தீராவலி !

ரகாசுரனை
கெட்டவன் என்று
எப்படி நம்பமுடிகிறது
உங்களால்?

திங்கிற சோற்றிலும்
ஜி.எஸ்.டி. மண்ணை
அள்ளிப் போடவில்லை
நரகாசுரன்.
ஒரே இரவில்
கையிலிருக்கும் காசை
செல்லாது
எனச் சொல்லி
மக்களை தவிக்கவிடவில்லை.

ஊரான் வீட்டு
ஆட்டையும் மாட்டையும்
அக்கினியில் அடித்துப்போட்ட
ஓம குண்டர்களை
உழைக்காத
ஆரிய தேவர்களை
அடித்து விரட்டியதல்லாமல்,

உன் வீட்டு
எரிவாயு உருளையில்
உன்னையே
அடித்துப் போட்டு
மானியத்தை ரத்துசெய்து
சூனியத்தில் உன்னை
எரிக்கவில்லை
நரகாசுரன்.

வெடியும், ராக்கெட்டும்
இந்துக்களின் பாரம்பரியம்
அதை எப்படி
எங்கள் கையை விட்டு
பறிக்கலாம்?
கட்டுப்பாடு விதிக்கலாம்?
எனக் கூவிக்கொண்டே,

விவசாயத்திற்கும்
சிறுதொழிலுக்கும்
‍வேட்டு வைத்து பிடுங்கி
வேதாந்தாவுக்கும்
அம்பானிக்கும்
கட்டுப்பாடில்லாமல்
வாரிக் கொடுக்கவில்லை
நரகாசுரன்.

சிவகாசி ராக்கெட்
சிலது வெடிக்காததற்கே
கடைக் காரனை
கருகும்படி திட்டிவிட்டு,

ரபேல் ராக்கெட்
ரகசியங்கள்
‘புஸ்’ ஆவது பற்றி
அலட்டிக் கொள்ளாமல்
சுழியம் சுவைத்ததில்லை
நரகாசுரன்.

தலித் சிறுமி
ராஜலட்சுமி தலையை
தனியாகத் துடிக்கவிட்டு,

ஆதிக்க சாதிவெறிக்கு
வேட்டு  வைக்காமல்
அதிரசமாய்
ரத்தம் குடிக்க
நரகாசுரனுக்கு
தெரியாது.

ஒருபக்கம்
நன்மைப் பெருக
நாட்டு மக்களுக்கு
தீபாவளி வாழ்த்து

மறுபக்கம்
நாசமாய்ப் போக
முன்னூற்று அய்ம்பது கோடிக்கு
‘டாஸ் மாக்’ இலக்கு!

சந்துக்கு சந்து
சாராயம்
வெடிக்க
இரண்டு மணிநேரம்,
குடிக்க
இருபத்தி நான்கு
மணி நேரமும்…

இவர்களை எல்லாம்
விட்டு விட்டு
கெட்டவன்
நரகாசுரன் என்று
இன்னுமா
நம்ம முடிகிறது
உங்களால்?

– துரை. சண்முகம்

*******

நவம்பர் 7 : கொண்டாடுவோம் நமது புரட்சியை !!

புரட்சி
எங்கோ தொலைவில் இருப்பதாய்
புலம்புகிறார்கள்
பலர்.

உண்மையில்
புரட்சி
உன் அருகில் இருக்கிறது.

மெல்ல மெல்ல
காயப் போடப்படும்
உன் நிலத்தின் வெடிப்புகளில்,
எந்நேரம்
குடும்பத்தோடு சாவோமோ
எனும்
சிறுதொழிலின் துடிப்புகளில்
உனக்கு
பக்கத்திலேயே
வெடிக்க காத்திருக்கிறது புரட்சி

வீட்டுக் கதவை
தண்டல் காரன் தட்டினால்
இன்றைக்கு
வேறு பதில் ஏதும் இல்லை
எனும் தன் வெறுப்பில்
பால் மறவா குழந்தைக்கு
ஒத்துக்கொள்ளாது
என
பார்த்து பார்த்து சாப்பிட்டவள்
‘என்னம்மா இது?’
என்ற பிள்ளையின் கேள்விக்கு
நெஞ்சடைத்து
விசம் தருகிறாளே!…
அதற்கு விடை என்ன?
ஒரு புரட்சியைத் தவிர!

