புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கீரமங்கலம் ஆகிய கிராமங்களில் நிவாரணப்பணிகள் நடைபெறாததையும், சேதங்களை குறைத்து மதிப்பிட்டதையும் கண்டித்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அங்கு வந்திருந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் படைகளைக் குவித்த போலீசு மக்களின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீட்டிற்குள் புகுந்து அப்பகுதி ஆண்கள் அனைவரையும் கைது செய்தது போலீசு.

கஜா புயலின் தாக்குதலில் மிகவும் சீர்குலைந்த பகுதிகளுல் ஒன்று கொத்தமங்கலம். இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பலா, தென்னை, மலர்கள், அனைத்தும் நாசமடைந்துவிட்டன. புயல் முடிந்து 2 நாள் வரையில் அரசு அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ தலைகாட்டவில்லை. அடிப்படை வசதிகளும், எவ்வித நிவாரணமும் கூட இல்லாமல் மக்கள் தவித்துள்ளனர்.

ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பார்வையிட கடந்த நவம்பர்17,2018 அன்று சென்றுள்ளனர். மேலும், அங்கு புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடுகையில் மிகக் குறைவான அலவுக்கே சேதக் கணக்கீடு எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொத்தமங்கலம் மக்கள் வட்டாட்சியர் வாகனத்தை சிறைபிடித்தனர்.

அங்கு உடனடியாக டி.எஸ்.பி. அய்யனார் தலைமையில் போலீசு குவிக்கப்பட்டது. மேலும் அங்கு முற்றுகையிட்ட மக்களை தாக்கியது போலீசு. இதன் மூலம் அப்பகுதியில் கலவரச்சூழலை உருவாக்கியது போலீசு.

மேலும் அரசு வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டுக் கொழுத்தியதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. இதையடுத்து திருச்சி டிஐஜி லலிதா லட்சுமி தலைமையில் அங்கு குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போலீசு கும்பல், கொத்தமங்கலம் மக்களின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளது. வீடுவீடாகச் சென்று கிராமத்திலிருக்கும் ஆண்கள் அனைவரையும் கைது செய்துள்ளது போலீசு. இதனை பதிவு செய்த ஜெயா நியூஸ் தொலைக்காட்சி நிருபரையும் தாக்கி அவரது புகைப்படக் கருவியை கைப்பற்றியது போலீசு.

நன்றி: புகைப்படம்: : ப.சிதம்பரம்  முகநூல்)

*****

தஞ்சை ஒரத்தநாடு, பாப்பாநாடு பகுதிகளிலும், புயல் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் எந்த ஒரு நிவாரண நடவடிக்கையும் செய்யாத அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.

நன்றி: செய்தி, புகைப்படம் – புலியூர் முருகேசன் (முகநூல்)

*****

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது பகுதிகளில், பெரிய பாதிப்பு எதுவுமில்லை என எழுதிய காரணத்தால் செய்தித் தாள்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், செம்போடை மக்கள்.

நன்றி : செய்தி, புகைப்படம் – ஏழுமலை குட்டி (முகநூல்)

*****

வேதாரண்யத்தில் பெரிய அளவில் புயல் பாதிப்பில்லை, மக்கள் இயல்பாக இருக்கிறார்கள் என்று “பொய் செய்தி” வெளியிட்ட #தினத்தந்தி (தந்திTV) நாளிதழை மக்கள் கொழுத்தும் காட்சிதான் இது. மக்களுக்கு எதிரான பொய் செய்திகளை வெளியிடும் மானங்கெட்ட ஊடகங்களை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டதையே இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது

நன்றி: அன்சாரி முஹம்மது

*****

40 ஆயிரம் மரங்கள் சாஞ்சி போச்சி எங்க ஊர்லே. ஆன, 4 ஆயிரம் மரந்தான் சாஞ்சி போச்சின்னு ஊருக்குள்ளே வரமல் கணக்கெடுத்த கலைக்டரை நேரில் வரவைக்க, புனல்வாசலில் சாலை மறியல். ஆரம்பம் இங்கிருந்தே தொடங்கட்டும்.

