தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் பரவலாக மக்கள் அதிகாரம் தோழர்கள் குறி வைத்து கைது செய்யப்பட்டனர். அதிலும் பலரை மிகப் பெரிய கிரிமினல்களைக் கைது செய்வது போல் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்வது என அட்டூழியங்களில் ஈடுபட்டுவந்தது போலீசு.
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வரும் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளி சரவணன் வீட்டிற்கு சென்று அவரையும் கைது செய்ய முயற்சித்தது போலீசு. அவர் வீட்டில் இல்லாததால் அவரை கைது செய்ய இயலவில்லை.
தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் போலீசு ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் வகையில் மதுரை நீதிமன்றத்தில் தோழர் சரவணன் உள்ளிட்டு பல தோழர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் குறிப்பிட்ட நபரைக் கைது செய்வது என்றால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் அவர்கள் ஆஜராகாத பட்சத்தில்தான் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்த பின்னணியில் கடந்த 28.07.2018 அன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் தோழர் சரவணன் தனது நண்பரான சக தொழிலாளி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் முகவரி கேட்டு விசாரிப்பது போல அவரிடம் பேசியுள்ளனர். பின்னர் அவரிடம் ”நீ தான சரவணன்” எனக் கேட்டுள்ளனர்.
”ஆமாம்.. உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டுள்ளார்.
”நாங்க போலீஸ் உன்னை விசாரணை செய்யனும், ஸ்டேசனுக்கு வா…” எனக் கூறியுள்ளனர்.
“சார் முதலில் நீங்கள் யார்? போலீஸ் யூனிஃபார்ம் இல்ல, நடு ரோட்டில் வந்து ஸ்டேசனுக்கு கூப்பிடுறீங்க. விசாரணைக்கு அழைப்பது என்றால் முறையான சம்மன் வரட்டும், நான் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
”நான் சொல்லிகிட்டு இருக்கேன், ஒழுங்கா வாடா.. ”என போலீசார் தோழரை அடித்து இழுத்துள்ளனர்.
அப்போது தோழருடன் உடன் இருந்த நண்பரும் ‘‘ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்’’ எனக் கேட்டுள்ளார். உடனே அவரையும் பிடித்து இழுத்து அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டு ”நீயும் வா.. விசாரணைக்கு” என அவரையும் வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கு பொது மக்கள், தொழிலாளிகள் என அனைவரும் கூடிவிட்டனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி விரட்டியது போலீசு. ஆனால் மக்கள் அங்கிருந்து கலையாமல் அப்படியே நின்றனர்.
போலீசின் அராஜகத்தைக் கண்டு, தங்களுடைய சக தொழிலாளியை இழுத்துச் செல்வதைக் கண்டு என்ன செய்வது தெரியாமல் நின்று கொண்டு இருந்தனர்.
தோழர் சரவணனும், விடாப்பிடியாக தனது எதிர்ப்பை தெரிவித்தார். கைது செய்ய வந்தவர்களது இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை சாலையில் அமர்ந்து பிடித்துக் கொண்டு உட்கார்ந்து அங்கேயே தனது போராட்டத்தைத் தொடங்கினார்.
இவரின் இந்த போராட்டத்தால், அவரைத் தாக்கத் தொடங்கியது போலீசு. இச்சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்திலே அந்த சாலையில் ஒரு லாரி வந்துள்ளது. குறுகலான அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.
உடனே தோழர் விறு விறுவென எழுந்து சென்று ஒரு வீட்டின் வாயிலில் இருந்த கேட்டை பிடித்துக் கொண்டு நின்றுவிட்டார். போலீசு என்ன செய்தும் தோழரைக் கைது செய்ய முடியாத ஆத்திரத்தில் அவரை மிருகத்தனமாக இழுக்கத் தொடங்கியது. அப்போது அவர் “வருமான வரி சோதனையில் பல நூறு கோடிகளைக் கொள்ளையடித்து வைத்து இருப்பவர்களையும், கட்டி கட்டியாக தங்கத்தை வைத்து இருப்பவர்கள் எவரையும் இதுவரை போலீசு இது போல் கைது செய்ததுண்டா? போராடும் மக்களை, தொழிலாளிகளிடம் தான் போலீசின் தடிகள் நீளும்” என வாதம் புரிந்துள்ளார்.
இதைக் கேட்டு சுற்றி இருந்த மக்களும் எதிர்க்கத் தொடங்கினர். எரியக் காத்திருக்கும் சருகுகளில் தீப்பொறி பட்டது போல், பெண்மணி ஒருவர் வந்து போலீசின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்து பேசத் தொடங்கினார்.
