ஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா

ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர், நியூசிலாந்தில் நேர்முகத் தேர்வு ஒன்றை எதிர்கொள்கையில் இருக்கும் பதட்டம், முதலாம் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழல் ஆகியவற்றோடு, அறிவியலையும் அறியத்தருகிறார் அன்னா.

1

ண்மையில், ” மூத்த மருத்துவ மரபியல்” நிரந்தர விரிவுரையாளருக்கான விளம்பரம் எதேச்சையாகக் காணக் கிடைத்தது.  இந்த வேலையில் எதிர்பார்க்கப்பட்டவற்றிற்கும், என்னிடம் இருக்கும் திறன்களுக்கும் கிட்டத்தட்ட நன்கு ஒத்துப் போவதாகப்பட்டது. சரி விண்ணப்பித்துத்தான் பார்ப்போமே என்று விண்ணப்பித்தேன்.

அதற்கடுத்த நாள் மனிதவளத் திணைக்களத்திலிருந்து ‘உனது விண்ணப்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடிவெடுத்துள்ளோம் அதனால் உனது பரிந்துரையாளர்களின் விவரங்களைத் தரமுடியுமா’ என மின்னஞ்சல் வந்தது. சரியென விவரங்களை அனுப்பிவிட்டுத் திரும்பவும் நேர்முகத் தேர்வுக்கான நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன். 30 நிமிட ஆய்வுரை, 30 நிமிடம் முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவ‌ர்களுக்கு மரபியல் கருத்துகளை அறிமுகப்படுத்தும் ஒரு குறும் விரிவுரை, ஒரு மணித்தியாள பேட்டி மற்றும் வேறு சிலருடன் சந்திப்புகள். இதுவரைக்கும் இவ்வளவு நெடிய நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்ட அனுபவமில்லை.

ஆயத்தம் செய்ய நீண்ட கால இடைவெளியும் இல்லை. அத்தோடு இருந்த இருவாரங்களில் வழக்கமான வேலைகளுடன் வேறு சில வேலைகளும் சேர்ந்தே இருந்தன. எப்படியாவது அந்த 30 நிமிட விரிவுரையை முடித்துவிட வேண்டும். ஆய்வுரை அடிக்கடி செய்வதால் எதோ பார்த்துக் கொள்ளலாம் என்று தொடங்கியது, விரிவுரையைத் தயார் செய்யச் சில நாட்களாவது பிடித்தது. அதன் பின் அதை ஒரு நாலைந்து பேரிடமாவது காட்டிப் பயிற்சி செய்து, அவர்கள் சொன்ன கருத்துகளையும் இயலுமானவரை உள்வாங்கினேன்.

இதையெல்லாம் தாண்டி இங்கும் ஏனைய மேலை நாடுகளிலும் பல்கலைக்கழகக் கலாச்சாரத்தில் பல பிரச்சினைகள் உண்டு. சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.

1.பல்கலைக் கழகங்களில் நிரந்தர கல்வியாளர் பணிக்கு ஆள் எடுப்பது கடினம். அத்தகையோர் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உண்டு. அநேகமான ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஏதாவது உதவித்தொகை அல்லது ஏதாவது ஒரு குறுப்பிட்ட விடயத்தை ஆராய்வதற்குக் கொடுக்கப்பெறும் நிதியிலேயே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படுவர். அது முடியும் தருவாயில், மீண்டும் வேறு இடங்களில் பணத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.

2. அநேகமான உயிரியல் துறைகளில், ஆரம்ப நிலையில் வேலை பெறும் ஆராய்ச்சியாளர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எண்ணிக்கையில் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால் ஆரம்ப நிலையிலிருந்து அடுத்தடுத்த படிநிலைகளுக்குப் போகும் போது படிப்படியாக பெண்களின் எண்ணிக்கை குறைந்து பேராசிரியர்கள் / துறைத்தலைவர்கள் ஸ்தானங்களில் 20%-க்கும் குறைவான பெண்களே இருக்கின்றனர். இதிலும் அநேகமாக எல்லோரும் வெள்ளையினத்தவரே.

