FIR போட வேண்டியது பாயம்மா மீதா ? விஜய் டி.வி நீயா நானா மீதா ?

வீட்டில் மாமியாருக்கு உணவிடுவதற்குக் கணக்குப் பார்க்கும் மருமகளின் பேச்சினால் வரும் ஆத்திரம், வயோதிக காலத்தில் நிம்மதியாக வாழ இப்போதே முதலீடு செய்யுங்கள் எனக் கூறும் ஓய்வூதிய முதலீட்டு விளம்பரங்களின் மீது ஏன் வருவதில்லை ? முதியோர் பராமரிப்பு குறித்து வில்லவனின் ஆய்வு!

13

மீபத்தில் நீயா நானா விவாத காட்சி நறுக்கொன்று முகநூலில் அதிகமாக பகிரப்படுகிறது. அதில் பேசும் பர்தா அணிந்த பெண் ஒருவர் பெரும் வசவுக்கு ஆளாகிறார் (முதியோர்களை காப்பகங்களுக்கு அனுப்புவது சரிதான் என கடுமையாக வாதிடுகிறார் அவர், அதில் தமது மாமியாரைப் பற்றியும் அதிகம் குற்றம் சொல்கிறார்). அந்த விவாதத்தை நான் முழுமையாக பார்க்கவில்லை, பார்க்கவும் விரும்பவில்லை.

நீயா நானா விவாதங்கள் பெருமளவு பேசுவோரை உசுப்பேற்றி அதன் மூலம் அவர்களை விவாதத்தில் முரட்டுத்தனமாக பேசவைத்து நடத்தப்படும் வியாபாரம். அங்கே மாமியார்-மருமகள், கணவன் – மனைவி போன்ற ஆபத்தில்லாத (பங்கேற்பாளருக்கு அல்ல, விஜய் டிவிக்கு ஆபத்தில்லாத என்று பொருள்) மற்றும் எளிதில் விற்பனையாகவல்ல தலைப்புக்களே விவாதிக்க தேர்வு செய்யப்படும். ஆகவே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிப்பது அனாவசியம். ஆனால் அந்த பெண்மணி குறித்த எதிர்வினைகள், வசவுகள் ஆகியவை சில கண்ணோட்ட அபாயங்களை அறியத் தருகின்றன.

மாமியார் சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்கிறார் எனும் குற்றச்சாட்டை வைத்து அவர் கொடூரமானவராக சித்தரிக்கப்படுகிறார். நான் ஒன்னும் சும்மா முதியோர் இல்லத்துக்கு அனுப்பல, காசு கொடுத்துத்தான் தங்க வைக்கிறேன் என்பது அவர் வாதமாக இருக்கிறது. போகட்டும் சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்கும் மருமகள் எல்லாம் கொடுமைக்காரி என்றால் நாம் சரிபாதி பெண்களை அந்த பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும். அதில் நமக்கு நெருக்கமான பலரும் இருக்கக்கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை தேவயானிக்கும் அவரது மாமியாருக்கும் நடந்த சண்டை பத்திரிகைகளில் வெளியானது. கிராமத்துப் பெண்மணியான அந்த மாமியாரின் பேட்டி ஒன்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதில் அவர் தேவயானியின் தம்பியை பற்றி இப்படி குறை சொன்னார் “சட்டி சோறு திம்பான் சார், செய்யிற சாப்பாட்டை டப்பா டப்பாவா போட்டு அவங்க வீட்டுக்கு அனுப்புவா”. இந்த மாமியாரை எப்படி விளங்கிக் கொள்வீர்கள்? சோத்துக்கு கணக்கு பார்க்கும் கொடுமைக்காரி என்றா?!. அது அவரது அறியாமையின் வெளிப்பாடு. ஆனால் அதே வசனம் ஒரு மருமகள் வாயிலிருந்து வரும்போது நமக்குள் இருக்கும் நீதிபதி விழித்துக்கொள்கிறான்.