மேலும் பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரும் இச்சம்பவத்தை அறிந்து நிகழ்விடத்துக்கு வந்து போலீசை நோக்கி ‘‘நாங்க எல்லாம் மனுசனா.. இல்ல ஆடு, மாடுகளா…? இப்படி கைது பன்ற. அவரு யாருன்னு உனக்கு தெரியுமா? மக்கள் பிரச்சினைகள், தொழிலாளிகள் பிரச்சினைனா முன்ன வந்து நின்னு போராடுறவரு… அவர இப்புடி செய்யுற..?” என போலீசிடம் பேசியுள்ளார்.
இதனைக் கண்ட சுற்றி இருந்த மக்களும், கேள்விக்கணைகளால் வந்திருந்தவர்களைத் துளைக்க ஆரம்பித்தனர். இதனால் ஒன்றும் செய்ய முடியாது நின்ற போலீசு சரவணனிடம் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கியது.
பசப்பல் வார்த்தைகள் பேசி எப்படியாவது அவரை கைது செய்ய நினைத்தது. தோழரோ தனது வழக்கறிஞர்கள் வரட்டும் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என கறாராக கூறிவிட்டார். பின்னர் வழக்கறிஞர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட்து.
வழக்கறிஞர்கள் வந்து சேர்வதற்குள்ளாகவே மீண்டும் தோழரை கைது செய்யப் பார்த்தது போலீசு. ஆனால் கூடியிருந்த மக்கள் அனைவரும், போலீசின் செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் வரும்வரை தோழரை காத்து நின்றனர்.
உடன் அப்பகுதிக்கு வாஞ்சிநாதன் உள்ளிட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் வந்து சேர்ந்தனர். சீருடை அணியாது தோழரை பலவந்தப்படுத்திக் கொண்டிருப்பதை வழக்கறிஞர்கள் கண்டிக்க ஆரம்பித்ததும் ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்தது போலீசு.
அதுவரை உச்சஸ்தாயியில் பேசிக் கொண்டிருந்த போலீசு வழக்கறிஞர்கள் வந்ததும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.
ஒருவரை கைது செய்ய வேண்டும் எனில் நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டல்களைக் கடைபிடிக்க வேண்டும். அதில் குறிப்பானது சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யப் போகும் போது அவரிடம் முறையாக விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். சீருடை அணிந்து வர வேண்டும், போன்ற எந்த வழிகாட்டலையும் பின்பற்றாது செயல்படுவது சட்டவிரோதமானது எனக் கூறினர்.
மேலும் மதுரை நீதிமன்றத் தீர்ப்பின்படி, முறையான சம்மன் அளித்துதான் அவர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். எனவே இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறியவுடன், சட்டரீதியில் மடக்கிப் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு அந்த தீர்ப்பின் நகல் உள்ளதா என கேட்டது போலீசு.
அதற்கு ஒரு கைது நடவடிக்கை அல்லது ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முன் நீங்கள் உங்கள் அரசு தரப்பு வழக்கறிஞர், உயர் அதிகாரிகள் என அவர்களிடம் விவரம் கேட்டு வரவேண்டும்.
மேலும் இந்த தீர்ப்பு வந்த போது போலீசுத்துறையின் பல்வேறு பிரிவுகளின், உயரதிகாரிகள் அங்குதான் இருந்தனர் எனக் கூறியதும், “எங்களுடைய தவறுதான்” என பல்லிளித்து நின்றது போலீசு.
பின்னர் தங்களின் அதிகாரம் இங்கு செல்லுபடியாகாது என்பதை உணர்ந்த போலீசு பின்வாங்கிச் சென்றது. மேலும் தோழரின் நண்பரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போனை திரும்பி ஒப்படைத்துச் சென்றது போலீசு.
அதன் பின்னர் அப்பகுதி மக்களிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசினார். அதில் மக்களுக்காக போராடும் ஒருவரை போலீசு அராஜகமாக கைது செய்ய நினைத்ததை முறியடித்த மக்களுக்கு நன்றி கூறி, போலீசின் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணியக் கூடாது என்பதை விளக்கிக் கூறினார்.
மக்கள் அதிகாரம் அமைப்பையும், அதன் தோழர்களையும் தனிமைப்படுத்த போலீசும் அரசும் எவ்வளவுதான் முயன்றாலும் மக்கள் அதிகாரத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது என்பதையே இந்த சம்பவம் காட்டியுள்ளது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.