3. பல நாடுகளில் உயர் கல்வி என்பது இன்னும் ஆண்களின் தளமாகவே உள்ளது. நிரந்தர வேலைகளை விட தற்காலிக வேலைகளில் பெண்களும் எல்லா நிறத்தவரும் மிகையாகவே இருக்கின்றனர். இன்னும் பல திணைக்களங்கள் வயதானவர்களின் சங்கங்கள்தான்.

4. அனுபவக் கல்வியை விட பட்டம் படித்துப் பெறப்பட்ட முறையான படிப்பையே கூடுதலாக மதிக்கின்றனர். அதனால் சில திணைக்களங்களில் உள்ள குறிப்பாக அனுபவம் மிக்க / பூர்விகக் குடிமக்களைப் பற்றிய அறிவு கொண்ட‌, பூர்விகக் குடிமக்களின் பணிகள் எப்போதுமே பாதுகாப்பற்றவை.

5. மேலும் ஆசியப் பிராந்தியத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், உள்நாட்டு மக்களை விட கல்வி, சமுதாய, பொருளாதார வெற்றியைப் பெறுபவர்கள் என்ற ஒரு மிகத் தவறான உணர்தல் இங்கு உண்டு. ஆசியர்களுக்கு எதிராக இனவாதம் பல்வேறு தளங்களில் இருந்தாலும் மேற்சொன்ன எண்ணம் பலரிடம் உண்டு. இந்த தவறான புரிதலை வைத்தே பூர்விக மக்களை இன்னும் ஒடுக்கும் தன்மை எல்லா மேலை நாடுகளிலும் உண்டு. ஆசியர்களை ”முன்மாதிரி சிறுபான்மையினர்” என்பர்.
அதனால் நாமும் காலனியவாதிகளால் நடத்தப்படும் பூர்வீக மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு ஒத்துழைப்பதுடன் நம்மில் பலரும் அதையே நம்புகின்றனர். நம்மில் பலருக்கு நாம் பூர்வீக மக்களிடமிருந்து திருடப்பட்ட நாடுகளில் வாழ்கிறோம் என்பது மட்டுமல்ல, அம்மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறை நடந்து கொண்டே (சில சமயங்களில் எம்மை உதாரணமாகக் காட்டியே) இருக்கிறது என்ற புரிதலும் இல்லை.

6. அநேகமாக ஆசியாவிலிருந்து 40-50 வருடங்களுக்கு முன் மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் அநேகமானோர் படித்த / பணக்காரக் குடும்பங்களே. அதை வைத்தே இந்த ”முன்மாதிரி சிறுபான்மையின கட்டுக்கதை”  தோன்றியிருக்கலாம். இந்த தவறான புரிதலால் அண்மைக்காலங்களில் போராலோ வேறு விதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆசியாவிலிருந்து இங்கு வந்தவர்களும் சிரமப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு, ”அறிவியல் பெற்றோர்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில், ஒருவர் “இன்னும் பேராசிரியர் என்றால் 50-களில் இருந்த ஆண் பேராசிரியர் போல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 50-களில் அவர்களுக்கு வீட்டில் எல்லாம் செய்து கொடுக்க முழு நேர வேலைக்காரியாக மனைவி இருந்திருப்பார். இப்போதும் அப்படி அக்காலத்தில் இருந்த பேராசிரியர்கள் மாதிரி எப்போதும் வேலையிலேயே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பிழையானது” என்றார்.

இது போன்ற பிரச்சினைகளை பல்கலைக்கழகங்களில் முன்பு கதைப்பதற்குக் கூட பெரிதாகச் சந்தர்ப்பங்கள் இருந்ததில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பெண்களும் நிறத்தவரும் சில பதவிகளால் உள்ளுக்குள் வந்து கதைக்கத் தொடங்கியதால் இப்போது அநேகமான இந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடல்களாவது நடைபெறுகின்றன.

எப்படி பல்கலைக்கழகத்தின் பன்முகத் தன்மையைக் கூட்டுவது, காலனியாக்கத்தின் விளைவுகள், தலைமைப் பண்பு நிகழ்வுகளில் பெண்கள், பிள்ளை வளர்ப்பையும் வேலையையும் ஒன்றாகக் கையாள்வது பற்றிய கலந்துரையாடல்கள், நெகிழ்வான வேலை நேரங்கள், சமத்துவ அலுவலகம் என மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகள் எல்லாவற்றையும் அகற்ற இன்னும் எத்தனையோ காலம் வேண்டும். ஆனால் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதற்படி, அப்பிரச்சினைகள் உள்ளன என்ற புரிதல்தான் என்ற வகையில் பல பிரச்சினைகளுக்கு முதற்படியையாவது எட்டி விட்டோம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் எனது நேர்காணல் அனுபவத்திற்கு திரும்புகிறேன்.

