டந்த செவ்வாய் (28-08-2018) அன்று புனே போலீசு குழு பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்று தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
இடமிருந்து, சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், வரவர ராவ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரெய்ரா

சமூகச் செயற்பாட்டாளர்கள் வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி மற்றும் வரவர ராவ், க்ராந்தி தெகுலா, நசீம், பேராசிரியர் ஆனந்த் தெல்டும்பே ஆகியோரது வீட்டில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போலீசு, செவ்வாய் அன்று மாலையில், சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கவுதம் நவ்லகா, வரவரராவ் ஆகியோரைக் கைது செய்துள்ளது போலீசு.

இந்த தேடுதல் நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ள தேடுதல் ஆணையின் நகலைப் பெற்ற ஸ்க்ரோல் இணையதளம், தேடுதல் அனுமதிக்கான முகாந்திரமாக, அந்த ஆணையில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், ஊபா மற்றும் மக்களுக்கிடையே பகைமையைத் தூண்டிவிடுதல் ஆகிய பிரிவுகளை போலீசு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
இடமிருந்து, பிரசாந்த் பூசன், மனோஜ் ஜோஷி, ராமச்சந்திர குஹா, அருந்ததி ராய், ஜூலியோ ரிபெய்ரோ, ஆகார் படேல், அஜாய் சாஹ்னி (படம்: நன்றி: Scroll.in)

இந்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அருந்ததி ராய், எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர்:

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்தனது இருப்பின் அவசியத்தை இழந்துவிட்டோமோ என்று அச்சத்திலும் பீதியிலும் இருக்கிற ஒரு அரசாங்கத்தின் அபாயக் குறியீடுதான், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் இந்தக் கைது நடவடிக்கைகள். பசுவின் பெயரில் அடித்துக் கொல்லும் கூட்டத்தை உருவாக்குபவர்களும், மக்களை பட்டப்பகலில் கொலை செய்பவர்களும், மிரட்டுபவர்களும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கையில், அந்த வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமைப் போராளிகள் மற்றும் அறிவுஜீவிகள் பரிகாசிக்கத்தக்க குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதானது, இந்தியா எதை நோக்கிச் செல்கிறது என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. கொலைகாரர்கள் மரியாதை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். நீதிக்காகவோ அல்லது இந்து பெரும்பான்மைவாதிகளுக்கு எதிராகவோ யாராவது குரல் எழுப்பினால் அவர் குற்றவாளியாக்கப்படுகிறார். நடைபெற்றுக் கொண்டிருப்பவை முழுவதும் ஆபத்தானவை. தேர்தல் வரும் நேரத்தில், இது இந்திய அரசியல் சாசனத்துக்கும், நாம் அனுபவித்து வரும் அனைத்து சுதந்திரங்களுக்கும் எதிரான கவிழ்ப்பு முயற்சியே”

பிரசாந்த் பூசன், வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளர்:

“இது முழுக்க பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கை. மாற்றுக் கருத்துக்களை இல்லாமல் செய்வது மற்றும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சி இது. இந்த செயற்பாட்டாளர்கள் அனைவருமே பொதுப் பிரச்சினைகளுக்காக அவர்கள் செலுத்திய பங்களிப்பிற்காக நன்கறியப்பட்டவர்கள். இந்த வழக்கில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. இது இந்த மோடி அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க நடத்தப்படுகிறது. இது உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

ராமச்சந்திர குஹா, எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர்:

இது முற்றிலும் பயங்கொள்ளச் செய்வதாக இருக்கிறது. இது கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் மட்டும் இவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
ராமச்சந்திர குஹா
படம் : தாஷி தொப்க்யால்

அவர்களுக்காக சட்டரீதியான உதவி செய்ய வருபவர்களையும் அச்சுறுத்தி ஒடுக்குவதற்காகவும் செய்யப்படும் நடவடிக்கையாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு சுதந்திரக் குரல்களின் மீதான இந்த துன்புறுத்தல்களையும் தலையீடுகளையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். வன்முறை மற்றும் சட்டவிரோதத்திற்கு அமித்ஷா எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு அதிலிருந்து வெகுதொலைவில் இருப்பவர் சுதா பரத்வாஜ். ஒரு வேளை மகாத்மா இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் தனது வழக்கறிஞர் உடுப்பை மாட்டிக் கொண்டு சுதா பரத்வாஜுக்காக நீதிமன்றத்தில் வழக்காடியிருப்பார் என்பதில் காந்தியின் சரிதையை எழுதியவனாக எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இதுவும் கூட மோடி அரசு காந்தியின் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்யாமல் இருந்திருக்கும் என்ற உத்தேசத்தில்தான்.

