மோடியின் ஆட்சியில் மேல்தட்டுவர்க்கத்தின் செலவழிக்கும் திறன் மட்டும்தான்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறதாம் !

ரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பொருளாதாரம் சிக்கி சின்னாபின்னமானது. தொழிற்சாலை உற்பத்தி மிக மோசமான நிலைக்குப் போனது. முதலீடுகள் குறைந்தன, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவது கடந்த 45 ஆண்டுகாலத்தில் சந்தித்திராத வீழ்ச்சியை சந்தித்தது. கைவிடப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது.

இந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, ஒரே ஒரு வழியில் மட்டும் இந்தியப் பொருளாதாரம் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அது மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம்!

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்துக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றால், அவர் இந்திய நுகர்வோருக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் செலவழிப்புக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறது குவார்ட்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை.

“கடந்த சில வருடங்களாக தனிநபர்களின் இறுதி நுகர்வு செலவழிப்பும் அரசின் இறுதி நுகர்வு செலவழிப்பும்  இந்திய பொருளாதாரத்தின் முதன்மையான வளர்ச்சி இயக்கிகளாக உள்ளன” என இந்த ஆண்டு வெளியான இந்திய தரவரிசை மற்றும் ஆய்வு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து எவரும் குறைகூறவில்லை என்றாலும்,  சுவற்றில் விழுந்த விரிசல்கள் இந்த அறிக்கையின் வாயிலாக வெளிப்படையாக தெரியத் துவங்கியுள்ளன.

விமானப் போக்குவரத்து:

இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து உலகின் வேகமாக வளர்ந்துவரும் சந்தையாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த இடத்தை பெற்றுள்ளது.  உண்மையில், 2025-ம் ஆண்டில் விமானப் போக்குவரத்தில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கும்.

என்றாலும், இதில் எச்சரிக்கைகளும் உள்ளன. கச்சா எண்ணை விலை, ரூபாயின் மதிப்பு வீழ்வது, தீவிர போட்டி ஆகியவை இந்த சந்தையில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் மூத்த தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், வான்வழியில் பறக்க திணறிக் கொண்டிருக்கிறது. சந்தை மதிப்பீட்டைப் பொறுத்தவரை முன்னணியில் இருக்கும் விமான நிறுவனமான  இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை கடந்த சில காலாண்டு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாகனங்கள்:

விமானப் போக்குவரத்தைப் போன்றே வாகன போக்குவரத்து துறையும் உள்ளது. 2021-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய மூன்றாவது பயணிகள் வாகன சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என இலண்டனைச் சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தத் துறையின் வளர்ச்சி சமதளத்தை நோக்கியே உள்ளது. 2016-ம் ஆண்டின் பணமதிப்பு நீக்கமும், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. அமலாக்கமும் 2017 ஏப்ரலிலிருந்து கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கான மாசு உமிழ்வு கட்டுப்பாடு நெறிமுறைகளும் இந்தத் துறையை பாதித்தன.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசூகி, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் தங்களுடைய நிகர இலாபம் குறைந்துள்ளதாக அறிவித்தது. அதே காலாண்டில் இந்தத் துறையின் மற்றொரு முக்கிய நிறுவனமான டாடா மோட்டார்சும் நிகர இலாபம் குறைந்துள்ளதை அறிவித்தது.  கொள்கை நெறிமுறைகளில் மாற்றம், அதிகப்படியான எரிபொருள் விலை, ஓலா – உபேர் போன்றவற்றின் வருகை இந்தத் துறையை இழப்பை நோக்கித் தள்ளியது.

இரண்டு இலக்கங்களில் வளர்ச்சி பெற்றிருந்த இந்தத் துறை இப்போது 10%-க்கு கீழே குறையும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஸ்மார்ட்போன்களின் விற்பனை:

இந்தியர்கள் மின்னணு சாதனங்களை வாங்கிக் குவிப்பதில் அதீத ஆர்வமுடையவர்கள். உலகில் விற்பனையாகும் பத்தில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குபவர் இந்தியராக உள்ளார். கடந்த ஆண்டு இந்தத் துறையின் வளர்ச்சி 14.5%-ஆக இருந்தது. 142.3 அலகுகள் அனுப்பப்பட்டன.

ஆனால், இதனால் இந்திய நிறுவனங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சீன போன் தயாரிப்பாளர்களான ஷிமோகி, விவோ, அப்போ, ஹூவாய் போன்ற நிறுவனங்கள்தான் பெரும் பயனைப் பெற்றன. சிறப்பான விலை, சலுகைகள் மூலம் சீன நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன.

