அன்பார்ந்த ஐ.டி. ஊழியர்களே,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் Work From Home என்ற பெயரில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறோம். எந்த தொழிற்துறையில் வேலை செய்பவருக்கும் கிடைக்காத – ஏன் நமது ஐ.டி. துறையிலேயே மிகவும் சீனியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த – வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் இந்த வசதி, நம் அனைவருக்கும் கிடைத்த போது, “ஆகா..! இனி குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கலாம்” என நினைத்து அகமகிழ்ந்தோம்.
ஆனால் நாம் நினைத்தது போன்று நம்மால் குடும்பத்தினருடன் சிலமணி நேரமாவது கழிக்க முடிந்ததா? இல்லவே இல்லை, பெற்றோர் வீட்டிலிருந்தும் தன்னோடு விளையாட, பாடம் சொல்லிக் கொடுக்க வரவில்லை என்று நம் வீட்டு குழந்தைகளின் ஏக்கம் தீரவில்லை, மாறாக அதிகரித்து விட்டது. ஒரே வீட்டில் அக்கம்பக்கமாக உட்கார்ந்து இருந்தபோதிலும் வெவ்வேறு கிரகத்தில் இருப்பது போல் தனித்திருக்கும் பிள்ளைகளை எண்ணி வருந்தும் பெற்றோர்கள் குரலைத்தான் கேட்க முடிந்தது. என்னில் பாதி என ஸ்டேட்டஸ் வைத்த வாழ்க்கைத் துணையுடன் செலவிட்ட நேரம் பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதைப்பற்றியெல்லாம் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
என்ன நடந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகளில்? நமது நிறுவனத்தின் செலவுகள் குறைந்தன; லாபம் அதிகரித்தது, நம்மில் மிகச் சிலருக்குச் சம்பளம் அதிகரித்தது. ஆனால் இதற்காக நாம் கொடுத்த விலையோ அதிகம். அலுவலகம் சென்று வேலை செய்த போது சராசரியாக 10 மணிநேரம் என்றிருந்த நமது வேலை நேரம் இன்று வரைமுறை இன்றி 18 முதல் 20 மணிநேரம் என்று அதிகரித்துள்ளது. அலுவலகத்தில் இருந்தபோதாவது தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை என நடுவில் பிரேக் எடுத்துக்கொள்வோம். ஆனால் இன்றோ, நமது தனிப்பட்ட வேலைக்கும், அலுவலக வேலைக்குமான எல்லைக்கோடு மிகவும் மெல்லியதாக மாறிவிட்டது. டீ,காபி குடிப்பது முதல் உணவருந்துவது வரை அனைத்தும் முன்புதான் செய்தாக வேண்டும். நமது இவ்வாறு தினப்பொழுதின் மொத்தத்தையும் முதலாளிக்காக தானம் கொடுத்துவருகிறோம்.
படிக்க :
ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?
ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !
இவ்வாறு எல்லாவற்றையும் கொடுத்து, முதுகு வலி, மன அழுத்தம், உடல் பருமன், பார்வைக் கோளாரு என நோய்களை ‘பரிசாக’ வாங்கிக் கொண்டிருக்கிறோம். வீட்டிலிருந்து வேலை செய்வதால் இந்திய ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் நடத்திய ஆய்விலிருந்து கூறுகிறது. இதனால் இதய நோயும் நம்மை தாக்க துவங்கியுள்ளது. இதுபோன்ற தாக்குதலால் நிலைகுலைந்த இந்திய ஐ.டி. ஊழியர்கள் குறித்த கட்டுரைகள் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. இதிலிருந்து மீண்டுவிட தியானம், யோகா, உடற்பயிற்சி என பல பரிந்துரைகள் நமக்கு தினமும் வழங்கப்படுகின்றன. இவை தான் நமக்கு தீர்வா?
நோய்க்கான காரணத்தை நாம் புரிந்துகொண்டால்தான் நோயிலிருந்து நம்மால் வெளிவர முடியும். நாம் ஐ.டி. நிறுவனங்களின் லாபவெறி என்ற சுருக்கு மடிவலையில் சிக்கிக் கொண்டிருப்பதுதான் நமது இன்றைய நிலைக்கான காரணம். கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ருபாய் சந்தை மதிப்புள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள், தமது லாபத்திற்காக அரசையே வளைக்கும் வல்லமை கொண்டவை.
கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த தொழிற்துறையும் முடங்கிக் கிடக்கும் போது ஐ.டி. துறை மட்டும் பெரும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. முன்பு இருந்ததைவிட உற்பத்தித்திறன் (productivity), தற்போது அதிகரித்துள்ளது. வேலைகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படுகின்றன. எனவே தங்களுக்குச் சாதகமாக உள்ள இந்த முறையை நிரந்தரமாக வைத்துக்கொள்ள ஐ.டி. நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
2025-ம் ஆண்டுக்குள் 75% டி.சி.எஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டி.சி.எஸ் மட்டுமல்ல விப்ரோ, இன்போசிஸ், சி.டி.எஸ் என அனைத்து நிறுவனங்களும் இந்த முறையை நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கென்று அலுவலக கட்டமைப்பு முழுவதையும் இந்த நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. பல நிறுவனங்கள் நகரின் மத்தியில் அதிக வாடகையில் இயங்கி வந்த தங்களது அலுவலகங்கள் பலவற்றை மூடிவிட்டன.
வீட்டிலிருந்து வேலை செய்வது மட்டுமல்ல ஸ்விக்கி, ஜொமோட்டோ போல பகுதி நேர புரோகிராமர்களைக் (freelance programmers) கொண்டுவரவும் இவர்கள் திட்டமிடுகின்றனர். ஐ.டி. துறையில் கிக் பொருளாதாரத்தைப் புகுத்துவது குறித்து விப்ரோ தனது இணையதளத்திலேயே பேசுகிறது. வேலையிழப்பு என்ற கத்தி நம்தலைமீது எப்போது வேண்டுமானாலும் இறங்க காத்திருக்கிறது.
நமக்கான பாதுகாப்பை இந்த அரசாவது உத்தரவாதப்படுத்துமா என்றால் அதுவும் இல்லை. மோடி தலைமையிலான கார்ப்பரேட் விசுவாச அரசு, தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்து, நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சட்டபூர்வ உரிமைகளையும் மொத்தமாகப் மொத்தமாக பறித்துவிட்டு நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக மாற்றுவதில் குறியாக இருக்கிறது. இந்த தாக்குதலானது எந்த தொழிலாளியையும் விட்டு வைக்கபோவதில்லை, ஐ. டி. ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..
இந்த காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கூட்டணி நம்மை மட்டுமல்ல நமது நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் அடிமைச் சங்கிலி கொண்டு பிணைக்கிறது. விவசாயச் சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என விவசாயிகள், மாணவர்கள், சிறு,குறு முதலாளிகள் என அனைவரையும் சித்திரவதை செய்கிறது. கொரோனா பெருந்தொற்று கார்ப்பரேட்களது வேலையைச் சுலபமாக்கியுள்ளது. இந்தப் பெருந்தொற்றானது எதிர்காலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பிரகாசமானதாகவும், சாமானிய மக்களுக்கு இருண்டதாகவும் மாற்றியுள்ளது. இந்தக் காவி-கார்ப்பரேட் கூட்டணியைத் தொடரவிட்டால் நமக்கான எதிர்காலமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
அது எல்லாம் சரிதான், வீட்டுக் கடன், வாகனக் கடன், பள்ளிக் கட்டணம் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பிறகு இவற்றையெல்லாம் எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும், என நினைக்கக்கூடும்.
ஐ.டி. ஊழியர்களாக நாம் நாடுமுழுவதும் ஏறத்தாழ 50 லட்சம்பேராக உள்ளோம். ஆனால், நம்மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை எதிர்க்க வேண்டும் என்கிற உணர்வோ, நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோ இல்லை.
தொழிலாளர்களது ஒற்றுமை மாபெரும் சர்வாதிகார அரசுகளையே தூக்கியெறிந்துள்ளது என்பதுதான் வரலாறு.. ஐ.டி. ஊழியர்களான நாம், இந்தியத் தொழிற்துறையின் முன்னோடித் தொழிலாளர்கள். கொரோனா பெருந்தொற்றிலும் மருத்துவம், வங்கித் துறை, அரசு நிர்வாகம் என அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது என்றால் அதற்குப் பின்னால் ஐ.டி. ஊழியர்களான நமது உழைப்பு உள்ளது. தொழில்நுட்பத்தின் கதவுகளை நம் நாட்டு மக்களுக்காகத் திறந்து விடுபவர்கள் நாம். நமது ஒற்றுமையும் அநீதிக்கு எதிரான போராட்டமும் நமக்கான விடிவாக மட்டுமல்ல இந்த சமூகத்தின் விடிவாகவும் மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனவே, கார்ப்பரேட்-களின் லாபவெறிக்காக நம்மீது திணிக்கப்படும் பண்டைய எகிப்திய சிறைக்கூடத்தை நினைவுபடுத்தும் வேலை முறையையும், நமது சொந்த நலன்களோடு, நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது நலன்களையும் இணைத்து ஒரு முன்னணி சக்தியாக மாறுவோம். அதன் முதல்கட்டமாக புரட்சிக்கர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் அணி திரள்வோம்.

இங்ஙனம்.
புஜதொமு (ஐ. டி. ஊழியர்கள் பிரிவு)
தொடர்புக்கு : 9003009641.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க