பேஸ்புக்கில் நான் எழுதுவதை வாசிப்பவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். பெரும்பாலும், எந்தவொரு பிரச்சினைக்கும் உடனே பதிவு எழுத மாட்டேன். அந்தப் பிரச்சினை பதிவு எழுதப்படும் அளவுக்கு முக்கியமானதா, ஊடகங்களில் வந்த செய்தியின் இதர கோணங்களும் உண்டா, தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்படும் சிறிய பிரச்சினையா? வேறு பிரச்சினையிலிருந்து திசைதிருப்புவதற்காக எழுப்பப்படும் பிரச்சினையா? இப்படி பலதையும் ஆலோசித்தபிறகே பதிவு எழுதுவேன்.

பிரதமர் மோடியைக் கொலை செய்ய முயற்சி என்ற செய்தி நேற்று வந்தபோது, அதையும் இப்படித்தான் புறம்தள்ளி வைத்தேன். பிரதமர் என்ன, எந்தவொரு சாமானிய மனிதரும் கொல்லப்படக்கூடாது. அரசால் நடத்தப்படும் மரணதண்டனை என்னும் கொலையாக இருந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல. நாட்டின் பிரதமரைக் கொல்வதற்கான சதி நடக்கிறது என்றால், அது உங்களுக்கும் எனக்கும் தெரிவதற்கு முன் உளவுத்துறைக்குத் தெரிந்துவிடும். அவர்களுடைய செயல்பாடும் நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு நடைமுறைகளும் நீங்களும் நானும் அறிந்து வைத்திருப்பதற்கும் பல மடங்கு மேலானது.

ஏற்கனவே குஜராத்தில் தன்னைக் கொல்ல சதி என அழுகுணி ஆட்டம் ஆடிய மோடி

உதாரணமாக, பிரதமர் ஓர் இடத்திற்குச் செல்வதாக இருந்தால், அவருக்கான பயணப்பாதை குறித்து தேவையைப் பொறுத்து பல பாதைகள் வகுக்கப்பட்டிருக்கும். எந்தப் பாதையில் செல்லப்போகிறார் என்பது மிகச்சிலருக்கு மட்டுமே தெரியும். பிரதமருக்கேகூடத் தெரியாது. பாதை நெடுகிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருப்பார்கள். பிரதமர் இந்த வழியாகத்தான் போகப்போகிறார் என்று அவர்களும்கூட நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் வேறு வழியாகப் போயிருப்பார். ஆக, பிரதமரைக் கொலை செய்யும் திட்டம் ஏதும் உண்மையிலேயே இருந்தால் உளவுத்துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்த்துக் கொள்வார்கள்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பதவியைப் பிடிக்கும் போட்டியில் சாதி, பணம், அரசியல் என எல்லாம் விளையாடும். நான் தமிழ்ச் சங்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து பிரதமரைக் கொல்ல சதி செய்வதாக ஒரு மொட்டைக்கடிதம் எழுதிவிட்டார்கள் சிலர். சிபிசிஐடி துறை இதை தீவிரமாக விசாரித்தது. பல மாதகால விசாரணைக்குப் பிறகு இது ஆதாரமற்ற புகார் என்று ஃபைலை மூடியது. இந்த விஷயம் மிகத் தறசெயலாக எனக்குத் தெரிய வந்தது. அதுவும்கூட கேஸ் மூடப்படும் நேரத்தில்தான் தெரிந்தது. இல்லையேல் எனக்கோ, என் நண்பர்களுக்கோ தெரிய வந்திருக்காது. உளவுத்துறையின் நடவடிக்கை அவ்வளவு ரகசியமாக இருக்கும்.

