ழுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (22-02-1943) ஹிட்லரின் ஜெர்மனியில் சோபி ஸ்கால் எனும் 23 வயது இளம்பெண் கில்லெட்டினில் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா ? போரில் இருந்து ஜெர்மனி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு “டூல் கிட்”டை தயாரித்தது தான்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க பாடகர் ரிஹானா குரல் கொடுத்தத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். அச்சமயத்தில் இதனை அன்னிய சதி என்று கூறி ஒரு புரளியை சங்கிகள் கிளப்பிவிட்டனர்.

ஒன்றுமில்லாத விசயங்களையெல்லாம் பூதாகரமாக்கி கலவரம் நடத்துவதில் கைதேர்ந்தவர்களான சங்கிகள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சூழலியல் செயற்பாட்டாளர் “க்ரேட்டா தன்பர்க்” கூகுள் ட்ரைவில் பகிர்ந்த தரவுத் தொகுப்புகளையே (டூல் கிட்) பெரிய சதியாகக் காட்டி அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இங்கும் அதே “டூல் கிட்”தான் பிரச்சினை.

அதனைத் தொடர்ந்து அந்த கூகுள் தரவுத் தொகுப்புக்கு பங்களிப்பு செய்த இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அதில் ஒருவரான திஷா ரவியை மோடி அரசு கைது செய்து சிறையிலடைத்தது நாம் அறிந்ததே.

தீஷா ரவி ஒரு சூழலியல் செயற்பாட்டாளர். “Fridays For Future” எனும் சூழலியல் அமைப்பின் இந்தியப் பிரிவின் துடிப்பான செயல்பாட்டாளர். 23 வயதான தீஷா ரவி பெங்களூருவில் படித்துக் கொண்டிருக்கிறார்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

தேச விரோதிகள் பட்டியலில் பாஜக குறிப்பிடும் எந்தப் பிரிவுக்கும் இவர் துளியும் நெருக்கம் இல்லாதவர். இவர் இசுலாமியரோ, காஷ்மீரியோ, காட்டில் திரியும் மாவோயிஸ்ட்டோ, அர்பன் நக்சலோ இல்லை. அமைதியான முறையில் சூழலியல் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியவர்.

விவசாயிகள் போராட்டத்தை நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ஆதரிப்பது போல அவரும் ஆதரித்திருக்கிறார். அதனை பரப்புரையாகக் கொண்டு செல்லும் தமது ஜனநாயக உரிமையின் அடிப்படையில் கூகுள் ட்ரைவில் இருந்த தரவுத் தொகுப்பில் தமது பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

இங்கு நன்கு குறித்துக் கொள்ள வேண்டியது என்னவெனில் தீஷா ரவி அறவழியில் மட்டுமே போராடியுள்ளார். அதுவும் பிரச்சாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளில் தமது சிறிய பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் எந்த ஒரு பொதுச் சொத்தையும் சேதப்படுத்தவில்லை. இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யவில்லை . (அப்படி பிரச்சாரம் செய்தாலும் அதற்கான உரிமையையும் வழங்குகிறது இந்திய அரசியல் சட்டம்).

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துப் பிரச்சாரத்தை மட்டுமே செய்தார். ஒரு ஜனநாயக அரசு, ஆயுதங்களைக் கண்டு பயப்படலாம். கருத்துக்களைக் கண்டு அஞ்சி அதனை வெஞ்சினம் கொண்டு முடக்கினால் அது ஜனநாயக அரசாக இருக்க முடியுமா? அதிலும் தேசப் பற்றைக் காரணம் காட்டி ஜனநாயக உரிமையைப் பறிக்கிறது எனில் அது சந்தேகமின்றி ஒரு பாசிச அரசாகத்தான் இருக்க முடியும்.

இதற்கு அப்பட்டமான சாட்சியாக நிற்கிறது ஹிட்லரின் பாசிச ஆட்சி. ஜெர்மனியில் தேசிய சோசலிச அரசு என்ற பெயரில் இனரீதியிலான பாசிச அரசை நிலைநாட்டிய ஹிட்லரின் ஆட்சியின் இறுதிக் கட்டமான போர்க்காலச் சூழலில் இந்தியாவில் நிகழும் தற்போதைய அரசு ஒடுக்குமுறை சம்பவங்களை ஒத்த பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அதனை இங்கு பார்ப்பதன்மூலம், நம் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள அபாயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

பாசிச வெறி தலைகேறிய நிலையில், இரண்டாம் உலகப் போரைத் துவக்கி ஹிட்லர் உலகம் முழுவதையும் கபளீகரம் செய்யத் துவங்கிய போது, அது ஜெர்மனிய முதலாளிகளின் விருப்பமாக மட்டுமே இருந்தது. அங்கிருக்கும் பெருவாரியான மக்கள் அதனை வெறுத்தனர். ஆனால் அரசின் உளவாளிகளும் கண்காணிப்பும் வீதிக்கு வீதி நிரம்பியிருந்த காலகட்டத்தில் யாரும் எவ்வித எதிர்ப்பையும் காட்டத் துணியவில்லை.