நன்றி : சங்கர் அஸ்வின் (முகநூலில்)

*****

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையை வைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி ஓடுகளே உண்டு. மிச்சமெல்லாம் சாக்குப் படல்தான்.

மிக மோசமான தார்மீகமற்ற செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லா அரசுகளும் செய்திருக்கின்றன. அப்போது கெடுபிடிகள் நிறைந்த நேரம். நினைத்த மாதிரி எல்லாம் அகதிகள் முகாமிற்குள் நுழைந்து விட முடியாது. இப்போதும் அப்படித்தானா என்று தெரியாது.

இந்தயிடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ரெண்டு பிரசெண்ட் என்றெல்லாம் ஆயிரம் கிண்டலடிக்கலாம். இந்த மாதிரியான தார்மீகச் செயல்களுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் ஓடி வந்து நிற்பார்கள். அப்படி அவர்கள் அநீதிகளின் போது குரல் கொடுக்கும் போதெல்லாம் எங்களை மாதிரியான பத்திரிகையாளர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அடியாழ உந்துதலோடு அக்காரியங்களில் ஈடுபடுவதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அப்படித்தான் மதுரையில் எம்.பியாக இருந்த மோகன் மண்டபம் அகதிகள் முகாமிற்கு எங்களை அழைத்துச் சென்றார். அவரது சுமோவிற்குள் என்னையும் கானுயிர் புகைப்படத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற, புகைப்படக்காரர் மதுரை செந்தில் குமரனையும் மறைத்து ஒளித்துக் கொண்டு போய் முகாமிற்குள் கொண்டு போய் விட்டார்.

45 நிமிடத்தில் திரும்பி வந்து விட வேண்டுமென ஏற்பாடு. மோகன் வெளியே காவலர்களுடன் பேச்சுக் கொடுத்து நின்று தாக்காட்டிக் கொண்டிருந்தார். ஒரு பறவையின் வேகத்தில் முகாமிற்குள் பறந்தான் செந்தில். அவனது புகைப்படக் கருவிகளை வேகமாக கழற்றி மாட்டிய லாவகம் இன்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

அதுவரை அப்படி ஒரு மோசமான மனிதக் குடியிருப்புகளை நான் பார்த்ததே இல்லை. என் சின்ன வயதில் பன்றிக் குடில்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை அதைப் போலவே இருந்தன. உண்மையிலேயே மனதில் துயரம் உருள்வதை உணர்ந்தேன். அதற்குள்தான் தாம்பத்யம் துவங்கி எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் சுதந்திரமாகப் போய் விட முடியாது. மிகச் சொற்பமான உதவித் தொகையே கிடைத்தது அப்போதும். அந்தக் கட்டுரை இந்தியாடுடேவில் வெளி வந்த பிறகு, அதை முன்னிறுத்தி ரவிக்குமார் சார் சட்டசபையில் பேசி அதன் காரணமாக, அவர் தலைமையில் என்று நினைக்கிறேன், குழுவொன்று போடப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலம்.

கொஞ்சம் தொகையை ஏற்றித் தந்தார்கள். அதை வைத்தெல்லாம் நிம்மதியாய்ப் பொங்கிச் சாப்பிட முடியாது. நம்மை நம்பி வந்தவர்களை அரைப் பட்டினியில் போடுவது முறைதானா? அங்குள்ள பெண்களை ரௌடிகள் மிரட்டுகின்றனர். மற்றவர்களை விட அவர்களுக்கு கூலி குறைவாகவே தரப்படுகிறது. அரசுத் தரப்பிலும் ஆயிரம் மிரட்டல்கள். எல்லா முகாம்களுமே பாம்புகள் குடியிருக்கும் புதர்களைச் சுற்றி அமைக்கப்பட்டவை.