ரோனா வில்சன் – மாவோயிஸ்டுகளின் கடிதத்தை இவர் வீட்டிலிருந்து எடுத்ததாகச் சொல்லியிருக்கிறது போலீசு

இப்போதைய சதி விஷயம் இவ்வளவு சாதாரணமாக பகிரங்கமாவதைப் பார்த்தாலே இது நாடகம் என்பது புரிய வேண்டும். ஆனால், ஊடகங்கள் கூவ ஆரம்பித்து விட்டன. இன்சைடு ஸ்டோரி, மோடிக்கு அச்சுறுத்தலை அடுத்து பட்நவிஸையும் கொலைசெய்யும் திட்டம்… என கதைகளுக்கு மேல் கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன. செய்திகளுக்கு உள்ளே போய்ப் பார்த்தால் ஒரு புண்ணாக்கும் கிடையாது. எல்லாம் வெற்று வார்த்தைகளால் அடுக்கப்பட்ட பொய்கள்.

இத்தனையும் செய்கிற ஊடகங்கள் எவை என்று பார்த்தால், காசு வாங்கிக்கொண்டு இந்துத்துவா-பாஜக ஆதரவு செய்திகளை பெய்டு நியூஸாக வெளியிடத் தயார்… நாங்கள் பாஜக ஆதரவுதான் என்று கோப்ரா போஸ்ட் நடத்தி ஸ்டிங் ஆபரேஷனில் தெரிவித்த நக்கித்தின்னி ஊடகங்கள்தான். பொய்த்தகவல்களை நாடெங்கும் பரப்பக்கூடிய அபாரமான வலிமையுடன் இருக்கற ஊடகங்களின் மொள்ளமாரித்தனத்தை வெளிப்படுத்த நமக்கு சமூக ஊடகங்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே எழுதியாக வேண்டியிருக்கிறது.

மோடியைக் கொலை செய்வதற்கான மாவோயிஸ்ட்களின் சதித்திட்டத்தை வெளிப்படுத்தும் கடிதத்தில் என்னென்ன விஷயங்கள் உள்ளன?

1. சிறையில் இருக்கிற தோழர்களை விடுவிக்க சட்டரீதியான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
2. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்துவதில் இன்னின்னார் பெரிதும் உதவியாக இருக்கிறார்கள்.
3. சிராஜ் என்பவர் தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறார்.
4. அவருடன் இன்னொருவரை அனுப்பி வைக்கப்படுவார். அவரைப்பற்றிய சிவி – பயோடேட்டா – இத்துடன் இருக்கிற மைக்ரோசிப்பில் இருக்கிறது.
5. 8 கோடி ரூபாய்க்கு ஆயுதம் வாங்க வேண்டும்.
6. அதற்குப் பணம் வேண்டும்.
7. இந்துத்துவ வளர்ச்சி பற்றி பல உறுப்பினர்களும் சீக்ரெட் செல்களும் பகிரங்க அமைப்புகளும் மிகவும் கவலை கொண்டுள்ளன.
8. ஒத்த கருத்துள்ள அமைப்புகளை, அரசியல் கட்சிகளை, சிறுபான்மையினரை இணைக்கும் வேலை நடந்து வருகிறது.
9. மோடி தலைமையிலான பாசிஸ்ட் அரசு ஆதிவாசிகளை கொடுமைப்படுத்துகிறது.
10. பீகாரிலும் மேற்கு வங்கத்திலும் பலத்த அடி விழுந்திருந்தாலும் 15 மாநிலங்களில் மோடி பாஜக அரசை நிர்மாணித்து விட்டார்.
11. ராஜீவ்-காந்தி மாதிரியான நடவடிக்கை எடுப்பது பற்றி நாங்கள் சிந்தித்து வருகிறோம். இதைப்பற்றி சிசி/பிபி (பொலிட் பீரோ / சென்ட்ரல் கமாண்டாம்!) விவாதிக்க வேண்டும். பேரணிகள் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

ஆக, ஒரு மாவோயிஸ்ட் இன்னொரு மாவோயிஸ்ட்டுக்கு டியூஷன் நடத்துவதுபோல எல்லாவற்றையும் விளக்கோ விளக்கு என்று விளக்குகிறார் இந்தக் கடிதத்தில்! எக்கச்சக்கமான குளறுபடிகள் இந்தக் கடிதத்தில் உள்ளன என்பது அரசியலை அவதானிக்கும் எவருக்கும் எளிதாகப் புரியும்.

ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை, சிறுபான்மையினரை இணைக்கும் வேலை நடக்கிறதாம்! மாவோயிஸ்ட்கள் ஜனநாயகத் தேர்தலை நம்பும் எந்த அமைப்புகளுடனும் இணைவதில்லை என்பது தெரியாதா என்ன? முஸ்லிம்களும் இந்த சதியில் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வதற்காக சிறுபான்மையினர் என்ற வார்த்தை, கூடவே சிராஜ் என்று ஒரு பெயர்! சிராஜுடன் யாரையோ அனுப்புகிறார்கள். அவருடைய சிவி மைக்ரோசிப்பில் இருக்கிறதாம். இவ்வளவு விளக்கமாக எழுதுபவர் அதையும் ஏன் கடித்த்துடன் இணைக்கவில்லை? அதாவது, மைக்ரோசிப் பயன்படுத்தினார்கள் என்று சாட்சியம் உருவாக்க வேண்டும், அதற்கான வரிகள் இவை.

தகவல் தொழில்நுட்ப யுகத்தில், செய்திகளை ரகசிய முறையில் அனுப்ப ஏராளமான வழிகள் இருக்கும்போது, இப்படி எல்லாப் பெயர்களையும் தெள்ளத்தெளிவாக எழுதுகிறார்களாம்! எந்தவொரு குற்றவாளியும் ஏதேனுமொரு தடயத்தை விட்டுவிடுவான் என்று சொல்லப்படுவதுபோலவே, பிளான்ட் செய்யப்படும் எந்தவொரு போலீஸ் நடவடிக்கையும் ஏதேனுமொரு தடயத்தை விட்டுவிடும். இதில் அதுபோல ஏகப்பட்ட குறைகள் உண்டு.

மோடிக்கு சிம்பதி கிரியேட் பண்றதோட, எவனும் தப்ப முடியாதபடிக்கு ‘இஷ்ட்ராங்கா’ ‘எவிடன்ஸ்’ தயார் செய்யணும் என்று மேலதிகாரி சொன்னபடி, எல்லார் பெயர்களையும் இணைத்து தயாரிக்கப்பட்ட கடிதம் என்று தெளிவாகத் தெரிகிறது. இல்லையேல், ஒரு நாட்டின் உச்ச அதிகாரம் கொண்ட பிரதமரையே கொலை செய்வதற்கான திட்டம் குறித்து எழுதப்படும் கடிதத்தில் இத்தனை விஷயங்களா பேசப்படும்?

பிரதமரைக் கொல்லும் சதித்திட்டம் தெரிய வந்தது என்றால் முதலில் செய்யக்கூடிய ஒரே வேலை – உடனே இதை உளவுத்துறைக்குத் தெரிவிப்பது, பாதுகாப்பை பலப்படுத்துவது. இப்படி பகிரங்கப்படுத்துவது அல்ல.

பகிரங்கப்படுத்துகிறார்கள் என்றால், இது தெள்ளத்தெளிவான நாடகம். குஜராத்தில் ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டு வெற்றி தந்த நாடகம். அதைத்தான் ‘One more plot’ என்கின்றன ஊடகங்கள்!

இப்போதைக்கு மோடிக்கு நிகரான வாய்ச்வடால் திறமை உள்ளவர் இந்திய அரசியலில் எவருமில்லை என்றாலும், மோடிக்கு எதிரான மனநிலை அதிகரித்துக்கொண்டே போவது நிதர்சனம். நான்குஆண்டுகளில் நாட்டுக்கு ஏற்படுத்திய சோதனைகளே அதிகம். எதிர்ப்பு அலை எப்போதோ வீசத் துவங்கி விட்டது.

இனி உதவக்கூடியது என்னைக் கொல்ல சதி, நான் நாட்டுக்காக உயிரைவிடத் தயார், போன்ற தேய்வழக்கு சவடால்கள்தான். அதற்கான முதல்படிதான் இது. இன்னும் பலதையும் இனிவரும் காலத்தில் பார்க்க நேரலாம். அதில் பாகிஸ்தான், ராமர் கோயில் விவகாரங்களும் வரலாம்.

என்னுடைய கவலை எல்லாம் இதுதான் — முன்னர் எல்லாம், இதுபோன்ற செய்திகள் வரும்போது, போலீஸ் தரப்பு தரும் செய்தியை ஊடகங்கள் அப்படியே விழுங்கி வாந்தி எடுக்காது.

Maoist letter exposes plan to kill PM Modi – என்று போலீஸ் செய்தி கொடுத்தால், அதை
Police claims Maoist letter exposes plan to kill PM Modi அல்லது Alleged plan to kill PM Modi
என்றுதான் எழுதப்படும்.

ஆனால் இப்போது போலீஸ் தரப்புக் கூற்றை ஊடகங்கள் அப்படியே அச்சுபிசகாமல் வெளியிடுகின்றன, அல்லது போலீஸ் தரப்பைவிட அதிகம் கூவுகின்றன.

ஊடகங்கள் இப்படிச் செய்வதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்,
/புனேவை சேர்ந்த காவல்துறை கைது செய்த மாவோயிஸ்ட்களிடம் இருந்து கைப்பற்றிய கடிதங்களில் பிரதமர் மோடியை கொலை செய்ய தீட்டியிருந்த திட்டம் வெளியாகி இருக்கிறது./
என்று பதிவைத் துவக்குகிறார் ஸ்ரீதர்.

  1. கைதுசெய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்கள் அல்ல. மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு உடையவர்கள் என்று கருதப்படுகிறவர்கள். மக்கள் இயக்கங்களில் போராடுபவர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள். தலைமறைவாக இயங்குபவர்கள் அல்ல.
    2. கைப்பற்றிய கடிதங்கள் அல்ல. கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கடிதங்கள்.
    3. கொலை செய்யத் தீட்டியிருந்த திட்டம் வெளியாகி இருக்கிறது அல்ல. கொலை செய்யத் தீட்டியிருந்த திட்டம் வெளியாகி இருக்கிறது என்று கூறுகிறது போலீஸ்.

ஸ்ரீதர் போன்ற விவரமான ஆட்களும் உணர்ச்சிவசப்பட்டு போலீஸ் தரப்புக் கருத்தை அப்படியே கையாள்வதுதான் வியப்பையும் கவலையையும் அளிக்கிறது. அதனால்தான் இந்தப்பதிவு.

பி.கு. – ஒருவர் மாவோயிஸ்டாக இருப்பதே குற்றச் செயலாகி விடாது. ஒரு தத்துவத்தை நம்புவதற்கும் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு சித்தாந்தம் இந்திய அரசமைப்புக்கு எதிரான சிந்தனையாக இருப்பதாலேயே அவர் குற்றம் புரிந்தவர் ஆக மாட்டார், அந்தச் சிந்தாந்தத்தின்பேரில் சட்டவிரோத செயல் புரிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் கடந்த காலத்தில் தீர்ப்பளித்தது உண்டு. அதுவும் இவர்கள் மாவோயிஸ்ட்கள்கூட கிடையாது. போலீஸ் தரப்பின்படியும் மாவோயிச ஆதரவாளர்கள்தான். சதி என்கிற இந்தக் குற்றச்சாட்டும் நீதிமன்றங்களில் நிற்காது என்பது உறுதி.

நன்றி: ஷாஜகான்