அதே விவாதத்தில் அந்த பாயம்மா வேறு சில பிரச்சினைகளை சொல்கிறார். பணத்தை இரண்டாம் பட்சமாக பார்க்க முடியாது, அப்படி பார்த்தால் கடன்காரன் அவமானப்படுத்துவதை சகித்துக் கொள்ள நேரிடும் என்கிறார். இதில் மிகைப்படுத்தல் இருக்கலாம். ஆனால் முதியோரை பராமரிப்பதில் பொருளாதாரக் காரணிகள் பெரும் இடைஞ்சலாக இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது குறித்து நம் சிந்தனை போகாமல் சிக்கிய நபரை வில்லியாக்கி நாம் நமது ஆத்திரத்துக்கு வடிகால் தேடுகிறோம் இல்லையா?? அதுதான் பெரிதும் கவலையுற வைக்கிறது. பத்து நிமிட ”செறிவூட்டப்பட்ட” பேச்சைப் பார்த்து நம்மால் ஒரு பெண்மணியை ”கொடுமைக்காரி” என தீர்மானித்து அவருக்கு நரகம்தான் கிடைக்கும் என சபிக்க இயலுமானால், “வெறுமனே விளம்பரத்தையும் மேடைப் பேச்சையும் நம்பி, மோடி போன்ற ஒரு ஆளை சூப்பர்மேன் என நம்பவும் முடியும்”. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பைக்குள் 10 ரூபாய் வர இயலுமானால் அதே வழியில் 100 ரூபாய் போகவும் முடியும் இல்லையா?

இந்த ஒரு நபர் குறித்த நமது எதிர்வினைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இந்திய சமூக அமைப்பில் முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேர்மையாக பார்ப்போம்.

முதல் பெரும் பிரச்சினை நாம் வாழ்வதற்கான பரப்பு (வீட்டின் அளவு) பெருமளவு சுருங்கி விட்டிருக்கிறது. வழக்கமாக கிராமங்களில் முதியவர்கள் கூடுவதற்கு என தனியே இடமிருந்தது. சிறு நகரங்களிலும் அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. நடுத்தர வர்கத்தின் வீடுகளில் அவர்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு இடமிருந்தது. இப்போது வீடுகளின் பரப்பு சுருங்கி பொருட்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே இருக்கும் சிறிய பரப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் தேவையிருப்பதால் அதில் பெரியவர்கள் முன்னுரிமையை இழக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய தேவையற்ற வீடுகளில் பிரச்சினை குறைவாக இருக்கிறது (ஒப்பீட்டளவில்). ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகாது என பல ஆண்டுகளாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இந்த சுமுக சூழலுக்கு பெரிய காரணங்கள் அவசியமில்லை, ஒருவரை விட்டு ஒருவர் விலகியிருக்க தேவையான அளவுக்கு அவர்கள் வீடுகளில் இடமிருக்கிறது. எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர் வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விடுவார். காரணம் 4,5 பேருக்கு மேல் வசதியாக உட்கார இடமில்லாத வீடு அது.

முதியோர் இல்லம் (மாதிரிப் படம்)

அடுத்து எல்லாவற்றுக்கும் தேவைப்படும் பணம். பிள்ளைகள் கல்வி, வீடு, எதிர்கால சேமிப்பு, நிகழ்கால தேவைகள் என எல்லாமே முரட்டு செலவீனங்களாக இருக்கின்றன. அந்த முன்னுரிமையிலும் பெரியவர்கள்தான் அடிபட்டுப் போகிறார்கள். அறுபத்தைந்து வயதான ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ஒருவர் இப்போது ஆற்றுப்படுத்துனராக பகுதிநேர வேலை செய்கிறார். அவரது பகுதிநேர சம்பளம் முழுதும் தம்பதிகளின் மருந்து செலவுக்கே போதாது. இவரும் முடங்கினால் அந்த சுமையை அவரது மகள் சுமக்க வேண்டும். ஆனால் அவரது பொருளாதாரம் அதை தாங்குமளவுக்கு இல்லை. இவ்வாறான கதைகள் வேறு வேறு வடிவில் பல வீடுகளில் கிடைக்கக்கூடும்.

