நாடு முழுவதும் ரயில்வே துறையில் 62, 907 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு குரூப் டி பிரிவில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இதில் தமிழகத்தில் மட்டும் 1,765 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடந்தது. தமிழகத்தில் எவ்வளவு பேர் இத்தேர்வை எழுதினர் எனும் தகவல் தெரியவில்லை. இத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள 1600 பணியிடங்களுக்கு தமிழகம் அல்லாத பிற இடங்களில் (வட மாநிலங்களில்) தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இம் முடிவுகளைக் கண்டு தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குளறுபடிகளிலும், பங்கு பிரிப்புச் சண்டைகளிலும் தீவிரமாக உள்ளதால் இந்த தேர்வு முறைகேடுகள் அவர்களின் கவனத்தைப் பெறும் தகுதியை அடையவில்லை. ஊடகங்கள் பார்ப்பனியத்தின் வளர்ப்பு விலங்குகளாக இருப்பதால் இலேசாக தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, ஆழ்ந்த  அமைதியை கடைப்பிடிக்கின்றன.  அதேநேரம் இவைகள் தங்கள் தகுதியை உயர்த்தும் தேர்வுகள்(!) என நம்பி, ஆண்டுக் கணக்காக பல தேர்வுகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் முதிர் பட்டதாரிகளோ மூச்சுவிட நேரமின்றி அடுத்த தேர்வை துரத்த தொடங்கி விட்டார்கள்.

90 விழுக்காடு தேர்ச்சி வடமாநிலத்தவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் தமிழக பிரிவின் எழுத்துத் தேர்வு என்பது தமிழர்களின் பண்பாடு பழக்க வழக்கங்கள் புவியியல் சிறப்புத் தன்மைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் வடமாநிலத்தவர்கள் 90 விழுக்காடு தேர்ச்சியடைவது என்பது நிச்சயம் இயல்பை மீறிய ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இதை விட ஆபத்தான இன்னொன்று, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்குவது தான்.  அதாவது, போதிய கவனமின்றி தமிழக மாணவர்கள் இதில் கோட்டை விட்டுவிட்டார்கள் என போகிற போக்கில் எழுதிச் செல்கின்றனவே ஊடகங்கள். இதை என்னவென்பது? இதைவிட அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியுமா?

இந்த தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 100 தான். ஆனால் அகமதாபாத், சண்டிகர் போன்ற பகுதிகளிலிருந்து தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்களோ 105, 120, 138 என்று இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? இப்படி மொத்த மதிப்பெண்களை மீறிய மதிப்பெண்கள் சமூக வலை தளங்களில் மீம்ஸ்களாகவும், இன்னும் பல வழிகளிலும் கிண்டலும், நக்கலுமாக பறந்த பிறகு இரயில்வே அமைச்சகம் விளக்கமளிக்க முன்வந்தது.

கிரிக்கெட் வெறியர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத, இன்னும் நட்சத்திர விளையாட்டு வீரர்களால் கூட தெரிந்து கொள்ள முடியாத டக்வொர்த் லூயிஸ் என்றொரு விதி கிரிக்கெட்டில் உண்டு. மழையோ வேறு ஏதாவது காரணங்களினாலோ ஆட்டம் இடையில் தடைப்பட்டால் கூட்டிக் கழித்துப் பார்த்து கடைசி ஒரு பந்தில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்று கூறும் டக்வொர்த் லூயிஸ் விதியைப் போல ரயில்வே அமைச்சகமும் நார்மலைஷேசன் என்றொரு விதி முறையை கூறுகிறது.

அதாவது வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு மொழிகளில் நடக்கும் இத்தேர்வில் கடினமானதாகவும், எளிதாகவும் இருக்கும் வினாத்தாள்களின் இடையேயான வேறுபாட்டை நீக்குவதற்காக நார்மலைஷேசன் என்ற விதி கடைப்பிடிக்கப்படுவதாகவும், இந்த விதியின் அடிப்படையில் 100க்கு 126 மதிப்பெண்கள் வரை பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறது அந்த ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கை.