தீஷா ரவி (இடது) சோபி ஸ்கால் (வலது)

இளைஞர்கள் கட்டாய இராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு லிபரல் அரசியல்வாதியான ராபர்ட் ஸ்கால் என்பவருக்கு மகளாகப் பிறந்த சோபி ஸ்கால் என்ற 22 வயது இளம்பெண் அச்சமயத்தில்தான் முனிச் பல்கலைக்கழகத்தில் படிப்பிற்காகச் சேர்கிறார். அங்கு ஏற்கெனவே பயின்று கொண்டிருந்த அவரது அண்ணன் ஹன்ஸ் ஸ்கால் படித்துக் கொண்டிருந்தார். தத்துவம் மற்றும் இறையியலின் மீது ஆர்வம் கொண்டிருந்த சோபி ஸ்கால் அது தொடர்பான நூல்களை வாசிப்பதோடு அதனை விவாதித்தும் வந்தார்.

சோபி ஸ்காலின் தந்தையான ராபர்ச் ஸ்கால், (ஒரு நகரின் கவர்னராகப் பணியாற்றியவர்) ஹிட்லர் குறித்து தனது விமர்சனத்தைப் பதிவு செய்ததன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்கலையில் தனது அண்ணனின் நண்பர்களுடன் கிடைத்த அறிமுகத்தின் அடிப்படையில் வெள்ளை ரோஜா எனும் அமைதியான இயக்கம் ஒன்றில் இணைந்து செயல்பட்டார். வெள்ளை ரோஜா அமைப்பின் கோரிக்கை ஹிட்லரையோ, பாசிசத்தையோ தூக்கியெறிய வேண்டும் என்பது அல்ல. அவர்களது கோரிக்கை எளிமையானது, ஜெர்மனி போரில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வளவுதான். ஆனால் இதனை வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர்.

சோபி ஸ்காலின் இறுதி நாட்கள் குறித்து வெளிவந்த திரைப்படம்

அந்த வகையில் அங்கு அவர்கள் அனைவரும் இணைந்து போருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் துண்டுப் பிரசுரங்களை மக்கள் மத்தியில் இரகசியமாக விநியோகிப்பது என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினர். அவர்களைப் பொறுத்தவரையில் அந்தப் பிரசுரங்கள் தான் அவர்களது ஆயுதக் கிடங்கு. அதாவது “டூல்கிட்”. அப்படி கிட்டத்தட்ட 5 பிரசுரங்கள் எழுதப்பட்டு விநியோகிகப்பட்டன. இரகசியமாக விநியோகிக்கபப்ட்ட அந்தப் பிரசுரங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆறாவது பிரசுரத்தை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு வகுப்புகளின் வாசலிலும் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு செல்வதுதான் வேலை. சோபி ஸ்காலும் வெள்ளை ரோஜா அமைப்பினரும் இந்த வேலையைச் செய்து முடித்த பின்னர், மீதமுள்ள சில பிரசுரங்களையும் வீணாக்காமல் அனைவரின் பார்வைக்கு கிட்டும்படி செய்ய வேண்டும் என்றெண்ணி சோபியும் அவரது அண்ணன் ஸ்காலும் மாடிக்குச் சென்று அங்கிருந்து மீதமுள்ள பிரசுரங்களை இறைந்துவிடும்போது பல்கலைக் கழக ஊழியனால் பிடிக்கப்பட்டு உடனடியாக ஹிட்லரின் ரகசிய போலீசின் வசம் ஒப்படைக்கப்படுகிறார்.

