“காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”:
அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி அரசியல் செயல்பாட்டாளர் தியாகு பேசுகிறார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. த டைம்ஸ் டாட் தமிழ் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.
எந்த மாநிலத்தில் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?
கேரளா. இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் அல்ல. மேற்கு வங்காளச் சிறைகள் தமிழ்நாட்டை விட மோசமாக இருக்கும். ”போல்ஷ்விக்குகள் அதிகாரத்திற்கு வந்ததால் உருசியாவில் சிறைகள் நன்றாக இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் போல்ஷ்விக்குகள் என்பதால் அல்ல; மாறாக அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் என்பதால்” என்று பகத் சிங் எழுதியுள்ளார்.
கேரளாவில் இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் போன்றோர் சிறையில் இருந்தனர். வி்.ஆர். கிருஷ்ணய்யர் வழக்கறிராக, சட்டமன்ற உறுப்பினராக, சிறைத்துறை அமைச்சராக, நீதிபதியாக பல அனுபவங்களைப் பெற்றவர். எனவே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், கம்யூனிஸ்டு ஆட்சி செய்தாலும் சிறைகள் நன்கு பராமரிக்கப்பட்டு இருக்கும்.
கேரளாவில் கைதிகளின் உழைப்பிற்கு தரும் ஊக்க ஊதியத்தை (incentive) அதிகப்படுத்தினார்கள். அதை வைத்து டோக்கன் கொடுத்து சிறை கேண்டீனில் வடை, தேநீர் போன்றவை கைதிகள் வாங்கிச் சாப்பிட முடியும். வெளியே போகும் போது பணமும் கிடைக்கும். அதே போல கேரளாவில்தான் வேலைக்கு மட்டும் சீருடை, அறையில் இருக்கும் போது வேட்டி அணிந்து கொள்ளலாம் என்று மாற்றம் கொண்டுவந்தார்கள்.
சி.ஏ.பாலன் எழுதிய தூக்குமர நிழலில் நூலைப் படித்தால் அப்போதைய சிறை எப்படி இருந்தது என்று புரிந்து கொள்ள முடியும். மொழிப் போராட்டம், கல்லக்குடி போராட்டம், விலைவாசிப் போராட்டம் என்று தி.மு.க. பெற்ற சிறை அனுபவத்தால் இயல்பாகவே தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஓரளவு சிறப்பாக நடைபெற்றன.
1967-இல் தி.மு.க. ஆட்சி , கைதிகள் குல்லாய் அணியத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். வாரம் ஒரு முறை கடிதம் எழுதலாம், 15 நாட்களுக்கு ஒருமுறை நேர்காணல் பார்க்கலாம் என்ற வசதிகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேம்பாடு அடைந்தன. 1974 நாங்கள் நடத்திய சிறைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 1977 எம்.ஜி.ஆர். ஆட்சியில் நீதிபதி நரசிம்மன் கமிசன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில்தான் புழல் சிறை கட்டப்பட்டது.
நெருக்கடி நிலைக்கால சென்னை சிறைக் கொடுமைகள் பற்றிய இசுமாயில் கமிசன் அறிக்கையும் சிறைச் சீர்திருத்தங்களுக்குப் பரிந்துரைகள் செய்தது. என்னுடைய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் நூல்களில் இவை பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். சிறைச்சாலைகளை எல்லா அரசுகளும் வைத்துள்ளன.
முதலாளித்துவ அரசாக இருந்தாலும் சரி; கம்யூனிஸ்டு அரசாக இருந்தாலும் சரி. ஈழத்தில் தலைவர் பிரபாகரன் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி. சிறைகளற்ற சமூகம் இதுவரை அமையவில்லை. சிறைச்சாலைகள் ஒரு மனிதனின் நுரையீரல் போல. நுரையீரல் சரியாக இருந்தால்தான் மூளை, இதயம், கை, கால் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்ட கால சிறைவாசிகளை முன்விடுதலை செய்யப் போவதாக தமிழ் நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளாரே?