அது என்ன நார்மலைஷேசன் விதி என்று கேட்டால் தேர்வு எழுதிய ஒருவருக்கும் அந்த விதி குறித்தோ, அதில் எப்படி முடிவை வந்தடைகிறார்கள் என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. ரயில்வே அமைச்சகத்தின் அந்த அறிக்கையில் மேலும் இந்த விதியின்படி 126 மதிப்பெண்கள் வரை தான் பெற முடியும் அதற்கு மேல் பெறப்பட்டதாக உலவும் படங்கள் எல்லாம் போட்டோஷாப்பில் திருத்தப்பட்ட  படங்கள். எனவே முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி கடந்த 19 ஆண்டுகளாக இந்த முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் திமிராக கொக்கரிக்கிறது அந்த அறிக்கை.

இந்த அறிக்கையைப் பார்த்ததும், அவர்கள் ஏதோ ஒரு விதிமுறை வைத்திருக்கிறார்கள். அது நமக்கு சரியாக புரியவில்லை. வேறென்ன செய்வது, அடுத்த நல்வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது தான் என்பதாக விரக்தியுடன் கடந்து செல்கிறார்கள் மாணவர்கள். இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளில் இப்படி முறைகேடுகள் நடந்திருக்கின்றன. வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகள் சொகுசாக தூங்கிக் கொண்டிருக்க முறைகேடுகள் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

2014 நடந்த குரூப் டி தேர்வில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போது போது அரசு அதிகாரிகளின் கையொப்பம் (அட்டஸ்டேசன்) பெற தேவையில்லை என தமிழில் வெளியான செய்திகளில் கூறப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் வெளியான செய்திகளில் இணைக்க வேண்டும் என கூறி இருந்தனர். இதனால், கையொப்பம் இன்றி விண்ணப்பித்த லட்சக்கணக்கான தமிழக விண்ணப்பங்கள் குப்பைக் கூடைக்குச் சென்றன.

இதே 2014 நவம்பரில் நடைபெற்ற தேர்வில் ஹால் டிக்கட்டுகளில் தேர்வர்களின் புகைப்படங்கள் இடம்பெறாமல் வெறும் பெயர் பதிவு எண் போன்ற விபரங்கள் மட்டும் இடம்பெற்று இருந்தது. இது விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி பன்னீர் செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை ஆனால் உயர் அதிகாரிகள் மட்டம் வரை தமிழே தெரியாதவர்கள் பணிகளில் அமர்ந்து விட்டார்கள்.

2016-ல் தபால் துறையின் தமிழ் தேர்வில் தமிழே தெரியாத ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த அதிசயம் நடந்தது.

இது போன்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இப்போது கூறப்படும் நார்மலைஷேசன் என்பது விதிமுறைகளோடு தொடர்புடையது அல்ல, அது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது. பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வுகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பல மாநிலங்கள் அரசாணை நிறைவேற்றியுள்ளன. தமிழகத்தில் அப்படியான அரசாணை எதுவும் போடப்படவில்லை, போடவும் மாட்டார்கள். ஏன் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமோ.

அதேநேரம் இதை தமிழ் தேசியப் பிரச்சனையாக சுருக்கிக் கொள்ளவும் முடியாது. எவ்வாறென்றால் இது போன்ற முறைகேடுகளில் பலனடைந்தவர்கள் யார் என்பது குறித்து கணக்கெடுப்புகளோ, புள்ளிவிவரங்களோ அரசிடம் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் பார்ப்பனர்களும் ஆதிக்க ஜாதியினருமே அரசு வேலைகளில் அதிகம் அமர்கிறார்கள் என்பது கண்கூடு. இப்போது கூட கல்வி வேலை வாய்ப்புகளில் 10 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு சட்டமாக்கப் பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று கூறிக் கொண்டு ஆண்டு வருமானம் 8 லட்சம் என்றும் வரையறுத்துள்ளார்கள். இது யாருக்கானது என்பதில் மறைபொருள் எதுவும் மிச்சமிருக்கிறதா? எனவே, இதை தமிழ்நாடு எதிர் வடமாநிலங்கள் என்று பார்ப்பதை விட, அரசு தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? என்பதைச் சிந்திப்பதே சரியானது.