இருக்கும் முதியவர்களின் ஓய்வுகால செலவுகளைப்போலவே தமது ஓய்வுகாலத்துக்கு என்று சேமிக்க வேண்டிய நெருக்கடியும் மக்களை வதைக்கின்றது. ஓய்வூதியம் இல்லாத ஒருவர் தமது ஓய்வுகாலத்தில் மாதம் ரூ. 30,000 வட்டியாகப் பெற வேண்டுமானால் 50 லட்சத்துக்கு குறையாமல் சேமித்திருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு, அவர்கள் கல்வி ஆகியவை இன்னுமொரு பெரும் செலவு. நீங்கள் பாவிக்கும் சாலை, பயன்படுத்தும் தண்ணீர் என எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. வாகனமும் செல்போனும் இல்லாமல் அன்றாட வாழ்வே சாத்தியமில்லாமல் போய்விட்டது. உங்கள் வருவாயை பிய்த்துத் தின்ன ஏராளமான செலவீனங்கள் காத்திருக்கையில் முதியவர்களை கருணையோடு அணுக அசாத்தியமான இரக்க குணம் வேண்டும். ஆனால் தாராளமயம் யார் மீதும் இரக்கம் கொள்ளாதே, உடனிருப்பவனை உதறிவிட்டு ஓடு, முன்னிருப்பவனை மிதித்துவிட்டு ஓடு என கற்பிக்கிறது. சாப்பாட்டுக்குகூட கணக்கு பார்க்கும் அல்பத்தனம் தாராளமயத்துக்குப் பிறகுதான் அதிகரித்திருக்கிறது.

தாரளமயம் தனியார்மயம் ஆகியவை  மனித மாண்புகளை இரண்டாம்பட்சமாக்கி விட்டன. அது கற்பித்திருக்கும் முதலீட்டு மனோபாவம் எல்லாவற்றிடம் இருந்தும் ஒரு பொருளாதார பலனை எதிர்நோக்கும் இயல்பை மக்களிடம் திணித்திருக்கிறது. மூத்த குடிமக்களின் ஆகப்பெரும் சாபம் இந்த இயல்புதான். அதுவே அவர்களை தேவையற்ற சுமையாக கருத வைக்கிறது. ”எங்கப்பா ஒழுங்கா பணம் சேர்த்து வச்சிருந்தா நான் இப்படி கஷ்டப்பட்டிருப்பேனா” எனும் புலம்பல்களை பல வீடுகளில் சாதாரணமாக கேட்க முடியும். பிள்ளைகளின் படிப்புக்கு கொட்டப்படும் பணத்தை எதிர்காலத்துக்கான முதலீடாக விளம்பரங்கள் காட்டுகின்றன. ஆனால் முதியோரின் ஓய்வுகால தேவைகள் பற்றிய விளம்பரங்களில் அது பிள்ளைகளின் கடமை என்பதாக இருக்கவே இருக்காது. நீ சேர்த்துவைத்தால்தான் உன் ஓய்வுகாலம் மரியாதையாக இருக்கும் என்பதாவே இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

மேற்சொன்ன காரணிகளில் எதுவுமே தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இல்லாதவை. முதியோர் நல்வாழ்வை சிதைக்கும் இன்னும் பல காரணங்களை பட்டியலிட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட நபர்களின் இயல்பின் காரணமாக உருவாகியிருக்காது. வேறு சில சாத்தியங்களை பரிசீலிக்கலாம்,

ஒருவேளை கல்வி என்பது முற்றிலும் அரசின் பொறுப்பாக இருந்திருந்தால்??

பெரும்பான்மை மத்தியதர வர்க்கம் தங்கள் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிக்க முடியும். அது சாத்தியப்பட்டால் முதியோருக்கு செலவிடுவதில் அவர்களுக்கு தயக்கம் குறையக்கூடும்.

ஒருவேளை ரியல் எஸ்டேட் தொழில் ஒரு கருப்புப்பண சொர்க்கமாக இருந்திராவிட்டால்?

நகர்ப்புற வீட்டு விலைகள் கட்டுப்படியாகும் அளவில் இருந்திருக்கும். முதியோர் பயன்பாட்டுக்கென தனிப்பட்ட இடத்தையும் கணக்கில் கொண்டு வீடுவாங்கும் சாத்தியம் மக்களுக்கு கிடைத்திருக்கும். மேலும் பொதுப்பயன்பாட்டுக்கென (பூங்கா போன்ற) உள்ள இடங்கள் அதிகம் திருடப்பட்டிருக்காது. அவற்றையும் முதியவர்கள் பயன்படுத்திக்கொள்ள சாத்தியம் இருந்திருக்கும்.

ஒருவேளை விவசாயத்தை லாபகரமான தொழிலாக வைத்திருக்க அரசு முயற்சி செய்திருந்தால்?

கோடிக்கணக்கான மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி அகதிகளாக ஓடிவர அவசியம் இருந்திருக்காது. வயதானவர்கள் ஓரளவு மன நிம்மதியோடும் சுயசார்போடும் தம் வாழ்நாளை கடத்த இயலும்.

ஒருவேளை முதியோர் மருத்துவத்தை அரசு தன் பொறுப்பில் வைத்திருந்து அதனை எளிதில் கிடைக்கும்படி செய்திருந்தால்?

