யிர்க்கொல்லி ஆலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராட்டம் 99 நாட்களைக் கடந்து கடந்த மே 22 ஆம் நாளன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட்டை மூடும் வரை அந்த இடத்தை விட்டு போகப் போவதில்லை என்று முடிவெடுத்து, போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த முற்றுகையில் பங்கேற்பதற்காக ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் தடியடியிலும் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் களப்பலியில் தன்னையும் இணைத்துக் கொண்டு தியாகியானார், மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன்.

இறந்தவர்களின் உடலில் இருந்து தடயங்களை அரசுத் தரப்பு அழித்து விடாமல் இருக்க வேண்டும் என்பதை முன்வைத்து நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக பிணக்கூராய்வு முடியும் வரை உடல்களைப் பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இந்த நிலையில் ஜூன் 6 அன்று 6 பேர்களின் பிணக்கூராய்வு செய்திட சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தோழரின் உடல் பிணக்கூராய்வு செய்யப்பட்டது. தோழரின் சொந்த ஊரான உசிலம்பட்டியருகில் உள்ள ஆரியப்பட்டிக்கு பிற்பகல் 3 மணிக்கெல்லாம் உடல் கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்போடு தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் ஆரியப்பட்டி விலக்கு அருகில் காத்திருந்தனர்.

தூத்துக்குடியிலிருந்து இந்த ஊர் 130 கி.மீ.க்கும் அதிகத் தொலைவிலுள்ளது எனத் தெரிந்திருந்தும் தாமதமாக பிணக்கூராய்வை ஆரம்பித்து இரவு நெருங்கும் நேரத்தில்தான் முடித்தனர். தோழர் ஜெயராமனின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் இரவு 9 மணிக்குதான் ஆரியப்பட்டி விலக்குக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக தோழரின் உடலோடு முழக்கமிட்டபடி மக்கள் ஆரியப்பட்டிக்கு வந்தனர்.

“மக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே! எங்கள் ஜெயராமனே! வீர வணக்கம்! வீர வணக்கம்!”, “ஸ்டெர்லைட் வீசி எறிந்த எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் எடப்பாடி கும்பலும் தமிழ்நாடு போலீசும் மக்கள் விரோதி! சமூக விரோதி!” என்ற முழக்கத்துடன் 500 பேருக்கும் மேல் சென்ற ஊர்வலத்தில் தோழரைக் குறிவைத்துக் கொன்ற போலீசின் மீதான கோபம், “சிந்திய ரத்தம் ஒவ்வொரு துளியையும் மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!” என முழக்கமாக விண்ணதிர எழும்பியது.

ஊர் எல்லைக்குள் ஊர்வலம் நுழைந்ததும் உறவினர்களும் ஊர்க்காரர்களும் அழுத குரல் அனைவரையும் உருக்கியது. இதைப் பற்றி எவ்விதமான உணர்வுமற்ற போலீசோ ஊர்வலத்தில் வந்தவர்களை துல்லியமாக வீடியோ எடுப்பதில் முனைந்திருந்தது.

தோழர் ஜெயராமனின் வீட்டருகே மக்கள் அதிகாரம், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இரங்கல் கூட்டம் தொடங்கியது. தோழரின் உடல் மீது மக்கள் அதிகாரத்தின் கொடியை தோழர்கள் காளியப்பனும், சூரியாவும் போர்த்தினர்.

இந்த இரங்கல் கூட்டத்தில் ஆரியபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு. பாண்டி, சி.பி.எம். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட செயலாளருமான தோழர் செல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் திரு. தென்னரசு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மதுரை புறநகர் செயலாளர் தோழர் ஜெயகுமார், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாநிலத் தலைவர் திரு மீ.த.பாண்டியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மில்ட்டன், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க துணை செயலாளர் தோழர் ஜெயபிரகாஷ், மதுரை வழக்கறிஞர்கள் கனகவேல், ஆனந்த முனிராசு, ம.க.இ.க.வை சேர்ந்த தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.

பேசிய அனைவரும் கார்ப்பரேட்டின் லாபவெறிக்காக சொந்த நாட்டு மக்களைக் கொல்லும் அரசின் கொலைவெறியையும், போலீசு எவ்வாறு வேதாந்தாவின் ஏவல் நாயாக தூத்துக்குடியில் மக்களைக் குதறியது என்பதையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைக்காக, மக்களின் விடுதலைக்காக போராடச் சென்று களப்பலியான ஜெயராமனின் பாதையை நாம் வரித்துக் கொள்வோம் என்றும், அவரால் இந்த மண்ணுக்கே பெருமை என்றும் அழுத்தமாக விளக்கினர்.

இறுதியில் உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ, ‘’உயிரைக் கொடுத்து மக்களுக்காக போராடிய தோழரின் தியாகத்தை உயர்த்திப் பிடித்து, அடுத்தடுத்து கார்ப்பரேட்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம். ஆயிரம் பேரை சுட்டாலும் நாங்கள் ‘சுடு பார்ப்போம்’ என நெஞ்சை நிமிர்த்தி நிற்போம். பின்வாங்க மாட்டோம். ஜெயராமனின் பாதையில் செல்வோம்… ஆனால் எங்களுக்கு அடுத்த தலைமுறை சும்மா குண்டடிபட்டுக் கொண்டே இருக்காது.” என உரையாற்றியதும் இரங்கல் கூட்டம் முடிந்தது.

இரவு 11 மணி ஆகியிருந்தது. தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் தொடங்கியது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போரில் தன் உயிரைக் கொடுத்த தோழனே! உன் பாதையில் ஆயிரமாயிரமாய் அடுத்தடுத்து வருவோம்.! செவ்வணக்கம்!!

தகவல்:

  • மக்கள் அதிகாரம்.

2 மறுமொழிகள்

  1. தோழர் ஜெயராமனுக்கு வீரமிக்க புகழ்வணக்கம், அவரின் வீரமிக்க பயணத்தை நாம் தொடர்வோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க