டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா ?

நூற்றுக் கணக்கான சீனியர் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு குறிவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு செயற்கையாக, நியாயமின்றி குறைந்த ரேட்டிங் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புராஜக்ட் மறுக்கப்பட்டு, எச்.ஆர்-ஆல் ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அதை எதற்கு எங்களிடம் கூறுகிறீர்கள்? நாங்கள் டெக் மகிந்த்ராவில் வேலை செய்யவில்லையே? நாங்கள் என்ன செய்ய முடியும்?

2015-ல் டி.சி.எஸ், 2017-ல் விப்ரோ, காக்னிசன்ட், ஐ.பி.எம், டெக் மகிந்த்ரா, 2018-ல் வெரிசான், மீண்டும் டெக் மகிந்த்ரா. இப்படி எல்லா ஐ.டி கம்பனிகளிலும் வேலை பறிப்பு என்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது.

இது வேலை இழப்பு அல்ல, வேலை பறிப்பு. விழித்துக் கொண்டு நாம் எல்லோரும் கைகோர்க்கா விட்டால் இது ஒரு வாடிக்கையாகி விடும்.

எனக்கு எல்லாம் வேலை போகாது, நான் கம்பெனிக்கு விசுவாசமாகத்தான் வேலை செய்கிறேன்.

அப்படித்தான் மேலே சொன்ன டெக் மகிந்த்ரா, விப்ரோ, காக்னிசன்ட், டி.சி.எஸ் ஊழியர்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

நம்முன் உள்ள மிகப் பெரிய சவால், இருக்கிற வேலையைத் தக்கவைத்துக் கொள்வது. இதற்காக நாம் முழு மூச்சுடன் ‘விசுவாசத்துடன்’ வேலை செய்து கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் 8 மணி நேரத்திற்கு மேல், நமது சுக துக்கங்களை இழந்து, குடும்பத்தை தவிர்த்து, நமது அனுபவம் மற்றும் துறை சார்ந்த வேலை என்றில்லாமல் கொடுக்கப்படும் அனைத்து வேலைகளையும் நம் திறமைக்கு சிறப்பாக, வேகமாக செய்ய முற்படுகிறோம். சிலர் ஜால்ரா அடிப்பது, போட்டு கொடுப்பது, எட்டப்பன் பாலிடிக்ஸ் பண்ணுகிறார்கள் என்று பார்க்கிறோம். அதைப் பற்றி பேசுகிறோம்.

ஒருவகையில் நாம் அனைவருமே வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அனைத்து வேலைகளையும், தெரிந்தும், தெரியாமலும், செய்து கொண்டுதான் இருக்கிறோம். நம்முடைய சொந்த நேரம் அல்லது பணம் அல்லது இரண்டுமே செலவழித்து, நிறுவனத்தின் நலனுக்காக அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டும் வருகிறோம்.

இத்தனையும் சிறப்பாக செய்தாலும் நிறுவனம் தனது செலவு குறைப்புக்காக ஆட்களை துரத்த முடிவு செய்யும் போது இது எல்லாம் கணக்கில் வருவதில்லை என்பது நிதர்சனம்.

ம்ம். நீங்கள் சொல்வது சரிதான்? ஆனால் என்ன செய்வது. போகச் சொன்னால் கேள்வியே கேட்க முடியாது. வேறு வேலை தேடி போக வேண்டியதுதானே ஒரே வழி? எல்லோரும் அதைத் தானே இவ்வளவு காலம் செய்து கொண்டிருக்கிறோம்.

இதை எத்தனை காலத்துக்கு நாம் சகித்துக் கொள்ளப் போகிறோம்.

இது ஏதோ ஒரு நிறுவனம், அதன் ஊழியர்களை வேலையிலிருந்து துரத்துவது அல்ல, எல்லா கார்ப்பரேட்டுகளும் இணைந்து ஒட்டு மொத்த ஐ.டி ஊழியர்களின் வேலையைப் பறிப்பது என்பதாக உள்ளது. எந்த நிறுவனத்திற்கு போனாலும் இதுதானே நிலைமை.

