ள்ளி கல்லூரி விடுமுறையின் போது மாணவர்கள் என்ன செய்வார்கள்? பெற்றோர்களின் விருப்பம் என்ன? நீட் முதல் பரதம், டென்னிஸ், நீச்சல், இசை என்பதை நடுத்தர வர்க்கம் விடுமுறைக்காலத்தின் சுய முன்னேற்றமாக வைத்திருக்கிறது. சில பல ஆயிரங்களோடு அந்த பயிற்சி ஏதோ முடிந்தாலும் மாணவர்கள் அதில் என்ன பெற முடியும்?

ஆனால் உங்கள் பிள்ளைகளை இத்தகைய விடுமுறைகளின் போது உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு அனுப்பினால் அது உருவாக்கும் ஆளுமையே தனி! குடும்ப அமைப்புக்களில் பாராட்டி சீராட்டி வளர்க்கப்படும் நமது பிள்ளைகள் இத்தகைய வேலைகளைச் செய்யும் போது பல நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இந்த உலகம் எப்படி இயங்குகிறது, நமது சமூகத்தின் உழைக்கும் மக்கள் எப்படி அயராமல் வேலை செய்கிறார்கள், பணி நேரத்தில் எந்திரம் போல வேலை செய்து உடலை உழைப்புக்கு பழக்குவது, மக்களிடையே புரியும் விதத்தில் பேசக் கற்றுக் கொள்வது, நடைமுறை சார்ந்த திறமைகள் பலவற்றைக் கற்பது, தனியாக வேலைக்கு செல்வதன் மூலமும், வேலை சார்ந்த பிரச்சினைகளை சந்திப்பதன் மூலமும் பொறுமை, விடா முயற்சி, தைரியம் போன்றவற்றை சுயமாக தரிசிப்பது என்று அளப்பறிய பலன்கள் இருக்கின்றன.

இங்கே கல்லூரி மாணவி கவிமதி தனது விடுமுறைக் காலத்தில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய அனுபவத்தை தருகிறார்! அடுத்த விடுமுறையின் போது நீங்களும் முயன்று பாருங்கள்!

– வினவு

ல்லூரி முதல் வருடம் வெற்றிகரமாக (எந்த அரியரும் இல்லாமல்) முடிந்தது. கோடை விடுமுறையில் எந்த ஊருக்கு என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, வேலைக்கு போகலாம் என்ற அப்பாவின் யோசனை முதலில் இடியாக இருந்தாலும் பிறகு யோசிக்கும்படியாக இருந்தது..

கடைகளுக்கு பொருள் வாங்க செல்லும்போது அழகாக வரவேற்ற முகங்கள், வேலை தேடி செல்லும்போது வேண்டா வெறுப்பாக பார்த்தது. முதலில் எனது நகரின் முக்கியமான தெருவில் இருக்கும் துணிக்கடைக்கு சென்றேன். நாளை வேலைக்கு வா என்று சொல்வார்கள் என்ற கனவில் சென்றேன் நான்.

கோடை விடுமுறையில் எந்த ஊருக்கு என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, வேலைக்கு போகலாம் என்ற அப்பாவின் யோசனை முதலில் இடியாக இருந்தாலும் பிறகு யோசிக்கும்படியாக இருந்தது..

வேலை தேடி வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன், ‘ஓரமா நில்லுமா’ என்றுதான் பேசவே ஆரம்பித்தார்கள். காலேஜில் சேர்வதற்கு விண்ணப்ப படிவம் தருவதுபோல் வேலைக்கு கூப்பிடுவதற்கும் விண்ணப்ப படிவம் தரவேண்டும் என்பது ஆச்சரியமாக இருந்தது.