காந்தி நூற்றாண்டு விழா, அண்ணா நூற்றாண்டு விழா என்று ஏற்கெனவே கைதிகளை முன்விடுதலை செய்துள்ளனர். கைதிகளை முன் விடுதலை செய்வதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது.
முன்னர் விடுதலை அறிவிப்பு வந்தால் குறிப்பிட்ட ஒரே நாளில் கைதிகளை விடுதலை செய்வார்கள். கைதிகள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டாடுவார்கள். ஆனால் முதலமைச்சர் அறிவிப்பு வந்து சில மாதங்கள் ஆன பின்னரும் இதுவரை நூறு கைதிகள் கூட விடுவிக்கப்படவில்லை; அதுவும் பகுதி, பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு விதித்த நிபந்தனைகளின் படியே விடுதலைக்கு தகுதியான 1500 பேர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதில் பாகுபாடு காட்டக்கூடாது. மத மோதல் வழக்கு (communal cases) வழக்கு என்ற காரணத்தைக் காட்டி பல இசுலாமிய சிறைப்பட்டோர் விடுவிக்கப்படவில்லை.
அவர்களில் ஒரு சிலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே உள்ளனர். இப்படி முன்விடுதலை செய்யும் போது செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது; குற்றவாளியை மட்டும்தான் பார்க்க வேண்டும்.
நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது சாட்சி, ஆதாரம் உள்ளிட்ட குற்றத்தைப் பற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும்; குற்றத்திற்கான தண்டனையை முடிவு செய்யும் போது குற்றத்தையும், குற்றவாளியையும் (வயது, முதல் குற்றமா? எந்த சூழலில் குற்றம் நடந்தது போன்ற காரணிகள்) பார்க்க வேண்டும்; முன்விடுதலை செய்யும் போது குற்றவாளியை மட்டுமே பார்க்க வேண்டும்; செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது என்பவை எல்லாம் உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறைகள்.
எனவே முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை விடுதலை செய்யக் கூடாது போன்ற வாதங்கள் சரியல்ல. எத்தனை ஆண்டு கழிந்தாலும் அவர் முன்னாள் பிரதமராகத்தான் இருப்பார். குற்றத் தீர்ப்பு பெற்று தண்டனையும் விதிக்கப்பட்டு பல்லாண்டு காலம் சிறையில் கழித்த ஒருவரை விடுதலை செய்ய வேண்டிய நேரத்தில் குற்றத்தைச் சொல்லி விடுதலை மறுப்பது தண்டனையின் நோக்கத்தையே அபத்தமாக்கி விடும்.
குற்றத்திற்கு தண்டனை வழங்குவதற்கு நான்கு நோக்கங்கள் சொல்வார்கள்: ஆங்கிலத்தில் நான்கு R சொல்வார்கள்: Revenge, Retribution, Reformation, Rehabilitation! அதாவது Revenge – பழிக்குப் பழி; Retribution – வஞ்சம் தீர்த்தல்; Reformation – சீர்திருத்தம்; Rehabilitation – மறுவாழ்வு. வரலாற்று வழியில் இந்த நோக்கங்களின் முக்கியத்துவம் மாறியுள்ளது.
சீர்திருத்தத்துக்கும் மறுவாழ்வுக்கும் முக்கியத்துவம் தர வேண்டிய இக்காலத்தில் அரசே வஞ்சம் தீர்க்கும் உணர்ச்சியை வளர்ப்பதை ஏற்க முடியாது. சிறை என்பது சீர்திருத்தக் கூடமாக இருக்க வேண்டும். எவரையும் நிரந்தரமாகச் சிறையிலடைத்து வைத்து சீர்திருத்தம் செய்ய முடியாது. எந்த ஒருவரையும் கால் நூற்றாண்டு காலம் சிறையில் வைத்துக் கொண்டு விடுதலை செய்ய மறுப்பது சீர்திருத்தக் குற்றவியல் நெறிகளுக்கு முரணானது.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே?
