அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு – பயிற்சி முடித்த மாணவர்கள் கோரிக்கை

அரசின் மோசடியை அம்பலப்படுத்துகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர், ரங்கநாதன். தமிழகத்தில் நிலவும் சாதித்தீண்டாமை, கருவறைத்தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்றை சுருங்கச்சொல்கிறார், வழக்கறிஞர் பொற்கொடி. பாருங்கள், பகிருங்கள்!

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு சாதித்தீண்டாமை எதிர்ப்பில் அக்கறையுள்ள ஜனநாயக சக்திகள் பலரது தொடர் போராட்டங்களின் பலனாக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 36,000 கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற எந்தசாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்ற அரசாணை தி.மு.க.வின் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2006 இல் பிறப்பிக்கப்பட்டது.

இவ்வுத்தரவைத் தொடர்ந்து, பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை மற்றும் திருவரங்கத்தில் வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டது.

இப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த 34 மாணவர்களும்; பிற்பட்ட சாதியைச் சார்ந்த 76 மாணவர்களும்; மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த 55 மாணவர்களும்; இதர சாதியைச் சேர்ந்த 42 மாணவர்களும் என மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்ற அரசாணையை எதிர்த்து, மதுரை ஆதி சைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதை சாக்காக வைத்து பயிற்சி முடித்த மாணவர்களுக்கும் பணி நியமனம் இதுவரை மறுக்கப்பட்டு வந்ததோடு, 2007-2008 கல்வியாண்டிற்குப் பிறகு அரசின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் மாரிச்சாமி என்பவர் மதுரை அருகேயுள்ள இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் என்பதைத் தாண்டி, அரசின் போட்டித் தேர்வில் பங்கேற்று அதிலும் தனது திறமையை நிரூபித்த பின்னர்தான் இந்தப் பணியும் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், தகுதியின் பெயரில் பார்ப்பனரல்லாத பிற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றிருக்கிறார், என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில், மாரிச்சாமியுடன் ஒன்றாக பயிற்சி முடித்த 205 மாணவர்களுக்கும் உடனடியாக பணிநியமனம் வழங்க வேண்டுமென்றும் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறக்கக்கோரியும் கடந்த 02.08.18 அன்று இந்து அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

இதற்கு முன்னதாக, இதே கோரிக்கைகளுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க.வின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள். இவ்விரு சந்திப்புகளிலும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

***

அர்ச்சகர் பயிற்சி முடித்து அரசின் தகுதிச் சான்றிதழைக் கையில் வைத்திருந்தும் நேரடி நியமனம் கிடையாது. டி.என்.பி.எஸ்.சி. மூலமாக போட்டித்தேர்வில் பங்கேற்று நேர்முகத்தேர்வை எதிர்கொண்டுதான் வேலை பெறமுடியும் என்கிறார், இந்து அறநிலையத்துறை ஆணையர். இந்து அறநிலையத்துறை சார்பாக செய்தித்தாளில் வெளியிடப்படும் விளம்பரத்தைப் பார்த்தோ, எந்தக் கோயிலில் காலியிடம் இருக்கிறதோ அங்குள்ள செயல் அலுவலரை அணுகியோ வேலைவாய்ப்புக்கு தனியே விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

அரசின் மோசடியை அம்பலப்படுத்துகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர், ரங்கநாதன்.

தமிழகத்தில் நிலவும் சாதித்தீண்டாமை, கருவறைத்தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்றை சுருங்கச்சொல்கிறார், வழக்கறிஞர் பொற்கொடி.

பாருங்கள், பகிருங்கள்!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க