புரட்சிக்கு
ஏங்குகிறது அங்கே கருப்பை!

நேற்று வரை
பக்கத்திலிருந்த
சாப்ட்வேர் தொழிலாளி
நியாயமின்றி
இன்று
நிர்கதியாய் விரட்டப்பட்டானே…
உன்னால்
இணைந்து கொள்ளப்படாத
அவன் கோபத்தில்
புரட்சி
உன்னருகே துடித்து நிற்கிறது.

நறுக்கப்படும்
தலித் மக்களின் தலைகள் சிதைக்கபடும்
பெண்களின் உடல்கள்
உரிமைக்காக வீதிக்கு வந்தால்
தேவடியாள் பட்டம்

ஆதிக்க அருவருப்பை
அடித்து நொறுக்குமிடத்தில்,
அதற்கு நானும் வருவேன்
எனும் துணிவில்..
உனது
செயலுக்கு எட்டிய தூரத்தில்
புரட்சி பிறக்கிறது.

தேச எல்லைகளைக் கடந்து
மதப்பிளவுகளைத் தாண்டி
சாதியச் சங்கிலிகளைக் கடந்து
மூலதனம்
சுரண்டும் வர்க்கமாய்
அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது..

பாதிக்கப்படும்
உனது பக்கத்து வர்க்கத்திடம்
தானும் கலந்திடாத
உனது தயக்கம்
உனது அறியாமை
உனது அச்சம்
விலகும் தூரத்தில்தான்
உனக்கான
புரட்சி இருக்கிறது!

எல்லோராலும்
முடியும் ஒன்றை
என்னால் முடியாது
என
நீ ஒதுங்கிச் செல்லும் வழியில்தான்
புரட்சி தவிக்கிறது.

பீறிட்டு வரும்
பெருவெள்ளத்தை
கண்களை மூடிக்கொள்வதன் மூலம்
தவிர்த்து விடலாம்
என்ற உனது நினைப்பை
புரட்சி தகர்க்கிறது.

விடையில்லாமல்
தவிக்கும்
ஒவ்வொரு விடியலும்
புரட்சியின் தருணமாய் இருக்கிறது.

நேர்மையாக
பதில் சொல்ல மனமின்றி
முகத்தை திருப்பிக்கொள்ளும்
நீ,
இங்கெல்லாம் ரசியா போல
புரட்சி எல்லாம் நடக்காது!
என
பொறுப்பை தட்டிக்கழிக்கும்
உனது
பதட்டத்திற்கு பக்கத்தில்
புரட்சி பேசத் தவிக்கிறது!

நீ
உணர இயலா சோகத்தில்
நீ
உணர மறுக்கும்
கோபத்தில்
புரட்சி தகிக்கிறது.

மார்க்சியம்
சாத்தியம்
கம்யூனிசமே வெல்லும்!

கதையல்ல வரலாறாய்
உலகுக்கு காட்டியது ரசியப் புரட்சி!

அது,
மனிதகுலத்தின் படிநிலை
அழகியல் உணர்ச்சி!

சும்மா வரவில்லை
அது,
கோடிக்கணக்கான
உழைக்கும் மக்களின்
மார்க்சிய அரசியல் மலர்ச்சி!

மனித குருதிக்கே கிடைத்த
புதிய மானிட உணர்ச்சி!

உனக்கும் வேண்டுமா?
தானாய் வராது புரட்சி
அது
உன்னையே நீ
தருவிக்கும் நிகழ்ச்சி

பார்! ரசியப் புரட்சியே சாட்சி!

-துரை. சண்முகம்

4 மறுமொழிகள்

  1. ஒரு விஷயம் விட்டுவிட்டிர்களே நரகாசுரன் ஒரு நக்சல், மக்களுக்கு சமூகத்திற்கு தீமை செய்வதில் இருவருமே ஒன்று

    • //நரகாசுரன் ஒரு நக்சல், மக்களுக்கு சமூகத்திற்கு தீமை செய்வதில் இருவருமே ஒன்று//
      கவிதையில் பட்டியலிடப்பட்ட சமூக தீமைகளை செய்தது நரகாசுரனா அல்லது வேறு யார் என்று தெளிவாய் சொல் மாட்டுமூளை மணிகண்டா . . !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க