வசதியற்ற குடும்பங்கள் தம் பெற்றோரை பார்த்துக்கொள்வதில் தயக்கம் காட்ட அவசியம் இருந்திருக்காது.

ஒருவேளை ஓய்வுகால சேமிப்புக்கு நியாயமான வட்டி கிடைக்கும் என்றால்?

ஒரு குறிப்பிட்ட அளவான முதியோர்களாவது யாரையும் சாராமல் வழ்ந்திருக்க முடியும்.

இப்படி ஏராளமான “ஒருவேளை” கேள்விகளை அடுக்க இயலும். அவை எல்லாமே அரசு எனும் கட்டமைப்பை நம்பியிருப்பவை. அந்த கட்டமைப்பு ஒரு வட்டிக் கடைக்காரனைப்போல மாறியிருக்கிறது. மனித உயிர்களை மதிக்க விரும்பாத கிரிமினலைப்போல நடந்து கொள்கிறது. இந்த சூழலில் வாழும் மனிதர்கள் தாங்களும் அரசின் அந்த இயல்பை தன்னியல்பாகவோ அல்லது வேறுவழியின்றியோ ஏற்றுக்கொள்ள தலைப்படுகிறார்கள். அத்தகைய மக்கள் கூட்டத்திடம் தனிமனித நல்லியல்புகளை பிரசங்கம் செய்வதும் வலியுறுத்துவதும் கூட ஒரு மோசடிதான். எது எப்படிப் போனாலும் ஆண்டவனை தொழு, நீ செத்தால் சொர்க்கம் உறுதி எனும் மதங்களின் வாதத்துக்கு நிகரானது இது.

ஆனாலும் அந்த ”பாயம்மா” பேசியது தவறில்லையா என கேட்கிறீர்களா?

பாயம்மா மீது எஃப்.ஐ.ஆர் எழுதும் முன்னால் நாம் நீயா நானா நிகழ்ச்சியின் வடிவத்தை விளங்கிக்கொள்வது அவசியம். அது ஒரு கருத்தாடல் களம் அல்ல, சற்றே வித்தியாசமான பேச்சுப் போட்டி அது. அங்கே உங்கள் வாதம் வென்றாக வேண்டும் எனும் விதிதான் வலியுறுத்தப்படும். அவர்கள் உங்கள் உணர்வுகளை தூண்டவல்ல பிரச்சினைகளையே தெரிவுசெய்வார்கள். அப்படி தூண்டிவிட்டு அதனை லாவகமாக எடிட் செய்வதில் நீண்ட அனுபவம் கொண்டது நீயா நானா குழு.

நாம் காணும் 1 மணிநேர காட்சிகள் என்பவை 5 முதல் 6 மணிநேரம்வரை படம் பிடிக்கப்பட்டதன் “தேர்ந்தெடுக்கப்பட்ட” வடிவம். சமயத்தில் நீங்கள் விரும்பாத தரப்பில் கூட உட்காரவைக்கப்படலாம் (டி.வி சான்ஸ், நீங்கள் இழக்க விரும்ப மாட்டீர்கள்). ஆகவே நீங்கள் கேட்ட பாயம்மாவின் குரல் அவரே மிகைப்படுத்திக் கொண்டதாக இருக்கலாம். அல்லது பாயம்மாவை கரித்துக் கொட்டிய எதிர்தரப்பு பெண்மணிகள் இயல்பில் பாயம்மாவை விட கொடுமையான மருமகளாக இருக்கலாம். ஆகவே 10 நிமிட காட்சியை வைத்து ஒருவரை சபிக்க முற்படுவது நமது அரைவேக்காட்டு சிந்தனையின் வெளிப்பாடு.

இன்னொரு அம்சம், அந்த பெண்மணி ஒரு சமூக அமைப்பின் விளைவு, அவரை கிரிமினலாக கருதுவது சரியான முடிவல்ல. அதனை தீர்மானிக்க வேண்டியது அவரது மாமியார் உள்ளிட்ட அவரது குடும்பம்தான். ஒருவேளை அந்த மாமியார் முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருப்பாரேயானால் (மருமகளிடம் இருப்பதைவிட) அதில் நாம் கருத்து சொல்ல ஏதுமில்லை.

உங்கள் குழந்தைகளின் மீது முதலீடு செய்யத் தூண்டும் அதே நிதி நிறுவனங்கள், உங்கள் முதுமைக்கு தனியாக முதலீடு செய்யவும் கோருகின்றன.

