பத்திரிகை செய்தி

நாள்:17.09.2020

ந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப் பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்ட மாற்றங்களும், சாத்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு, சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம், சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால் தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார்.

அந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். தந்தை பெரியார் அவர்கள் 1957-ல் சட்ட எரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை , இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

படிக்க :
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
♦ சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !

கடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்களும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங்களும் சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப்பட்டவை. சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்தது பெரியாரின் குரல்.

இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

கடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.

திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.ஆனால்
கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.

இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.

இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு இன்றுவரை பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தந்தை பெரியார் சொன்னார்.தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்கமாய் தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு தீர்ப்பு வந்தும் நான்கு ஆண்டுகளாய் மவுனம் காக்கிறது.

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம்” என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாளிலாவது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவிக்க வேண்டும்.உடனே,இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 203 மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.

எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி,தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.

எனவே தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளில் கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர் பள்ளியில் ஆகமம் கற்று, தீட்சை பெற்ற 203 மாணவர்களுக்கும் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது..

இவண்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE – TAMILNADU)

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

#கருவறையில்_தீண்டாமை #SaveTemplesFromBrahmanism #HBDPeriyar #பெரியார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க