சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டதன் மூலம் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் மூலப் பொருட்களின் மீதான வரியை ஈடுசெய்ததன் மூலமாக அதானி குழுமம் ரூ.500 கோடி பெற வழிவகுத்ததை அம்பலப்படுத்தி “எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் வீக்லி” (ஈ.பி.டபிள்யூ) பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது.

இச்செய்தியை வெளியிட்ட  ஈ.பி.டபிள்யூ பத்திரிகைக்கு அதானி குழுமம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.  அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்டுரையை தமது இணையதளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்தது ஈ.பி.டபிள்யூ நிர்வாகக் குழு. அந்தக் கட்டுரையை எழுதியவரும், ஈ.பி.டபிள்யூ-வின் ஆசிரியருமான பரஞ்சோய் குகா தாக்குர்தா நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் அவரது கட்டுரையை தி வயர் இணையதளம் வெளியிட்டது.

படிக்க :
♦ நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

உடனடியாக தி வயர் இணையதளத்தின் மீதும், கட்டுரையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்த்தா மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்குப் பதிவு செய்தது அதானி குழுமம். இந்த வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தி வயர் இணையதளமும், பரஞ்சோய் குகா தாக்குர்தாவும் அறிவித்தனர். இந்நிலையில் கடந்த மே 2019-ல் தி வயர் இணையதளத்தின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது அதானி குழுமம். அப்போதும் தாக்குர்தா மீதான வழக்குகளை திரும்பப் பெறவில்லை. இந்நிலையில் இவ்வழக்கை விசரித்து வந்த குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட நீதிமன்றம் பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது.

தனது உத்தரவில் நீதிபதி பிரதீப் சோனி “இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500-ன் கீழ் பரஞ்சோய் தாகுர்த்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை தமக்கு முன்நிறுத்துமாறு டெல்லி நிஜாமுதீன் போலீசு நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது”. ஆனால் இது குறித்து தமக்கு எதுவும் முறையான ஆவணங்கள் இன்னும் வரவில்லை என்று பரஞ்சோய் குகா தாக்குர்த்தா தெரிவித்துள்ளார்.

அதானி வழக்கு தொடுத்த அதே நேரத்தில், ரிபப்ளிக் டிவி பங்குதாரரும் பாஜக பிரமுகருமான இராஜீவ் சந்திரசேகர், பரஞ்சோய் குகா தாக்குர்த்தா மீது வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று!


கர்ணன்
செய்தி ஆதாரம் : Scroll

1 மறுமொழி

  1. //தனது உத்தரவில் நீதிபதி பிரதீப் சோனி “இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500-ன் கீழ் பரஞ்சோய் தாகுர்த்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை தமக்கு முன்நிறுத்துமாறு டெல்லி நிஜாமுதீன் போலீசு நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது”.//
    இ.த.ச.பிரிவு-500 என்பது கருத்துரிமையை பறிப்பதான ஒன்று என்று சொல்கிறார்கள். இதைப்பற்றியும் ஆராய்ந்து எழுதி இருந்தால் இந்திய ‘ஜனநாயகத்தின்’ வண்டவாளத்தை திரை கிழித்திருக்கலாம் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க