சென்னை கடற்கரையின் காலை நேரம். சுற்றித்திரிந்த ஏழைச் சிறுவர்களை இரண்டு இளைஞர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். முடிந்த கையோடு ஒருவர் தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து, ஒருவித தயக்கத்துடனே அச்சிறுவனின் கையில் திணித்து மெல்ல நகருகிறார். விஸ்காம் படிக்கும் மாணவர்கள் போலும் என நினைத்து பேச்சு கொடுத்தோம்.

“தம்பி என்ன படிக்கிறீங்க?”

“படிப்பெல்லாம் முடிச்சிட்டோம்னா. இப்போ வேலை செஞ்சிகிட்டிருக்கோம். நாங்க திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவங்க. என்னோட பேரு துரை, இவன் வெங்கட்.

கேட்டரிங் படிச்சா உடனே வேலை கிடைக்கும், நல்லா சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்தலாமுன்னு பெரிய கனவோடு சென்னை வந்தோம். SRM-ல படிப்ப முடிச்சிட்டு வேலைக்கும் சேர்ந்துட்டோம். நான் ஃபெதர்ஸ்ல வேலை செய்யிறேன், வெங்கட் டொமினோவுல பிஸ்ஸா மேக்கரா இருக்கான். ஆளுக்கு பத்தாயிரம் சம்பளம் வாங்குறோம்.”

“ பத்தாயிரந்தான் சம்பளமா?”

ஷெஃப்பா (தலைமை சமையற் கலைஞர்) ஆனா நல்ல சம்பளம் வாங்கலாம். இப்ப நான் 3rd – 3-வது லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு இதுதான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.

அதனால, எங்களோட ஒரு வருச சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்ச பணத்துல இந்த கேமராவ வாங்கியிருக்கோம். வேலைநேரம் போக ஆறு, ஏரி, குளம், பீச்சுன்னு அலைஞ்சி திரிஞ்சி ஃபோட்டோ எடுத்து கத்துகிட்டிருக்கோம். அப்படியே வெட்டிங்க் ஃபோட்டோ கிராபரா ப்ரொஃபெஷன மாத்திரலாமுன்னு இருக்கோம்.”

சென்னை நகரில் காமராவோடு படம் பிடிக்கும் பலரையும் எப்போதும் பார்க்கலாம். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மற்றும் காட்சி ஊடக கல்வியின் கவர்ச்சி காரணமாக மாணவர்கள் – இளைஞர்கள் பலரும் காமராக்களோடு அன்றாடம் வலம் வருகிறார்கள். ஐ.டி நிறுவனங்களில் கூட வார இறுதி ஆர்வமாக பலரும் இத்துறையில் கணிசமாக இருக்கிறார்கள். இந்த கேட்டரிங் படித்த இளைஞர்களோ இத்துறையில் பயிற்சி பெற்றால் கணிசமாக ஊதியம் ஈட்டலாம் என நினைக்கிறார்கள். எப்படி சமையற் துறையில் பத்தாண்டு அனுபவம் தேவைப்படுகிறதோ அதே போன்று கேமராவிலும் அதே காலப் பயிற்சி தேவைப்படுகிறது.

இன்னொரு புறம் கல்யாண வீடியோவாகவே இருந்தாலும் கூட அங்கேயும் மூத்த கலைஞர்களுக்கு சொல்லிக் கொள்ளுமளவு வருமானம் இல்லை. பொதுவில் பொருளாதார வறட்சி காரணமாக மக்கள் அதிகம் செலவு செய்வதற்கு தயாராக இல்லை. மற்றொரு புறம் கொஞ்சம் காசு உள்ள நடுத்தர வர்க்கம் பல விசாரணைகளுக்கு பிறகு பிரபலமான புகைப்பட கலைஞர்களை அமர்த்திக் கொள்கிறது. அவர்களுக்கு ஊதியம் அதிகம் என்றாலும் அந்த வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் நம்பிக்கையில் இந்த இளைஞர்கள் முயற்சி செய்கிறார்கள்.

படிக்க:
பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு
420 மோசடி சாய் இன்ஸ்டிட்யூட்டை இழுத்து மூடு !

அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகளும் சொல்ல முடியாமல், மறுப்பும் சொல்ல முடியாமல் திகைத்து நின்ற நேரத்தில், முன்னொரு நாள் நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் வந்துபோனது; “வீடியோ எடிட்டிங் தெரிஞ்சாதான் கல்யாணத்துக்கே ஃபோட்டோ எடுக்ககூப்பிடுறாய்ங்க”.

ஆக இந்த இளைஞர்கள் இனி எடிட்டிங்கும் கற்றுக் கொள்ள வேண்டும்! அவர்கள் படம் எடுக்கும் ஏழை சிறுவர்கள் இவர்களுக்கு எப்போதும் இலவசமாக கிடைக்க்கும் ‘மாடல்களாக’ பயன்படுகிறார்கள். இவர்களைப் போன்ற ஏழை மாணவர்களோ நவீன காமராக்களை வாங்கும் நுகர்பொருள் சந்தையாக பயன்படுகிறார்கள்.

இதில் யார் யாரை படம் பிடித்து முன்னேறப் போகிறார்கள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க