விண்ணப்பத்தில், ஜாதி, சமயம் என்ன என்றெல்லாம் கேட்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் கொடுத்த பிறகாவது கூப்பிடுவார்கள் என்று பார்த்தால், ஏற்கனவே வரிசையில் 50 பேர் இருந்தார்கள். கொடுத்து விட்டு வந்துவிட்டேன். 2… நாள் கூப்பிட வில்லை. திரும்பவும் சென்றேன். எச்.ஆர்-இடம் கேட்டு நாளை சொல்கிறோம் என்றார்கள்

அடுத்த நாளும் கூப்பிடவில்லை. ஒரு நாள் கழித்து சென்றேன். எச்.ஆர் இருந்தார்.
12 -ஆவது முடித்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தெரியும் என்றேன். முதல் கேள்வியாக ‘லீவுக்கு மட்டும்தான் வருவியா?’ என்றார். ஆமாம், என்றால் வேலை கொடுக்க மாட்டாரே. ‘இல்லை, நான் வீட்டிலிருந்து கரஸில் படிக்க போகிறேன். நிரந்தரமாக வேலைக்கு வருவேன், என்றேன். அவர்,’ காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை, சீக்கிரம் கூப்பிடுகிறோம்’ என்றார்.

அவர்களும் கூப்பிட வில்லை, நானும் போகவில்லை. வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவதற்காக நானும் அம்மாவும் அருகில் இருக்கும் கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் எதிரே ஒரு ஓட்டலில் பில்லிங் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்டு தொங்கி கொண்டிருந்தது. சென்று கேட்டவுடன், அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வர கூறிவிட்டார்கள்.

ஓனருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பது, தன்னை பெரிய ஆளு என்று நினைத்து கொண்டிருக்கும் சில டான்களுக்கு சாப்பாடு என்ன வேண்டும் என்று கேட்பது, டைம் பாஸ் ஆகாத கஸ்டமர்களின் மொக்க கேள்விகளுக்கு பதில் சொல்வது, மெனு போர்டு எழுதுவது, வேலை செய்பவர்களின் புலம்பலை கேட்பது, இதெல்லாமும் எங்கள் வேலை.

ஷிப்ட் மாறி மாறி வரும் என்றும் கூறினார்கள். விடியற்காலை எழுந்து குளித்து தயாராகி முதல் நாள் காலையில் 6 மணிக்கு வேலைக்குச்சென்றேன். கணினியில் அடிப்படை அறிவு இருந்தாலும், வேலையை எண்ணி பயமாக இருந்தது. வேலைக்கு சென்றவுடன், ஏற்கனவே இரண்டு பேர் பில்லிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் சென்று பணிவாக ‘வேலைக்கு வர சொல்லியிருந்தார்கள்’ என்றேன். நாங்களே நேத்துலர்ந்துதான் வரோம் என்றார்கள் அவர்கள். அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறைக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அவர்கள் ஷீலா, அரித்ரா. ஒரு மணி நேரத்தில் பில் எப்படி போடுவது என்று கற்றுக் கொண்டேன். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம், குடும்பத்தில் ஒருவர் புதியதாக வந்ததை போல விசாரித்தார்கள்.

காலை உணவு, என்ன வேண்டுமோ எடுத்து கொள்ளலாம். ஆனால், பரோட்டா, மல்லி இட்லி போன்ற விலையுயர்ந்தவற்றை எடுக்கக்கூடாது என்று பரோட்டா மாஸ்டர் கூறினார். நான் இரண்டு இட்லி சாப்பிட்டேன். அனைவரும் நன்றாக பேசினார்கள். பயம், கூச்சம் எல்லாம் முதல் நாளிலேயே மறைந்துவிட்டது எனக்கு.

பரோட்டா மாஸ்டர்

அரித்ராவும், ஷீலாவும் பக்கத்து ஊரிலிருந்து வந்தார்கள். ஷீலாவுக்கு இயேசு பக்தி அதிகம். கண்டிப்பாக இயேசு அருளோட நான் 1000 மார்க் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்வாள். அரித்ரா, மார்க் வந்தா என்ன வரலனா என்ன.. எனக்கு என் ஆளு இருக்கான். என்று இருப்பாள்.

அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஒவ்வொன்று இருந்தது. ஓனர்கள் இருவருமே நன்றாக பேசுவார்கள். பில் போடுவது மட்டும் அங்கும் வேலையல்ல. ஓனர் இல்லையென்றால், நாங்கள் தான் ஓனர்போல கேஷ் டேபிளில் உட்கார்ந்து சீன் போட்டுக்கொண்டு இருப்போம்.