அஜாய் சாஹினி, மோதல் மேலாண்மை நிறுவனத்தின் செயல் இயக்குனர்:

பீமா கொரெகான் வன்முறை குறித்த விசாரணையில் போலீசின் தரப்பில் போடப்பட்ட வழக்குகளும், குறிப்பாக கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களுடனான தகவல் தொடர்பு ’கடிதமும்’ இட்டுக்கட்டப்பட்டவையாகவே தோன்றுகின்றன.  மத்திய ஆட்சியாளர்களிடம், இடது சாரி செயற்பாட்டாளர்களை மாவோயிஸ்டு ஆதரவாளர்களாகக் காட்டி அவர்களை அச்சுறுத்துவது அவசியம் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது முன்னணிக்கு வரும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள் என்னும் கருத்தாக்கத்தின் தயாரிப்பும் இத்தகைய பரப்புரையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இந்த வழக்குகள் எவையுமே நீதித்துறை விசாரணையில் நிற்காது. ஆனால் இந்த வழக்குகளின் நோக்கமே நீதித்துறை நடைமுறைகள்தான். இது ’விசாரணைக் காலகட்டத்தின்’ மூலம் தண்டிக்கும் ஒரு வழிமுறை. இறுதி முடிவைக் கணக்கில் கொள்ளாமல், நெடிய நீதிமன்ற நடைமுறையின் வேதனை இந்த செயற்பாட்டாளர்களைச் சிறிதுகாலம் அமைதி கொள்ளச் செய்யும். பிற செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லப்படவேண்டிய ‘செய்தி’ (மிரட்டல்) போய்ச் சேரும். போலீசு தொடுத்துள்ள இந்த வழக்குகள் தோல்வியடையும்போது, வழக்கம் போல, யாரும் இதற்கு பொறுப்பானவர்களாக்கப்பட மாட்டார்கள்.

இது சட்டீஸ்கரில்  மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளின் ஒரு நீட்சியே. இதன் தொடர்ச்சி கண்டிப்பாக எதிர்பலனளிக்கக் கூடியவையே. கருத்துரீதியான நடுநிலைக் களத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சார்பூட்டப்பட்ட சமூகம் என்றும் அமைதிக்கான வழியைக் கண்டதில்லை. எங்கு கிரிமினல் கூட்டுகளுக்கான அல்லது கிரிமினல் நடவடிக்கைகளுக்கான தெளிவான ஆதாரம் கிடைக்கிறதோ அங்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல, இந்த வழக்கு அத்தகைய நோக்கத்திற்காக போடப்பட்ட வழக்கு அல்ல.

மனோஜ் ஜோஷி, கண்காணிப்பாளர் ஆராய்ச்சி நிறுவனம்:

கொள்கை மற்றும் நடைமுறைப்படி யாரையேனும் கைது செய்வதற்கு  முன்னால், போலீசு முதலில் விசாரித்து, வழக்கை கட்டமைக்க வேண்டும். இங்கு வழக்கம் போல கைதுகள் விசாரணைக்கு முன்பாகவே நடக்கின்றன. சட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதென்றால், அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணைக்கு உதவச் சொல்லியிருக்கவேண்டும், ஆனால் இந்திய போலீசின் ’மரபை’ப் பின்பற்றி முதலில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்துவிட்டு, வழக்கைக் கட்டமைக்க ஏதேனும் தரவு கிடைக்குமா என தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

இங்கு கண்டிப்பாக அரசியல் விவகாரம் இருக்கிறது. பீமா கொரேகானில் தலித்துகள் மீது வலதுசாரிகள் நடத்திய தாக்குதல்கள் வன்முறைகள் தான் இதற்குக் காரணம். மராட்டிய அரசு குற்றவாளிகளைக் காப்பது போல தெரிகிறது. மாவோயிஸ்டுகள் மனித உரிமைப் பிரச்சினைகளை தங்களது நடவடிக்கைகளுக்கான கவசமாக அடிக்கடி உபயோகிப்பார்கள் என்பது குறித்து அறிந்திருக்கிறேன். எனக்கு அவர்கள் மீது பெரிய அளவிலான கரிசனம் ஏதும் கிடையாது. ஆனால் இந்த மண்ணின் சட்டத்தின் முதன்மை அனைவருக்கும் ஒன்றுதான். விசாரணை செய், குற்றம் சாட்டு, அதன் பின்னர் கைது செய்.”

ஆகார் படேல், அம்னெஸ்டி இண்டர்நேசனலின் இந்திய செயல் இயக்குனர்:

இன்றைய கைதுகளும், தேடுதல்களும், இந்த செயற்பாட்டாளர்கள், அவர்களது போராட்டங்களுக்காக குறிவைக்கப்படுகின்றனரா என்பது குறித்த குறுகுறுக்கும் கேள்வியை எழுப்புகிறது. இது தொடர்ச்சியாக நீடிக்க முடியாது. அரசாங்கம் பயமுறுத்தும் சூழலை உண்டாக்காமல், கருத்துச் சுதந்திரம், அமைதியாகக் கூடுவது, சங்கமாகத் திரள்வது ஆகியவற்றிற்கான மக்களின் உரிமையைக் காக்க வேண்டும்.

நன்றி: Scroll.in
தமிழாக்கம் : வினவு செய்திப் பிரிவு