சோபி ஸ்காலின் சிலை

சோபி ஸ்கால் விநியோகித்த பிரசுரம் வெறுமனே போரில் இருந்து அரசு பின்வாங்க வேண்டும் என்பதைத்தான் கூறியதே தவிர நாட்டிற்கு எதிராகவோ ஹிட்லருக்கு எதிராகவோ எதுவும் இல்லை. ஆனால் அவர் மீதும் அவரது அண்ணன் ஸ்கால் மற்றும் மற்றொரு வெள்ளை ரோஜா உறுப்பினரான கிரிஸ்டோப் ப்ரோப்ஸ்ட் மீதும் தேச துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

இன்றைய மோடியின் இந்தியாவில் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டால், பல ஆண்டுகள் விசாரணையை இழுத்தடித்து சிறையிலேயே வைத்து அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் கொடுக்காமல் இழுத்தடித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி படிப்படியாகக் கொலை செய்வதைப் போல் அல்லாமல், அன்றைய ஹிட்லரின் ஜெர்மனியில், சிரச் சேதம் தான் தண்டனை.

ஆம், கில்லெட்டினால் தலை வெட்டப்படும். விசாரணை நடந்தபோது, ஹன்ஸ் ஸ்கால் தமது ‘குற்றத்தை’ ஒத்துக் கொண்டதை ஒட்டி, சோபி ஸ்காலும் ‘குற்றத்தை’ ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தமது அமைப்பைச் சேர்ந்த பிறர் சிக்கக் கூடாது என்பதற்காக அனைத்துப் பொறுப்புகளையும் தாமே ஏற்றுக் கொண்டார் சோபி ஸ்கால்.

விசாரணையின் போது சோபி ஸ்கால் தீர்க்கமாக ஒன்றைச் சொல்கிறார், “ எல்லாவற்றுக்கும் மேலாக யாராவது ஒருவர் துவக்கிவைக்க வேண்டியது இருக்கிறது. நாங்கள் எழுதியதும் கூறியதும் இன்னும் பலரது எண்ணஓட்டமாகவும் இருக்கிறது. அவர்கள் நாங்கள் செய்ததைப் போல தங்களது எண்ணத்தை தெரிவிப்பதற்கு தைரியமாக இல்லை.” என்று குறிப்பிட்டார்.

தமிழிசையைப் பார்த்தால் “பாசிச பாஜக ஒழிக” என்று கூறுவதற்கு நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அன்று ஒரே ஒரு சோபியா தானே வானூர்தியில் வைத்து நேருக்கு நேர் தமிழிசையை பார்த்து பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டார்.

படிக்க :
♦ தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !
♦ மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !

இத்தகைய முதல் முன்னெடுப்பைத்தான் அன்று ஜெர்மனியில் சோபி ஸ்காலும் அவரது நண்பர்களும் செய்தனர். இறுதியில் அந்த மூவரும் குற்றவாளிகள், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி சிரச் சேத தண்டனை அறிவிக்கப்பட்டது.

சரியாக 78 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், அதாவது பிப்ரவரி 22, 1943, அன்று ஷோபியா ஸ்காலின் தலை கில்லெட்டினில் வெட்டப்பட்டது. சோபியின் மரணம் என்பது ஜெர்மனியில் இது போன்ற எதிர்க் கருத்தைத் தெரிவித்த ஆயிரக்கணக்கானவர்களின் மரணங்களுல் ஒன்றுதான்.

வெறுமனே போரில் இருந்து வெளியேறு என்று கூறிய – ஒரு சிறு எதிர்ப்பைக் காட்டிய – சோபி ஸ்காலின் தலையை அன்று ஹிட்லர் கில்லெட்டினில் வெட்டினான். நமக்கு வாய்த்த ஹிட்லரான மோடியோ, திஷா ரவிக்களையும், நோதீப் கவுர்களையும், வரவர ராவ்களையும், ஆனந்த் தெல்தும்டேக்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் கொடுஞ்சிறை மூலம் வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இது மிகச் சிறப்பான நாள்.. நான் செல்ல வேண்டும்.. எங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் விழித்தெழுந்து, நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் கிளர்ந்தெழுவார்கள் எனில், எனது மரணம் ஒரு பொருட்டல்ல” இவை அன்று கில்லெட்டினில் வெட்டப்படுவதற்கு முன்னர், சோபி ஸ்கால் கூறிய கடைசி வரிகள். கொடுஞ்சிறையில் தள்ளப்பட்ட நம் நாட்டுப் போராளிகளின் உள விருப்பமும் இதுதான். அதனை நிறைவேற்றுவது நமது கடமை !


கர்ணன்

செய்தி ஆதாரம் : Wikipedia

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க