ல்லாயிரக்கணக்கான கேரள  மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருப்பவர்கள் மீனவர்கள். எந்த மீனவர்களை ஒக்கி புயலிலிருந்து மோடி அரசு காப்பாற்றவில்லையோ, எந்த அரபிக்கடல் மீனவர்களை சரக்குப் பெட்டக முனையத்துக்காக மோடி அரசு விரட்ட விரும்புகிறதோ அந்த மீனவர்கள்தான் யாரும் அழைக்காமல் தாங்களே ஓடோடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

படகுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எர்ணாகுளத்துக்கும் ஆலப்புழை பகுதிக்கும் கேரளத்தின் தென்முனையான திருவனந்தபுரம் பகுதியிலிருந்து வந்திருக்கிறார்கள் இந்த மீனவர்கள். சாலையில் பார்க்கின்ற லாரிகள் அனைத்திலும் படகுகள். கேரளத்தின் தென் பகுதியிலிருந்து எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா மாவட்டங்களை நோக்கி.“காலை முதல் இரவு 11.30 வரை மீட்புப் பணியில் ஈடுபட்டோம். உதவி கேட்டு அழைப்பார்கள். இன்ன தெரு என்று சொல்வார்கள். எந்த தெரு என்றெல்லாம் உள்ளூர்க்காரர்களுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு எங்கும் வெள்ளம். எனவே பலமாக குரல் கொடுத்துக் கொண்டே செல்வோம். வீட்டுக்குள் சோறு தண்ணீர் இல்லாமல் நாள் கணக்கில் சிக்கியிருப்பவர்களுக்கு பதில் குரல் கொடுப்பதற்கு கூட தெம்பு இருக்காதே. ஆகையால் வீடுகளுக்கு உள்ளிருந்து பதில் வரவில்லை என்றாலும், ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் நீந்திச் சென்று பார்ப்போம்.

இப்படித்தான், கையில் ஒரு குழந்தையைப் பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த  ஒரு நிறைமாத கர்ப்பிணி மீட்டோம். மூச்சு விடமுடியாமல் ஆக்சிஜன் சிலிண்டருடன் இருந்த இன்னொரவரையும் இப்படித்தான் மீட்டோம். எர்ணாகுளத்தின் ஆலங்காடு பஞ்சாயத்தில் ஒரு வீடு விடாமல் எல்லா வீடுகளுக்குள்ளும் நுழைந்து பார்த்துவிட்டோம்”

-என்கிறார் வலியவெளி என்ற மீனவ கிராமத்திலிருந்து மீட்புப் பணிக்கு வந்த ஜாக் மண்டேலா என்ற மீனவர்.

“கேரள ஆறுகளுடைய நீரோட்டத்தின் வேகம் மிக அதிகம். எல்லோராலும் அதனை சமாளிக்க முடியாது. ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கிக்  கொண்ட பெண்களை மீட்க முனைந்த பேரிடர் மீட்புப் படையினரால் அவர்களுடைய படகுகளை செலுத்த முடியவில்லை. படகைக் கொடுங்கள். நாங்கள் மீட்டு வருகிறோம் என்றோம். படகை கொடுத்தார்கள். மீட்டு விட்டோம்” என்கிறார் ஜெய்சல் என்ற மீனவர்.

இந்த மீனவர்களெல்லாம் ஒக்கி புயலில் தம் சொந்தங்களைப் பலி கொடுத்தவர்கள். எர்ணாகுளம் மாவட்டத்தில் 18-ம் தேதி சனிக்கிழமையன்று மட்டுமே இவர்கள் 18,000 பேரை மீட்டிருக்கிறார்கள்.

“மீட்புப்பணியின் அவசியம் பற்றி சமூக ஊடகங்கள் வழியாக தெரிவித்தவுடனே ஏராளமான மீனவர்கள் தாமாக முன்வந்து விட்டார்கள்”

என்கிறார் மீன்பிடி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் டி. பீட்டர்.

“எல்லோரும் மீட்புப் பணிக்கு போகவேண்டும் என்று ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று எங்கள் ஊர் பங்குத்தந்தை சொன்னார். உடனே நாங்கள் 150 பேர் 60 படகுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட்டோம்” என்கிறார் திருவனந்தபுரம் அருகில் உள்ள மரியபுரம் என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த லாலு அலெக்ஸ்.

“கடலுக்குப் போக இதுதான் சீசன். இப்போது  கடலுக்குப் போனால் ஒரு டிரிப்புக்கு 5000 ரூபாய் கிடைக்கும். ஆனால் அது பற்றியெல்லாம் நாங்கள் யாரும் கவலைப்படவில்லை” என்கிறார் வர்கீஸ் ஸ்டீபன். “சுவர்களிலும் விளக்கு கம்பங்களிலும் இடித்து படகுகள் சேதமாகிவிட்டன. இதையெல்லாம் பார்த்தால் முடியுமா?” என்கிறார் ஆன்டோ இலியாஸ் என்ற மீனவர்.

செங்கனூரில் மீட்புப்பணியை ஒருங்கிணைத்து வரும் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார், “மீட்புப் பணியில் உள்ள அபாயகரமான வேலைகளையெல்லாம் மீனவர்கள்தான் செய்கிறார்கள். மரங்களும் சுவர்களும் விளக்கு கம்பங்களும் தண்ணீருக்குள் இடிந்து கிடக்கும் சூழ்நிலையில் படகுகளை செலுத்துவது சாதாரண விசயமல்ல. அதுவும் குறுகிய தெருக்கள் சந்துகளுக்குள் படகுகளை செலுத்துவது மிக கடினம்”“மீனவர்கள்தான் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து, சீறிப்பாயும் வெள்ளத்தை எதிர்த்து வீடுகளுக்குள் நீந்திச் செல்கிறார்கள்.  பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பு ஜாக்கெட் இல்லாமல் தண்ணீரில் இறங்குவதில்லை. மீனவர்களுக்கு அவர்களுடைய தைரியமும் அனுபவமும்தான் பாதுகாப்பு ஜாக்கெட். பேரிடர் மீட்புப் படையினர் ஒரு படகில் 3,4 பேரை மீட்கிறார்கள் என்றால், மீனவர்கள் 10, 15 பேரை மீட்டு வருவார்கள்”  என்கிறார் அந்த வருவாய்த்துறை அதிகாரி.

ஜாய் செபாஸ்டின் ஒரு ஐ.டி.துறை ஊழியர். ஆலப்புழை மாவட்டத்தின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்தவர். ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய அவர் மீட்புப் பணியைப் பற்றி விவரிக்கிறார்;

“ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பரவியிருக்கும் கேரளத்தின் குட்டநாடு பகுதி கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது. எனவே வழக்கமாக இங்கு வெள்ளம் வரும். ஆனால் இந்த ஆண்டு வந்த வெள்ளம் அப்படிப்பட்டதல்ல.  7 பஞ்சாயத்துகளிலிருந்து சுமார் 2 இலட்சம் மக்களையும் அவர்களுடைய ஆடுமாடுகளையும் மீட்டிருக்கிறோம் – மூன்றரை நாட்களில்”

“கட்டிடங்களின் மொட்டை மாடியில் நிற்பவர்களை ஹெலிகாப்டரிலிருந்து வானத்தில் தூக்கி மீட்கும் காட்சிகளை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் பார்த்து ரசிக்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மீட்புப் பணியின் உண்மையான நாயகர்கள் மக்கள்தான். அவர்கள் இராணுவச் சீருடை அணிந்தவர்கள் அல்ல. இடுப்பில் கைலியும் தலையில் முண்டாசும் கட்டிய மனிதர்கள். தங்கள் நாட்டுப்படகுகளின் வலிமை கொண்டு கடலின் அலைகளை அன்றாடம் எதிர்த்து நிற்பவர்கள். எனவே குட்டநாட்டிலும் செங்கனூரிலும் சீறிப்பாய்ந்த தண்ணீரின் வேகம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.”

“மீட்புப்பணி இரவு வரை நடக்கும். இரவு கட்டுப்பாட்டு அறைக்கு வருவார்கள். ஒரு நாள் என் தந்தை வயதுடைய ஒரு மீனவர் இரவு பத்து மணிக்கு வந்தார். என் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்”

“மோனே, அந்த கடவில் 15 பேர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து பத்து கி.மீ தூரம்தான் இருக்கும். போய்விட்டு நாங்கள் மறுபடி வந்து உங்களை காப்பாற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். அவர்கள் எங்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இரவு நேரத்தில் போகக்கூடாது என்று இந்த அதிகாரிகள் தடுக்கிறார்கள். நீ கொஞ்சம் அவர்களிடம் சொல். நாங்களெல்லாம் இரவு முழுவதும் கடலில் கிடப்பவர்கள். அந்த அதிகாரியை அனுமதிக்கச் சொல்” என்று கெஞ்சினார் அந்த மீனவர்.