அப்படியானால், இப்படி நாம் துரத்த துரத்த ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? இப்படியே நாம் பணிந்து போனால், எதிர்காலத்தில் நமது குழந்தைகளின் நிலைமை எப்படி இருக்கும்?

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும். இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

ராஜினாமா செய்ய மறுக்க வேண்டும். என்ன மிரட்டினாலும் ராஜினாமா செய்யக் கூடாது.

அப்படியென்றால், இவ்வளவு பெரிய கார்ப்பரேட்டுகளை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? வாய்ப்பே இல்லை?

ஆம்.

இதில் பாதி உண்மை உள்ளது. கார்ப்பரேட்டுகள் மிகப் பலம் பொருந்தியவைதான். பணம் பார்லிமென்ட் வரை பாயத்தான் செய்கிறது. ஆனால் நம்முடைய பலம் அதைவிட பலமடங்கு அதிகமானது. நம் பலம் குறித்து நாம் குறைவான மதிப்பீட்டையே வைத்துள்ளோம். நம்முடைய பலமே நமது எண்ணிக்கைதான். அதை பயன்படுத்த நாம் சங்கமாக ஒன்று சேர வேண்டும்.

சங்கமா? சங்கம் என்பது தொழிலாளர்களுக்குத்தான். ஐ.டி ஊழியர்களுக்கு கிடையாது.

இந்தக் கேள்வியே ஒரு பரிதாபமான நிலையைத்தான் காட்டுகிறது. நாம் தொழிலாளர்கள் இல்லை என யார் கூறியது? எதற்கெடுத்தாலும் இணையத்தை தோண்டி நமக்கு தேவையான விசயத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நாம், என்றாவது நமக்கான உரிமை, தொழிலாளர் என்பதற்கான வரையறை, தொழில் தகராறு சட்டம் என்றால் என்ன? அது நமக்கான என்ன உரிமைகளைக் கொடுத்துள்ளது? நாம் அதன் கீழ் வருவோமா என்று பார்த்துள்ளோமா?

தேர்தலில் ஓட்டு போடுவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை, அடிப்படை உரிமை என எகிறும் நாம், என்றாவது நமது வாழ்க்கையை நடத்த தேவைப்படும் பணியிட ஜனநாயக உரிமை என்ன என்று யோசித்ததுண்டா?

உண்மை என்னவெனில், தொழிற்சங்கம் என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. நாம் அனைவரும் கணினியை பயன்படுத்தி உழைக்கும் தொழிலாளர்கள்தான். தொழில்தகராறு சட்டம் உட்பட தொழிலாளர் சட்டம் அனைத்தும் நமக்கும் பொருந்தும் என்பதே உண்மை. இனிமேல் இதை நோக்கியும் நமது தேடுதலைச் செலுத்துவோம்.

எங்கள் நிறுவனத்தில் சங்கம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சங்கம் என்று கூறினால் ப்ளாக் மார்க் வரும். சங்கம் மூலம் கேள்வி கேட்டால் ரிலீவிங் லெட்டர் கொடுக்க மாட்டார்கள், டெர்மினேட் செய்து விடுவார்கள். வேறு எங்கும் வேலை கிடைக்காது.

இந்தக் கருத்து உங்களுடையதா… .இல்லை இல்லை. கார்ப்பரேட்டின் குரல் இது. கார்ப்பரேட்டிடம் வேலை செய்து செய்து, அவன் சொன்னா சரியாகத்தான் இருக்கும், தவறாக இருந்தாலும் பிழைப்பை ஓட்டணுமே என்று அடங்கி அடங்கி வேலை செய்ததன் விளைவு இது. கார்ப்பரேட்டின் கருத்தை நமது கருத்தாகவே ஆக்கிவிட்டோம்.

சங்கம் வைக்கும் உரிமை அரசியல் சட்டமும், இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ம் வழங்குவது. இதை மறுக்க எந்த ஒரு தனிநபருக்கும், நிறுவனத்துக்கும் அதிகாரம் கிடையாது என்பதுதான் உண்மை.

