சாம் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தகுதித் தேர்வில் முறைகேடுகள் செய்து பதவியை அடைந்ததற்காக 19 பேர், கடந்த 18 ஜூலை 2018 அன்று அசாம் போலீசால் கைது செய்யப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் அசாம் மாநில தேஜ்பூர் தொகுதியின் பாஜக எம்.பி. ஆர்.பி.சர்மாவின் மகளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பணிஅசாம் மாநில அரசு ஊழியர்களைத் தேர்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தகுதித் தேர்வை ஒழுங்குபடுத்தும் அமைப்புதான் அசாம் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் (Assam Public Service Commision). இது தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் தேர்வாணையத்தைப் (TNPSC) போன்ற ஒரு அமைப்பு.

கடந்த 2016-ம் ஆண்டு, இந்த ஆணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் நடைபெற்ற மோசடிக்கு எதிராக எழுந்த புகாரைத் தொடர்ந்து அம்முறைகேட்டை விசாரித்த அசாம் போலீசு, அது தொடர்பாக அச்சமயத்தில் தேர்வாணையக்குழுவின் தலைவராக இருந்த ராகேஷ் பால் மற்றும் பிற 3 அலுவலர்களையும் கைது செய்து விசாரித்தது.

முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக 19 அசாம் அரசு அலுவலர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இவர்களில் 13 பேர் குடிமையியல் சேவைப் பணியிலும் 3 பேர் போலீசு சேவைப் பணியிலும் மேலும் இருவர் போக்குவரத்துத்துறை அலுவலர்களாகவும், ஒருவர் வரித்துறை அலுவலராகவும் பணி புரிந்தவர்கள். இவர்களில் பாஜக எம்பி ஆர்.பி.சர்மா என்ற ராம் பிரசாத் சர்மாவின் சீமந்தப் புத்திரி பல்லவி சர்மாவும் போலீசு சேவைப்பணியில் முறைகேடாகச் சேர்ந்துள்ளார்.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தலா ரூ. 15 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை பேரம் பேசப்பட்டிருக்கிறது. பணம் கொடுத்த 19 பேரின் விடைத்தாள்களுக்கு பதிலாக சரியான விடை நிரப்பப்பட்ட விடைத்தாளை மாற்றி வைத்து இம்மோசடியைச் செய்துள்ளனர். தற்போது இந்த விடைத்தாள்களில் உள்ள கையெழுத்தையும், மோசடியான முறையில் பணியில் சேர்ந்த 19 பேரின் கையெழுத்தும் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வக முடிவுகளில் 19 பேரின் கையெழுத்தும் விடைத்தாளில் இருந்த கையெழுத்துடன் ஒத்துப் போகவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இந்த 19 பேரின் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யபட்டது.

பாஜக எம்பி மகள்
பல்லவி சர்மா

அதன் பின்னர்தான் ஆர்.பி.சர்மாவின் மகள் பல்லவி சர்மா உட்பட 19 பேரை கடந்த 18.07.2018 அன்று கைது செய்தது போலீசு. இவ்வழக்கில் ஏற்கனவே தேர்வாணையத் தலைவர் ராகேஷ் பால் மற்றும் தேர்வாணைய அதிகாரிகள் உட்பட 44 பேரை கைது செய்திருப்பதாகவும் இன்னும் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாகவும் திப்ருகர் கூடுதல் எஸ்.பி சுர்ஜீத்சிங் பனேசார் கூறியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, பாஜக எம்.பி. ஆர்.பி. சர்மா, தமது மகளை அரசியல் பலிவாங்கும் நோக்குடனேயே இவ்வழக்கில் போலீசு கைது செய்துள்ளது என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி. சீட்டிற்கு தாம் நிற்கக்கூடாது என்பதற்காகவே போலீசும், அசாம் மாநில பாஜக தலைவர்களும் திட்டமிட்டு இதனைச் செய்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

தேர்வாணையக் குழு முறைகேடுகள் என்பது இந்தியா முழுவதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். தமிழகத்தில் தொடங்கி காஷ்மீர் வரையில் அரசுப் பணியிடங்களில் சேர்வதற்கு பணம்தான் பிரதானமானது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இன்னும் சொல்லப் போனால் பெரும்பான்மையான ஓட்டுக் கட்சிகள் இந்த முறைகேடுகளில் பங்குள்ளவர்களாகவே இருக்கின்றனர். அசாம் முறைகேடுகளில் தற்போது கைது செய்யப்பட்டவர்களில் கூட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நிலமனி சென் தேகாவின் மகன் ரஜர்ஷி சென் தேகாவும் ஒருவர்தான்.

அரசுப் பணி
ஆர்.பி.சர்மா என்ற ராம் பிரசாத் சர்மா

பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் முறைகேடு, உலகமே காறித் துப்பிய ஒன்று. இந்த முறைகேட்டின் மூலம் மருத்துவக் கல்வியைப் பற்றி கனவு காணக் கூடத் தகுதியில்லாத ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுத்து அழகு பார்த்தவர் பாஜக-வின் சிவராஜ்சிங் சவுகான். இந்த முறைகேட்டில் சுதர்சன் உட்பட பல ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஈடுபட்டிருந்ததும் அம்பலமானது. இந்த விவகாரத்தில் இந்த குற்றக் கும்பலுக்கு எதிரான சாட்சிகள், விசாரணை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள்  என 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தனிக்கதை.

அது பாஜக எம்.பி. ஆர்.பி சர்மாவின் மகளின் ஆள்மாறாட்ட முறைகேட்டில் வெளிப்பட்டிருக்கிறது.இத்தகைய குற்ற வரலாறு அஸ்ஸாமிலும் தொடர்கிறது. ஊழலற்ற கட்சி, நேர்மையான கட்சி என்று பீற்றிக் கொள்ளும் பா.ஜ.க-வினர் அதிகாரத்திற்கு வந்த பிறகு எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது இது ஒரு சான்று. இந்த இலட்சணத்தில்தான் இவர்கள் நீட் தேர்வு திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என வாய் கூசாமல் பொய்யுரைக்கிறார்கள்.

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க