நாம் எல்லா செய்திகளையும் ஆராய்ந்து எதிர்வினையாற்றுவதில்லை. நம்பகமான நபர்களையும் ஊடகங்களையும் தெரிவு செய்கிறோம். அவர்கள் சொல்வதை ஆராயாமல் ஏற்றுக்கொள்கிறோம். நீயா நானா நிகழ்ச்சியை நல்ல கருத்தாடல் களம் என நாம் நம்புகிறோம் அதனாலேயே அதில் பேசியதை வைத்து நம்மால் ஒருவரை எளிதில் “லேபிள்” செய்ய முடிகிறது.

மேலும் நாம் சரியான தீர்வுக்கு மெனக்கெடுவதில்லை. எளிமையான தீர்வுகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். சரியான தீர்வு என்பது நமது அறிவு உழைப்பு மற்றும் நேரத்தை கேட்கும். உடனடி தீர்வுகள் தேவைப்படும்போது கையில் சிக்கும் ஆட்களை அடித்துவிட்டு ஆறுதல் பட்டுக் கொள்வதைத்தவிர வேறு சாத்தியம் இல்லை.

தர்க்க அறிவை பயன்படுத்தாமல் இப்படி முடிவெடுப்பது என்பது மனிதர்களின் இயல்பான பலவீனமாக இருக்கலாம். ஆனால் அது (அரசு உள்ளிட்ட) மக்கள் விரோத சக்திகளின் ஆயுதமாக இப்போது மாறியிருக்கிறது. நக்சலைட் மற்றும் தீவிரவாத பூச்சாண்டி காட்டி அரசு தம் அழிவுப் பணிகளை செய்கிறது. விஜய் டிவி அந்த பாயம்மாவை வில்லியாக்கி லாபம் பார்ப்பது போல சங்கப்பரிவார அமைப்புகள் முஸ்லீம்கள் எல்லோரையும் வில்லனாக காட்டி லாபம் பார்க்கின்றன.

குழந்தைகளை கடத்துகிறார்கள் என வாட்சப்பில் வதந்தி பரப்பி சுலபமாக பலரை கொல்ல முடியும் சூழல்தான் நம் நாட்டில் இருக்கிறது. ஒரு ஹீரோ வந்தால் சரியாகும்; ஒரு வில்லனை அழித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதெல்லாம் மொக்கை சினிமாத்தனமான நம்பிக்கைகள். தனி மனிதன் திருந்தினால் மாற்றம் வரும் என்பதெல்லாம் சாமியார்கள் மற்றும் என்.ஜி.ஓக்களின் வியாபார ஃபார்முலா.

நீங்கள் அந்த பாயம்மாவை மட்டும் வில்லியாக கருதினால், சங்.பரிவார் மற்றும் வாட்சப் வதந்தி கோஷ்டிக்கு பலியாகும் வாய்ப்பு உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. ஆகவே வெறுமனே சில காட்சிகளை வைத்து உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றுவதை தவிர்த்து, பிரச்சினைகளை சமூக அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கவும் விவாதிக்கவும் பழகுவோம். இன்றிருக்கும் நெருக்கடியான அரசியல் சூழலில் அதனை உயர்ந்த மானுடப் பண்பு என்றெல்லாம் வரையறுக்க முடியாது… இப்போது அது ஒரு பிழைத்திருப்பதற்கான உத்தி (survival technique).

– வில்லவன் இராமதாஸ்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

13 மறுமொழிகள்

  1. வில்லவன். புரிதலுக்கு தேவையான நல்ல கட்டுரை. ஒரு தனி நபரின் செய்கையில் ஒரு பகுதியலவிற்கு சமூகத்தின் தாக்கம் இருக்கிறது.

  2. சரியான புதிய பார்வையின் கோணத்தை மக்களின் இயல்பாக்க சிறை படாத சிந்தனை அவசியமாகிறது.

  3. //நாம் சரியான தீர்வுக்கு மெனக்கெடுவதில்லை. எளிமையான தீர்வுகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். சரியான தீர்வு என்பது நமது அறிவு உழைப்பு மற்றும் நேரத்தை கேட்கும். உடனடி தீர்வுகள் தேவைப்படும்போது கையில் சிக்கும் ஆட்களை அடித்துவிட்டு ஆறுதல் பட்டுக் கொள்வதைத்தவிர வேறு சாத்தியம் இல்லை.//

    இதுதான் உண்மை.