ஐஸ் கிரீம், கூல் ட்ரிங்ஸ் எடுத்து கொடுப்பது, ஓனருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பது, தன்னை பெரிய ஆளு என்று நினைத்து கொண்டிருக்கும் சில டான்களுக்கு சாப்பாடு என்ன வேண்டும் என்று கேட்பது, டைம் பாஸ் ஆகாத கஸ்டமர்களின் மொக்க கேள்விகளுக்கு பதில் சொல்வது, மெனு போர்டு எழுதுவது, வேலை செய்பவர்களின் புலம்பலை கேட்பது, இதெல்லாமும் எங்கள் வேலை.

தனராஜ் அண்ணன், சவுந்தர்யா அக்கா (இடது) மற்றும் வனஜா அக்கா -கேஷியர் (வலது)
சவுந்தர்யா அக்கா, கிளீனர் அக்கா.

இவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. இரண்டு பேரும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். கணவர் ஐஸ் வியாபாரம் செய்கிறார். இவரது லட்சியம் என்று இவர் அடிக்கடி கூறுவது, ‘மாமியார் மண்டய போடறதுக்குள்ள லைப்ல செட்டிலாயிடணும்’ இதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்பார்.

ஓனர் எவ்வளவு திட்டினாலும் ‘ஏன்னா..? எப்ப பாத்தாலும் என்னையே திட்டுற? வேற யாரும் கண்ணுக்கு தெரியலயா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்பார். இவர் கணவரை பற்றி பெருமையாக பேசுவார். ‘என் வீட்டுகார் சண்டயில டி.வி.ய ஒடச்சிட்டு, அவரே நைட்டெல்லாம் உட்கார்ந்து சரி பண்ணாரு’ என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

தனராஜ் அண்ணா

இவர் என்னதான் வேலை செய்கிறார் என்றே தெரியாது. ஒருநாள் ரூம்பாய் என்பார். ஒருநாள் சப்ளையர் வேலை செய்வார். ஒருநாள் பார்சல் வேலை செய்வார். ஆல் ரவுண்டர் என்றே கூறலாம். இவருக்கு சொந்தத்தில் திருமணம் நடந்ததால், மகளுக்கு சிறிது மனம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஒரு குறையாகவே சொல்ல மாட்டார். அவரது அம்மா என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு. அம்மாவுக்கு ஒரு டச் போன் வாங்கி கொடுத்து வேலையில் இருக்கும்போதெல்லாம், போன் செய்து, ‘அம்மா நான் நைட் வந்துடுவேன், சாப்பாடு செஞ்சு வை ‘ என்று கொஞ்சுவார்.

உடன் வேலை செய்பவர்கள் கலாய்த்தாலும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். மற்றவர்களை பயங்கரமாக கலாய்ப்பார். ஒருநாள் லாட்ஜில் ரூம் கேட்டு இரண்டு டூரிஸ்ட்கள் வந்தார்கள். விலையை கேட்டதும் சென்று விட்டார்கள். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், ‘அப்படியே நேரே போனீங்கனா காமாட்சி அம்மன் கோவில் வரும், அங்க போயி ப்ரீயா படுத்துக்கோங்க’ என்றார். ஓட்டலே சிரிப்பில் வெடித்தது.

வனஜா அக்கா, கேஷியர். 

ஓனருக்கு அடுத்து இவர்தான் ஓட்டலில் டான். அவர்கள் வெளியே சென்றுவிட்டால் மளிகை, காய்கறி கடன் காரர்களை சமாளிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இவருக்குதான். இவருக்கு ஒரு மகள். எல்லா வேலை செய்பவர்களும் தனது குடும்ப கஷ்டங்களை, வேலையிடத்தில் நடக்கும் சண்டைகளை இவரிடம் தான் கொட்டுவார்கள்.