பல்கலைக்கழகம் (மாதிரிப் படம்)

நேர்முகத் தேர்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் ‘நேர்முகத் தேர்விற்குப் பின் எம்முடன் இரவுச் சாப்பாட்டிற்கு வர முடியுமா?, இது நேர்முகத் தேர்வின் ஒரு பகுதியல்ல, அதனால் நீங்கள் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் நேர்முகத்தேர்வு செய்பவர்கள், இத்துறையில் வேலை செய்யும் வேறு சிலருடனும் தனிப்பட்டரீதியில் பழக ஒரு சந்தர்ப்பம்’ என்று மின்னஞ்சல் வந்தது. அதற்கும் ”சரி வருகிறேன்” என்றாயிற்று. இன்னும் சிலருடன் தனித்தனியாக குறைந்தது 45 நிமிடங்களாவது சந்திப்பு, ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரிதாகக் கிடைக்கும் இந்த நிரந்தர விரிவுரையாளர் பதவி, ஒருவேளை கிடைத்தால் அநேகமாக அடுத்த 30-35 வருடங்கள் அல்லது ஓய்வெடுக்க முடிவு செய்யும்வரை, அதே திணைக்களத்தில் இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் இதை ஒரு பெரிய கிடைத்தற்கரிய விசயமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுடன் ஒத்துவருமா?, எனது குணாம்சங்கள் என்ன?, அவர்களின் வேலைக் கலாச்சாரத்திற்கு நான் என்ன கொண்டு வருவேன்?, போன்றவற்றைக் கணிப்பதற்காகவே இவ்வளவு மெனக்கடல் எனப் புரிந்தது. அதனால் பதட்டமும் கூடியது.

தனித்தனி சந்திப்புகளின் போது கதைக்க எதுவும் இல்லையெனில் என்ன செய்வது? ஆய்வுரையையும் விரிவுரையையும் சொதப்பினேன் என்றால் அந்நாள் முழுதும் எவ்வளவு உறுத்தலாக இருக்கும்? தற்சமயம் முழுதாகச் சொதப்பினால் பிறகு இந்தப் பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் வேறெதாவது வேலைவாய்ப்புகள் வந்தாலும் விண்ணப்பிக்க முடியுமா? அதோடு சேர்ந்து நாம் தகுதியற்றவரோ என்ற பய உணர்வும் (imposter syndrome) சேர்ந்து கொண்டது.

மற்றைய வேலைகளுடன் ஆய்வுரைக்கு, அண்மையில் செய்த ஆய்வுரைகளில் இருந்து பவர் பாயிண்ட் வழங்கலை எடுத்து உபயோகித்து எதோ தயாரித்தாலும் ஒரு மணித்தியாள பேட்டியைப் பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை.

‘Pursuit of Happiness’ படத்தின் இறுதிகட்டத்தில் ஒரு காட்சி

நேர்முகத்தேர்வு, கடந்த செவ்வாய்க்கிழமை (26.06.2018) நடந்தது. உண்மையில் விடியத் தயாராகும் போது ’Pursuit of Happiness’ படத்தில், ’வில் ஸ்மித்தின்’ கதாபாத்திரம் தனது கனவுத் தொழில் கிடைக்குமா, கிடைக்காதா என அறிய இறுதியாகப் போன காட்சியில் எப்படி இருந்ததோ அப்படியே உணர்வதாகப் பட்டது.

நேரத்திற்கே போய்விட்டேன். தேர்வுக் குழுவின் தலைவர் வந்தார். ஆரம்ப அறிமுகம் முடிந்ததும் எப்படி உணர்கிறீர்கள்? என்றதற்கு மேற்சொன்னதையே சொல்ல, அவர் தான் அந்தப் படம் பார்க்கவில்லை என்றார். அதன் பின் வேறொருவருடன் சந்திப்பு. அவரும் எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டதற்கு,

நான்: நான் வில் ஸ்மித்தைப் போல உணர்கிறேன். ம்ம்… நீங்கள் ”Pursuit of Happiness” படம் பார்த்திருக்கிறீர்களா?

