Tuesday, October 27, 2020
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !

வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !

வெயில், மழை, பனி எதுவானாலும் சூரியன் உதிக்கும் முன்பே பூ பறிக்க தொடங்கும் இவர்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடிந்தபாடில்லை...

-

நாகை மாவட்டம் வேதாரண்யம் காவிரியின் கடைமடைப் பகுதி. இங்கே மீன்பிடி தொழில், உப்பளம், விவசாயம், சவுக்கு மரம் வளர்ப்பு மட்டுமல்ல மல்லிகைப் பூ வளர்ப்பும் முக்கியத் தொழிலாக உள்ளது. குறிப்பாக ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் ஆகிய பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இங்கு எடுக்கும் மல்லிகைப் பூ தஞ்சாவூர், திருவாரூர், கும்பக்கோணம், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, நாகை என பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச் செல்கிறது.

எடுக்கும் பூக்களை எடுத்துச் செல்ல வண்டி வாடகை, இடைத்தரகர்களின் குறிப்பிட்ட சதவிதம் பணம் போக மிச்சப்பணம் வரும். அதிலும் குடும்ப கஷ்டம், கல்யாணம், காதுகுத்து, அவசர ஆபத்திற்கு என முன்பணம் வாங்கி இருந்தால், விற்கும் பூ –விற்கு குறைவான பணம் தான் வந்து சேரும்.

கல்யாணம், காதுகுத்து, திருவிழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொள்வதில் மல்லிகைப் பூவும் ஒன்று.

சூரியன் உதிக்கும் முன்னே விடியற்காலை எழுந்து பூக்கள் மலருவதற்குள் தினம் தினம் மல்லிகை பூக்களைப் பரிக்கத் தொடங்கும் இம்மக்களின் வாழ்க்கையோ இன்னும் விடிந்த பாடாயில்லை. கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் எந்த ஓய்வும் இல்லை.

கொளுத்தும் வெயிலால் வியர்வையில் உடல் முழுக்க நனைந்து இருக்கும். உழைக்கும் மக்களின் வியர்வை மணம் எந்த மலரின் வாசனையையும் வீழ்த்தி விடும்.

*****

வ. மலர், வயது – 50ஆயக்காரன்புலம்.

“தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருப்பேன், பள்ளிகூடத்திற்கு போகும் புள்ளைங்களுக்கு சாப்பாடு செஞ்சிவைச்சிட்டு. எம்புள்ளைங்களை போல பார்த்துக்குற ஆடுகளுக்கும் தழைகளை கொடுத்துவிட்டு பூ எடுக்க போவேன்.

எம்புள்ளைங்க படிப்பு செலவுக்கும், இந்த கவுர்மெண்ட் கொடுக்குற குடியால உடம்பு கெட்டுப்போன எம்புருசனுடைய ஆஸ்பெட்டல் செலவுக்கும் வாங்கிய கடனை பூ எடுத்து தான் அடைக்கனும்.

காலை 6 மணிக்கு எல்லாம் வீட்டு வேலை முடிச்சி டீ குடிச்சிட்டு பூ எடுக்க போனா வீட்டுக்கு 10.30 மணிக்கு தான் வர முடியும். வந்த பிறகும் சாப்பிடகூட உட்கார நேரமிருக்காது, ஆட்டுக்கு தழைய ஒடிக்கணும், விறகு எடுக்கணும், துணி துவைக்கணும் ஓய்வே இல்லாம வேலை பார்க்க வேண்டியிருக்கும்.”

வாங்கிய கடனை அடைத்த பின் நிம்மதி கிடைக்குமா என கேட்டதற்கு..

“எப்படி நிம்மதி கிடைக்கும், மழை வந்தால் வீடு முழுக்க ஒழுகுது அதை சரி செய்யனுமுன்னாலும், ஒரு நல்லது கெட்டது பாத்துக்கிறதுக்கும் கடன் வாங்கி தான் ஆகனும், எங்க வாழ்க்கை முழுவதும் கடன்லதான் ஓடுது” என கஷ்டத்தோடு சொன்னார்.

சின்னான் என்கிற முத்துலட்சுமி, வயது- 39

“எங்களுக்கு கடன் தொல்லை இல்லை என்றாலும், கஷ்டப்பட்டாதான் எதுவானாலும் கிடைக்கும். கஷ்டப்பட எதற்கு பயப்படனும், உழைக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்”.

“எங்க வீட்டுக்காரர் கோடியக்கரையில உப்பளத்தில் வேலை செய்யுரதனால அவருக்கும், 8 –வது படிக்கும் எம்பொண்ணுக்கும் சாப்பாடு செஞ்சி வச்சிட்டு தான் பூ எடுக்கப் போகனும்.

படிக்க :
♦ பூக்காயம்…
♦ மலர்களே … மலர்களே … இது என்ன கனவா – ஒரு விவசாயி பாட முடியுமா ?

