ஐரோப்பியர்களால் வாழ்வும் வளமும் பெற்ற வடமொழி | பொ.வேல்சாமி

தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?

0

நண்பர்களே….

எழுத்தாளர்
பொ. வேல்சாமி
வடமொழியாகிய சமஸ்கிருதமொழியின் சிறப்பை 13, 14 ம் நூற்றாண்டுகளில் அரேபியர்களின் வழியாக ஐரோப்பியர்கள் புரிந்துகொண்டனர் என்று வரலாறு கூறுகின்றது. 1651 இல் ஆப்ரகாம் ரோஜர் பர்த்திருஹரியின் “ஸீபாஷித த்ரிசதி” என்ற வடமொழி நூலை போர்த்துக்கீசிய மொழியிலும் டச்சு மொழியிலும் மொழிபெயர்த்தார். ஐரோப்பியர்களுக்கு அறிமுகமான முதல் வடமொழி நூல் இதுதான் என்று கூறுகின்றனர். தரங்கம்பாடியில் வசித்த ராபர்ட் டி நொபிலி (1577) தமிழ்நாட்டில் வேதங்களைத் தேடியதில் யஜீர் வேதத்தை மட்டும் கண்டுபிடித்து ஐரோப்பியாவிற்கு கொண்டு சென்றதாக அறிவித்தார். அந்நூலை வால்டேர் படித்து பிரான்ஸ் நாட்டு நூல்நிலையத்தில் சேர்த்ததாகத் தகவல் உண்டு. ஆனால் அது உண்மையான யஜீர் வேதம் அல்ல என்று பிற்காலத்தில் தெரிந்தது. கர்னல் போலியர் (COLONEL POLIER) 1798 இல் நான்கு வேதங்களையும் தேடிப் பிடித்து அவற்றை பிரிட்டிஷ் மியூசியத்தில் சேர்ப்பித்தார்.

சமஸ்கிருதமொழியை ஐரோப்பியர்கள் பலரும் ஆராய்ந்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளனர். அவற்றுள் பல இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கின்றன. அப்படி எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

1. சார்லெஸ் வில்கின்ஸ் (Charles Wilkins) 1750 -1836
2. ஸர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) 1746 -94 முதன்முதலாக தேவநாகரி எழுத்துகளில் அச்சிட்டவர் இவரே. அதனை அச்சு எழுத்துக்களாக உருவாக்கியவரும் இவரே.
3. ஹென்றி தாமஸ் கோல்புரூக் (Henry Thomas Cole brooke) 1765 – 1837 பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களில் பலரை சமஸ்கிருத பண்டிதர்களாக மாற்றியவர் இவரே.
4. ஷ்லெகல் (Friedrich Schlegel) 1772 -1829
5. பிரான்ஸ் பாப் (Franz Bopp) 1791 -1867. இவர் சமஸ்கிருத அகராதியை வெளியிட்டவர் என்ற தகவல் உண்டு.
6. பர்நாப் (Prof.Eugene Burnouf) 1801 -52. இவர் மாக்ஸ்முல்லரின் வடமொழி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. ரோஸன் (Friedrich Rosen) 1805-37. இவர் ஏட்டுச்சுவடிகளில் இருந்த ரிக் வேதத்தின் முதல் அஷ்டகத்தை சொற்களுக்கான அர்த்தங்களுடன் முதலில் பதிப்பித்தவர்.
8. பென்வே (Theodor Benfey) 1809 -1881 இவர் 1848 இல் சாம வேதத்தையும் 1866 இல் சமஸ்கிருத ஆங்கில அகராதியையும் வெளியிட்டார்.
9. மாக்ஸ்முல்லர் (Prof. Friedrich Max Muller) 1823-1900 இவர் ரிக் வேதத்தை சாயனருடைய விளக்கத்துடன் முதன்முதலில் பதிப்பித்தார். இவர் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட சமஸ்கிருத நூல்களும் பிற நூல்களும் 50 தொகுதிகளாக இணையத்தில் உள்ளன. சுமார் 16000 பக்கங்கள் உள்ள இந்த தொகுதிகளை அரை மணிநேரத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10. ராத் (Rudolph Roth) 1821-95 இவர் பேரா. போட்லிங் என்பவருடன் இணைந்து ரஷிய நாட்டின் “செயின்ட் பீட்டர்ஸ்பர்க்“ நகரத்தில் 1853 -75 க்கு இடையில் சமஸ்கிருத – ஜெர்மானிய பெரிய அகராதியை வெளியிட்டார். இன்றுவரை அந்த அகராதி வேதம் படிப்பவர்களுக்கு உறுதுணையான நூலாக நிலவி வருகிறது. 1848 -52 க்கு இடையில் யாஷ்க நிருத்தத்தை அதற்கான உரையுடனும் தாம் எழுதிய உரைவிளக்கத்துடனும் வெளியிட்டார்.

இப்படியாக ஐரோப்பியர்கள் பலரும் வடமொழிக்கு செய்துள்ள பணிகள் ஏராளமானது. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியர்களில் எவரும் இத்தகைய பணிகளில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்வந்த காலங்களில் தமிழ்நாட்டவரும் வேதங்களை அறிந்துகொள்வதற்காக அவற்றை மொழிபெயர்க்கும் பணி மிக சிலரால் தொடங்கப்பட்டது. ஜம்புநாதன் என்ற அறிஞர் நான்கு வேதங்களையும் மொழிபெயர்த்துள்ளார். இந்த தொகுதிகளை “அலைகள் வெளியீட்டகம்” மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளது. (சாம வேதம் மட்டும் இணையத்தில் இருக்கிறது.)

1939-42 காலகட்டத்தில் திருவொற்றியூரான் அடிமை எனும் த.ப.இராமசாமிப் பிள்ளை என்பவர் யஸீர் வேதம் முழுமையும் அதற்கு எழுதப்பட்ட வடமொழி உரைகள் அனைத்தையும் வடமொழி அறிஞரான காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளைக் கொண்டு மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளையும் யஸீர் வேதம் அதன் உரைகள் தொடர்பான செய்திகளையும் விரிவான முன்னுரைகளாக எழுதி பத்துபாகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த பத்துபாகங்களும் (சுமார் 5000 பக்கங்கள் உள்ளன ) படிப்பர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நூலை எவரும் விற்பனை செய்யக்கூடாது என்ற குறிப்பு நூலில் உள்ளது.

இத்தகைய மனிதர்கள் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டார்கள், தமிழ்த் தொண்டில் ஈடுபட்டார்கள் என்று பேசுவது நியாயம் ஆகும். அதைவிட்டு தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?

இந்த நூல்களை அனைத்தையும் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு உங்களுக்கு கொடுத்துள்ளேன். தயவுசெய்து நூல்களை படிக்க நேரம் இல்லாவிட்டாலும் நூலின் முன்னுரைகளை படிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

♦ கிருஷ்ண எசுர்வேதம் தைத்திரீய சங்கிதை : மகாக்கினி சயனத்தின் சேடப் பிரகரணம் சாயணபாடியக் கருத்துப் பதவுரைகளுடன் கூடியது

♦ ஸாம-வேதம் : (தமிழ் மொழி பெயர்ப்பு)

***

”அண்ணா”வின் நூல்களைப் படிக்க வேண்டுமா…

நண்பர்களே….

“அண்ணா”வின் நூல்களைப் படிக்க விருப்பமுள்ள நண்பர்கள் தரவிறக்கம் செய்துகொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்….

♦ அண்ணாவின் நூல்கள்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க