அவர்: இல்லை ! அது எதைப் பற்றிய படம் ?

நான்: ஓ! பரவாயில்லை .. நான் கொஞ்சம் பதட்டமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன், அவ்வளவுதான். (என் மைண்ட் வாய்ஸ்: அம்மா தாயே, மொதல்ல உன் நெனப்புல இருந்து வில் ஸ்மித்த வெளிய தூக்கிப் போடு!)

(Pursuit of happiness, திரைப்படம் கிரிஸ் கார்ட்னர் என்ற தரகரது வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். ஒரு கறுப்பினத்தவராக, ஒரு தனியாக வாழும் தந்தையாக மிகவும் வறுமை மேலோங்கியிருந்த வாழ்க்கையில்,  கிரிஸ் கார்ட்னர்  எவ்வாறு ஒரு சம்பளமற்ற பயிற்சியாளராக ஒரு பங்குச் சந்தை தரகு நிறுவனத்தில் சேர்ந்தார் என்பதையும், அவர் எந்த அளவிற்குக் சிரமப்பட்டு அந்தப் பயிற்சியை முடித்து அதன் பின் அந்த வேலையை எப்படிப் பெறுகிறார்? என்பதுமே அப்படத்தின் சாராம்சம்.)

ஆய்வுரைக்கும் விரிவுரைக்குமான நேரம் கொஞ்சம் பதட்டமாகவே வந்தது.  கிட்டத்தட்ட எல்லோருமே வெள்ளையராக இருப்பது சிறிது ஆச்சரியத்தை அளித்தாலும், என்னை அறிமுகம் செய்ததும் எழுந்து, ‘கியா ஓரா கவுடவ்’ (’Kia ora koutou’) (அயோத்தியரோஆ நியூசிலாந்தின் பூர்வீகக் குடிகளான மஓரி மக்களின் மொழியில் வணக்கம்) என்று தொடங்கினேன்.

எனது ஆய்வுரை, கர்ப்பக் காலத்தில் மட்டுமே வரும் நீரிழிவு நோயில், நான் மேற்கொண்ட ஆய்வு பற்றியது.  மனிதரின் சூல்வித்தகத்தைப் பற்றி விளக்கும் போது எப்படிக் கருவிலிருந்து தாயின் கருப்பையை ஊடுருவும் செல்கள் தாயின் ஒடுங்கிய அதிகத் தடையுடைய (resistance) கருப்பை இரத்த நாளங்களை, சூல்வித்தகத்திற்கு இரத்த ஓட்டத்தைக் கூட்டுவதற்காக அகன்ற‌ குறைந்த தடையுடைய இரத்த நாளங்களாக மாற்றும் (transforming the narrow, high resistance blood vessels to wide low resistance vessels) என விளக்கும் போது அந்த ’resistance’ என்ற சொல் மூளையை விட்டு வெளியே வருவதாய் இல்லை.

இதையே பல நூறு தடவைகள் பலருக்கு விளக்கியிருக்கிறேன். அங்கு விளக்குகையில், “”From narrow/ high ummmm…. to wide, low ummmm… ” என சில விநாடிகள் நிறுத்திவிட்டேன். மூளை வேலை செய்யவில்லை. அதன் பின் தடித்த/ ஒடுங்கிய நாளங்களை, மெல்லிய/அகன்ற நாளங்களாக மாற்றி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறதெனச் சொல்லி வைத்தேன். முற்றிலும் சொதப்பவில்லை.  முடிந்த பின் பலர் மேலும் தெரிந்து கொள்ள பல கேள்விகள் கேட்டுக் கலந்துரையாடும் வாய்ப்பு இருந்தது.

அதன் பின் விரிவுரை.

“இப்போது நீங்கள் உங்களை முதலாமாண்டு மாணவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள். நானும் உங்களை ஆவல் மிகுந்த‌ 17 / 18 வயதானவர்களாகக் கற்பனை பண்ண முயற்சி செய்கிறேன்” எனத் தொடங்கினேன். எனது விரிவுரையின் தலைப்பு ” டி.என்.ஏ., மரபணுக்கள் மற்றும் குரோமோசோம்கள்”.