நைட் தூங்கி காலையில எப்பொழுது கண் விழிக்கிறோமோ அது தான் எங்களுக்கு பொழுது விடிவதாக அர்த்தம். அது அதிகாலை 3 மணி ஆகட்டும், 4 மணி ஆகட்டும் சாப்பாடு செஞ்சி வச்சிட்டு, அவருக்கு டீ போட்டு கொடுத்துட்டு பொழுது விடிந்து சூரியன் எட்டி பார்த்து வெளிச்சம் வருவதற்கு முன் நான் டார்ச் லைட் எடுத்துகிட்டு பூ கொல்லைக்கு பொயிடுவேன். எனக்கு காலை சாப்பாடு எல்லாம் கிடையாது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தான்” என வெற்றிலை பையை எடுத்தார்.

இப்பகுதியில் பெரும்பாலும் மக்களின் உணவு, வெற்றிலை பாக்கும் ஒரு டம்ளர் டீயும்தான். கடன் இல்லை என்றாலும், மழை வந்தால் தாங்காத கீத்து வீட்டை மாற்றி நல்ல வீட்டை கட்ட வேண்டும் என்பது தான் இவரின் கனவு.

சரோஜா, வயது – 75.

“என்னால முன்ன மாதிரி சுறு சுறுப்பாக வேலை செய்ய முடியல வெயில்ல நின்னா மயக்கம் வருது. குனிஞ்சி நிமிர்ந்து பூ எடுக்க முடியுல உடம்பு இப்பிடி இருக்ககுனு அப்படியே இருந்துட முடியுமா? எந்த வயசா இருந்தாலும் என்ன? உழைச்சி உழைச்சி தேஞ்சிபோன உடம்பு.

நாம.. நம்ம தேவைக்கு கை நீட்டி பணம் வாங்கிட்டோம். நம்மை நம்பி கொடுத்தாங்க, அந்த நம்பிக்கைய காப்பாத்தனுமுள்ள. நா… இரண்டு பெண் பிள்ளைகள கட்டி கொடுத்துட்டேன். மகன் என்னை சரியாக பார்த்துக்கல, இதுக்காக நான் சோர்ந்து போகல, என் உடம்பில தெம்பு இருக்கும் வரை என்னால உழைச்சி வாழ முடியும்” .

ஸ்நேக லதா, வயது – 28.

“தப்பா எடுத்துக்காதிங்க வெயில் அதிகமாவதற்கு முன்னாடியே பூ எடுத்தால் கொஞ்சம் கஷ்டம் இருக்காது. அதுனால நீங்க சொன்னத கவனிக்க முடியல சொல்லுங்க.”

“எனக்கு 2 குழந்தைங்க மக… இரண்டாவது படிக்கிறாள், பையனுக்கு இப்பதான் 2 வயசு ஆகுது. வீட்டுக்காரர் வண்டி ஓட்டுறார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருக்கணும், எந்த கஷ்டமாக இருந்தாலும் வேற வழியில்லை. பசங்களுக்கு சாப்பாடு செஞ்சி வச்சிட்டு, 6 மணிக்கு பூ எடுக்க போகணும், 2 வயது மகனை, மகள் பள்ளிக்கூடம் கிளம்பிக்கிட்டே பார்த்துக்குவா..

அப்புறம் நான் 8.30 மணிக்கு அவசர அவசரமாக ஓடி வந்து மகளுக்கு சாப்பாடு போட்டு சாப்பிட வைத்து, தலைவாரி பள்ளி கூடத்துக்கு அனுப்பிடுவேன், மகனுக்கு பசியாற்றி தூங்க வச்சிட்டு வீட்டுல இருக்குற மத்த வேலையை செய்யணும்.
மழையோ, வெயிலோ, பனியோ நம்ம உழைச்சதான் நமக்கு சாப்பாடு.

நான் சின்ன வயசுல இருந்து உழைச்சிட்டு தான் இருக்குறேன். எங்க அப்பா தினமும் குடிச்சிட்டு அம்மாகிட்ட தினமும் சண்டை போட்டதால், எனக்கு 8 வயசா இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க. அம்மா போன பிறகு தங்கச்சி, தம்பியை பார்த்துக்க யாருமில்லை, அதனால பள்ளிக்கூடம் போவாம நிறுத்திட்டேன், சின்ன வயசில இருந்தே எல்லா வேலைக்கும் போவேன். சென்ட்ரிங் வேலையில சிமெண்ட் மூட்டை தூக்குவேன், உப்பளத்தில 80 கிலோ, மூட்டை தூக்குவேன். இந்த மாதிரி மாடா உழைச்சதினால உடம்புல பல பிரச்சனை எனக்கு வந்தது. நான் பலவீனமாக இருந்ததால முதல் குழந்தை ஊட்டச்சத்து இல்லாமல் பிழைக்கல.