  4. நன் நிறைய பேரிடம் கெட்டவரையில் முதியோர் இல்லம் ஒரு வகையில் நல்லதும் கூட.

  5. என் கருத்தை வினவு ஏற்கவிட்டாலும் பரவா இல்லை, நன் சொல்வதை சொல்கிறேன், இஸ்லாமிய முறைப்படி ஒரு ஆணோ பெண்ணோ வளர்க்கப்படும்போது பொருளாதாரம் முன் நிறுத்தப்படாது, காரணம் இஸ்லாம் மக்களை அரவணைக்க சொல்கிறது, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான முஸ்லீம் அல்ல என்கிறது இஸ்லாம், பக்கத்து வீட்டு காரனையே கவனிக்க சொல்லும் இஸ்லாம் சொந்த குடும்பத்தாரை எவ்வாறு நடத்த சொல்லும், மேலும் இன்றைய வாழ்க்கை முறை பல விஷயங்களி மாற்றிவிடுகிறது

    • அருமையார் சொன்னீர்கள் சகோதரரே அதேமாதிரி அந்த பாயம்மாவின் மாமியார் பாயம்மா கணக்குபார்த்திருந்தால் மங்குணி பாயாத்தா கிடைத்திருப்பாரா இந்த வாழ்கொழுப்பு பாயம்மாவுக்கு.

  6. அருமையார் சொன்னீர்கள் சகோதரரே அதேமாதிரி அந்த பாயம்மாவின் மாமியார் பாயம்மா கணக்குபார்த்திருந்தால் மங்குணி பாயாத்தா கிடைத்திருப்பாரா இந்த வாழ்கொழுப்பு பாயம்மாவுக்கு.

  7. பதிவில் மனது உடன்படவில்லை.

    பக்கத்து வீட்டுப் பிள்ளையை கூட தன் வீட்டுப் பிள்ளையாக நினைத்து உணவிடும் உழைக்கும் இசுலாமிய மக்களின் குணமல்ல இது.

    கடன் வாங்கியாவது பக்கத்து வீட்டுக்காரருக்கு பண்டிகைக்கு பிரியாணி செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் அம்மக்கள்.

    சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு தன் மக்களாக, தாயாக நினைத்து உணவளித்த உழைக்கும் இசுலாமிய மக்களின் மான்பை ஒரு நிமிடத்தில் இந்த பெண் கொச்சைப் படுத்தும் போது வருகிற எதிர்வினைதான் அந்த ஏச்சுகள் என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.

  8. ஒரு வயதான தாய். கணவனை இளம் வயதிலேயே இழந்தவள். அண்ணனின் பராமரிப்பில் வாழ்ந்தாள். அண்ணன் இறந்த பிறகு. அண்ணனின் மகன் தன் வருமானத்தில் தன் குடும்பத்தையே கவனிக்க முடியாத நிலையில்… அத்தை சுமையாகிறாள். தன் வாழ்வை, தன் சாவை தானே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்கிறாள்.

    அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். தன் தேவையை சுருக்கிகொண்டு சிறுக சிறுக சேமிக்கிறாள்.

    ஒரு மழைநாள் இரவில் மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என தொலைக்காட்சியில் அறிவிக்கிறார். மருமகன் போய் நிலைமையை விளக்கி சேமித்து வைத்த பணத்தை மாற்றித்தர கேட்கிறார்.

    நம்பிக்கையற்ற நிலையில் மருமகன் பொய் சொல்வதாக நினைத்து தர மறுக்கிறார். தன் வாழ்நாளில் செல்லாது என அறிந்ததேயில்லை அந்த தாய். பிரதமரை நம்புகிறார்.

    பனி விழும் ஒரு நாளில் அந்த தாய் மரித்துப்போகிறார். அந்த தாயின் சுருக்குப் பையில் 63 – ஐநூறு தாள்களும் அவள் உடலில் உள்ள சுருக்கங்களை விட அதிக சுருக்கங்களோடு இருந்தன.

    காலம் கடந்துவிட்டதால்… அந்த பணத்தாள்கள் வெற்றுதாள்களாகிவிட்டன!

    இறுதியில் பிரதமரும் அந்த தாயை ஏமாற்றிவிட்டார். நல்லவேளை அந்த உண்மையை அறிய அந்த தாய் உயிரோடு இல்லை!

    #உண்மை சம்பவம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க