கோடையின் மையமான பகுதி முடிந்தாலும் வெயிலின் வெப்பம் குறையவில்லை. நடுப்பகலில் அலையாமல் இங்கு பலருக்கு வேலையில்லை. தாகம் தணிக்க மக்கள் நாடுவது பழச்சாறு. சென்னை முழுவதும் பழச்சாறுகளுக்கான பழங்களை அனுப்பும் கோயம்பேடு காய்-கனி சந்தைக்குச் சென்றோம். அங்கு வெய்யிலில் கசகசவென்று வேர்வையுடன் பழக்குவியல்களுக்கு மத்தியில் வேலை செய்து கொண்டிருந்தனர், தொழிலாளர்கள்.

கோயம்பேடு மார்கெட்டிற்கு அதிகாலை வந்திறங்கிய வாழைத்தார்கள்.
கற்பூரவாழை, பச்சவாழை, ரஸ்தாளி, செவ்வாழை, பூவன், நேந்திரம் பழம், மலைவாழை, மட்டி, நாட்டுப்பழம் ஆகியவைகள் விற்பனைக்கு காத்திருக்கிறது.

சத்தியமங்கலம், ஆந்திரா, திருச்சி, கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வாழைத்தார்களை இறக்கும் தொழிலாளிகள்.

ஆனந்தன் – ஐயப்பன், (பெரம்பலூர்), சுமைதூக்கும் தொழிலாளிகள்.
கோயம்பேடு மார்கெட்ல ஒவ்வொரு மண்டிக்கும் ஒரு குறிப்பிட்ட ஊர்காரங்க இருப்பாங்க. இப்ப பழ மண்டியை பொறுத்த வரைக்கும் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டத்துக்காரங்க இருப்பாங்க. ஏன்னா, ஊருக்கு போனா வேலை இல்லாம ஊர்லையே சுத்திகிட்டு இருக்கும் சொந்தகாரங்கள கூட்டி வந்துடுவோம். இங்க வெளிநாட்டுல இருந்து வரும் பழங்கள் கப்பல்ல துறைமுகத்துக்கு வரும். அங்கிருந்து கண்டெய்னர்ல கொண்டு வருவாங்க. அத நாங்க இறக்குவோம். பழத்தை பொறுத்த வரைக்கும் எல்லாம் தலை சுமைதான். தோள் சுமை இல்லை. ஒரு நாளைக்கு 500 லிருந்து 700 ரூபாய் வரைக்கும் கெடக்கும். அதுவும் நாலு நாளைக்கு தான் வேலை. இதைக்கொண்டு தான் வேலையில்லாத நாட்களை கழிக்கணும். எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா செலவாகிடும். காலைல குளிக்க, கக்கூஸ் போக ரூ.30, மூணு வேளை சாப்பாடு ரூ.150, அப்புறம் உடம்பு வலிக்கு குடிப்போம். கட்டிங் ரூ.70, ஹான்ஸ் புகையிலை ரூ.30 ன்னு செலவாகிடும். எல்லா செலவும் போக மிஞ்சுறது தான் வீட்டுக்கு அனுப்புவோம்.

கண்டெய்னர் லாரியில் இருந்து இறக்கப்பட்ட ஸ்டாபெர்ரி பழப்பெட்டியை  கொண்டு செல்லும் தொழிலாளி.

மோகன், கோடைக்காலம் என்பதால் தற்போது தர்பூசணி அதிகமாக இறக்கியுள்ளோம். அடுத்து மாம்பழம், கொய்யா என்று சீசனுக்கு ஏற்றவாறு வியாபாரம் மாத்திக்கிவோம்.

மார்க்கெட்டுக்கு வந்திறங்கிய சாத்துக்குடியை தரம் பிரிக்கும் தொழிலாளிகள்.

கோதண்டம், (விழுப்புரம்), சுமை தூக்கும் தொழிலாளி.
கோயம்பேடு இப்ப மார்கெட்டுக்கு அதிகம் வருவது வாஷிங்டன் ஆப்பிள் மற்றும் டெல்லி ஆப்பிள். வாஷிங்டன் ஆப்பிள் பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும், மே முதல் டிசம்பர் வரை டில்லி ஆப்பிளும் நாலு விதமான பெட்டிகளில் வரும். ஒரு பெட்டியின் விலை ரூ 350 முதல் 3500 வரை இருக்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் பழங்களின் அளவுக்கு ஏற்றவாறு 35 முதல் 70 காய்கள் வரை இருக்கும். இந்த பழங்கள் எல்லாம் கமிசன் மண்டிக்கு போகும். மண்டிகாரங்களுக்கு 1000க்கு 200 ரூபா கமிசன். எல்லாம் வித்த பிறகு தான் பொருளுக்கான காசையே வியாபரிங்ககிட்ட கொடுப்பாங்க. நாங்க சுமை தூக்கும் தொழிலாளிகள் மொத்தம் 25 குழு இருக்கோம். ஒவ்வொரு குழுவுக்கும் 60 பேர். இதுல 40 பேர் வேலை செய்வோம். 20 பேர் ஊருக்கு போயிருப்பாங்க. ஊருக்கு போனவங்க வந்ததும் அடுத்த இருபது பேர்ன்னு சுழற்சி முறையில் வேலை நடக்கும். ஐம்பது கிலோ கூடைக்கு இருபது ரூபா தருவாங்க. அந்த மாதிரி 1000-லிருந்து 1500 கூடை வரைக்கும் இறக்குவோம். அதுல வரும் பணத்தை நாங்க பிரிச்சிக்குவோம்.

சில்லறை விற்பனைக்காக உதிரிப்பழங்களை வாங்கக் காத்திருக்கும் சாலையோர வியாபாரிகள்.

தாகம் தணிக்கவும், உடலுக்கு குளிர்ச்சியூட்டவும் தேவைப்படும் பழங்களை இறக்கி, தரம்பிரித்து, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, சுமை தூக்கும் தொழிலாளிகள், என்று பெரும் படையே இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறது.

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க