மரபியல்/ மரபுவழி என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் எனத்தொடங்கி மரபுவழி கடத்தும் ஆற்றல் / வாகபபா (whakapapa) (மரபியலுக்கான மஓரி மொழி வார்த்தை) என்றால் நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்கிறீர்கள்?

மவுரிஸ் வில்கின்ஸ், ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின்

எம் முன்னோர்கள் காலம் காலமாக தமது முன்னோர்கள் பற்றிய கதைகளை எமக்குச் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் மரபு பற்றிய சிந்தனை மிகப் பழமையானது. ஆனால் மரபு பற்றிய பழைய சிந்தனைகள் பல மிகப் பிழையானவை. உதாரணத்திற்கு அரிஸ்டாட்டில், பெற்றோரின் இயல்புகளின் கலவையே பிள்ளைகள் என்று கூறியிருக்கிறார். மேலும், தந்தை உயிரையும், தாய் உடல் கட்டுமானத் தொகுதிகளையும் வழங்கியே புது மனிதர் உருவாக்கப்படுகின்றனர் என்றும் விந்து சுத்திகரிக்கப்பட்ட மாதவிடாய் இரத்தம் என்றும் கூறினார். அதனாலேயே இன்றும் மரபு வழி உறவுகளை இரத்த உறவுகள் என்கிறோம் எனத்தொடங்கி, பின்னர் தொடக்கத்திலிருந்து டி.என்.ஏ (DNA) கட்டமைப்பைக் கண்டறியும் வரை ஆய்வாளர்கள் செய்த சில குறிப்பிட்ட பரிசோதனைகளை விளக்கி எவ்வாறு படிப்படியாக DNA-வின் கட்டமைப்பைக் கண்டறிந்தார்கள் என விளக்கினேன்.

இடையில் பல ஆண் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப் பின் முதன் முதலில் ஒரு பெண் ஆய்வாளரைக் குறிப்பிட்ட போது “உங்கள் காதுகள் தவறாக கேட்கவில்லை – இந்த ஆண்களின் வரலாற்றில் முதன் முதலில் ஒரு பெண்ணின் பெயரை நான் உண்மையில் சொன்னேன்.” என்றபோது விளங்கிப் புன்னகைத்தனர்.

ஃப்ராங்க் க்ரிக், ஜேம்ஸ் வாட்சன்

பின் DNA கட்டமைப்பைக் கண்டறிந்தவர்களில் நால்வரைப் பற்றிச் சொல்கிறேன் என ”ஜேம்ஸ் வாட்சன், ஃப்ராங்க் க்ரிக், மவுரிஸ் வில்கின்ஸ் மற்றும் ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின்” (James Watson, Frank Crick, Maurice Wilkins and Rosalind Franklin) ஆகியோரைப் பற்றிக் கூறினேன்.  ரோசாலிண்ட் எடுத்த டி.என்.ஏ-வின் X-ray படத்தை மவுரிஸும் ரோசாலிண்டும், ஜேம்ஸ் வாட்சனுக்கும், ஃப்ராங்க் க்ரிக்குக்கும் கொடுத்ததாலேயே  அவர்களால் அந்தக் கட்டமைப்பைக் கண்டறிய முடிந்ததெனவும் கூறினேன்.

நான் கதைத்த இடத்திலேயே மவுரிஸ் வில்கின்ஸ் ஆராய்ச்சி மையம் (Maurice Wilkins Research Centre) உள்ளது. ஏனெனில் அவர் இங்கே பிறந்தார். இதைச் சொல்லாமா வேண்டாமா என முதலில் ஒரு நொடி யோசித்தாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாதென உணர்ந்து சொன்னேன்.