இவரை நல்ல நாட்டாமை என்றே கூறலாம். இவரின் தந்திரமான பேச்சினால்தான் ஓட்டலுக்கு தினசரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ‘என்கிட்டருந்து கத்துக்கோடி’ என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். ஒருநாள் இந்த ஓட்டல் எதிர்லயே நான் ஒரு ஓட்டல் வெக்கிறேன் என்று ஓனரை அடிக்கடி நையாண்டியுடன் பயமுறுத்துவார்.

சாந்தி அக்கா பாஸ்கரன் அண்ணா
பாஸ்கர் அண்ணன், சப்ளையர்.

இவருக்கு எங்கள் வயதில் ஒரு மகன், காலேஜ் மூன்றாம் வருடம் படிக்கும் ஒரு மகள். மகன் ஒரு வேலையும் செய்யமாட்டான் என்று பெருமையாக கூறுவார். ‘நான் அவன ஒண்ணும் கேக்கமாட்டேன். ஏன்னா நான் எப்படி எங்கப்பன மதிக்காம இருந்தனோ அத மாரிதான் அவன் இருக்கான், எனக்கிது தேவதான்’ என்பார்.

இவர் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து , சைக்கிளில் சுற்றியுள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று டீ வியாபாரம் செய்துவிட்டு மதியம் ஓட்டல் வேலைக்கு வருகிறார். கேட்கும்போதே தலை சுற்றியது எனக்கு. இவ்வளவு கடினமான வாழ்க்கையிலும், நிமிடத்து ஒரு ஜோக் சொல்லுவார். இவருடன் இருந்தால் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

சாந்தி அக்கா

அமைதிக்கு பெயர்தான் சாந்தி என்பதற்கு எடுத்துக்காட்டு இவர். அமைதியாக வேலைகளை செய்வார். அவர் மகளும் நான் பயின்ற பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் அவரே வந்து பேசுவார். கோலம் அவ்வளவு அழகாக போடுவார். அவர் கோலம் போடும் அழகை பார்ப்பதற்காகவே அனைவரும் வந்து வாசலில் நின்றுவிடுவார்கள்.

அமிர்தம் ஆயா, கிளீனர்.
அமிர்தம் ஆயா.

டோராவுக்கு வயதானால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். அவர் தேவையில்லாமல் பேசி ஒரு மாதத்தில் நான் பார்க்கவே இல்லை. ஓனரின் செல்ல ஆயா அவர். அவர் பெருக்கினால் அந்த இடத்தில் ஒரு தூசியைக்கூட கண்டுபிடிக்க முடியாது. வேலையில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டுமென்பதை தினமும் வாழ்ந்து காட்டினார் அவர்.

சக்திவேல் அண்ணா

பார்சல் கட்டுபவர். 5 நிமிடம் கூட ஓட்டல் சமையலறையில் நிற்க முடியாது. வேர்வை உடை முழுவதையும் நனைத்துவிடும். அந்த அனலில் வேலை பார்ப்பவர் இவர். இவர் 10, 20 இட்லியையும் அழகாக மடித்து, சட்னி வைத்து பார்சல் போட்டு தருவார். அது ஒரு கலை.

செந்தில் அண்ணா

இவர் செந்தில் அண்ணா, ஊர் ராமேஸ்வரம். இங்கேயே தங்கியிருக்கிறார். மகள்களுக்கு திருமணம் முடித்து விட்டாராம். குடும்ப சூழ்நிலையால் வந்திருப்பதாக கூறுவார். அவர் பேசும் தமிழ் கேட்பதற்கு நன்றாக இருக்கும். 1500 ரூபாய் ஜியோ போனில் காஞ்சிபுரத்தை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து வைத்திருப்பார். ஓட்டலுக்கு மாடு, இலை சாப்பிடவந்தால், அதையும் விட மாட்டார். நல்ல புகைப்படக்காரர்

ராஜி அக்கா

ஓட்டலின் சொர்ணா அக்கா. ராங்காக பேசினால் கஸ்டமர்களாக இருந்தாலும் விளாசுவார். பில்லிங்கும் போடுவார். என்னை மிரட்டி, சாப்பாடு அயிட்டங்களின் விலைகளை என் மண்டையில் ஏற்றியது இவரே. பிரச்னை என்றால் முன்னால் இறங்கி உதவி செய்வார். ஒருநாள் ஒரு க்ளீனர் அக்காவின் தாடையில் கணவர் அடித்து, பேச முடியாமல் இருந்தவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார். அப்போது, ‘ பயப்படாம வாடி, உனக்கு வாய்தான். எனக்கு மண்டையிலேயே கிழிச்சு தையல் போட்டு வெச்சிருக்கு’ என்றார்.

