PRPC : கைதுகளால் எங்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது !

தூத்துக்குடி போலீசால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யார்? அவரது பணிகள் என்ன? மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் விரிவான பத்திரிகை செய்தி!

தோழர் வாஞ்சிநாதன்

பத்திரிகை செய்தி

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கறிஞராக பணியாற்றிவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. வாஞ்சிநாதன் (37) அவர்களின் கைதை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 20.06.2018 அன்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தகுதிநீக்க வழக்கில், உச்சநீதிமன்றத்தில் வழக்காடிவிட்டு டில்லியிலிருந்து கிளம்பி இரவு 11.45 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய போது போலீசால் கைது செய்யப்பட்டார்.

திரு. வாஞ்சிநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு இதற்கு முன்னர் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்பட்டது. வளர்ந்து வரும் வழக்கறிஞரான வாஞ்சிநாதன், மக்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களிலும், களத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஸ்டெர்லைட் விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 24.03.2018 அன்று தூத்துக்குடியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மிகப்பெரிய பொதுக் கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ’ரிட்’ மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றார்.

தேனி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து வந்த திரு. வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வுக்கு மாறினார். இதற்கு முன்னால் அவர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை பிரிவின் இணைச் செயலராக செயல்பட்டார். அதிலிருந்து இவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக உயர்ந்தார். அவர் குற்றவியல் சட்டத்தில் மிகச்சிறந்த  வழக்கறிஞராகவும் திகழ்ந்தார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், போலீசால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், நீதிபதி ராஜேஸ்வரன் கமிசனின் முன் வழக்கு நடத்தினார். அவர் தமது அமைப்போடு சேர்ந்து, ஜோசப் கண் மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட 66 பேரின் சார்பில் வழக்குகள் வாதாடி, அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்தார். அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மருத்துவ கவனக் குறைவுக்காக தண்டிக்கப்பட்டனர்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தர்மபுரி நாயக்கன்கொட்டாய் தாக்குதல் உள்ளிட்ட தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு அவரும் எங்களது அமைப்பும் உண்மையறியும் குழு அறிகைகளை சமர்ப்பித்துள்ளோம். அவர் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு சட்ட உதவி வழங்கச் சென்ற வழக்கறிஞர்கள் குழுவை முன் நின்று  தலைமைதாங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக, திரு. வாஞ்சிநாதனும், தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. அரிராகவனும் செயல்பட்டு வந்தனர். பதிமூன்று அப்பாவி பொதுமக்களைக் கொன்றதற்கு, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 302-ன் படி கூட வழக்கு எதையும் போலீசு பதிவு செய்யவில்லை. தமிழ்நாடு போலீசு டிஜிபி, இவ்விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பந்தப்பட்ட வெறும் 5 வழக்குகளை மட்டும் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றியுள்ளார். மீதமுள்ள 238 வழக்குகளையும் உள்ளூர் போலீசின் வசமே இருத்தி வைத்துள்ளார்.

எரிக்கப்பட்ட ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் ஒரு முதல் தகவலறிக்கையை பதிவு செய்துள்ளது போலீசு. இங்கு அவர்களுக்கு மனித உயிரின் மதிப்பு போலீசு ஆய்வாளரின் ’ஹோண்டா ஆக்டிவா’ வாகனத்தின் மதிப்பை விடக் குறைவானது. போலீசால் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான முதல் தகவலறிக்கைகள், காப்பீடு பெறுவதற்காக போடப்பட்டவையே. இந்த முதல் தகவலறிக்கைகளையும், பிற முதல் தகவலறிக்கைகளையும் மக்கள் இயக்கங்களை முடக்குவதற்கும், பாதிக்கப்பட்ட மக்கள் சிபிசிஐடி முன்னிலையிலும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை கமிசன் முன்னிலையிலும் போலீசின் கொலைகளைப் பற்றி புகார் அளிப்பதைத் தடுக்க பயன்படுத்திக் கொள்கிறது போலீசு.

தூத்துக்குடி மக்களின் மத்தியில் பயத்தையும், பதட்டத்தையும் உருவாக்க வாரண்ட் இன்றி நள்ளிரவு கைதுகளையும், தேடுதல்களையும் தொடர்ந்து வருகிறது போலீசு. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தைப் பொருத்தவரையில் சிறைவைக்கப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் 10 முதல் 30 வழக்குகள் வரை போட்டுள்ளது போலீசு. தற்போது, தனது ஒடுக்குமுறையை, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு சட்டவகையில் உதவி செய்த   செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது விரிவாக்கம் செய்திருக்கிறது போலீசு.

எங்களது மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தில் தம்மை உண்மையாக இணைத்துக் கொண்டனர். தமது முழு ஒத்துழைப்பையும் தூத்துக்குடி மக்களுக்கு வழங்கினர். முக்கியமாக, எங்கள் அமைப்பு சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களோடு இணைந்து மக்களுக்கு சட்ட உதவி செய்து, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நட்த்துவதற்கான வழக்கையும், போலீசு துப்பாக்கிச் சூடு குறித்த நீதி விசரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கையும் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் தகவலறிக்கை, கைது உள்ளிட்ட எவ்விதமான ஒடுக்குமுறையும், தங்களது ஜனநாயக உரிமையைக் காப்பதற்காக நடத்தப்படும் மக்களின் போராட்டங்களோடு கைகோர்ப்பதிலிருந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை தடுக்க முடியாது. அரசு இயந்திரத்தின் இத்தகைய அராஜகங்களை எதிர்கொள்ளவும், எதிர்த்து நிற்கவும் அனைத்து தரப்பு மக்களையும் அழைக்கிறோம். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அதோடு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்களை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கோருகிறோம்.

தகவல்:
ஜிம்ராஜ் மில்டன், மாவட்ட செயலாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
அலைபேசி: 98428 12062

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்