காவிரி ஆற்றின் தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க விடக் கூடாது என்பதற்கு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுப்பது எப்படி காரணமாக இருக்கிறதோ, ஒக்ஹி புயலில் கடற்படை மீனவர்களைக் காப்பாற்றாமல் விட்டதற்கு சாஹர்மாலா எப்படி காரணமாக இருக்கிறதோ, 600க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், இன்றுவரை மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தங்கள் படகுகளையும் அதன் மூலம் வாழ்வாதாரங்களை இழப்பதற்கும் அதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு அனுமதி எப்படி காரணமாய் இருக்கிறதோ அதேபோல தொடர்ச்சியாக அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கும் குறிப்பான காரணம் ஒன்று கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.

தமிழ் பார்ப்பனர்பொதுவாக பார்ப்பனிய எதிர்ப்பு மரபு என்பது தமிழகத்தின் அடையாளமாக, மதிப்பாக, அங்கீகாரமாக இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்கு இதுவே முதன்மையான காரணம். இது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது. அதேநேரம் கார்ப்பரேட்டுகளின் நலனும் இதில் அடங்கியிருக்கிறது. உலகின் அதிகமான பணியாளர்களை பெற்றிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானது இந்திய இரயில்வே துறை. இந்த துறை முற்றுமுழுதாக தனியார் மயப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு நிலை வரும் போது அந்தத்துறையில் அதிக அளவில் தமிழர்கள் இருப்பது ஆபத்தானது என்பது கூட காரணமாக இருக்கலாம். அல்லது வேறொன்றாகவும் இருக்கலாம். ஆனால் அதை கண்டுணர்ந்து எதிர்த்து முறியடிப்பதற்கு இதை தமிழ்தேசியப் பிரச்சனையாக மாற்றுவது இடையூறாக இருக்கும் என்பது உணரப்பட வேண்டும்.

படிக்க:
மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !
பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?

ஒரு தடவையில் எடுக்கப்படும் 1,765 பணியிடங்களில் 1,600 பேர் தமிழே தெரியாத வட மாநிலத்தவர்கள் என்பது எவ்வளவு கொடுமையானதோ அதைவிட இதில் முறைகேடு ஒன்றுமில்லை. 19 ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறை தான் இது என திமிராக பதில் கூறுவது கொடூரமானது. பொறியாளர்கள் முதல் முதுநிலை வரை படித்து பட்டம் பெற்று விட்ட பிறகு, பத்தாம் வகுப்புக் கேள்விக்கு பதில் எழுதுவது தனக்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் வேலை தேடும் பட்டதாரிகளிடம் இந்தக் கொடூரத்தை புரிய வைக்க வேண்டும். அது தான் இது போன்ற முறைகேடுகளுக்கும், அதற்கு பின்புலமாக இருக்கும் பாசிசங்களுக்கும் வேட்டு வைக்கும்.

செங்கொடி

1 மறுமொழி

  1. ரயில்வே துறை என்றில்லை. தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், பொதுத்துறை வங்கிகள் ஆகிய அனைத்து மத்திய நிறுவனங்களிலும் தமிழ் பின்புலம் கொண்டவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அருகி வருகிறார்கள். இது மிகவும் விசனத்துக்குரியது. இப்போது பாஜக ஆட்சியில் இந்த ஆக்கிரமிப்பு முன்னை விட அதிகரித்துள்ளது. நம் மாநிலத்தின் கல்வி முறை இன்னொரு காரணம். அகில இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் கூட போட்டித் தேர்வுகள் தான் எல்லாம் என்று ஆகிவிட்ட பிறகு அவற்றை கணக்கில் எடுக்காத நம் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி முறை முற்றிலும் மாற்றப்பட வேண்டும். உலகமே அம்மணமாக இருக்கும் போது நாம் மட்டும் கோவணம் கட்டியதால் இழந்து கொண்டிருப்பதோடு பைத்தியக்கார பட்டமும் கிடைக்கிறது. இந்தியாவில் இருக்கும் முப்பது மாநிலங்களில் ஒன்று தமிழகம். நம் மாநிலம் தில்லியில் இருக்கும் அதிகார மையத்தில் இருந்து தொலைவில் உள்ளது. இதை புரிந்து கொள்ளாத நம்முடைய அரசியல் கட்சியினர் உள்ளுக்குள்ளேயே குழாயடி சண்டை நடத்திக்கொண்டு மாநிலத்தின் நலனை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க