படிக்க :
♦ சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !
♦ அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?

கணவர் வெளி நாட்டில் 4 வருஷம் வேலை செய்த பணத்தில் இருந்து வீடு கட்ட முயற்சி செஞ்சதல பாதிலே வீடு கட்டி முடிக்காம நிக்குது. அதற்கு கடன் வாங்கினால் தான் மழைக்காத்துல நனையாம பசங்களை வச்சிக்கிட்டு பார்த்துக முடியும். உடம்பு சரியில்லாம போன ஆஸ்பிட்டலுக்கு போக கடன் வாங்கனும், நைட் தூங்கும் போது நாளைக்கு லோன் கட்ட என்ன பண்ணலாம் என யோசிச்சிக்கிட்டே தூங்கனும், நிம்மதியா தூக்கமும் வராது, இது தான் எங்க வாழ்க்கை.”

ரவி, வயது – 34.

“நான் காலையில 5.30 மணிக்கு எழுந்து பூ கொல்லைக்கு வருவேன், 7.30 மணி வரை பூ எடுப்பேன், அதன் பிறகு காய் வியாபாரத்திற்கு சென்றுவிடுவேன். சொந்தமாக பூ கொல்லை இருந்தாலும், இதனாலே பணக்காரன் ஆயிட முடியாது. பூ எடுக்கும் வேலையை பொருத்த வரையில தூக்கத்தை இழந்தால் தான் எதாவது கிடைக்கும்.”

ஜானகி, வயது – 50 மற்றும் நாகவள்ளி, வயது – 60

ஜானகி(இடது) மற்றும் நாகவள்ளி

“விடியற்காலையிலே எழுந்து வந்து கொஞ்சம் கஷ்டம் பார்க்காம பூ எடுத்தால் பலன் கிடைக்கும். பூ எடுத்தால் மட்டும் போதாது, செடியை பாதுகாக்கனும், அதற்கும் நாம கஷ்டப்பட்டு வேலை செய்யனும், என்ன தான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும், பணம் தங்குவது இல்லை. இப்ப இருக்குற விலைவாசில என்ன தான் பண்றது.”

நாம கஷ்டப்பட்டுகிட்டே இருக்குனும் போல எங்க கஷ்டம் தீராதா? என ஏக்கத்துடன் நம்மை பார்த்தார்.

சரண்யா, வயது – 28.

“காலையில 4 மணிக்கு எழுந்திருக்கனும். கணவர் உப்பளத்துல வேலை செய்யுறாரு, காலை 6 மணிக்கு எல்லாம் அவரு போயிடுவாரு , அதனால அவருக்கு சாப்பாடு செஞ்சி அனுப்பியதும், நா பூ கொல்லைக்கு வந்துடுவேன். அதோடு 10.30 மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன். எனக்கு பெரிய அளவில் கடன் இல்லை என்றாலும், எதாவது நல்லது, கெட்டதுக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு செய்யனும் அதற்காக கடன் வாங்கனும், இதே மாதிரி தொடர்ச்சியா கடன் வாங்கிட்டுதான் இருக்கிறோம், வேற வழி இல்லை.”.

தனபால், வயது – 38.

“இந்த வேலையில சொல்றதுக்கு பெரிசா எதுவுமில்லை, காலையில சீக்கிரமாக எழுந்தால்தான் இதுல பலன் கிடைக்கும், உழைச்சாதான் பலன் கிடைக்கும், என்னதான் உழைச்சி பூ -வை எடுத்தாலும், அதுல நடுவில இருக்கும் தரகருக்கு கொஞ்சம் பணம் போயிடும், பூ கொண்டு போற வண்டிக்கு கொஞ்சம் பணம் போயிடும்.

வெயில் நேரத்துல தண்ணீ கீழே இறங்கிடும் தண்ணீ இல்லாம பூச்செடியெல்லாம் வாடிபோயிடும். 3 நாளைக்கு ஒரு தடவை தண்ணீரை விடனும், பூச்சி தாக்காம பார்த்துக்குனும், பூ எடுப்பது மட்டும் வேலை இல்லை…

பண்டிகை நாள்ல நல்ல விலை போகும் மற்ற நேரத்தில பெரியளவில பணம் பார்க்க முடியாது. கார்த்திகை மாசத்துல பனியால பூ சரியா வராது. காலங்காலம பார்த்த விவசாயம் அழிஞ்சதனால இப்ப கைகொடுக்கும் தெய்வமாக இந்த பூ தான் இருக்குது. இதை வச்சிகிட்டு தான் ஏதோ வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்.”