“என்னால் நம்ப முடியவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர்கள்!  இத்தனை பெரிய சாதனைகளைச் செய்து விட்டு, மண்ணெண்ணெய்க்கும் டீசலுக்கும் அதிகாரிகள் முன்னால் கைகட்டி நிற்கிறார்கள். இவர்களல்லவா உண்மையான நாயகர்கள்! ”

“இந்த ஏழை மீனவர்கள்தான் 60% மக்களை மீட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 40% மக்களை கேரள மாநில நீர்வழிப்போக்குவரத்துத் துறையின் படகுகளும் படகு வீடுகளும் மீட்டிருக்கின்றன. தேசிய பேரழிவு மீட்புப் படையால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில் அடங்கிவிடும். கடற்படை ஹெலிகாப்டர்கள் 40 பேரை மீட்டிருக்கும்.”

“நான் உறங்கச் செல்கிறேன். ஒரு மீனவனின் மகன் என்ற பெருமையுடன்”- என்று சொல்லி முடிக்கிறார் ஜாய் செபாஸ்டின்.

பெருமைக்குரியவர்களைப் போற்றுகின்ற அதே நேரத்தில் சிறுமையின் சிகரங்களையும் நாம் மறந்து விடக்கூடாது.

தம்மை இந்த தேசத்தின் மீட்பர்களாக கருதிக் கொண்டிருக்கும் அந்தப் பதர்களையும் இந்தப் பெருவெள்ளம் அடையாளம் காட்டியிருக்கிறதே.

ஆம். விளம்பரமோ, விளம்பரத்திற்கு ஆள் அம்பு சேனை போட்டு பரப்பும் சந்தை சதியோ அறியாத அறியவே முடியாத அறிய விரும்பாத இந்த மீனவ மக்களை, எளிய மனிதர்களை இயக்கியது மனித நேயம். ஆனால் இந்த நாட்டின் பிரதமர் மோடியின் இதயமும், நேயமும் காவிக் கறை சார்ந்தது அல்லவா? தற்போது #RSSinKERALA  எனும் ஹேஷ்டேக் போட்டு சில ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீட்டின் முற்றங்களில் பிளீச்சிங் பவுடர் போடுவது மற்றும் சாப்பாட்டு பொட்டலங்களை வினியோகிக்கும் படங்களையும் வெளியிட்டு, வெள்ளம் பாதித்த கேரளாவில் ஸ்வயம் சேவகர்கள் சேவை புரிவதை டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார் திருவாளர் மோடி.

Narendra Modi @narendramodi177
RSS Swayamsevaks in service of the needy and in rescue works, at Flood hit zones of Kerala.

கேரளா எனும் முஸ்லீம்கள், கிறித்தவர்கள், வளைகுடா நாடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் மக்களின் மாநிலத்திற்கு அவசரப்பட்டு நிதி உதவி அளிக்காதீர்கள் என்று இந்துமதவெறியர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் அல்லவா, அதன் மறு பக்கம் இது! ஆர்.எஸ்.எஸ் 20,000 பேரை கேரளாவில் இறக்கியிருக்கிறது, மிஷினரிகள் என்ன செய்கிறார்கள் என்று டவிட்டர் சந்தையே நாறடித்து வருகிறது பா.ஜ.க ட்ரோல் படை.

கேரளாவில் அரசு ஊழியர்கள், பல்வேறு கட்சியினர், பொது மக்கள் குறிப்பாக மீனவர்கள் செய்யும் உழைப்பினை கொச்சைப்படுத்தும் இவர்கள் இருக்கும் போது இயற்கை தரும் பிரளயம் ஒரு பொருட்டே அல்ல!

  • வினவு செய்திப் பிரிவு

3 மறுமொழிகள்

  1. மகத்தான மனிதநேய போராளிகள் நமது மீனவஉழைக்கும் மக்கள் எத்தனை பாராட்டினாலும் தகும் 🍟🙏
    RSS ஐ காரித்துப்பவேண்டும்💀

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க