அப் கீ பார் – ஐ.ஏ.எஸ்.-க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !

துறைவாரியாக செயலர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட இணைச்செயலர் பதவியை உருவாக்கி அதில் சங்கிகளையும், கார்ப்பரேட் ஆலோசகர்களையும் அமர்த்தும் திட்டத்தை புழக்கடை வழியாகக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .

சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

1. அரசை பின்னிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.
2. எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளுக்கும் மேலே ஆலோசனைக் குழுக்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திணிக்கப்பட்டுள்ளார்கள்.
3. அதிகாரிகளையே மிரட்டுகிறார்கள்.
4. துறைசார் அறிவோ ஞானமோ இல்லாவிட்டாலும்கூட அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டியதாகிறது.

இதெல்லாம் சாமானியர்களுக்குத் தெரியாமல் உள்ளே நடந்து கொண்டே இருக்கிற விஷயங்கள்தான்.

எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு அவர்கள் ஆர்எஸ்எஸ் என்பதாலேயே லட்சம் ரூபாய் சம்பளத்தில் பல்கலைக் கழகங்களில் கவுரவப் பேராசிரியர் பதவிகள் தரப்பட்டுள்ளன. இதுபோல காவிகளை நிரப்புவதை சட்டபூர்வமாக்கும் பணியும் துவங்கிவிட்டது.

அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செயலர் இருப்பார். (செயலர் என்றால் பொதுவாக அறியப்படும் பிரைவேட் செகரடரி அல்ல. ஐஏஎஸ் முடித்து, பல ஆண்டுகள் பல துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.) எந்தவொரு துறையிலும் அமைச்சர் என்பவருக்கு துறைசார் அறிவு இருக்கும் என்று சொல்ல இயலாது. அமைச்சருக்கு ஆலோசனை கூறுவது, துறைசார் முடிவுகள் எடுப்பது, அரசின் முடிவுகளை செயல்படுத்தச் செய்வது எல்லாமே இந்தச் செயலர்கள்தான்.

இணைச் செயலர் பதவிக்கு விண்ணப்பிக்கக் கோரும் விளம்பரம்

சில துறைகளில் ஒரு செயலர் போதாது என்னும்போது கூடுதல் செயலர் இருப்பார். அவர்களும் போதாது என்னும்போது இணைச் செயலர் (ஜாயின்ட் செகரடரி) என்ற பெயரில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. இவர்கள் உதவிச் செயலரோ துணைச் செயலரோ அல்ல; இணைச்செயலர் – அதாவது, செயலருக்கு இணையான அதிகாரம் உடையவர். (செயலர் அல்லது கூடுதல் செயலருக்குக் கீழே இவர் இருப்பார்.)

இந்த இணைச்செயலர் பதவிகளுக்கு ஐஏஎஸ் அல்லாதவர்களைப் பணியில் அமர்த்தும் வேலை பாஜக ஆட்சிக்கு வந்ததுமே துவங்கி விட்டது. 2015-16இல் 260 ஜாயின்ட் செகரடரி பதவிகளுக்கு தேர்வு செய்தவர்களில் 100 பேர் ஐஏஎஸ் அல்லாதவர்கள். இது அப்போதே பத்திரிகைகளில் செய்தியானது. ஐஏஎஸ் ஆட்கள் பற்றாக்குறை என்ற நொண்டிச்சாக்கு கூறப்பட்டது.

இப்போது இன்னும் தைரியம் வந்துவிட்டது. ஜாயின்ட் செகரடரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற விளம்பரம் வந்துள்ளது.

கல்வித்தகுதி – வெறும் பட்டப்படிப்பு போதும்! (பட்டப்படிப்பு படித்து, யுபிஎஸ்சி நடத்தும் கடுமையான நுழைவுத்தேர்வுக்குப் படித்து, பாஸ் செய்து, அப்புறம் மெயின்ஸ் எனப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று, அப்புறம் நேர்காணலில் தேர்ச்சி பெற்று, அதற்குப் பிறகு ஐஏஎஸ் பயிற்சிப் பள்ளியில் பயில்வதெல்லாம் தேவையே இல்லை.)
வயது – குறைந்தபட்சம் 40 (ஒரு ஐஏஎஸ் ஜாயின்ட் செகரடரி பதவியை அடைய சுமார் 50-55 வயதாகிவிடும். இங்கே 40 வயதிலேயே ஜேஎஸ் ஆகலாம்.)

இதர தகுதிகள் – 1. மைய / மாநில அரசில் இந்தப் பதவியை எட்டக்கூடிய தகுதியில் இருப்பவர்கள். அல்லது 2. பொதுத்துறை / தன்னாட்சி நிறுவனங்களில் இந்தப் பதவியை எட்டக்கூடிய தகுதியுடன் 15 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள். அல்லது 3. தனியார் நிறுவனங்கள் / ஆலோசக நிறுவனங்கள் / பன்னாட்டு நிறுவனங்களில் இந்தப் பதவியை எட்டக்கூடிய தகுதியுடன் 15 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள்.

அரசுத் துறைகளிலும் காவிச் சார்பு உள்ளவர்களைத் தேர்வு செய்து நிரப்பலாம் என்பது மட்டுமல்ல, கடைசியாகச் சொல்லப்பட்ட மூன்றாவது அம்சம்தான் கவனிக்கத்தக்கது.
தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்ததாகக் கூறப்பட்டு எவரையும் இந்தப் பதவியில் நியமிக்கலாம்.

அப் கீ பார் – ஐஏஎஸ்க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !

நன்றி: – ஷாஜகான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க