ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் : எங்களை யாரும் மூளைச்சலவை செய்யவில்லை மடத்தூர் மக்கள் கடிதம் !

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக வழக்கு நடத்திடவும் – ஸ்டெர்லைட்டுக்கு தமிழக அரசு வழங்கிய அனைத்து உரிமங்களையும் ரத்து செய்யவும் பொய் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்வதை நிறுத்தக் கோரியும் – மனு

அனுப்புநர்

கிராமப் பொதுமக்கள் சார்பாக : சிம்லா (க/பெ: சுடலைமணி, 2/235, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, மடத்தூர்)
மடத்தூர்.
தூத்துக்குடி மாவட்டம்

பெறுநர்

  1. உயர்திரு. தமிழக முதல்வர் அவர்கள்
  2. உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள்,
    தலைமைச் செயலகம், சென்னை

வழியாக

தலைவர் அவர்கள்,
இலவச சட்ட உதவி மையம்,
மாவட்ட நீதிமன்றம்,
தூத்துக்குடி

அய்யா ,

பொருள்: ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக வழக்கு நடத்திடவும் – ஸ்டெர்லைட்டுக்கு தமிழக அரசு வழங்கிய அனைத்து உரிமங்களையும் ரத்து செய்யவும் பொய் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்வதை நிறுத்தக் கோரியும் – மனு

ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து, வரும் 18.07.2018 அன்று விசாரணை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் திரு.பாலி நாரிமன், திரு.கபில் சிபல் போன்ற மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்துமாறு கோருகிறோம்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டுகிறோம். மேலும், கட்டிடச் சான்று. தொழிலாளர் துறைச் சான்று, தீயணைப்புத் துறைச் சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளையும் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

ஸ்டெர்லைட்டினால் மக்களுக்கு மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட  பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும். நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது என்ற தகவலை பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவதாக, தூத்துக்குடி காவல்துறை போராடிய மக்கள், மக்களுக்கு ஆதரவு தந்தவர்கள் என பலரையும் பிடித்து நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு வருகிறது. எங்கள் கிராமம் உட்பட அனைத்துக் கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் யாரும் ஊரில் இல்லை. மூளைச் சலவை செய்து விட்டார்கள் என்ற வதந்தி பரப்பப் படுகிறது. நாங்கள் மக்களாகச் சேர்ந்துதான் போராடினோமே தவிர, எங்களை யாரும் மூளைச் சலவை செய்யவில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர், காவல்துறையின் மிரட்டலால் பொய் மனுக்கள் அளிக்கின்றனர். உண்மையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், முழுக்க முழுக்க மக்கள் போராட்டம்.

எங்களை யாரும் மூளைச் சலவை செய்யவில்லை ! மடத்தூர் பொதுமக்கள் மனு

தொடர்ந்து போராடிய எங்களுக்கு ஒட்டு மொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்கள், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் உட்பட பலரும் ஆதரவு அளித்தார்கள். முக்கியமாக திருவாளர்கள் ஸ்டாலின், வைகோ, இராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், விஜயகாந்த், கமல், சரத்குமார் ஆகியோரும் தமிழகம் முழுவதும் உள்ள பல அமைப்புகளும் இந்த ஆதரவில் உள்ளடக்கம். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் திரு.வாஞ்சிநாதன், அரி ராகவன், தேடப்படும் வழக்கறிஞர்கள் இராஜேஸ், அப்துல் நிஜாம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் எங்களுக்கு சட்ட உதவிகள் செய்தனர்.

உண்மைகள் இவ்வாறிருக்க தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கள் கிராமம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

எனவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனே சிப்காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். பொய் வழக்குகள், கைதை நிறுத்த வேண்டும். வழக்குகளை வாபஸ் பெற்று, சிறையில் உள்ளவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

16.07.2018

இப்படிக்கு

மடத்தூர் பொதுமக்கள்

இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளிக்கும் மடத்தூர் கிராம மக்கள்

அளிக்கப்பட்ட மனுவின் நகல்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )