திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசி வட்டத்தைச் சேர்ந்த திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பலருக்கும் அறிந்த பள்ளியாகி விட்டது. இப்பள்ளியின் சமையலராக பணி ஏற்க வந்த பாப்பாள் அம்மாள் ஒரு தலித் பெண் என்பதால் உள்ளூர் சாதி இந்துக்களான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமலைக்கவுண்டன் பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி

இந்த ஊர்தான் பாப்பாள் அவர்களின் சொந்த ஊர். ஒச்சாம்பாளையம் கிராமத்தில் பணியாற்றியவர் பணிமாறுதல் பெற்று இங்கு வந்தார். அன்றைய நாளே அவர் சமைப்பதற்கு சாதி வெறியர்கள் அனுமதி மறுத்தனர். சாதி பெயரைத் திட்டியும், நாக்கூசும் வார்த்தைகளை அர்ச்சித்தும் அவர்கள் அவரை வெளியே போகச் சொன்னார்கள். இவர் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என ஆசிரியர்களிடமும் மிரட்டியிருக்கின்றனர்.

உடனே பள்ளி மற்றும் அரசு நிர்வாகம் அவரது பணிமாற்றத்தை ரத்து செய்து ஒச்சாம்பாளையத்திற்கே திரும்பப் போகுமாறு பணித்திருக்கிறது. கேட்டால் படிக்கும் குழந்தைகள் படிப்பு பாதிப்படையக் கூடாது, அரசு பள்ளியின் வருகை குறைந்து விடக்கூடாது என்று ’நியாயம்’ பேசியிருக்கிறது. எந்தக் குழந்தை தனக்கு இன்னார் சமைத்தால்தான் சாப்பிடுவேன் என்று கூறும்? குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் ’பெரிய’வர்களைக் கண்டிக்காமல் அவர்களுக்கு ஒத்துப் போனது அரசு நிர்வாகம்.

பிறகு ஊடகங்கள், கட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் கண்டனம் வந்த பிறகு பாப்பாள் அம்மாளை திரும்பவும் அதே  திருமலைக்கவுண்டன் பாளையத்தில் பணியமர்த்தியிருக்கிறது அரசு. உடனே பாதிக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்திருக்கின்றனர், சாதி வெறியர்கள்.

இந்நிலையில் திருப்பூர் பெரியார் திராவிடர் கழகம், பாப்பாள் அம்மாளின் வீட்டில் “விருந்தும் – கலந்துரையாடலும்” நடத்துவதாக அறிவித்தது. அதில் அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இளைஞர் எழுச்சி இயக்கத் தலைவர் எழிலன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த இடத்தில் கவிஞர் சுகிர்தராணி வருகிறார். தன்னை எழுத்தாளர் -கவிஞராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சுகிர்தராணி அரசுப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அவருடைய கவிதைகள் மற்றும் கருத்துக்கள் மூலமாக தலித் அரசியலோடு பயணிப்பவராகவும் தெரிவிக்கிறார்.

ஜூலை 22 அன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கவிதையை – உண்மையில் ஒரு கருத்தை கவிதை பாணியில் உடைத்துப் போட்டு – வெளியிடுகிறார்.

கவிஞர் சுகிர்தராணி

நீங்கள்
ஊரிலிருந்து
சேரிக்குவந்து
சாப்பிட்டுவிட்டுப்
போகலாம்.
பாப்பம்மாள்
சமைத்துப்போடுவார்.

ஆனால்
நாங்கள்
சேரியிலிருந்து
ஊருக்குப்போய்
சாப்பிடவேண்டும்.
உங்கள்
வீட்டம்மா
சமைத்துப்போடுவாரா?

பாப்பம்மாள் – வீட்டம்மாள், நீங்கள் – நாங்கள், ஊர் – சேரி என்று எதுகை மோனை பார்த்துச் சமைக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கூறவரும் விசயம் என்ன? தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? இதுதான் நமது கவிஞரின் அறச்சீற்றம்!

சுகிர்தராணியின் கேள்வி இந்த இடத்தில் பொருத்தமானதா?

ஏனெனில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியினர் பல இடங்களில் தலித் மக்கள் வீட்டுக்கு சென்று உணவருந்தியதாக வலிந்து விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். அப்படி தலித் மக்கள் வீடுகளுக்கு அவர்கள் செல்லும்போது கூடவே வெளியில் இருந்து அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை உதவியாளரை வைத்து வாங்கிச் சென்றனர். சில இடங்களில் பந்திப் பாய் கூட கொண்டு சென்றிருக்கின்றனர். இவையெல்லாம் ஊடகங்களில் பெரிய ஸ்டிங் ஆபரேஷன்கள் இல்லாமல் இயல்பாகவே வெளிவந்து நாறிய விஷயங்கள். அம்பேத்கரையும், தலித் – இயக்கங்கள், மக்களை பார்ப்பனியத்திற்குள் (இந்துத்வத்திற்குள்) இழுக்கும் முயற்சியினை ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமங்கள் வடிவமைக்க மோடி ஆட்சியின் போது அவை செயலுக்கும் வருகிறது.

ஆனால் திருமலை கவுண்டம்பாளையத்தில் இருக்கும் பாப்பாள் அம்மா வீட்டுக்கு சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை, பாரதிய ஜனதா பம்மாத்துக்களுடன் சேர்த்துப் பார்க்க முடியுமா? சுகிர்தராணியிடம் கேட்டால் கூட அப்படி பார்க்க முடியாது என்றுதான் கூறுவார். ஆனால் உங்களிடம் இருக்கும் கருணை மனப்பான்மையின் தரம் கொஞ்சம் தானதர்மம் போடும் ஆண்டைகளுடையது, அந்த இரவல் மனப்பான்மையை அறிய வேண்டுமென்றால் தலித் மக்களை உங்கள் வீட்டில் அழைத்து சாப்பிடச் சொன்னால் உங்கள் வீட்டு அம்மாக்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று ’ஆய்வு’ செய்து கேட்கிறார். இதை அவர் கோபம் என்று கருதினாலும் அப்படி ஒரு கோபத்தை இந்த இடத்தில் யாராலும் உணருவது கடினம்.

சுகிர்தராணி கூறுவது போல சேரியிலிருந்து தலித் மக்கள் ஊருக்குச் சென்று  உணவருந்துவது என்பது பொதுவில் குதிரைக் கொம்பான ஒன்றுதான்.  தமிழகத்தின் பல ’ஊர்’களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டின் வெளிப்புறத்தில்தான் உணவு அளிப்பார்கள். அதுவும் ஊர்க்காரர்களுக்கு இருக்கும் சிறப்பு விருந்து வகைகள் இன்றி, ஏதோ ஒரு கணக்கில் அவை நடக்கும். சாதாரண நாட்களில் கூட மிச்சம் மீதி என்று விவசாயத் தொழிலாளிகளாக இருக்கும் தலித் மக்கள் உணவருந்துவார்கள். சில ஊர்களிலோ இப்படி கொல்லைப் புறத்தில் அமர்ந்து கூட சாப்பிட முடியாது. சில ஊர்களில் பாத்திரங்களில் வாங்கித்தான் செல்ல முடியும். பல ஊர்களில் உள்ளே நுழையவே முடியாது. முக்கியமாக வீட்டிற்குள் வழக்கமான தட்டுக்களில் வீட்டு பெண்கள் அப்படி பரிமாறி ஒரு தலித் ஆணோ பெண்ணோ சாப்பிடுவது சாத்தியமில்லை என்பதும் உண்மைதான். இவையெல்லாம் பகிரங்கமாகவும், ஆதிக்கத்தோடும், நுட்பமாகவும் ஆதிக்க சாதி வெறி அமல்படுத்தி வரும் தீண்டாமையின் கள யதார்த்தம்தான்.

பாப்பம்மாள் – வீட்டம்மாள், நீங்கள் – நாங்கள், ஊர் – சேரி என்று எதுகை மோனை பார்த்துச் சமைக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கூறவரும் விசயம் என்ன? தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? இதுதான் நமது கவிஞரின் அறச்சீற்றம்!

சரி, சுகிர்தராணியின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட பாப்பம்மாள் என்ன கூறுகிறார்? அந்த தகவலை பி.பி.சி. தமிழ் இணையதளம் பதிவு செய்திருக்கிறது.

“எல்லோரும் என்னோட வீடு தேடி வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, மனசு எல்லாம் நிறைஞ்சு இருக்கு, 12 வருஷம் இந்த பிரச்சனையால் அதிகமா கஷ்டப்பட்டேன். ஆனா இப்ப எனக்காக எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்க்கும்போது அந்த கஷ்டம் ஏதும் தெரியலை” என்கிறார் பாப்பம்மாள்.

ஒருவேளை சுகிர்தராணி போல பாப்பம்மாள் தலித் போராளி இல்லையா? இல்லை அப்பாவித்தனமாக ‘ஊர்’ ஆட்கள் மீது நம்பிக்கை கொள்கிறாரா?

சுகிர்தராணியும், பாப்பம்மாளும் அரசு பள்ளிகளில்தான் பணி புரிகிறார்கள். ஆகவே ஒரு கவுண்டர் படுகை பள்ளியில் பாப்பம்மாளின் நிலை என்ன என்பது சுகிர்தராணிக்கு மட்டுமல்ல, தமிழக சமூக நிலைவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும். எனினும் கொங்கு படுகையின் சாதிவெறி என்பது தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் ரகத்தைச் சேர்ந்தது. இன்றளவும் அங்கே ஒரு நகரத்தில் ஏதாவது ஒரு தலித் அமைப்பினர் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கூட்டம் ஒன்று கூட நடத்தி விட முடியாது.

கொங்கு படுகையின் சாதிவெறி என்பது தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் ரகத்தைச் சேர்ந்தது. இன்றளவும் அங்கே ஒரு நகரத்தில் ஏதாவது ஒரு தலித் அமைப்பினர் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கூட்டம் ஒன்று கூட நடத்தி விட முடியாது.

ஆகவே இத்தகைய சூழலில் தனது வீடு தேடி வந்த தோழர்கள், மக்களின் அருமை பாப்பம்மாளுக்கு தெரிகிறது. ஆனால் காலச்சுவடு பதிப்பகத்தில் கவிதை புத்தகம் போடும் சுகிர்தராணிக்குத் தெரியவில்லை. அந்த அருமையை, நுட்பமாக தன்னை மறைத்துக் கொள்ளும் ஆதிக்கம் என்பதாக மொழிபெயர்க்கிறார்.

எளிய மக்களுக்கு தெரியும் கள யதார்த்தம் நுண்ணுணர்வு கொண்டவர்கள் மட்டுமே கவிதை எழுதுவதாக கூறும் கவிஞர்கள் அல்லது புலவர் மரபைச் சேர்ந்த சுகிர்தராணி மேடத்திற்கு தெரியாதது ஏன்? சாதி வெறி, சாதி ஆதிக்கம், தீண்டாமை போன்றவற்றை எதிர்ப்பது – ஒழிப்பது ஆகியவை முதன்மையாக களத்தோடும் களப்பணியோடும் தொடர்புடையவை. அவற்றை கருத்துரீதியாக விவாதிக்கும் பொழுது அல்லது கவிதை எழுதும் போது களத்தில் அவை எப்படி பொருந்தும் அல்லது வினையாற்றும் என பொருத்தம் பார்த்தல் முக்கியம். அந்தப் பொருத்தப்படி ஊர்க்காரர்களின் வீட்டில் வீட்டம்மாள் தலித் மக்களுக்கு சமைத்து பரிமாற மாட்டார் என்பதையே சுகிர்தராணி இங்கே நினைவறையில் இருந்து எடுத்துப் போடுகிறார். அதுவும் அவரது கண்டுபிடிப்பல்ல. பல முறை பல நேரம் பலரும்கூறிய யதார்த்தமான ஒரு உண்மைதான்.

தலித் அரசியல்தான் சரி என்ற விவாதம் 90-களில் அதிகம் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக மார்க்சியத்தை குறிவைத்து தன்னார்வக் குழுக்கள் மற்றும் பின்நவீனத்துவ முகவர்களின் தத்துவ மேற்பார்வையில் இறக்கப்பட்ட அதே அடையாள அரசியல் இன்றும் பலவீனமாக என்றாலும் கருத்தளவில் தொடர்கிறது. மார்க்சியத்தோடு பெரியாரும் அன்று தலித் அரசியலின் எதிர் இலக்கில் வைக்கப்பட்டார். இன்றைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சியில் இருக்கும் ரவிக்குமார் அன்றைக்கு பெரியாரை அவதூறு செய்து நிறைய ‘கண்டுபிடிப்புகளை’ வெளியிட்டுள்ளார்.

ஒருவர் தலித் அரசியலோ, மார்க்சியமோ, திராவிட அரசியலோ பேசட்டும். அதில் எந்த அரசியல் தத்துவம் சாதி ஒழிப்பிற்கான முரணற்ற விளக்கத்தையும், செயல்பாட்டுத் திட்டத்தையும், அதற்கேற்ற நடைமுறையையும் கொண்டிருக்கிறது என்பதே.

சரி இந்த விவாதத்தின் மையப் பொருள் என்ன? ஒருவர் தலித் அரசியலோ, மார்க்சியமோ, திராவிட அரசியலோ பேசட்டும். அதில் எந்த அரசியல் தத்துவம் சாதி ஒழிப்பிற்கான முரணற்ற விளக்கத்தையும், செயல்பாட்டுத் திட்டத்தையும், அதற்கேற்ற நடைமுறையையும் கொண்டிருக்கிறது என்பதே விவாதப் பொருள். சுகிர்தராணியின் கவலை இது குறித்து அல்ல. மாறாக ஒருவர் தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்றால் கையிலிருக்கும் மதிப்பெண் பட்டியலில் இருந்து அந்தக் குரலுக்கு எத்தனை மதிப்பெண், பாஸா, ஃபெயிலா என்று டிக் அடிக்கிறார். ஒருவேளை ஆசிரியர் என்பதால்தான் இந்த மதிப்பெண் வியாதியா?

பாப்பம்மாள் தனது ஊரில் பள்ளியில் சாதி தீண்டாமையினை எதிர்த்துப் போரிட என்னென்ன செய்ய வேண்டும்? அது எப்படி நடக்கும்? அல்லது நடக்காது? இவைதான் முன்னர் சொன்ன அரசியல் தத்துவ விவாதங்களின் மையப் பொருள்!

இந்தியாவில் முசுலீம்கள் மதத்தால் சிறுபான்மையினர். மோடி ஆட்சியேற்ற பிறகு சாதாரண மாட்டுக்கறி உணவுக்காகவே பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்று சில முசுலீம் தலைவர்கள் கூட “முஸ்லீம்களே இனி மாடுகளை கைவிடுங்கள், உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இந்த பாசிசத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதையே மிரட்டலாக இனிமேல் மாட்டுக்கறி உண்ணுவதை நிறுத்தினால் மட்டுமே முசுலீம்கள் தாக்கப்படாமல் இருப்பார்க்ள என்று பா.ஜ.க சங்கிகள் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.

இந்நிலையில் முசுலீம்களுக்காக குரல் கொடுப்போரை அவர்களது பிறப்பை வைத்து வேற்று மதம் எனும் பட்சத்தில் ஒரு முசுலீம் கவிஞர், சுகிர்தராணி போல கவிதை எழுதினால் என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது.

ஏனெனில் முசுலீம் மக்கள் மீதான மதவெறி என்பது சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மையின் ‘சம்மதத்தோடு’ நடத்தப்படும் இந்துமதவெறி! இதை முசுலீம் மக்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து எதிர்ப்பது என்பது சாத்தியமே இல்லை. மதச்சார்பற்ற இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும், இடதுசாரி இயக்கங்களுமே இன்று இந்துமதவெறியை பல மாநிலங்களில் எதிர்த்து களமாடி வருகின்றனர். இந்துமதவெறி என்பது முசுலீம்களுக்கு மட்டுமல்ல, இதர ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், தொழிலாளிகள், பெண்கள் அனைவருக்கம் எதிரானது. ஆனால் இந்துமதவெறி தனது பிரதான எதிரி என்று முசுலீம்களை மட்டும் குறிவைக்கிறது.

பாப்பம்மாள் தனது ஊரில் பள்ளியில் சாதி தீண்டாமையினை எதிர்த்துப் போரிட என்னென்ன செய்ய வேண்டும்? அது எப்படி நடக்கும்? அல்லது நடக்காது? இவைதான் முன்னர் சொன்ன அரசியல் தத்துவ விவாதங்களின் மையப் பொருள்!

இந்நிலையில் எல்லா மதங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களை எந்த அளவு ஒன்று சேர்க்கிறோமோ அந்த அளவுதான் நாம் இந்துமதவெறியை எதிர்ப்பதும், முறியடிப்பதும் முடியும்.

இந்திய அளவில் அவை இன்னமும் சாத்தியமில்லை என்றாலும் சில மாநிலங்களில் சில தருணங்களில் சாத்தியமாகியிருக்கிறது. தமிழகத்தில் ரத யாத்திரையாக இருக்கட்டும், சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி உண்ட  மாணவர் மீதான தாக்குதலாக இருக்கட்டும் அனைத்து பிரிவு மக்களும் ஒன்று சேர்ந்து இந்துமதவெறியர்களை தனிமைப்படுத்தியிருக்கிறோம்.

இதே விதி தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கும் பொருந்தும். ஊரிலிருக்கும் ஏழைகளும், சேரியில் இருக்கும் ஏழைகளும் ஒன்றாக சேர்வது என்ற நிலை இல்லாமல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நம்மால் துவக்குவதே கடினம். அப்படித் துவக்கினாலும் வெற்றி பெறுவது சிரமம்.

