கல்வியும் சுகாதாரமும் | நூல் அறிமுகம்

ஜான் டிரீஸ், அமர்த்தியா சென் ஆகியோர் எழுதிய நிச்சயமற்ற பெருமை (Uncertain Glory) நூலிலிருந்து, கல்வி, உடல் நலம் குறித்து இடம் பெற்றுள்ளதை சிறு நூலாய் தொகுத்திருக்கிறது, பாரதி புத்தகாலயம்.

16-ஆம் நூற்றாண்டில் பொன்னும், மணியும் செல்வ வளமும் தேடி, ஐரோப்பாவின் துறைமுகங்களிலிருந்து பயணம் புறப்பட்ட கொலம்பஸ் உள்ளிட்ட கடலோடிகளுக்கும் அவர்களது  பயணத்திற்கு படியளந்த பேரரசுகளுக்கும் ‘இந்தியா’தான் கனவு பூமியாக இருந்தது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட இந்தியாவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியைப் போல 700 மடங்கு என்று ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு ஆணையம் (UNCTAD) கணக்குச் சொல்கிறது. (பதிப்புரையிலிருந்து)

ன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் அதிகமாகப் பேசப்படும் இந்தப் பெருமை நிலையற்றது. இன்றைய இந்தியாவின் சாதனைகளையும், தோல்விகளையும் ஆய்வு செய்வது அவசியமானது மட்டுமல்ல. அவசரமானதும் கூட.

உண்மையில் பசியும், வறுமையும் இந்தியாவின் அடையாளமாக என்றென்றும் இருந்ததில்லை. வளமிக்க இந்தியா எவ்வாறு வறுமை மிக்க  நாடாயிற்று?

‘சாதாரண மக்கள்’ என்றழைக்கப்படும் பிரிவிலுள்ள பெரும் செல்வந்தர்கள் அல்லாத ஓரளவு வசதி படைத்தவர்களின் கோரிக்கைகள் வலுவாக ஒலிக்கப்படுகிறது. எளிதாக அணிதிரளக்கூடிய இவர்களின் கண்ணோட்டம், அரசியல் கட்சிகளின் ஆதரவில் பெரும் பங்கை பெற்றுவிடுகிறது. இதற்கு முற்றிலும் முரணாக, இந்திய சமூகத்தில் பின் தங்கியவர்கள் நீண்டகாலமாகவும் பெருமளவிலும் அனுபவித்து வரும் இழப்புகள் மீது மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்படுகிறது. (முன்னுரையிலிருந்து)

ழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் சமூக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. ‘நிச்சயமற்ற பெருமை’  நூலில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலைமையையும் அதன் காரணத்தையும் விளக்குகின்றனர். (தி எகனாமிஸ்ட்)

டனடி அவசியம் கொண்ட உணர்வுப் பூர்வமான அரசியல் நூல்… ஏழைகள் நிரம்பிய நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறி நெஞ்சார்ந்த நேசத்தோடு இறைஞ்சும் நூல். ( தி நியூயார்க் டைம்ஸ்)

ந்த நூல் வாசிக்கும் உங்களை உலுக்கி எடுத்துவிடும். மிக ஆழமான ஏற்றத்தாழ்வுகள் தான் இன்றைய இந்தியா குறித்து அக்கறை கொள்பவர்கள் கவலைப்பட வேண்டிய முதன்மையான பிரச்சினை. ( தி ஹிந்து)

மூக முன்னேற்றத்திலும் மற்றும் மேம்பாட்டு நடைமுறையிலும் அடிப்படைக்கல்வியின் பங்கு விரிவானதும் மிகவும் முக்கியமானதுமாகும். முதலாவதாக, படிக்கவும் எழுதவும் மற்றும் எண்களைக் கூட்டவும் கழிக்கவும் உள்ள ஆற்றல் நமது வாழ்க்கைத் தரத்தின் மீது சக்திமிக்க விளவுகளை உடையது: உலகப் புரிந்து கொள்ள, விவரமறிந்த வாழ்க்கையை வாழ்ந்திட, பிறரோடு எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள மற்றும் நம்மைச் சுற்றி நடப்பவையோடு நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சுதந்தரத்தை இவ்வாற்றல் வழங்குகிறது. இன்றைய நவீன உலகில் இந்த சமூகம் எழுத்து ஊடகத்தை மிகவும் சார்ந்துள்ளது. எனவே இன்று எழுத்தறிவில்லாமல் இருப்பது சிறையிலிருப்பதற்கு ஒப்பாகும். பள்ளிக்கல்வி அத்தகைய சிறைக்கதவை திறந்துவிடுகிறது.

வர்த்தகமும் வணிகமும் உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் கல்வியின் தேவை விரிவடைந்துள்ளது. உலகெங்கும் தேவைப்படும் சேவைகள் மற்றும் சரக்குகளின் உற்பத்திக்குத் தரக்கட்டுப்பாடும் திறன் உருவாக்கமும் தேவைப்படுகின்றன.

எழுத்தறிவின்மை மக்களின் அரசியல் குரலை நெறித்து விடுகிறது. அதன்மூலம் மக்களின் பாதுகாப்பின்மைக்கு நேரிடையாக வித்திடுகிறது.

ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும் புத்தகங்கள், நாழிதழ்கள், பத்திரிகைகள் படிப்தற்குமான ஆற்றல் உள்ளிட்ட சமூக அதிகாரம் அளிப்பதும் மற்றும் அரசியல் வாய்ப்பும் ஒருங்கிணையும் பொழுது, மக்களின் ஜனநாயகக் குரல் வலுப்பெறும் என்பதை சொல்லத் தேவையில்லை.