மன்னிப்பு, தண்டனை நீக்கம், தண்டனைக் கழிவு, தண்டனைக் குறைப்பு என்பதெல்லாம் சட்டத்தில் இருப்பவைதான். ஒரு கைதியைப் பற்றி, அவர் குடும்பச் சூழல் பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கே தெரியும். சட்டம் ஒழுங்கும், சிறைகளும் மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளன.
இந்த அதிகாரங்களில் மாநில அரசு இறைமை (sovereign) கொண்டது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161-இன் கீழ் ஒரு கைதியை முன்விடுதலை செய்யும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு. இப்படித்தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசை எதிர்த்து சி.ஏ. பாலன் தூக்குத் தண்டனைக் குறைப்பில் நிலை எடுத்து வெற்றி பெற்றார். நமக்கு ஏன் வம்பு என்ற மனநிலையில் யாரும் முடிவு எடுக்கத் தயங்குகிறார்கள்; நீதிமன்றம் உட்பட!
நான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து சாகும் நிலையில் உள்ள பல கைதிகளை சிறைக் கண்காணிப்பாளரே மாநில அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டு, அரசின் இசைவை எதிர்பார்த்து, விடுதலை செய்து இருக்கிறார். இறக்கும்போது ஒருவர் தன் வீட்டில் இறக்க வேண்டும் என்ற கருத்துப்படி (pleasure of dying at home) இதைச் செய்தார்கள்.
இப்போது அபு தாகீர் என்பவர் தீரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு கண்களும் பார்வை இழந்து விட்டன. அவரை விடுதலை செய்ய மாநில அரசு தயாராக இல்லை. நீதி மன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. அமைச்சருக்கு, அரசுச் செயலாளர்களுக்கே தங்கள் அதிகாரம் என்னவென்று தெரியவில்லை. முன்விடுதலை பற்றிய கோரிக்கை வந்தால் அதைக் காவல்துறைக்கு அனுப்புகிறார்கள்..
காவல்துறைக்கும் முன்விடுதலைக்கும் என்ன தொடர்பு? இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. இங்கு நடப்பது மக்களாட்சியா? காவல் துறை ஆட்சியா? அரசாங்கம் பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்வதுதான் மனிதத் தன்மையுள்ள செயலாக இருக்கும். அதுவே நாகரிக சமுதாயத்திற்கான பண்பாக இருக்கும்.
நீங்கள் சிறைத்துறை அமைச்சராக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?
கியூபா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் உள்ள சிறைகள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் சிறைகள் மோசமாக உள்ளன. பிரான்சு நாட்டுத் தண்டனை முறையின் கொடுமையைப் பட்டாம்பூச்சி புத்தகத்திலிருந்து அறியலாம்.
நேற்றைய பாவி இன்றைய புனிதராகலாம்; இன்றைய பாவி நாளை புனிதராகக் கூடாதா என்ன? சிறைத் துறையை மேம்படுத்துவதில் அரசின் அங்கங்களான சட்டமியற்றும் பேரவைகள், நீதிமன்றங்கள், அரசு எந்திரம் என்ற அனைத்திற்கும் பங்கு உண்டு. நான்காவது கொற்றம் (Fourth estate ) என்று அழைக்கப்படுகிற ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு.
அமெரிக்காவில் சிறைப்பட்டவர்களை அரசின் அடிமைகள் (Slaves of States) என்று சொல்லும் காலம் ஒன்று இருந்தது. பிறகு நாகரிகம் வளர்ந்து ”சிறைக்குரிய கட்டெல்லைக்கு உட்பட்டு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் சிறைப்பட்டோருக்கு உண்டு” என்ற கருத்து அங்கும் இங்கும் வளர்ந்துள்ளது.
சிறைப்பட்டோருக்கு வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த தடையும் இருக்கக் கூடாது. நீதிமன்றம், அரசு, மனித உரிமை ஆணையம், ஊடகம் போன்றவற்றோடு தடையற்ற தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு சில வரையறைகளோடு, இணையதள வசதிகள் கூட ஏற்படுத்தலாம். இப்படிச் செய்தால் சிறைக்கைதிகள் மீது நடைபெறும் அடக்குமுறைகள் குறையும்.
