ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !

ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடி வரும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் வரலாறு.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி பிரிவு சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு  செய்யப்பட்டனர். சங்கத்தின் முக்கிய நிகழ்வான நிர்வாகிகளுக்கான தேர்தல் 25-08-2018 அன்று நடைபெற்றது. தேர்தலில் நிற்கும் உறுப்பினர்களிடம் வேட்பு மனுக்கள்  பெறப்பட்டு ஜனநாயக முறையில் உறுப்பினர்களின் முன்னிலையில் தேர்தல் நடந்தது. சங்கத்தின் செயலாளர் சுகேந்திரன் தனது உரையில் சங்கத்தின் வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.

ங்க தேர்தலை பற்றி பேசுவதற்கு முன்னால் கடந்த கால சங்க அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கோப்புப் படம் (அக்டோபர் 2017-ல் நடந்த சங்கக் கூட்டத்தில்)

சங்கம் அமைப்பதற்கு முன்னால் ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது என்ற கருத்துதான் பிரதானமாக இருந்தது அதனால் ஐ.டி. கம்பெனியில் நடக்கும் கட்டாய வேலை நீக்கத்தை எதிர்த்தும், ஐ.டி தொழிலாளர்களின் வேலைச்சுமை மற்றும் பல்வேறு பிரச்சனைக்கு குரல் கொடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வந்தனர்.

பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவு 2015-ல் தொடங்கி தோழர் கற்பகவிநாயகம் தலைமையில் செயல்பட்டுவந்தது. ஐ.டி கம்பெனியில் தொழிலாளர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டது. மேலே சொன்ன சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பு.ஜ.தொ.மு தொடர்ச்சியான சட்டப்போராட்டம் நடத்தி “ஐ.டி-யில் வேலைபார்ப்பவர்கள் தாங்கள் செய்த வேலைக்கு ஊதியம் பெறும் தொழிலாளர்களாகவே உள்ளனர். மேலும் அவர்கள் நிர்வாகத்தின் லாபத்திலும் அவற்றின் முக்கிய பொறுப்புகளில் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. ஆதலால் ஐ.டி தொழிலாளர்ளுக்கும் 1947- தொழிலாளர் நலச்சட்டம் அனைத்தும் பொருந்தும்” என்ற உரிமையை நிலைநாட்டியது.

இந்திய ஐ.டி துறையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. ஐ.டி ஊழியர்கள் சங்கம் வைத்து அதன்மூலம் அவர்களின் பிரச்சனைகளுக்கு தொழிலாளர் துறை மூலமும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஈட்டிக்கொள்ளலாம் என்ற நிலைமை உருவானது.

ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என்று ஐ.டி தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைக்கு எதிராக குரல் எழுப்பியும், ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு லாபத்திற்காக தொழிலாளர்களை வெளியேற்றுகிறார்கள், அதைப்பற்றி கேள்விகேட்காத அரசு எவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறது என்று தொழிலாளர்களிடம் அம்பலப்படுத்தி வருகிறோம்.

கடந்த வருடம் ஜூன் மாதம் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருட காலமாக ஐ.டி ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் CTS-ல் 10 மணி நேரம் கட்டாய வேலை நேரத்தை கண்டித்தும், Tech mahendra-வில் கட்டாய பணி நீக்கத்தை எதிர்த்தும், TCS-ல் அப்ரைசல் முறைக்கேடு மற்றும் PF பிரச்சனைக்கு தலையிட்டும் ஊழியர்களின் நலன் நிலைநாட்டப்பட்டது. Verizon கம்பெனியில் நடந்த கட்டாய பணி நீக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டது.

