அறிவுரைக் கழகத்தின் தலைவர் (Chairman – Advisory board) முன்பு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் – ஆதரவாளர்கள் 6 பேரின் சார்பாக தோழர் தியாகு வாதம்! காணொளி !
கலிலூர் ரகுமான், முகமது அனஸ், முகமது இர்ஷத், முருகன், சரவணன், கோட்டையன் ஆகிய ஆறு தோழர்களை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு கைது செய்தது தூத்துக்குடி போலீசு. இத்தகைய கொடுங்கோல், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு அறிவுரைக் கழகத்தின் முன் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற நடைமுறையின் படி, சென்னை அறிவுரைக் கழகத்தில் ஜூலை 11, 2018 அன்று விசாரணை நடந்தது.
இதில் தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 6 பேரின் சார்பாக, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிறுவனர் தோழர் தியாகு அவர்கள், நடுவர்கள் முன்னிலையில் வாதாடினார். நடுவர்கள் முன் தாம் முன்வைத்த வாதங்கள் குறித்து வினவு இணையதளத்தோடு பகிர்ந்து கொண்டார்.
அவரது வாதத்தில், இந்த 6 பேர் மீது தடுப்புக்காவல் சட்டம் முறையற்ற வகையில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் 6 பேர் மீதும் இதற்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டதாக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. எவ்வித குற்றப்பின்னணியும் இல்லை. ஆகவே எவ்வகையிலும் இவர்களின் மீது தடுப்புக் காவல் சட்டத்தை பிரயோகிக்க முடியாது என்று முன் வைக்கப்பட்டது.
மேலும், 6 வெவ்வேறு இடங்களில், வெவ்வேறான 6 குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 6 இடங்களும், பல கிமீ தூரம் இடைவெளியுடையவை. இந்தச் சம்பவங்கள் குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனில் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று இதுவே எடுத்துக்காட்டுகிறது.
இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, போலீசு, வருவாய்துறை அதிகாரிகளின் சாட்சியைத் தவிர தற்சார்பான சாட்சி எதுவும் இல்லை. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல இவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது. மாவட்ட ஆட்சியர், 144 தடை உத்தரவை இறுதி வரையில் இணையதளத்தில் வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துதான் பெற முடிந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் இல்லை. இதுவே இங்கு அரசினுடைய சதியை அம்பலப்படுத்துகிறது. போலீசின் மீதான குற்றத்தை மறைக்க மக்கள் அதிகாரத்தின் மீது தீவிரவாத அமைப்பு என்ற முத்திரை குத்தி அவர்களின் மீது பலி போட்டு தப்பிக் கொள்ள நினைக்கிறது அரசு.
99 நாட்கள் நடைபெறாத வன்முறை 100-வது நாள் நடந்திருக்கிறது என்றால் இது அரசின் சதியைத் தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது. தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த 6 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த முகாந்திரமும் இல்லாமல் இப்பொய் வழக்குகளை போட்டிருக்கிறது அரசு.
இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக சொல்லும் போலீசு, அதற்கு ஏதாவது காணொளி, புகைப்படத்தின் மூலம் ஆதாரம் காட்டினால் ஏற்றுக் கொள்கிறோம் என்று போலீசுக்கு சவாலாகச் சொல்கிறோம். போலீசும் அரசும் தம் மீதுள்ள துப்பாக்கிச்சூட்டு பழியை மறக்கடிக்க மக்கள் அதிகாரத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறது.
மக்களுக்கு நல்ல காற்று வேண்டும், நல்ல சுற்றுச் சூழல் வேண்டும் என்ற அடிப்படையில் இவர்கள் 6 பேரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இது அடிப்படை அரசியல் சாசனச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமை. மக்களுக்காக போராடும் இவர்களை பழி வாங்கும் விதத்தில், அரசு இவர்கள் மீது பொய்வழக்கு போட்டிருக்கிறது. அதற்கு இக்கழகம் உதவக்கூடாது. அரசுக்கு இவர்களை விடுவிக்க வேண்டும் என அறிவுருத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.
- வினவு களச் செய்தியாளர்