கிருஷ்ணய்யர் சொல்லும் Sight Proof, Sound Proof prisons என்ற நிலை மாற வேண்டும். நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது எங்களைப் பார்க்க வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.கல்யாண சுந்தரத்தைக் கூட பார்க்க அனுமதி மறுத்து விட்டார்கள். சிறைக் கண்காணிப்பாளர் தன்னை king of kings (அரசருக்கு அரசர்) என்றுதான் சொல்லிக் கொள்வார்.
நெருக்கடி காலகட்டத்தின் போது ஸ்டாலின், சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி போன்ற தி.மு.க. தலைவர்களே இழிவுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்றால் சாதாரணக் கைதிகளுக்கு யார் பாதுகாப்பு? கோவைச் சிறையில் சினிமா அரங்கு போன்றவற்றைக் கட்டிக் கொடுத்த ஒரு கண்காணிப்பாளரே பின்பு பாம்புத் தோல் கடத்திய வழக்கில் சிறைக்கு வந்தார். நாளை யார் வேண்டுமானாலும் சிறைக்கு வர நேரிடும் என்பது அனைவருக்கும் நினைவிருக்க வேண்டும்.
கிரண் பேடி போன்ற அதிகாரிகள் சிறையில் நல்ல பணி ஆற்றியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?
இருக்கலாம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் மேலிருந்து வரும் சீர்திருத்தம் பெரிய மாற்றம் கொண்டுவராது. இங்கு கூட நடராசன் என்ற அதிகாரி பற்றி பெருமையாகச் சொன்னார்கள். நான் சொன்னேன் அவரை ஒரே ஒரு மாற்றத்தைச் செய்யச் சொல்லுங்கள் என்றேன்.
அதாவது நேர்காணலின் போது கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் கும்பல், கும்பலாக இரும்புத் தடுப்பிற்கு வெளியே இருப்பார்கள். இதை மாற்றி கண்ணாடித் தடுப்பு வைப்பாரா? புல்லட் புரூப் கண்ணாடி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் அவர்களும் இவர்களும் அமைதியாகப் பார்த்துப் பேசிக் கொள்ள வழி செய்யுங்கள் என்றேன். உறவினர்களும் கைதிகளும் தூதரகங்களில் இருப்பது போல மைக், கேட்கும் கருவி மூலம் தடையறப் பேசலாமே! செலவும் அதிகம் ஆகாதே! கைதிகளின் கண்ணியம் பற்றியெல்லாம் அக்கறை இல்லை என்றால் நல்லது எப்படி நடக்கும்?
நீதிமன்றங்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா ?
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பல நல்ல தீர்ப்புகளைத் தந்துள்ளது. கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, சந்திரசூட், தேசாய், பகவதி போன்ற நீதிபதிகள் பல நல்ல தீர்ப்புகளை தந்துள்ளனர். இவை செயலாகின்றனவா என்று யார் பார்ப்பது?
வாரம் ஒரு முறை மாவட்ட நீதிபதி சிறைச்சாலையைப் பார்வையிட வேண்டும், புகார்ப் பெட்டி வைக்க வேண்டும், உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கின்றன. இந்தியா முழுக்க ஒரே ஒரு மாவட்ட நீதிபதி கூட இதைச் செய்வதில்லை. நடைமுறையில் நிலைமை படுமோசமாக உள்ளது.
கைதிகளின் முன்விடுதலை பற்றி முடிவு செய்ய ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அறிவுரைக் கழகங்கள் (Advisory Board) கூடி முடிவெடுக்க வேண்டும். ஆனால் அது கூட்டப்படுவதே இல்லை. அதனால்தான் முக்கியத் தலைவர்கள் பிறந்த நாளின் போது விடுதலை செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் இந்த அறிவுரைக் கழகங்கள் வழமையாகச் செய்த பணிதான் இது.
இதைப் பற்றி எந்த பத்திரிகையாவது கேள்வி எழுப்புகிறதா? இப்போது கூட தினமலர் நாளிதழ் இந்த முன்விடுதலை பற்றி எள்ளலாகத்தான் செய்தி வெளியிடுகிறதே ஒழிய, 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருப்போரின் உளவியல் பற்றியெல்லாம் அதற்கு அக்கறை இல்லை.
கைதிகளுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டும். சிறைச்சாலையில் வெளி உலகத்தின் பார்வை வேண்டும். (Social oversight of Prisons), அதனால்தான் மரங்களின் மீதும், கட்டடங்களின் மீதும் போராட்ட சமயங்களில் கைதிகள் ஏறிக் கொண்டு பொது மக்களுக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். தரையில் இருந்து முழங்கினால் சிறைக் கைதிகளின் மண்டையைப் பிளந்து விடுவார்கள்.
1983 -இல் நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது தேர்தல் நடத்தி எங்கள் பிரதிநிதிகள் மூலம் சிறை நிர்வாகத்தில் பங்கு எடுத்தோம். சிறை அதிகாரியை துரை என்று கூப்பிடுவதை நிறுத்தினோம். போதைப் பழக்கம், சீட்டு விளையாட்டு குறைந்தது; குறள் வகுப்புகள் நடத்தினோம். உணவின் அளவு, தரம் இவற்றைப் பார்த்துக் கொண்டோம். கண்காணிப்பாளர் வீட்டு நாய்க்குக் கூட சிறையிலிருந்து சாப்பாட்டு தர மாட்டோம் என்று ஊழலை எதிர்த்து நின்றோம்.
1974-ஆம் ஆண்டு தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் தலைமையில் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் என்ற ஒன்றை அமைத்து பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடினோம். போராட்டத்தால் கிடைத்த பலன் குறித்து ஏ.ஜி.கே. “அப்ப நீர்ல மோர் கலந்தாங்க; இப்ப மோர்ல நீர் கலக்குறாங்க” என்று சொல்வார். சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் ஒடுக்கப்பட்ட தோழர்கள் என்பார்.
நீங்கள் நீதிபதியாக இருந்தால் எஸ்.வி.சேகருக்கு பிணை கொடுத்திருப்பீர்களா?
கொடுத்திருப்பேன். எதிரியாக இருந்தாலும், குற்றவாளிக்குரிய உரிமைகளை மதிக்க வேண்டும். Bail is the rule, and jail is an exception (பிணை என்பது விதி; சிறை விதிவிலக்கு) என்பதுதான் கொள்கை, வழக்குகளை விரைவாக நடத்த வேண்டும். குற்றவாளியா இல்லையா என்பது விரைவில் முடிவு செய்யப்பட வேண்டும்.
இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
வழக்கம் போல் இயக்கம், எழுத்து தவிர இப்போது சிறப்பாகச் செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறேன். சிறையிலிருந்த போது கார்ல் மார்க்சின் தாஸ் கேபிடல் மூன்று பாகங்களையும் தமிழில் மூலதனம் என்று மொழி பெயர்த்து அவை ஐந்து புத்தகங்களாக வெளிவந்தன. வெளிவந்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன.
இப்போது அதன் முதல் பாகத்தையே மூலமுதல் என்ற பெயரில் தூய தமிழில் மீள் மொழியாக்கம் செய்து வருகிறேன். முன்வெளியீட்டுத் திட்டம் அறிவித்துள்ளோம். வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடலாம் எனக் கடுமையாக உழைத்து வருகிறோம். நீங்கள் வரும் போது கூட அந்த வேலைதான் செய்து கொண்டிருந்தேன்.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். த டைம்ஸ் தமிழ் இணையத்துக்காக பல்வேறு சமூக அரசியல் சார்ந்த செயல்பாட்டாளர்களை நேர்காணல் செய்து எழுதிவருகிறார்.
ஒளிப்படங்கள் நன்றி: தோழர் தியாகு முகநூல் பக்கம்.
நன்றி : த டைம்ஸ் தமிழ்
katturaigalaip pathiviRakkam (print/download) vasathi irunthaal payan perumbadi irukkum. munbellaam vanavu katturaigal pdf muraiyil pathivirakkam seiya mudiyum.