இன்றைய மழையில் பார்த்த குடிசைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தனவோ, அப்படியே இருந்தன. தலைக்கு மேல் ஒரு நிம்மதியான கூரைக்காகத்தானே மனிதர்கள் உலகெங்கும் ஓடுகிறார்கள். அதை உறுதிப் படுத்துவது ஒரு அரசின் தார்மீகக் கடமையல்லவா? ஆயிரம் அரசியல் காரணங்கள் இருக்கலாம்.

அடிப்படையில் ஒரு மனிதனை எப்படி நடத்த வேண்டும். லண்டனில் ஒளிந்திருக்கும் மல்லையாவை அடைக்க நினைக்கும் சிறைச்சாலை எப்படி இருக்கிறது என லண்டன் கேட்கிறது. அவசர அவசரமாக தூசு தட்டிக் கட்டி வீடியோவைக் காட்டுகிறது இந்திய அரசு. அதைப் பார்த்தே இலண்டனில் சிரிக்கிறார்கள்.

சிறைச்சாலையையே சொர்க்க புரியாக்கிக் காட்டுகிற வல்லமை கொண்ட அரசிற்கு நம்மை நம்பி வந்த வாழ்ந்து கெட்டவர்களுக்கு தலைக்கு மேல் ஒரு நிம்மதியான கூரையை உண்டு பண்ணித்தர மனமில்லை. நேர்மையற்ற செயல்தானே இது? உள்ளூரிலேயே அகதிகளை உருவாக்கும் அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க?

அந்தப் பயணத்தில் தனுஷ்கோடி கடலடியில் ஒரு அதிகாலை நேரத்தில் நின்றிருந்தேன். சுழற்றி அடிக்கிற கடலலையையே அங்கேதான் முதல் தடவையாகப் பார்த்தேன். அந்தச் சத்தத்தை அருகில் இருந்து கேட்டேன். அந்தப் பேரோசை அந்நிய நிலத்தில் கால் வைக்கும் எல்லா அகதிகளின் நெஞ்சிலும் அறைந்து கொண்டே இருக்கும். மனிதர்களிடம் நீதியைக் கோரும் பேரோசை அது.

நன்றி: சரவணன் சந்திரன் (முகநூலில்)

*****

என் சொந்த கிராமம் சூரப்பள்ளத்தில் (பட்டுக்கோட்டை தாலுக்கா) விளை நிலங்கள் சுடுகாடு போல ஆகியிருக்கின்றன. மாத அருப்பு இருபதாயிரத்திற்கு தென்னையை நம்பி இருந்த பல சொந்தங்கள் அதிர்ச்சியில் தேங்கிப்போயிருக்கிறார்கள். கறவை மாடுகள் செத்துப்போயிருக்கின்றன. குடி நீர் இணைப்பு முற்றிலுமாக துண்டாகியிருக்கிறது. அரசு சாலைகளின் ஓரத்திலிருக்கும் வெள்ளை கோட்டு எல்லையை தாண்டி விழுந்த மரங்களை அப்புறப்படுத்தலில் மட்டுமே கவனம் கொள்கிறது. செத்த மரங்களை போக்குவரத்து இடையூறு என்ற அளவில் மட்டும் பார்க்கும் தொணியில் பணிகள் நடக்கின்றன என்று அறிகிறேன். குடி நீரையும் மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிவிட்டால் இதைவிட மிக பெரிய துரோகம் எதுவுமே இருக்கமுடியாது. இன்றைய நிலைப்படி குடி நீரையும் ஊரில் டாங்கர் வைத்திருக்கின்ற அண்ணன் ஒருவர் சொந்த செலவில் எல்லோருக்கும் கொண்டுவந்திருக்கிறார்.

விழுந்த ஒவ்வொரு தென்னை மரமும் பல குடும்பங்களின் ஒரு வேளை சோறு. போர்க்கால அடிப்படையில் ரொட்டிகளையும், குடி நீரையும், மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு கிளம்பிய பின்னர் பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சார்ந்த கிராமங்களில் இனி வாரம் ஒரு விவசாய பட்டினி தற்கொலை நடக்கும். மீளவே முடியாத பெருந்துயரத்தில் தத்தளிக்கும் எங்கள் ஊர்களைப் பற்றி, நிழலுக்கு நின்ற மரங்களை வர்தாவில் பறிகொடுத்தவர்களுக்கு புரியவே புரியாது.