NDLF, FITE போன்ற ஐ.டி தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் வெளிப்படையாக சங்கத்தில் செயல்படுகிறார்கள், தமது நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.

நீங்க சொல்வது சரிதான். ஆனா, நிறுவனத்தை எதிர்த்து வேலையை காப்பற்றுவது, அதை தக்க வைத்துக்கொள்ளுவது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இப்பெல்லாம், நிறுவனத்திடமிருந்து ஃபைனல் செட்டில்மென்ட் ஐ முழுமையாக, முறையாக வாங்குவதே குதிரைக் கொம்பாக உள்ளது?

ஆம். சரிதான். ஆனால் நமக்குத் தெரிந்த விசயங்கள் கடுகளவு, தெரியாத விசயங்கள் கடலளவு. தொழிற்சங்கங்கள் சாதித்த விசயங்கள் கடலளவு உள்ளன. தொழிற்சங்கங்களைக் கண்டு கம்பெனி பயப்படுவது ஏன்? அதுபற்றி தெரிந்து கொள்வோம்.

நமது இந்த விவாதம் வெறுமனே நமது வேலை தொடர்பான விவாதம் மட்டும் அல்ல. இதுவரை லட்சக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் பெற்ற தொழிற்சங்க உரிமைகள் மீதான கேள்விகள், சந்தேகங்கள். கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதியான, தானே ஒரு பெரிய கார்ப்பரேட்டான அரசிடமிருந்து (காலனிய காலத்திலேயே) தொழிலாளர்கள் இரத்தம் சிந்திப் போராடி பெற்ற உரிமைகள் மீதான விவாதம்.

இன்றுவரை பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து, தனியார் நிறுவனங்கள் வரை தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க சங்கம் ஒரு கலங்கரை விளக்காக திகழ்கிறது. அதனால்தான் போக்குவரத்து, வங்கி, காப்பீடு, அரசு ஊழியர்கள், ஆலைகள் என்று அனைத்து துறைகளிலும் சங்கம் இன்னும் உயிர்த்துடிப்போடு செயல்படுகிறது.

ஆனால் நாமோ நம் கண்முன்னே, நமது முன்னோர் போராடிப்பெற்ற உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறோம். அதுவே கார்ப்பரேட்டுகளின் மூச்சுக்காற்றாக பரிணமிக்கிறது.

நமக்காக மட்டுமல்ல, நம்முடைய அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லவும் அவசியம் தேவைப்படுவது ஒற்றுமை; தொழிலாளர்களாக நாம் ஒன்றுபடுவது. அதுதான் நமது குழந்தைகளின் வாழ்க்கையை, எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திரா. இவர்களின் தொடர்ச்சியான இந்த வேலைப்பறிப்புக்கு மூலகாரணமே நமது ஒற்றுமையின்மைதான்.

சரி. சரி எல்லாம் புரிகிறது. என்னதான் செய்வது?

இந்தியா முழுவதும் கம்ப்யூட்டரின் முன் நமது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும், கார்ப்பரேட்டுகளின் அசுர வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஐ.டி துறை தொழிலாளர்களும் நமது ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சங்கமாக‌ ஒன்றிணைவோம்.

ஆரம்பத்தில் அந்நியமாக இருந்த “தொழிலாளர்”, “சங்கம்” என்ற‌ வார்த்தைகள் இப்போது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது!

இதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக, நமது ஒற்றுமையை உலகுக்கு முன்னறிவிக்கும் வகையில் எல்லோரும் கைகோர்ப்போம்,

ஆட்குறைப்புகளுக்கு நமது எதிர்ப்பை தெரிவிப்போம், சங்கமாக இணைவதை பேரலையாக மாற்றுவோம்.

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.

  • ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்!
  • சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்!
  • நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி செய்வோம்!
  • பிரசுரம் பி.டி.எஃப். கோப்பு: டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது?
– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு.
தொடர்புக்கு – தொலைபேசி 9003009641, மின்னஞ்சல் combatlayoff@gmail.com

நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க