பொதுவாக சுகாதாரப் பிரச்சினைகளிலும் குறிப்பாக மக்கள் உடல்நலன் குறித்தும் அடிப்படைக் கல்வி பெரும் பங்காற்ற இயலும். எவ்வாறு தொற்றுநோய் பரவுகிறது, அதைத் தடுப்பது எப்படி போன்றவற்றை சுகாதாரம் குறித்த சிறப்புக் கல்வி மூலம் அறியலாம்.

பொது கல்வி கூட, தொற்றுநோய் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முக்கியமான வழிகள் குறித்த சமூக புரிதலை உருவாக்கும்; பொது கல்வி தனி மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும்.

சட்டரீதியான உரிமைகளைப் புரிந்து கொள்வதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் பெரிய மாற்றத்தை கல்வியால் உருவாக்க இயலும்.

பங்களாதேஷில் பெண்ணுரிமைகளை நிலை நாட்டுவதில் மிகப் பெரிய தடைகளுள் ஒன்றாக எழுத்தறிவின்மை இருந்தது என்று பல வருடங்களுக்கு முன்னர் சல்மா ஷோபன் வெளிப்படுத்தினார். போதிய அளவு பள்ளிக் கல்வி இல்லாவிட்டால், அது ஒதுக்கப்பட்டவர்களை சட்ட விதிகள் மீறப்படும் பொழுது எதிர்ப்பதற்கான வழிமுறைகளிலிருந்தும் வசதிகளிலிருந்தும் விலக்கி வைப்பதன் மூலம் பாதுகாப்பின்மைக்கு இட்டுச் செல்கிறது.

பெண் பெறுகிற கல்வி குடும்ப முடிவுகளில் பெண்களின் குரலையும் சக்தியையும் பெரிதும் வளர்த்துள்ளது என்பதற்கான விரிவான ஆதாரங்கள் இன்று உள்ளன. குடும்பத்திற்குள் சமத்துவம் என்ற பொதுவான முக்கிய அம்சத்திற்கும் அப்பால், பெண்ணின் உரிமைக்குரல் பிற சமூக மாற்றங்களுக்கும் இட்டுச் செல்லும்.

கல்வி வர்க்கத் தடைகளை எதிர்த்துத் துளைக்கிற மாயக்குண்டு இல்லையென்றாலும், அது வர்க்க மற்றும் சாதீய பிளவுகளுக்கு இடையிலான அசமத்துவத்தை குறைப்பதில் பெரும்பங்காற்ற முடியும். (நூலிலிருந்து)

ல்வியும் மேம்பாடும், இந்தியா பின்தங்கிவிட்டது, உயர்கல்வி சவால்கள், சாதனைகளும் குறைபாடுகளும், கல்வித்தரம், சமூகப் பிரிவுகளும் மேட்டுக்குடி மேன்மையும், இரட்டைக் கல்வி, பள்ளி மேலாண்மையும் கற்பிக்கும் தொழிலும், தனியார் பள்ளிக்கல்வி ஒரு மாற்றாகுமா? என்பது உள்ளிட்ட உட்தலைப்புகளில் கல்விச்சூழலை விவரிக்கிறார், நூலாசிரியர்.

நெருக்கடியில் தவிக்கும் இந்திய சுகாதாரம் மற்றும் உடல்நலம் பராமரிப்பு குறித்து சுகாதாரம் என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

குழந்தை தடுப்பூசியைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது என்பது மட்டுமல்ல பிரச்சினை; இம் மோசமான நிலை எதிர்கொள்ளப்படாமலும் தீர்வு காணப்படாமலும் இருந்ததும் ஒரு பிரச்சினையாகும்.

கடந்த 20 வருடங்களாக, இந்திய சுகாதாரத்திற்கான பொது செலவினம் ஜி.டி.பி.யில் ஒரு சதவீதத்தை ஒட்டியே இருந்துள்ளது.

ஒட்டுமொத்த மருத்துவ செலவினத்தில் இந்திய அரசின் பங்கு மூன்றில் ஒரு பங்காகவே உள்ளது என்ற உண்மை மக்கள் உடல்நலம் குறித்த அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.

குழந்தை பராமரிப்பை குடும்பத்திடம் விட்டுவிடுவதுதான் சிறந்தது என்ற பொதுக் கருத்து இந்தியாவில் நிலவுகிறது. இதன் காரணமாகவே குழந்தை பராமரிப்புக் குறித்த சமூக அக்கறை பெரிதாக இல்லை. (நூலிலிருந்து)

பொதுவில் கல்வி – சுகாதாரம் குறித்து இந்திய அளவிலும் உலக அளவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாக வைத்தும் பல்வேறு புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், நூலாசிரியர்கள்.

இவ்வாறு பல்வேறு நாடுகளைப் பற்றி மதிப்பிடும்பொழுதும், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக முன்மொழிவதிலும் நூலாசிரியர்கள் அவர்கள் தம் சொந்த அரசியல் புரிதலிலிருந்து அணுகியிருக்கின்றனர். எனினும், இந்தியாவின் யதார்த்த நிலைமையை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு இந்நூலாசிரியர்கள் பெரும் சிரத்தையோடு தந்திருக்கும் உலகளாவிய பல தரவுகள் பேருதவி புரியும்.

நூல்: கல்வியும் சுகாதாரமும்
ஆசிரியர்: ஜீன் டிரீஸ், அமர்தியா சென்
(தமிழில்: பேரா.பொன்னுராஜ்)

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி
: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 96
விலை: ரூ.80.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க