அதே நேரம் இந்த இணைப்பு என்பது எப்போதும் கண்டிஷன் அப்ளை போன்ற ஒன்றதல்ல. சமயத்தில் நாம் ஊரை கடினமாக கூட விமர்சிக்க வேண்டியிருக்கும். வர்க்க ரீதியான போராட்டங்களை அதிகம் நடத்த நடத்த தன்னளவில் இந்த தீண்டாமை என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு அகற்றப்படும். ஆகவேதான் இதில் எது முதல், எது இரண்டாவது என்பதன்றி இரண்டு பிரிவு மக்களையும் எப்படி இணைப்பது என்பதும் அதில் தீண்டாமையை தற்காலிகமாக சகித்துக் கொள்வது கூடாது என்பதும் மார்க்சியம் முன்வைக்கும் அரசியல் மற்றும் நடைமுறை.

பாப்பம்மாள் வீட்டிற்கு சென்று ஆதரவளித்த பெரியார் இயக்கத் தோழர்களை அங்கே உள்ளூரில் இருக்கும் கவுண்டர் சாதி வெறியர்கள் இனி எப்படி கருதுவார்கள்? நட்பாகாவா, பகையாகவா? அடுத்த முறை வேறு ஏதாவது ஒரு போராட்டத்திற்கு சென்று அந்த பிரிவு மக்களிடம் ஆதரவு கேட்டால் அவர்கள் எதை முன்வைப்பார்கள்? ஆகவே பாப்பம்மாள் வீட்டிற்கு சென்றதால் பெரியார் இயக்கத் தோழர்கள் அந்த வட்டார கவுண்டர் சாதி சங்கங்களது ஹிட் லிஸ்டில்தான் இருப்பார்களே அன்றி நட்பு பட்டியலில் அல்ல.

அதே போன்று அந்த வட்டாரத்தில் இருக்கும் ஆதிக்க சாதி மக்களில் சிலராவது பாப்பம்மாளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து யோசிப்பார்கள். சாதி வெறியர்களுக்கு பயந்து கொண்டு வெளிப்படாமல் இருக்கும் அவர்களது கருத்து மெல்ல மெல்ல வெளியே வரும். வரவழைக்க வேண்டும். இந்த வலிநிறைந்த பாதை அறிந்தால் சுகிர்தராணியால் அந்த பாடலை பாடியிருக்க முடியாது. அந்தக் கவிதையின் கருப்பொருள் டெக்னிக்கலாக சரியென்றாலும் இந்த நேரத்தில் அது எதிர்மறையாகி விடுகிறது.

அதே போன்று ஆதிக்கசாதி வெறியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்களில் வாழும் தலித் மக்களையும் இத்தகைய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அணி சேர்ப்பது கடினம். எப்போது அவர்களும் தைரியமாக முன்வருவார்கள்? அதுவும் நாம் முன்னர் சொன்ன சேரி – ஊர் இணைப்பின் காரணமாகவே நடக்கும்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஊரான பண்ணைப்ப்புரத்தில் தலித் மக்கள் சிறுபான்மையினர். அங்கே இருக்கும் தனிக்குவளை தேநீர்க்கடை நடைமுறையை ஒழிக்க வேண்டும் என விவசாயிகள் விடுதலை முன்னணி அங்கே சில மாதம் வேலை பார்த்தது. பிறன்மலைக் கள்ளர்களால் நிறைந்திருக்கும் அந்த ஊரின் தர்பாரில் ஒரு தலித் கூட இந்தப் போராட்டத்திற்கு வரவில்லை. ஆனால் பிறப்பால் ஆதிக்கசாதியைச் சேர்ந்த தோழர்கள் பலர் அருகாமை ஊர்களில் இருந்து வந்து போராடினார்கள். போலீசிடம் அடிபட்டார்கள். அடிக்கும் போது போலீசு கூட அவர்களை தவறான உறவில் பிறந்தவரென திட்டியது.

இதன் பிறகு அரசு நிர்வாகம் அங்கே வந்து பண்ணைப்புரத்தின் தலித் மக்களை அங்கே தீண்டாமை இல்லை என கையெழுத்து போட்டு கடிதம் தரச் சொன்னது. ஆனாலும் அந்த மக்கள் போட்டுத் தரவில்லை. அப்படி தராததால் அவர்கள் அங்கே ஆதிக்க சாதிவெறியின் அடுத்த கட்ட மிரட்டலுக்கு ஆளாகலாம். அதே நேரம் அப்படி ஆனால் அதை தடுத்து நிறுத்த அவர்களுக்கு ‘வெளியில்’ இருந்து நட்பு வந்திருக்கிறது. அந்த தைரியத்தில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். தன்னளவில் தலித் மக்கள் போராட்டப் பாதைக்கு வருவது என்பது இப்படித்தான் துவங்கும்.

பாப்பம்மாள் வீட்டிற்கு சென்றதால் பெரியார் இயக்கத் தோழர்கள் அந்த வட்டார கவுண்டர் சாதி சங்கங்களது ஹிட் லிஸ்டில்தான் இருப்பார்களே அன்றி நட்பு பட்டியலில் அல்ல.

இந்தப் பாதைதான் மார்க்சியம் முன்வைக்கும் விடுதலைப் பாதை! பீகார், தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், கீழத்தஞ்சை என பல இடங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பாதை!

ஆகவே இங்கே பாப்பம்மாள் வீட்டிற்குச் சென்ற பெரியார் இயக்கத் தோழர்களின் பணி மேடத்திற்கு தெரியவில்லை. தமிழகத்தில் சமீப ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், இந்துமதவெறிக்கு எதிராகவும் பல நிலைகளில் போராட்டங்களும், கருத்துக்களும் அணிசேர்கின்றன. அதில் போதாமைகள் இருக்கலாம், நிறைய மாற்றங்கள் தேவைப்படலாம். அதை நாம் தோழமையோடு விவாதிக்கலாம். அதை விடுத்து இத்தகைய முற்போக்கு அரசியல் இணைப்பின் அடிப்படையையே தகர்க்கும் இந்த அடையாள அரசியலால் என்ன பயன்?

அல்லது கவிஞர் சுகிர்தராணி இதை நுட்பமாக அறிய வேண்டுமென்றால் அவருக்கும் ஒரு வீட்டுப் பாடம் கொடுக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் தலித் மக்கள் சிறுபான்மையாகவும், ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையினராகவும் உள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தெடுங்கள். அந்த கிராமத்தில் கண்டிப்பாக பல்வேறு அளவுகளில் தீண்டாமை இருக்கும். அவற்றை ஆய்வு செய்து குறித்துக் கொள்ளுங்கள்! பிறகு தலித் மக்களை அணி சேர்த்து அதே ஊர் ஆதிக்க சாதியினரை எதிர்த்து போராடுவதற்கு முயலுங்கள்! ஆரம்பத்தில் தலித் மக்கள் பயப்படுவார்கள். ஊர் மக்களை பகைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து விட்டு எப்படி போராடுவது என்று தயக்கப்படுவார்கள். அந்த தயக்கத்தை எப்படி உடைப்பது என்று யோசியுங்கள்!

அந்தக் கணத்தில் உங்களால் கவிதை எழுத இயலாது! அந்த வலி நிறைந்த சூழலில் மக்கள் கற்றுக் கொடுக்கும் கவிதையின் மூலம் நீங்கள் தோழராக மாறும் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்!

 • இளநம்பி

9 மறுமொழிகள்

 1. //ஊரிலிருக்கும் ஏழைகளும், சேரியில் இருக்கும் ஏழைகளும் ஒன்றாக சேர்வது என்ற நிலை இல்லாமல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நம்மால் துவக்குவதே கடினம். அப்படித் துவக்கினாலும் வெற்றி பெறுவது சிரமம்//

  இது ஓரளவு சரி என்றே படுகிறது.

  ஊர்புறத்தில் இருக்கும் சாதிய கண்ணோட்டமுள்ள இளைஞர்கள் கூட தன் ஊர்பகுதியை சேர்ந்த மற்ற தீண்டாமையை எதிர்த்து பேசும் சில இளைஞர்கள் இருக்கும் பொது பேச தயங்கும் நிலை உருவாகிறது. பின் இரு தரப்பிலும் முற்போக்கு கண்ணோட்டம் கொண்ட இளைஞர்கள் நட்பு சூழல் உருவாகி தோழர் என்ற நிலையை எட்டும். இது பார்த்து உணர்ந்தது.

 2. இது போன்ற சாதி வெறியை கண்டதில்லை. கம்யூனிசம் பேசும் பேதைகளே தமிழகத்தில் சாதி தீண்டமையை கடைபிடிக்கும் ஆதரிக்கும் மக்கள் அதிகாரம் என்பெயரில் திரியும் சாதி வெறியர்களே. தீண்டாண்மை தொடுவதினால் மட்டும் பார்க்கப்படுவதில்லை. உங்களை போன்றோர் தலித் மக்களின் கருத்துக்களை தீண்டாமை செய்வது, எழுத்துகளை தீண்டாமை செய்வது, அவர்களின் பேச்சுகளை தீண்டாமை செய்வதும் தான் நான் சொல்கிறேன் நீங்கள் நவீன சாதிவெறியர்கள் நவீனத்தீண்டாமை செய்கிறவர்கள். நீங்கள் கடைசிவரை ரகசிய கட்சி தான்.

  • கட்டுரையை மீண்டும் ஒரு முறையாவது படியுங்கள் ‘விடுதலை’ தங்களது மறுமொழி வன்முத்துடன் உள்ளது.நேர்மையான முறையில் விமர்சனம் செய்யுங்கள்.

  • “…இது போன்ற சாதி வெறியை கண்டதில்லை. கம்யூனிசம் பேசும் பேதைகளே தமிழகத்தில் சாதி தீண்டமையை கடைபிடிக்கும் ஆதரிக்கும் மக்கள் அதிகாரம் என்பெயரில் திரியும் சாதி வெறியர்களே. தீண்டாண்மை தொடுவதினால் மட்டும் பார்க்கப்படுவதில்லை. உங்களை போன்றோர் தலித் மக்களின் கருத்துக்களை தீண்டாமை செய்வது, எழுத்துகளை தீண்டாமை செய்வது, அவர்களின் பேச்சுகளை தீண்டாமை செய்வதும் தான் நான் சொல்கிறேன் நீங்கள் நவீன சாதிவெறியர்கள் நவீனத்தீண்டாமை செய்கிறவர்கள். நீங்கள் கடைசிவரை ரகசிய கட்சி தான்.”

   என்ற சாபத்தோடு விடுதலை, தனதுஅறிவார்ந்த விமர்சனத்தை கருத்து,எழுத்து,பேச்சு என பல திசைகளுக்கும் சுழற்றுகிறார். இது உண்மையாக இருக்குமோ என்று எனக்கும் சந்தேகம் உண்டானது. வினவு தளத்தில் அதற்கான ஆதாரத்தைத் தேட, வினவின் “தேடுக” பெட்டியில் “தலித்” என்ற குறிச்சொல் போட்டேன். அதில் வந்த 58… வரிசை முழுக்க தலித் தலைப்பிலான கட்டுரைகள் காண கிடைக்கிறது. இந்தியா முழுக்க தலித்துகளுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் 100 கணக்கில் அதில் தோலிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பார்ப்பீனியத்தோடு இடைநிலை ஆதிக்க சாதிவெறியர்கள் தேவர்,கவுண்டர், வன்னியர் கும்பல்களை நேரடியாக வினவு தோலிரித்துள்ளது.இவை அனைத்திலிலும் தலித் உழைக்கும் மக்களின் கருத்து,எழுத்து,பேச்சுகளை பகிரங்கமாக ஆதரித்து முன்னணியில் நின்று வாதாடுகிறது வினவு. ஆனால், அறிவுஜீவிகள் என்ற பெயரில் இலக்கியம், சினிமா, பத்திரிக்கை,ஆரசியல்,அதிகாரவர்க்கம்,நீதித்துறை என அதிகார தாழ்வாரங்களில் வலம் வரும் “தலித் மேன்மக்களுக்கு”வினவு சாமரம் வீசவில்லை! அந்த கடுப்பில்தான் “விடுதலை” நாங்களும் தலித்கள்தான் என்று பல்லைக்கடிக்கிறார்போலும். மோடி, பொன்னார் தேடும் தலித் பட்டியலில் இவர்களுக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

   • ஒரு வேளை நான் கருத்து,எழுத்து,பேச்சு என பல திசைகளுக்கும் சுழற்றி இருப்பதாக கூட வைத்துக்கொள்வோம். நீங்கள் சுழற்றியது பந்து பார்பனியப் பந்து என்பது தெரியவருகிறது.
    வினவு தன் இணையப்பகத்தில் மட்டும் (அதாவது தேடு பெட்டிக்குள் மட்டும் தலித் என்ற சொல்லை) சுருக்கி வைத்து இருக்கும் என்று கூட நினைக்கலாம் இல்லவா? அதாவது 90களில் தலித்திகளை மையமாக வைத்து அரசியல் கண்டவர்கள். இப்போது தலித்தியம் என்னவாயிற்று?
    பாப்பாம்மாள் விசயத்தில் கவிஞர் சுகிர்தராணியின் குரல் யாரை நோக்கிய குரல் என்று (வினவு) உங்களுக்கும் தெரியும். ஆனால், நீங்கள் இந்து சாதிவெறியர்களை கண்டிக்காம்மாள் மாறாக நீங்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவத்த கவிஞர் தோழர் சுகிர்தராணியை கடுமையாக விமர்சிப்பதின் நோக்கம் என்ன?
    தலித்துகள் அறிவுஜீவிகள், இலக்கியம், சினிமா, பத்திரிக்கை, ஆரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை என அதிகாரத்தில் வருவதில் உங்களுக்கு எங்கு ..————- வலிக்கிறது. நீங்கள் யாரடா தலித்துகளுக்கு அறிவுஜீவி பட்டம் கொடுக்க எந்த ஒரு சக மனிதனின் அறிவை இழிவுபடுத்துபவன் மனிதனாக இருக்க முடியாது. இப்பொழுது தெரிகிறது உங்கள் பற்கள் அது உங்கள் மனதில் ஒலி மறைவாக உள்ள சாதிவெறியின் கோறைப்பற்கள்.
    மாக்சியம், அம்பேத்காரியம், பெரியாரியம், தலித்தியம் இவற்றின் நீட்சியே பாட்டாளி வர்க்கம் இவை ஒன்றோடு ஒன்று பிரிக்கமுடியாத இயக்கவியல் கோட்பாடு.
    சாதி ஒழிப்பே பாட்டாளி வர்க்க விடுதலை.