கொசிகா, வயது – 13 மற்றும் கோபிகா, வயது – 10

கோபிகா மற்றும் கொசிகா (வலது)

இவர்கள் இருவரும் அக்கா தங்கை தன் குடும்ப வறுமை எண்ணி பள்ளி விடுமுறை நாட்களில் தன் குடும்பத்தோடு சென்று பூ எடுப்பார்கள், பள்ளி செல்லும் நாட்களில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, தண்ணீர் பிடித்து வைப்பது, ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுவது என பொறுப்பான குழந்தைகளாக உள்ளனர்.

வ.சிவா, வயது – 14 (ஒன்பதாவது வகுப்பு)

“காலை 5.30 மணிக்கு எழுந்திருச்சி வீட்டுக்கு தண்ணீ பிடிச்சிக்கொடுப்பேன், வீடு கூட்டுவேன், அம்மாவுக்கு சமையலுக்கு உதவி செய்வது, முடிந்த அளவு வேலை செய்து விட்டு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பி விடுவேன்.

அடுத்து லீவு விட்டாங்கன்னா அம்மா பூ எடுக்க போகும் இடத்துக்கு நானும் போயி முடிஞ்ச அளவு பூ எடுத்து கொடுப்பேன், அப்பதானே கடன சீக்கரமாக கட்ட முடியும். எங்க அப்பா நிறையா குடிப்பாரு வீட்டை சரியா பார்த்துக்க மாட்டாரு எல்லாமே எங்க அம்மா தான்.

அதேபோல லீவு நாள்ல வேப்ப மரத்திலேருந்து கீழே விழுந்திருக்கும் வேப்ப பழங்களை எடுத்து வந்து தண்ணில ஊறப்போட்டு வேப்பங்கொட்டைய காய வைத்து கொடுத்தா வியாபாரி வந்து கிலோ 35 ரூபாய்க்கு வாங்கிப்பாங்க. இந்த பணத்த வச்சிக்கிட்டு வீட்டுக்கு கஷ்டத்த கொடுக்காம முடிஞ்ச அளவு நாங்களே பள்ளிகூட செலவுகளுக்கு பணத்தை சேர்த்து வைப்போம்.

எங்க ஊருல பசங்க இப்படிதான் இருப்பாங்க, எனக்கும் மத்த பசங்க மாதிரி நல்லா விளையாடுனுமுன்னு ஆசையாக இருக்கும், போன மாசம் வேதாரண்யம் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே நடந்த 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில நான்தான் முதலிடம். எனக்கு தனியா பயிற்சி எடுக்க பணம் இல்லை. பயிற்சி இருந்தா சிறந்த விளையாட்டு வீரரா என்னால வர முடியும்” என தன்னிடம் உள்ள திறமையை மிகவும் தன்னடக்கத்துடன் எடுத்து சொன்னார் இந்த மாணவன்.

தனபாக்கியம், வயது – 60.

“எங்க வாழ்க்கை முழுசும் பூ எடுக்கிறதும், விவசாய வேலையுந்தான்னு வாழ்ந்துட்டேன், இந்த வேலையை விட்டா ஏதும் தெரியாது, நான் 30 வயசா இருக்கும் போது எங்க வீட்டுக்காரர் இறந்துட்டார், 3 பசங்கள வச்சிகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டோம்.

இன்னைக்கு கொஞ்சம் முன்னேறி இருக்குகிறோம், பூ எடுக்கிறதுன்னா சும்மா இல்லை, கஷ்டப்பட்டால் பலன் கிடைக்கும், ஆனா உழைக்கனும், உழைச்சா முன்னேறலாம்.” என தள்ளாத வயதிலும், உழைப்பின் பெருமையை பகிர்ந்துக்கொண்டார்.

ரசிகா மற்றும் ரிஷிகா வயது – 9.

இந்த குழந்தைகளும் குடும்பத்தின் சுமையை பகிர்ந்துகொள்வதற்காக பூ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஓடி ஆடி விளையாட வேண்டிய இந்தக் குழந்தைகள் காலையிலேயே பூ எடுத்து பூக்களைப் போல வாடி வதங்கிப் போகிறார்கள்.

இந்தப் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை தொடங்கி பூ எடுப்பதால் வழியும் வியர்வை மணத்தில்தான் இந்த மல்லிகைப் பூ மணம் வீசுகிறது.

உடல் முழுவதும் வியர்வையால் குளித்து மழை, வெயில் பாராது வேலை பார்க்கும் இம்மக்களின் இடைவிடாத உழைப்பால் தான் மல்லிகையிப் வாசம் அப்பகுதி முழுவதும் வீசுகிறது.

தங்கள் வாழ்விலும் வாசம் வீசாதா? என பார்க்கும் இப்பகுதி மக்களின் ஏக்கப் பார்வை நம்மை ஏதோ செய்கிறது.

மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம் வட்டம்,
நாகை மாவட்டம்.
தொடர்புக்கு : 93627 04120

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க