Wipro-வில் நடந்த கட்டாய பணி நீக்க நடவடிக்கையை பாதிக்கப்பட்ட ஊழியர்களை ஒருங்கிணைத்து வழக்கு தொடுக்கப்பட்டது. பு.ஜ.தொ.முவின் மாநில பொருளாளரும் ஐ.டி சங்கத்தின் கௌரவத் தலைவரும் ஆன தோழர் விஜயகுமாரின் வழி காட்டலோடு  வழக்கை சங்கம் உறுதியுடன் நடத்திச் சென்றது. அதன் பலனாக இந்தியாவிலே முதல் முறையாக  ஒரு ஐ.டி நிறுவனத்துக்கு எதிராக தொழில் தகராறு சட்டம் 1947, பிரிவு 2K ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தாவாவில் சமரச முறிவு அறிக்கை  பெறப்பட்டுள்ளது.

இது போன்று, கட்டாய ராஜினாமா செய்யவைக்கப்பட்ட ஊழியர்கள் சார்பில் பிரிவு 2A-ன் கீழ் வழக்கு நடத்தி நிவாரணம் பெறுவது,  சமரச முறிவு அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதவுவது உட்பட இன்னும் பலவற்றை சாதித்துள்ளோம்.

மேலும் ஐ.டி ஊழியர்கள் சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்ற கருத்தை உடைக்கும் முயற்சியாகவும் சமூகத்தில் நடக்கும் எந்தவொரு பிரச்சனைக்கும் ஐ.டி தொழிலாளர்களுக்கும் தொடர்புள்ளது என்பதை நிலைநாட்டும் விதமாக பல்வேறு சமுகப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் மருத்துவராக முடியாமலும் மருத்துவத்துறை பணம் உள்ளவருக்கானதாக சூல்நிலையை உருவாக்கிய நீட் தேர்வை கண்டித்தும், விவசாயிகள் தற்கொலை, காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் மற்றும் பல தொழிற்சாலைகள் நமது நாட்டு சட்டங்களையும் இயற்கையின் மாண்புகளையும் மதிக்காமல் லாபத்திற்காக சுற்றுப்புற சூழலையும் நாசப்படுத்துவதை எதிர்த்தும் என்று பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டு உழைக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இத்தனை நிகழ்வுகளையும் அதற்கான வேலைகளையும் எந்தவொரு தனிப்பட்ட நபராலும் செய்து முடிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியிருக்கும் பட்சத்தில் சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்களின் கடுமையான உழைப்பால் நடந்தது மட்டுமில்லை அவர்களின் கூட்டுச் செயல்பட்டால் நடைமுறையானது என்பதே உண்மை. பல நேரங்களில் நிதிப் பற்றாக்குறை, நடைமுறை வேலை செய்வதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் வராத போதும் திட்டங்களை செயல்படுத்தியது, கூட்டிணைவோடு சங்கம் வளர்வதற்க்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பயனுள்ளதாக நடத்தி முடித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அதே பணியை இன்னும் முன்முயற்சியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதே சங்கத்தின் விருப்பமாக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்சொன்னவை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்த பின்னர் கடந்த வருடத்தில் செயல்படுத்தப்பட்டது. புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாகவும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தேர்தலில் பங்கெடுத்த அனைவருக்கும் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தலில் பங்கெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு

பொறுப்பு பெயர்
தலைவர் சியாம் சுந்தர்
துணைத்தலைவர் காசிராஜன், வாசுகி சீனிவாசன்
செயலாளர் சுகேந்திரன்
இணைச் செய்லாளர் ஓம்பிரகாஷ், தமிழ் செல்வன்
பொருளாளர் ராஜதுரை
செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், ஸ்ரீநிவாசன், பூங்கொடி, பூபதி, ரவிசங்கர், ஹரிஹரன் , கமால், சையது

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். இதுவரை நடந்த தவறுகளை பாடமாக எடுத்துக் கொண்டும் சரியானவற்றை உழைப்புக்கு கிடைத்த பலனாக கருதிக்கொண்டும் மேலும் பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே சங்கத்தின் விருப்பமாக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • சுகேந்திரன், செயலாளர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு.

நன்றி: new-democrats

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க