பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !

இன்று பாப்பாள் அம்மாள் சமைத்த உணவில் பல்லி இருந்ததாக பொய் சொல்லி வழக்கு போடும் சாதிவெறிவெறிக் கும்பல், நாளை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும்!

சத்துணவு சமையலர் பாப்பாள் மீது உணவில் பல்லி இருந்ததாக வழக்கு பதிவு !

ன் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் தீண்டாமை கொடுமையை அம்பலப்படுத்தியும், அச்செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,  திருமலைக் கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாள் அம்மாள் அவர்கள் அளித்துள்ள புகார் கடிதம்.

pappal-facing-untouchability-in-government-schoo
சத்துணவு சமையலர் பாப்பாள்

நாள் – 07.08.2018

அனுப்புநர் :

பாப்பாள் (42), (சமையலர்) w/o பழனிச்சாமி,
6/66, திருமலைக் கவுண்டன் பாளையம்,
குட்டகம் ஊராட்சி,
ஆவிநாசி தாலுக்கா, திருப்பூர்.

பெறுநர் :

திரு.துணைக்காவல் கண்கானிப்பாளர்,
அவிநாசி.

அன்புடையீர்,

அவிநாசி வட்டம், குட்டகம் ஊராட்சி திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வருகிறேன். என் மீது சாதிய வன்மத்தோடு நான் இங்கே பணியாற்றக்கூடாது என்று தீண்டாமை கொடுமை நிகழ்த்தப்பட்டது பற்றி புகார் மனுவாக கொடுத்து ( சேவூர் காவல் நிலையம் குற்ற எண் 187/2018 ) வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் இன்று (07.08.2018) காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று மாணவ மாணவியருக்கு உணவு சமைத்து, மதியம் மாணவ மாணவியருக்கு உணவு வழங்கிவிட்டு பணி முடிந்த நிலையில், மேற்கண்ட பிரச்சினையின் காரணமாக இதுவரை மதிய உணவு வாங்கி சாப்பிடாமல் இருந்துவந்த கந்தாயிபாளையத்தைச் சேர்ந்த பவித்ரா என்கிற மாணவி வாங்கிய மதிய உணவை கீழே வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றுவிட்டார்.

திரும்பி வந்து சாப்பிட உட்காரும் போது, பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. சசிகலா அவர்கள், பவித்ராவிடம் உணவில் பல்லி விழுந்திருப்பதால் சாப்பிட வேண்டாம் என்று தடுத்து, அந்த மாணவியின் தட்டில் இருந்து பல்லியை எடுத்துக்காட்டிவிட்டு உடனடியாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிறகு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். மற்ற மாணவர்கள் உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தனர்.

நான் ஏற்கனவே தீண்டாமை கொடுமை குறித்து புகார் அளித்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில் தினசரி நான் சமைக்கும் உணவை நான் சாப்பிட்டு விட்டும், சிறிதளவு உணவை தனியாக எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

எனவே என்னிடம் உள்ள சிறிதளவு மாதிரி உணவை பரிசோதனை செய்து அதில் எந்த விதமான நச்சுக்களும் கலக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்க, குரூர எண்ணத்தோடு மாணவ-மாணவிகள் சாப்பிடும் உணவில் இறந்த பல்லியை மறைத்து வைத்துப் பழியை சுமத்தும் தலைமை ஆசிரியர் திருமதி சசிகலா அவர்கள் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
பாப்பாள்

*****

பாப்பாள் அம்மாளை வெளியேற்றுவதற்கு சாதி வெறியர்கள் எடுத்திருக்கும் புதிய சதி நடவடிக்கை இது! அவரது சாப்பாட்டை சாப்பிடக் கூடாது என்று தடுத்த சிலர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே அவர்கள் பாப்பாள் அம்மாளை எப்படி வெளியேற்றலாம் என்று திட்டம் போட்டிருப்பார்கள். இவற்றை முறியடித்து மக்களுக்கு புத்திமதி சொல்லவேண்டிய தலைமையாசிரியரே இன்று சாதிவெறியர்களின் சதித்திட்டத்திற்கு தலைமை தாங்கி நிற்கிறார். இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்பது சாதிவெறியர்கள் மட்டுமல்ல, பள்ளி – அரசு நிர்வாகம்தான்! தலைமையாசிரியர் சசிகலா மீது நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியப் பணியில் அர்ப்பணிப்பும்,  சாதி  உணர்வு இல்லாத ஆசிரியர்களை இப்பள்ளியில் நியமிக்க வேண்டும். இல்லையேல் இனி சத்துணவு சமையலில் பெருச்சாளி, பாம்பு மட்டுமல்ல, பாப்பாள் அம்மாள் விசம் வைத்தார் என்று கூட சதி செய்வார்கள்!

– வினவு

புகார் கடிதத்தின் புகைப்படம்

( படங்களைப் பெரிதாக காண அதன் மீது அழுத்தவும் )

நன்றி : சுகிர்தாராணி.

புகார் கடிதத்தின் புகைப்படம் சுகிர்தாராணியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

– வினவு செய்திப் பிரிவு