விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலை, மாலை, என இரண்டு வேளைகளிலும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கல்லூரி நிர்வாக, இட ஒதுக்கீட்டை மாணவர்களிடம் விலைபேசி விற்று வந்தது. விருப்பமான துறையை மாற்றி தருவதாகவும் கூறி அதற்கென்றும் தனிரேட் போட்டு வசூலித்தது. பின்னர், சொன்னபடி துறையை மாற்றித் தராமல் அவர்களை ஏமாற்றியது. இத்தகைய ஊழல் – முறைகேடுகளை அம்பலபடுத்தியிருக்கிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.  கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி மாணவர்களை அணிதிரட்டி உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.

பு.மா.இ.மு.வின் மீது வன்மத்திலிருந்த கல்லூரி நிர்வாகம், பழிவாங்கும் தருணத்திற்காக காத்திருந்தது. இந்நிலையில், கடந்த செப்-20 அன்று, சமூகத்தில் நிலவும் பண்பாடு, கலாச்சார சீரழிவு குறித்தும், ,3000 அரசு பள்ளிகள் மூடப்படுவது; உயர்கல்வி ஆணைய மசோதா; வணிகமயமாகும் கல்வி உள்ளிட்ட அபாயங்களை விளக்கி இக்கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இப்பொதுப் பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர்கள் சங்கமாக அணிதிரண்டு போராட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற விருப்பத்தோடு முன்வரும் மாணவர்களை உறுப்பினராக்கினர்.

கல்லூரி வளாகத்திற்கு வெளியே, ஓட்டுபோடும் உரிமையுள்ள கல்லூரி பயிலும் மாணவர்களிடம் சமூக யதார்த்தத்தை விளக்கிப் பேசுவதும்; ஒரு மாணவர் அமைப்பு மாணவர்களை சங்கமாக அணிதிரட்டுவதும் சட்டவிரோதம் என்று தடுத்தது கல்லூரி நிர்வாகம்.

நீட் அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம். (கோப்புப் படம்)

இந்தக் கல்வியாண்டில் தொடக்கத்தில் இதேக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று இனிப்பு வழங்கிய போது ”அனுமதி இன்றி இனிப்பு வழங்கக்கூடாது” என சட்டம் பேசிய விழுப்புரம் போலீசு, இன்றும் சட்டம் குறித்து வகுப்பெடுத்தது. இப்போது மாணவர்களிடம் விநியோகித்த பிரசுரத்தில் அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது என்று கூறி, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர்கள் மோகன், மணிகண்டன், ஆகியோரைக் கைது செய்தது.

பகல் முழுவதும் போலீசு நிலையத்திலேயே சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்திருந்த போலீசு பின்னர் இரவுக்கு மேல் நீதிபதியிடம் ஆஜர் படுத்தியது. விழுப்புரம் கிளைச்சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் மாஜிஸ்டிரேட். சட்டவிரோதக் கைதைக் கண்டித்தும், அரசியல் கைதி என்பதால் சட்டையைக் கழட்ட மாட்டோமென்று சிறை வாசலிலே முழக்கமிட்டனர் தோழர்கள். இதனையடுத்து, அவர்களை விழுப்புரம் கிளைச்சிறையில் அடைக்க முடியாதென சிறை நிர்வாகம் மறுத்துவிட தோழர்களைக் கடலூர் சிறையில் அடைத்தது போலீசு.

மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், உயர்நீதிமன்றத்தை “மயிர்” என்றும் பேசிய எச்(சை) ராஜாவிடமும், பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசிய எஸ்.வி.சேகரிடமும் தன் அதிகாரத்தையும் வீரத்தையும் காட்ட துப்பில்லாத அரசும், போலீசும் கலாச்சார சீரழிவில் சிக்கி தவிக்கும் சமூகத்தையும், மாணவர்களையும் மீட்க போராடிய பு.மா.இ.மு தோழர்களை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் அட்டகாசம் என்று ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறுகளை அனைத்து மாணவர்கள் செய்யும் தவறு போன்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இதையே சமூகத்தின் பொதுப்புத்தியாகவும் கட்டியமைக்கின்றனர். ஆனால் இங்கே மாணவர்களை நேர்வழிப்படுத்தும் பு.மா.இ.மு தோழர்களை ஏதோ சட்டவிரோத செயல் செய்யும் ரவுடிகள் போன்று கல்லூரி நிர்வாகமும், போலீசும், நீதிமன்றமும் நடத்துகிறது. ஆக மாணவர்கள் நேர்மறையாக அரசியல் படுத்தப்பட்டு எழுச்சி பெறுவதை இவர்கள் விரும்புவதில்லை. மாணவர்கள் குடி, போதை, இதர தவறுகளால் திசை திருப்பப்படுவதையே இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இவர்களது சதித்திட்டத்தை முறியடித்து மாணவர் சமுதாயத்தை புடம் போடும் வேலையில் பு.மா.இ.மு. தொடர்ந்து பயணிக்கும். கைது சிறைகளுக்கு அஞ்சாமல் போராடும்.


விழுப்புரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க