ந்த நாட்டுக்கு புதிதாய் ஒரு மோடி கிடைத்துள்ளார். கடந்த வாரம் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஜே.என்.யு. மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்ற அதே நேரம், தில்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான ஏ.பி.வி.பி. வெற்றி பெற்றது.

மோடியை விஞ்சிய கேடி, அங்கித் பைசோயா .

ஏ.பி.வி.பி. சார்பில் போட்டியிட்ட அங்கித் பைசோயா தலைவர் பதவியையும், சக்தி சிங் துணைத் தலைவர் பதவியையும், ஜோதி சவுத்ரி இணைச்செயலாளர் பதவியையும் கைப்பற்றினர். காங்கிரசுடைய மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ. சார்பில் போட்டியிட்ட ஆகாஷ் சௌத்ரி செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் மத்திய கமிட்டியின் நான்கு முக்கிய பதவிகளில் மூன்றை ஆர்.எஸ்.எஸ். சார்பான ஏ.பி.வி.பி. கைப்பற்றியவுடன் ஊடகங்களிலும், வலதுசாரிகள் மத்தியிலும் பெரும் கொண்டாட்டங்கள் வெடித்தன. ஜே.என்.யு. தேர்தலில் மூக்குடைபட்டதற்கு தில்லி பல்கலைக்கழகத் தேர்தல் வெற்றி ஆறுதலாக இருந்தது. எனினும், ஏ.பி.வி.பி.யை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற மாணவர் சங்கங்கள் தில்லி பல்கலைக்கழகத் தேர்தலில் ஏராளமான முறைகேடுகளைச் செய்து தான் ஏ.பி.வி.பி. வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த ஆறுதல் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காங்கிரசு மாணவர் அமைப்பின் சார்பில் ஏ.பி.வி.பி. தலைவர் அங்கித்தின் இளங்கலைப் பட்டம் போலியானது என்கிற புகார் எழுப்பப்பட்டது. தில்லியைப் பூர்வீகமாகக் கொண்ட ஏ.பி.வி.பி.யின் தலைவர் அங்கித் பைசோயா, தமிழகத்தின் வேலூரில் அமைந்துள்ள “திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்” இளங்கலை படித்ததாக ஒரு சான்றிதழை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் முதுகலை படிப்பிற்காக தில்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராடு சர்டிபிகேட்.

இந்நிலையில் அங்கித் பைசோயாவின் இளங்கலை சான்றிதழின் நகலை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அதன் உண்மைத் தன்மை குறித்து தெரிவிக்குமாறு கோரியது காங்கிரசின் என்.எஸ்.யு.ஐ. இதற்குப் பதிலளித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர், சம்பந்தப்பட்ட சான்றிதழ் போலியானது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அங்கித் போலி சான்றிதழ் வழங்கி பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருப்பது அம்பலமாகி ஒரு சில ஊடகங்களில் செய்தியாகவும் வெளியானது. இதற்கு பதிலளித்த அங்கித், இது தனக்கு எதிராக காங்கிரசால் செய்யப்படும் சதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விவகாரத்தில் எந்த சதிக்கும் இடமிருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அங்கித்தின் சான்றிதழைப் பார்த்த மாத்திரத்திலேயே அது போலியானது என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட சொல்லி விடுவான். சான்றிதழின் தலைப்பில் பல்கலைக்கழகத்தின் பெயரே எழுத்துப்பிழையுடன் “திரீவள்ளீவர் பலகலகைகழகம்” என அச்சாகியுள்ளது. மேலும், தில்லியைச் சேர்ந்தவரான அங்கித், அங்கிருக்கும் கல்லூரிகளையெல்லாம் விட்டுவிட்டு தமிழகத்திலேயே பரவலாக அறியப்படாத திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படிக்க வேலூர் வந்திருக்கிறார் என்பது நம்ப முடியாததாக உள்ளது.

அங்கித் போலி சான்றிதழ் வழங்கியிருப்பது எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி அம்பலமாகிவிட்டது. எனவே, அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்; அதோடு அவரது மாணவர் சங்கத் தேர்தல் வெற்றியும் செல்லாததாகி விடும். முறைப்படி அவருக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் பிடித்த காங்கிரசின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவரே தலைவராக பதவியேற்க வேண்டும். விதிமுறைப்படி எனப் பார்த்தால் இப்படித் தான் நடக்க வேண்டும்.

ஆனால், அங்கித் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றோ நியாயமான விசாரணை நடக்கும் என்றோ போலி சான்றிதழை சமர்ப்பித்ததற்காக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றோ நாம் எதிர்பார்க்க முடியாது. மத்திய கேபினெட் அமைச்சர்களில் ஒருவரான ஸ்மிருதி இரானி யேல் பல்கலைக்கழகத்தில் ’வாங்கியதாக’ சொல்லப்படும் பட்டமும், ”அனைத்து அரசியல்” வரலாற்றையும் ஒரே மூச்சில் படித்து கரைத்துக் குடித்து குஜராத் பல்கலைக்கழகத்தில் மோடி ‘வாங்கியதாக’ சொல்லப்படும் பட்டமும் முன்னுதாரணங்களாக உள்ள போது அங்கித் சமர்ப்பித்துள்ள போலி சான்றிதழ் பெரிய விசயமே அல்ல.

வெளிநாடுகளில் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் போலி கல்விச் சான்றிதழ் வழங்கியது அம்பலமானால் நாடெங்கும் அரசியல் ரீதியிலான நெருக்கடி உருவாவதோடு, அவ்வாறு போலி கல்விச் சான்றிதழ் வழங்கிய தலைவர்கள் பதவி விலகும் நிலையும் உருவாகும். அங்கிருக்கும் ஊடகங்களும் இதைப் பெரியளவில் மக்களிடம் கொண்டு சேர்த்து தலைவர்களின் பதவிக்கே வேட்டு வைக்கும். ஆனால், நாம் இருப்பதோ மோடியின் இந்தியா; மோடிஃபைடு (Modified – மாற்றப்பட்ட) இந்தியா. இங்கே ஊடகங்களின் பிரதிநிதிகள் மோடியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்வதையே தங்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட வரமாக கருதும் நிலையில் ஊடகங்களிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. மக்கள் இந்தப் போலிகளைப் புரிந்து கொள்வதும், புறக்கணிப்பதுமே இருக்கும் ஒரே வாய்ப்பு – அப்படி ஒன்று நடக்கும் என்று எதிர்பார்த்தைத் தாண்டி நம்மால் செய்வதற்கு வேறெந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

– வினவு செய்திப் பிரிவு

மேலும்: DUSU President Ankiv Baisoya’s Degree Fake, TN University Confirms

3 மறுமொழிகள்

  1. முட்டா பய,thiruvalluvar universityயை அப்படியே கூகுள் தமிழ் ட்ரான்ஸ்லேட்டர்ல குடுத்து வந்த தமிழ் வார்த்தைகளை போட்டு சர்ட்டிபிகேட் தயாரிச்சிருப்பாங்க போல.

  2. அட ஞான சூன்யங்களா, சூனா மானாக்களா, அது திரீவள்ளீவர் இல்லை. அது ‘உ’தான். அந்த ‘உ’ கொம்பு வடமொழி க்ரந்த எழுத்தில் பயன்படுத்தப்படுவது. நன்றாக மாட்டிக்கொண்டான்.

Leave a Reply to P R Srinivasan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க