார். அது தேசத்துரோகமா என்கிற கேள்விக்கு பதிலளித்த குப்தா, நிச்சயமாக அது மோசமான ஊடகப்பணியே தவிர, தேசத்துரோகம் அல்ல எனக் கூறுகிறார்.

இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது காலிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கிய பல்வந்த் சிங் வழக்கில் அது தேசத் துரோகமல்ல என உச்சநீதிமன்றம் சொன்னது. அதுபோல ஜே. என். யூ மாணவர்கள் இந்தியா துண்டுதுண்டாகப் போகிறது என முழங்கியது தேசத் துரோகமாகுமா என்கிற கேள்விக்கு, இந்த முழக்கத்தின் மூலம் வன்முறை தூண்டப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தேசத் துரோகமாகும். ஆனால், மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது அப்படியேதும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார்.

கடந்த மாதம் திஷா ரவிக்கு பிணை வழங்கிய நீதிபதி, “அரசாங்கங்களின் காயமடைந்த தற்பெருமைக்கு ஊழியம் செய்ய” தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுவதாக கூறிய கருத்துடன் தான் முற்றிலும் உடன்படுவதாக நீதிபதி குப்தா கூறுகிறார்.

முழுக் காணொலியையும் காண :

தமிழாக்கம் : கலைமதி
நன்றி: 
தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க