கார்ட்டூனிஸ்ட் சதிஷ் ஆச்சார்யா.

மோடி அரசின் இந்துத்துவ செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒருசில பத்திரிகையாளர்களில் கார்ட்டூனிஸ்ட் சதிஷ் ஆச்சார்யாவும் ஒருவர். பசுவை முன்வைத்து நடந்து வரும் கும்பல் படுகொலைகள் குறித்தும், மோடி அரசின் பண மதிப்பு நீக்கல் நடவடிக்கை குறித்தும், அன்றாடம் இந்துத்துவ கும்பல் அவிழ்த்துவிடும் வன்முறைகள் குறித்து இவர் வரைந்த கார்ட்டூன்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுபவை.  ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி – அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்…

‘கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள்’

சதிஷ் ஆச்சார்யாவின் முகநூல் பதிவு.

இப்படித்தான் ‘மெயில் டுடே’வுக்காக வரையப்பட்ட என்னுடைய கார்ட்டூன் பத்தி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. அப்பத்திரிகையின் ஆசிரியர் இப்படித்தான் ஒரு கார்ட்டூனையும் கார்ட்டூனிஸ்டின் கருத்தையும் பார்த்தார். இப்படித்தான் ஒரு குரலை ஒடுக்கினார்.

அவர் வெளியிட மறுத்த கார்ட்டூன் சீனாவின் ஆக்டோபஸ் கரங்கள், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைப் போல இந்தியா மீது நீள்கின்றன என்பதை சொன்னது. ஆசிரியர் இந்த கார்ட்டூன்  ‘அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் சீன பிரச்சினையை மிதமிஞ்சியும் சொல்கிறது’ என்றார்.

இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை இப்படித்தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் பார்ப்பார் என நினைத்தேன். ‘இது விவாதத்துக்குரியதுதான், ஆனால், ஒரு கார்ட்டூனின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என நான் அவரிடம் சொன்னேன். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் குழுவிடம் கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள் என்றார் ஆசிரியர்.

‘மெயில் டுடே’ வெளியிட மறுத்த சதிஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன்.

என்னுடைய சுதந்திரத்தை பாதுகாக்கவும் கார்ட்டூன் பத்தியின் புனிதத்தை பாதுகாக்கவும் பல நாட்களாக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் ஓர் ஆசிரியருக்கு கார்ட்டூன் என்பது மூன்று கால இடத்தை நிரப்புவது, அவ்வளவே. ஆனால் ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு அதுதான் உலகமே. அந்த உலகத்தில் கார்ட்டூனிஸ்டால் தன்னுடைய கருத்தை முழுமையாக வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு.  அந்த உலகத்தில் தன்னுடைய சொந்த படைப்பின் எல்லைகளை சவாலாக எதிர்கொள்ள முடியும். அந்த உலகத்தில் போராட்டத்தை, விமர்சனத்தை, புலம்பலை, உற்சாகம் உள்ளிட்டவற்றுக்கு குரல் தர முடியும்.

இதுதான் என்னுடைய அனுபவம்:

‘நீங்கள் வரைந்த பசு கார்ட்டூன் ஆசிரியருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை’ என பசுவை வரைந்ததற்காக என்னுடைய கார்ட்டூனை முதலில் நிராகரித்தார்கள்.

கும்பல் கொலைகள் பற்றிய என்னுடைய கார்ட்டூனுக்காக ‘இதில் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. இந்தியா டுடே குழுமம் மத அடையாளத்தோடு வருகிற கார்ட்டூன்களை வெளியிடக்கூடாது’ என்றார்கள்.

மோடி மீதான கார்ட்டூனுக்கு, ‘மோடிக்குப் பதிலாக, ஏதேனும் பா.ஜ.க.-காரரை பயன்படுத்தமுடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்கள்.

மேலும், ‘ஆசிரியர் இந்த கார்ட்டூனில் உள்ள இஸ்லாமிய கண்ணோட்டத்தை விரும்பவில்லை’

‘கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள்’ – கார்ட்டூனிஸ்ட் மஹமுத்தின் கார்ட்டூன்.

மேலும், ‘பண மதிப்பு நீக்கத்தையும் 100 சதவீத மின்வசதி ஏற்படுத்துவதையும் தொடர்புபடுத்துவது ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை’.

மேலும் பல, ‘இது சரியான பொருளில் இல்லை’, ‘இது ஏற்க முடியாதது’ என நிராகரிப்புக்கான காரணங்களாக சொல்லப்பட்டன.

இப்படி நிராகரிக்கப்பட்ட கார்ட்டூன் பிற ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு, சிலவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. பல பத்திரிகையாளர்கள் அவற்றை ரீ ட்விட் செய்தார்கள்.

