ஜா புயல் 15.11.2018 நள்ளிரவில் ஆரம்பித்து இன்று 16.11.2018 அதிகாலை வரை நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. முதலில் புயலின் கண்பகுதி கரையைக் கடந்திருந்தாலும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் நான்கைந்து மணி நேரம் வரையிலும் கரையைக் கடந்திருக்கின்றன. புயல் கரையை நெருங்கும் தருவாயிலேயே நாகப்பட்டினம் முதல் ராமேஸ்வரம் வரையிலான பெரும்பகுதிகளில் கன மழை பொழியத் தொடங்கியது.

வர்தா புயலுக்கு இணையான வேகத்தில் கஜா புயல் வீசியிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். நாகப்பட்டினம், வேதாரண்யம், அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை என கடற்கரையோரப் பகுதிகளில் மட்டுமல்ல, தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் முழுவதுமே புயல் தனது சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குடிசை வீடுகள் அழிப்பு, ஓட்டு வீடுகள் பலத்த சேதம், தென்னை – வாழைத்தோப்புக்கள் சரிவு, மல்லிகை, புகையிலைச் செடிகள் அழிவு என அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கும் செய்திகள் அச்சமூட்டுகின்றன.

சுவர் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் இதுவரை சுமார் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் தொடர்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

நிவாரணம் மற்றும் உதவிப் பணிகளுக்கு, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் மாவட்ட அளவில் 1077 என்ற உதவி எண்ணை அவசர உதவிக்காக துவங்கியுள்ளது. அதே போல அதனது 1070 உதவி எண்ணும் பயன்பாட்டில் உள்ளது.

அவசர தொடர்புக்கான மாவட்ட அளவிலான எண்கள்:
நாகப்பட்டினம் – 9443500728, 9843810579, 9003322566
கடலூர் – 04142-220700
திருவாரூர்- 04366-226623
புதுக்கோட்டை – 04322-222207
தஞ்சாவூர் – 04362-230121
ராமநாதபுரம் – 04567-230060

எந்த அரசாங்கமாக இருந்தாலும் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவிலிருந்து மக்களை பாதுகாப்பதும், நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவதும் கடினம்தான். ஆனால் அ.தி.மு.க அரசோ, மத்தியில் இருக்கும் மோடி அரசோ, வர்தா புயல் முதல் ஒக்கி புயல் வரை அவர்கள் காட்டிய அலட்சியம் நம்மை அலைக்கழிக்கிறது.

இப்போதும் கூட நகரப்புறங்களைத் தாண்டி கிராமப்புறங்களில் புயலை எதிர்கொள்வதற்கு அரசு பெரிதாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பல கிராமங்களில் மக்களே முடிந்த அளவு தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவிலிருந்து மீண்டு வருவது மக்களுக்கு பெரும் போராட்டமாகவே இருக்கும்.

கஜா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்தும், மீட்புப் பணிகள் மற்றும் புயல் நிவாரணப் பணிகள் குறித்தும் செய்திகளை நேரலையாக தருகிறோம். புயல் பாதிப்பு படங்களை பகுதியில் உள்ள நண்பர்கள் வினவின் வாட்சப் எண்ணிற்கு (97100 82506) அனுப்பலாம்.
இணைந்திருங்கள்.