வாட்ச் மேன் தாத்தா

சிரிப்புடன் தினமும் வரவேற்பார். குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டியதில் கீழே விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால், 20 நாளில் திரும்பவும் வேலைக்கு வந்தார்.

ஒருநாள் வேலையில் இருக்கும்போது, பொறியியல் படிக்கும் என் பள்ளி தோழி வந்தாள், ‘நாங்க நாலு வருஷம் கழிச்சி செய்யப்போற வேலய நீ இப்போவே செய்யுற’ என்றாள். என் தோழியின் அப்பா ஒருநாள் வந்தார். என் அருகில் வந்து, ‘ உங்க ஓட்டலாமா?’ என்று இரகசியமாக, உண்மையை சொல்ல நச்சரித்தார். உண்மையை சொன்னவுடன் சப்பென்று சென்றுவிட்டார்.

வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, சில தினசரி வாடிக்கையாளர்களும் நன்றாக பேசுவார்கள்.

ஐஸ்கிரீம் தாத்தா

தினமும் வருவார். காபி மட்டுமே குடிப்பார். குடித்துவிட்டு ஐஸ்கிரீம் பெட்டி பக்கத்தில் உட்கார்ந்து விடுவார். குறைந்தது 50 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டுதான் கிளம்புவார். சாப்பிடுவது மட்டுமல்லாமல் என்னை, அது என்ன ப்ளேவர் என்று கேட்பார். நானும், இது பேரு ப்ளாக் கரன்ட், திராட்சை போட்ருக்கும் உள்ள சாக்லேட் இருக்கும் என்றெல்லாம் சொல்வோன். சரி குடு, சாப்ட்டு பாக்லாம், என்பார். சாப்பிட்டுவிட்டு, சூப்பரா இருக்கு என்று சொல்லிப் போவார்.

சில தாதாக்களும் வருவார்கள். வரும்போதே போனில், ‘ டேய்ய்ய்.. அங்க நா வந்தனா ஒருத்தனும் இருக்கமாட்டீங்க’ என்று கத்திக்கொண்டு வருவார்கள். எங்கே என்று ஒருநாளும் சொன்னதில்லை. கடைசியில் அவர்கள் இங்கு வருவதெல்லாம் விலை கம்மியாக கிடைக்கும் காபிக்காகத்தான்.

இவர்களுக்கு நடுவே, சில தாதாக்களும் வருவார்கள். வரும்போதே போனில், ‘ டேய்ய்ய்.. அங்க நா வந்தனா ஒருத்தனும் இருக்கமாட்டீங்க’ என்று கத்திக் கொண்டு வருவார்கள். எங்கே என்று ஒருநாளும் சொன்னதில்லை. கடைசியில் அவர்கள் இங்கு வருவதெல்லாம் விலை கம்மியாக கிடைக்கும் காபிக்காகத்தான்.

போலீஸ் சிலர் வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஓ.சி.யில் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இதில் அந்த சாம்பிராணி யூஸ் பண்ணாதீங்க ஸ்மெல் நல்லால்ல என்று சஜ்ஜஸ்ஸன் வேறு கொடுப்பார்கள்.

ஒருமாதம் வேலை. காலேஜ் நெருங்கியதும் விடைபெற்றேன். வேலை செய்த சம்பளத்துக்காக இரண்டு நாள் அலையவிட்டார்கள். பிறகு 20 நாளுக்கான ரூ 4,000 சம்பளத்தை மட்டும் கொடுத்தார்கள். மீதி பத்து நாளுக்கான சம்பளம் அடுத்த மாதம்தானாம்.

  • கவிமதி

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க