என்னைச் சுற்றிலும் இருக்கும் தடைகளைக் கடந்து, கார்ட்டூன்களை படைப்பது எனக்கு சவாலாக உள்ளது. விரக்தியிலிருந்து வெளியேறி, என் மூத்த பத்திரிகையாளர் நண்பர்களை அனுகினேன். அவர்களை என்னை ஆறுதல்படுத்தினார்கள். சிலர் காத்திருக்கச் சொன்னார்கள்; சிலர் உறுதியாக இருக்கச் சொன்னார்கள்.

ஃப்ரீலான்ஸ் கார்ட்டூனிஸ்டாக மற்ற ஊடகங்களுக்கும் பணியாற்றும் எனக்கு, இந்த மாதிரியான சூழலில் விட்டுக்கொடுத்துப் போவது எளிதானது. ஆனாலும் என்னுடைய உரிமைக்காக நான் போராட வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பெயரில் வெளிவரும் கார்ட்டூன் பத்திக்கு, அதற்குரிய நியாயத்தை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

முடிவில், எனக்கான இடம் ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கடுமையுடன் நினைவு படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் என்னுடைய கார்ட்டூனை நீக்கிவிட்டு, ஒரு படத்தை அவர்களால் போட முடிகிறது.

உண்மையில், இதில் ஒரு விடுவிப்பு கிடைத்திருக்கிறது. பசுவை பற்றிய கார்ட்டூன் பற்றியோ, கும்பல் கொலைகள்  பற்றியோ, மோடி கார்ட்டூன் பற்றியோ இந்து-முஸ்லிம் கார்ட்டூனில் இடம்பெறுவது குறித்தோ நான் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஒரு கார்ட்டூனை வரைய அமரும் முன், ஆசிரியர் என்ன சொல்வாரோ என நினைக்க வேண்டியதில்லை.

ஆனால், அவமானப்படுத்தும் அனுபவம் என்னை காயப்படுத்துகிறது.

ஒரு கார்ட்டூனிஸ்டாக, என்னுடைய ஆசிரியர் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்கிறேன். கார்ட்டூனிஸ்டுகள் ஒரு ஆசிரியரின் குரலை பிரதிபலிக்க வேண்டியதில்லை. கார்ட்டூனிஸ்டுகள் சுதந்திரமான குரலை வெளிப்படுத்த வேண்டியவர்கள்.

உண்மையில், ஓர் ஆசிரியர் அவருக்குள்ள உரிமையில் ஒரு கார்ட்டூனிலிருந்து வேறுபடலாம், அதுபற்றி கார்ட்டூனிஸ்டிடம் பேசலாம். ஆனால், அதிகாரத் தோரணை இல்லாமல் அவர் திறந்த மனதுடன் அதைச் செய்ய வேண்டும்.

சதிஷ் ஆச்சார்யாவின் கருத்துரிமைப் பறிப்புக்கெதிராக சக கார்ட்டூனிஸ்டுகள் வரைந்த கார்ட்டூன்.

என்னுடைய கார்ட்டூன்கள் ‘மெயில் டுடே’ திறந்த தலையங்கப் பக்கத்தில் இடம்பெறக்கூடியது. அங்கே பத்தி எழுதும் சில பத்திரிகையாளர்களுக்கு என் கார்ட்டூன்களைக் காட்டிலும் சுதந்திரம் இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, எனக்கு வேறு சில பத்திரிகைகள் உள்ளன. அங்கே உள்ள ஆசிரியர்கள் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்கிறார்கள். என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை எனினும் என்னுடைய கார்ட்டூனை நம்புகிறார்கள். இதுபோன்ற திறந்த மனுதுடைய ஆசிரியர்களை நாம் நிறைய பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. மேலும், என்னிடம் சமூக ஊடகம் உள்ளது, அங்கே சுயாதீனக் குரல்களை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

முரண்பாடாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷாவின் இணையதளத்தில் நான் வரைந்த அவரை உள்ளடக்கிய கார்ட்டூன்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கார்ட்டூன்கள் அவரை மிகவும் கடுமையாக எதிர்க்கக்கூடியவை.

நிகழ்பவற்றை நோக்கும் போது, ‘அவர்கள் குனியச் சொன்னார்கள்; இவர்கள் படுத்தே விட்டார்கள்!’ என்கிற மிகப் பிரபலமான வரிகள் நினைவுக்கு வருகின்றன.

த வயர் இணையதளத்தில் வெளியான கார்ட்டூனிஸ்ட் சதீஸ் ஆச்சார்யாவின் முகநூல் பதிவின் தமிழாக்கம்.

தமிழாக்கம்: கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க