தொலைத் தொடர்பு சேவை வழங்கும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., உள்பட பல தனியார் நிறுவனங்களும் இந்தியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவால் பாதிக்கப்பட்டன.  2018-ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பணியாளர்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.  கடுமையான போட்டி, குறைந்த விலை போன்றவை இந்தத் துறையை வீழ்த்தின.

இணைய வணிகம்:

இந்தியர்கள் மளிகை பொருட்களிலிருந்து நகைகள் வரை ஆன்லைனில் பெற விரும்புகிறார்கள்.  விளைவாக, மொத்த விற்பனை மதிப்பு (சந்தையில் விற்பனையாகும் பொருட்களின் மொத்த மதிப்பு) அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இந்திய இணைய வணிகத்தின் விற்பனை தற்போதைய மதிப்பு 38.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.  2020 மார்சுக்குள் இந்த மதிப்பு 125 பில்லியன் டாலரிலிருந்து 150 பில்லியன் டாலருக்குள் உயரும் என கணிப்பு ஒன்று சொல்கிறது. ஆனால், கொள்கை நெறிமுறைகளில் மாற்றம் ஏற்படும்போது இதுவும் கூட மாறக்கூடும்.

புதிய இணைய வணிக நெறிமுறை சில்லறை வணிகர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது பெரிய அடியாக இருக்கும்.  புதிய நேரடி அந்நிய முதலீட்டு நெறிகளின் விளைவாக, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டின் நட்டம் 35 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இது நிலையானது தானா?

தொழிற்சாலை மற்றும் முதலீடுகளின் வளர்ச்சி என்கிற துணையுடன் நுகர்வாலும் அரசின் செலவழிப்பாலும் நிகழும் பொருளாதார வளர்ச்சியே ஆரோக்கியமானது. “நுகர்வால் நிகழும் வளர்ச்சி, எதிர்காலத்தில் தேக்கத்தை சந்திக்கக்கூடும். ஏனெனில், திறனை உருவாக்குவதற்கான வரம்புகளும் கடன் சுமைகளால் குறிப்பாக குடும்பங்களில் உள்ள கடன் சுமைகளால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளாலும் அது தேக்கத்தை சந்திக்கக்கூடும்”என 2017-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

மிகப்பெரிய நுகர்வு சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால், அது முழுமையான வளர்ச்சியுடன் கூடியதாக இல்லாதபோது பிரச்சினைக்குரியதாகிறது என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

படிக்க:
சோறு, சப்பாத்தி, புரோட்டா, பூரி, தால் எல்லாத்துக்கும் ஒரே கரண்டிதான் | கும்ஹியா தொழிலாளிகள் படக்கட்டுரை
முறைகேடுகளே சகஜமாகிப் போன குரூப் டி தேர்வு | செங்கொடி

உண்மையில் 2030-ம் ஆண்டு இந்தியாவின் நுகர்வு நான்கு மடங்காக அதிகரித்திருக்கும் என உலக  பொருளாதார மன்றத்தின் அறிக்கை கூறியது. “அப்போது அது இந்த உலகின் இளம் நாடாக இருக்கும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணைய இணைப்பு பெற்ற வீடுகளைக் கொண்ட நாடாகவும் அது இருக்கும். புதிய இந்தியாவின் நுகர்வோர் பணக்காரர்களாக இருப்பார்கள்; பணத்தை செலவழிக்க விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய முன்னோடிகளைப் போல் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட தேர்வை விரும்புகிறவர்களாக அவர்கள் இருப்பார்கள்” என அந்த அறிக்கை கூறியது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, மிகப் பெரும் நுகர்வு சந்தை என்பது உண்மைதான்.  ஆனால், மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் பறிபோன வேலைவாய்ப்புகள், பணிக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள், நலிவடைந்த தொழில்துறை, அழிந்துபோன சிறுதொழில்துறை, அதிகரித்து வரும் தனியார்மயம் இவை யாவும் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியவை. இவற்றை சரிசெய்யாமல், நுகர்வு பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்குமானால், அது மிகப் பெரும் சமூக சீர்கேட்டைத்தான் உருவாக்கும். அதுகுறித்து எந்த பொருளாதார நிபுணர்களும் கவலைப்படுவதில்லை.


அனிதா
நன்றி
: scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க