நான் உங்களிடம் இங்கு வந்து துணி, உணவு, பால், மருந்துகள் கேட்கவில்லை. அதை நீந்தி கடக்க எங்களுக்கு தெரியும். தோள்கொடுக்க நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள். நான் எனக்கு ஃபேஸ்புக்கில் சமுதாய பொறுப்புள்ள நண்பர்களை வைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை கேட்கிறேன். உங்களுக்கு சாத்தியமான களங்களில் எங்கள் ஊர்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள். நீங்கள் அச்சு அல்லது காட்சி ஊடகத்தில் இருப்பவரெனில் அருள்கூர்ந்து உங்கள் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புங்கள். முதல்வரா எதிர்கட்சி தலைவரா என்று எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது பத்தாண்டு முதலீடான முறிந்து போன எங்கள் ஒவ்வொரு தென்னைக்கும் எங்களுக்கான நிவாரணம் வாங்கிக்கொடுக்க எங்களுக்காக குரல் கொடுங்கள். ஆம். ஒவ்வொரு தென்னைக்கும். செத்துப்போன மாடுகளுக்கும், சேதமான வீடுகளுக்கும் நிவாரணம் கோர எங்களுடன் நில்லுங்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது ஒரு தற்கொலையையாவது தடுத்து நிறுத்த உதவி செய்யுங்கள். நீங்களும் சேர்ந்து தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும். நயந்தாராகளுக்கு அடுத்த வருடமும் பிறந்த நாள் வரும். கொஞ்சம் கருணை காட்டுங்கள்

நன்றி: மயிலன் சின்னப்பன் (முகநூலில்)

*****

திருச்சி மேலகொண்டையம்பேட்டை வடக்குதெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30) விவசாயியான இவருக்குத்  திருமணமாகி இரண்டேகால் வயதில் தனுஷிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. திம்மராயர் சமுத்திரம் பகுதியில் இவருக்குத் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றுக் கடந்த ஜூன் மாதம் வாழை பயிரிட்டு இருந்தார்.

இதனிடையே தற்போது வீசிய கஜா புயலின் காரணமாக இவரது வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து நாசமானது. மேலும் தன்னுடைய நிலத்தைச் சென்று நேரில் பார்த்த செல்வராஜ் வாழைகளும் முழுவதும் சேதம் அடைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் ஏற்கனவே இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளநிலையில், தற்போது கூடுதல் சுமையாகக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்துடன் மனமுடைந்தார்.  தனது நண்பர்களுக்கு தொலைப்பேசியில் தற்கொலை செய்து வருவதாகத் தெரிவித்து விட்டு, பின்னர் நேற்று இரவு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே எஸ்.ஐ ஜான்சன் தலைமையிலான போலீசார் சுடலை செல்வராஜின் உடலைக் கைப்பற்றி நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல்வர் முதல்கட்ட விசாரணையில் செல்வராஜ் அந்த பகுதியில் வாட்டர் கேன் பிசினஸ் செய்ததாகவும் கூடவே அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயி பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி : விகடன்

****

அடிப்படை உரிமைகளுக்காகவும், நியாயமான உரிமைகளுக்காகவும் போராடிய மக்களின் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தியிருக்கும் எடப்பாடி கும்பலோ ஊடகங்களின் துதிபாடலில் மெய்மறந்து லயித்துக் கொண்டே அரசு விழாக்களில் கலந்து கொண்டு வலம் வருகிறது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்த அரசின் கண்டுங்காணாத போக்கால் இரண்டு நாட்களுக்குப் பின்னும் அடிப்படை வசதிகள்  கூட கிடைக்கப்பெறாமல் தவிக்கும் மக்களைத் தாக்குவதற்கு எவ்வளவு வக்கரிப்புள்ள மனம் வேண்டும் ?