 3. //தலித் அரசியல்தான் சரி என்ற விவாதம் 90-களில் அதிகம் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக மார்க்சியத்தை குறிவைத்து தன்னார்வக் குழுக்கள் மற்றும் பின்நவீனத்துவ முகவர்களின் தத்துவ மேற்பார்வையில் இறக்கப்பட்ட அதே அடையாள அரசியல் இன்றும் பலவீனமாக என்றாலும் கருத்தளவில் தொடர்கிறது. மார்க்சியத்தோடு பெரியாரும் அன்று தலித் அரசியலின் எதிர் இலக்கில் வைக்கப்பட்டார். இன்றைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சியில் இருக்கும் ரவிக்குமார் அன்றைக்கு பெரியாரை அவதூறு செய்து நிறைய ‘கண்டுபிடிப்புகளை’ வெளியிட்டுள்ளார்.//இந்த விஷயத்தில் காலசுவடின் பங்கு அதிகம்.காலசுவடில் வெளிவரும் பெரியார் எதிர்ப்பு கட்டுரைகள் எல்லாம் தலித் அறிவுஜிவிகளால்தான் எழுதப்படும். உதாவனம் Stalin rajangam

 4. கவிஞர் சுகிர்தராணியின் குரல் யாரை நோக்கி நீள்கிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
  பெரியார் இயக்க தோழர்களின் வீட்டு அம்மாக்களை சுகிர்தராணி கண்டிப்பாக குறிப்பிடவில்லை என்பது உறுதி.
  ஒருவேளை அப்படி வலிந்து பொருள் கொண்டாலும்,

  “சேரிக்குள் வந்த ஊர் முதல் படி .
  ஊருக்குள் சேரியும் நுழையவேண்டும் என்பது போராட்டத்தின் இரண்டாவது படி .
  அதற்கும் தலித் இயக்கங்களுக்கு பெரியாரிஸ்டுகள் மற்றும் பொதுவுடைமை
  இயக்கங்கள் துணை நிற்கவேண்டும்.”
  என்ற ரீதியில் கவிதையை அமைத்து இருந்தால் சிறப்பாகவும் ,ஆக்கபூர்வமாகவும் அமைந்து இருக்கும்.
  என்ற விமரிசனத்தை வேண்டுமானால் சுகிர்தராணி மீது வைக்கலாம்.
  இந்த இடத்தில் மேலும் ஒரு செய்தியை பதிவு செய்வது காலம் எனக்கு இட்ட கடமையாக கருதுகிறேன்.
  பாரதியார் ஒரு தலித்துக்கு அந்நாளில் பூணூல் அணிய செய்த செயலை
  பாராட்டி “வர்ணாசிரமத்தின் தாலி அறுக்கப்பட்டது ” என்று கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய கவிதைக்கு மறுப்பு சொல்லி,
  “வர்ணாசிரமத்திற்கு அறுபதாம் கல்யாணம் நடந்தது ”
  என்றுதான் பாரதியின் செயலை வர்ணிக்க முடியும் என்று என் கட்டுரை
  (http://saravananmetha.blogspot.com/2018/05/blog-post_14.html)ஒன்றில் பதிவு செய்துள்ளேன்.

 5. மிக சிறப்பான கட்டுரை வர்க்கரீதியாக உழைக்கும் மக்களை அரசியல் படுத்தவேண்டிய பணி அதிகம் இடைநிலை ஜாதியினர் வர்க்கரீதியாக தலித்துக்களுக்கும் தீண்டாமையை பாதுகாக்கவும் அணி திரள்கிறார்கள் இயல்பாகவே பிற்ப்போக்கு அரசியலின் பலம் இதுவே ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் ஓரணியில் மக்களுக்கான உண்மையான அதிகாரத்தைப்பெற வர்க்க ரீதியாக ஒன்றிணைய வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க