கடைசியில் மனிதரின் நிறவுருக்களைப் பற்றிச் சொல்லும் போது நான் போட்ட படத்தில் ஒரு X குரோமோசோமும் ஒரு Y குரோமோசோமும் இருந்தன. எமக்கு 22 சோடி ஒத்த நிறவுருக்கள் உண்டு. இப்படத்தில் கடைசி இரு நிறவுருக்களும் ஒத்தவை அல்ல. இவற்றை பால் குரோமோசோம் எனக் கூறுவர். உங்களுக்கு Y நிறவுரு இருந்து அதில்  SRY என்ற மரபணு இருக்குமானால் அநேகமாக (எப்போதுமல்ல) நீங்கள் பிறந்திருக்கும் போது உங்களை ஆண் என்று சொல்வார்கள். அதுவே உங்களுக்கு இரண்டு X நிறவுருக்கள் இருப்பின் அநேகமாக (எப்போதுமல்ல) உங்களைப் பெண் என்பர். ஆனால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்பது வேறு பல காரணிகளால் மாறுபடலாம். பால் நிறவுருக்களின் அர்த்தம் அவ்வளவே.

விரிவுரை எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்ததென நினைக்கிறேன். ”வாவ், நான் புதிதாகப் சில விடயங்கள் தெரிந்து கொண்டேன்”, “நீங்கள் இடைக்கிடை கேள்விகள் கேட்டுக் கேட்டுச் சொன்னது நன்றாக இருந்தது”, ”எனக்கு உங்களது விரிவுரையிலிருந்த உள்ளடக்கிக் கூறும் தன்மையைக் (inclusive aspects) கேட்டு கிட்டத்தட்ட அழுகையே வந்தது” என்றார் ஒருவர். அந்த மாதிரி எதிர்வினை கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை.

பின் மதியச் சாப்பாடு. ஒரு மணிநேர பேட்டி. நேர்காணலைப் பற்றி அதிகம் யோசிக்க எனக்கு நேரமிருக்கவில்லை. ஆனாலும் சும்மா ஒரு கலந்துரையாடல் மாதிரி அவர்கள் கேட்டவற்றிற்கு பதிலளித்தேன். குறிப்பாக ஒரு கேள்விக்கு இன்னும் சிறப்பாகப் பதிலளித்திருக்கலாம். கற்றுக் கொடுப்பதில் என்ன மாதிரியான தத்துவம் உங்களது? எனக் கேட்ட போது, “என் தத்துவம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் …” என்று தொடங்கி பல விடயங்கள் சொன்னேன். ஆனால் பூர்வீக மக்களின் மொழி / மரபறிவுகளை, பால் வாதம், இனவாதம் தொடர்பான‌ தன்மைகளை உள்ளடக்குதல் போன்றவற்றை எனது ”மாதிரி விரிவுரையில்” தெரிந்தே புகுத்திய போதும், அது எனக்கு முக்கியம் என இந்தக் கேள்வியை அவர்கள் கேட்டபோது சொல்லவில்லை.

பின் யோசிக்க ஒரு சில நிமிடங்கள் கிடைத்தபோது அதை உணர்ந்து அதன் பின் அவர்களைச் சந்தித்த போது கூறினேன். அவர்கள் எனது விரிவுரையிலேயே தாம் அதைக் குறித்துக் கொண்டதாகக் கூறினார்கள்.

அதன் பின் நடந்த 45 நிமிட சந்திப்புகளில் நான் நினைத்தமாதிரி கதைக்க விடயங்கள் இல்லாமல் போகவில்லை; கதைத்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது தான் தெரியவில்லை. அதிகப்பிரசங்கியாக இருந்தேனா தெரியவில்லை. 🙂  பின் இரவுச் சாப்பாடும் மிக நன்றாகவே சென்றது.

எனக்கு இந்த வேலை கிடைக்குமா இல்லையா தெரியாது. ஏனெனில் இன்னும் மூவருக்கு இவ்வேலைக்கான நேர்காணல் தேர்வு செய்கிறார்கள். அதனால் நால்வரில் யாரை எடுக்கிறார்களோ தெரியவில்லை. மற்றவர்கள் யாரென எனக்குத் தெரியாது. ஆனால் வேலை கிடைக்காவிட்டாலும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

– அன்னா
(கட்டுரையாளர் குறிப்பு :  மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்)

மேலும் :

சந்தா செலுத்துங்கள்

கார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா? ஆதரியுங்கள்.

1 மறுமொழி

  1. கட்டுரை அருமை அன்னா..
    ’வில்ஸ்மித்’ மூலம் அந்த நிலைமையின் உணர்வுகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.
    model minority Myth குறித்து இன்னும் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க