தூண்டி விடும் புயல் !!

யற்கையை
யார் தடுக்க முடியும்
என்கிறார்கள்.

இயற்கையாய்
நடந்ததற்கு
யாரை குறை சொல்வது
என்கிறார்கள்?

பேரிடரும், பேரழிவும்
இயற்கை எனில்
பெருகி வரும் கண்ணீரும்
இயற்கைதான்.

அந்தக் கண்ணீரில்
சூடாகி
எழும்பி வரும் கேள்விகளும்
இயற்கைதான்.

கிளர்ந்து வரும்
கேள்விகளை மட்டும்
செயற்கை என்றும்
சிலர் தூண்டல் என்றும்
சித்தரிப்பது ஏன்?

கஜா புயலை
அரசியலாக்க கூடாதாம்!
சரி, உங்கள் அரசியலே
கஜா புயலாக இருப்பதை
இந்த நேரத்தில்
சிந்திக்காமல்
இருக்க முடியுமா?

தண்ணியில்லாமல்
டெல்டாவை அழித்து
மாற்று பயிருக்கு
தள்ளியது யார்?

கார்ப்பரேட் வலைகளை
நீந்த விட்டு,
ஆலைக் கழிவுகளை கடலில் விட்டு
கடல் ஒழுங்காற்று என சட்டமிட்டு
கடலை விட்டு எங்களை துரத்திவிட்டு,
கரையினில் படகுகள்
துடி துடிக்க,
மீனவர் கண்கள்
துரு பிடிக்க
வாழ்வாதாரத்தையே
ஆழித்தது யார்?

கஜா புயலா?
இல்லை
கார்ப்பரேட் அரசியலா?

மற்றதை எல்லாம்
அரசியலாக்க
அனுமதித்தது போல்
புயலை மட்டும்
அரசியலாக்காமல்
பொறுத்துக் கொள்ளுங்கள்
என்பது
இரக்கம் அல்ல
மக்களுக்கு
தாங்கள் வாழும்
நிலை தெரிந்துவிடும்
எனும் நடுக்கம்.

சாப்பிடுவதையும் சாமி கும்பிடுவதையும் கூட அரசியலாக்கும் மதவெறியர்களுக்கு, வாழ்வாதாரத்திற்கு கேள்வி எழுப்பினால் மட்டும் வலிக்கிறது.

சாப்பிடுவதையும்
சாமி கும்பிடுவதையும் கூட
அரசியலாக்கும்
மதவெறியர்களுக்கு,
வாழ்வாதாரத்திற்கு
கேள்வி எழுப்பினால் மட்டும்
வலிக்கிறது.

புயல்
பொதுவாகத்தான் அடிக்கிறது
ஆனால்
அது எப்போதும்
ஏழைகளை மட்டுமே
மீள முடியாமல்
ஏன் வதைக்கிறது?

இது
இயற்கையின் ஏற்பாடா
இல்லை
ஏற்றத்தாழ்வான
அரசியல் சமூக அமைப்பின்
நிலைப்பாடா?

புயல்
வயல்களையும்
மரங்களையும்
தென்னைகளையும்
கோழிப் பண்ணைகளையும்
குடிசைகளையும் மட்டும்
பெயர்க்கவில்லை,
அரசியலையும்
பெயர்த்துப் போட்டிருக்கிறது.

அரசு
எத்தகையது என
அடையாளம் காட்டியிருக்கிறது.

முன்பு
பயிருக்கு
தண்ணீர் கேட்டோம்
இன்று
உயிருக்கு
தண்ணீர் கேட்கிறோம்
இரண்டுக்குமே
லாயக்கற்றதாய்
இருக்கும் அரசை
ஏன் சுமக்க வேண்டும்
மக்கள்?

இருபத்தி நான்கு மணி நேரமும்
செயற்கை நீரூற்றும்
எந்நேரமும்
மின் இழைகளால்
மினுக்கும் மால்களும்,
எந்தப் புயலுக்கும்
வாழ்வாதாரத்தை இழந்துவிடாத
அம்பானி
எண்ணெய் வயல்களும்
அதானி
கார்ப்பரேட் தோப்புகளும்
நிரம்பி வழியும் நாட்டில்
விவசாயிகள் வாழும்
தெருவுக்கு
நாலு அடி பம்பு
வார்டுக்கு பத்து கிணறு
‘மேக்இன்’ இந்தியாவால்
முடியாதா?

அனுப்பிய
எல்லா ‘இன்சாட்டுகளும்’
பூமிக்கு அடியில் உள்ள
பொக்கிசங்களை காட்டும்
திறன் படைத்தும்,
பூமிக்கு மேலே உள்ள
எங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும்
தேவைகளுக்கு
திறன் அற்றது போலும்!

தடுத்தது யார்?
கஜாவா? வர்தாவா?
இல்லை கண்டுகொள்ளாத
அரசியல் பர்தாவா?

சந்தைப் பொருளாதாரத்தால்
முற்றிலுமாக கைவிடப்பட்ட
விவசாயிகள், மீனவர்கள்
சிறு தொழிலாளர்கள்
சொந்த முயற்சியால்
தேடிய வாழ்வை
இழந்து இப்போது
நேருக்கு நேர்
உங்களை சந்திக்கும் படி
ஆனது தான்,
எல்லா திரைகளையும்
புயல் விலக்கி
சுரண்டுபவர்கள்
அச்சு அசலாக
கண்ணுக்கு தெரிவதுதான்
இப்போது
ஆளும் வர்க்கத்திற்கு
புயலாக
இடிக்கிறது.

காப்புக்காடுகள் அழிவு
புயல் வேகம் நுழைவு,
மலைக்காடுகள் அழிவு
நிலச்சரிவு,
ஆற்றுமணல் கொள்ளை
நிலத்தடிநீர் கொலை,

மெல்ல மெல்ல
நீங்கள் பறிக்கும்
வாழ்வாதாரத்தை
கஜா
உடனே காட்டிவிட்டது.

இயற்கையின் மீது
மொத்த பழியையும்
போட்டுவிட்டு
எப்படி தப்பிக்க முடிகிறது
உங்களால்?

எங்களால் முடியாது!
தடித்த மரம் விழுந்து
கழுத்து நெறிந்த மாட்டின்
கன்றுக்கு
பொறுப்பு நாங்கள்தான்.

இனி அது
அம்மா என அலறினால்
அரவணைப்புக்கு
நாங்கள் தான்.

ஆட்டையும் மாட்டையும்
அப்படியே விட்டுவிட்டு
போக மணமில்லாமல்
வீட்டு சுவர் இடிந்து
செத்தவர்கள் நாங்கள்.

இயற்கையின் மேல்
பழிபோட்டு
எங்களால் தப்பிக்கத்
தெரியாது!

படுப்பதற்கு முன்பே
கோழிக்கு
தண்ணீர் இருக்கிறதா என
பார்த்துவிட்டு
தூங்குவது எங்கள் பழக்கம்,

ஆறு மணியானால்
வீடு வராத ஆட்டை
பிள்ளையைப் போல்
பெயர் சொல்லி
“ஏ! ராணி” என
குரல் எழுப்பி
தேடுவது எங்கள் வழக்கம்

ஏன்?
தெருநாய்
காணவில்லை என்றால் கூட
தேடிக் கூப்பிட்டு
சோறு வைத்து
அது தின்று பசியாறும் வரை
நீள்வது எங்கள் பாசம்.

கூரையில் குருவியும்
மண்சுவரில் எறும்பும்
தென்னையில் அணிலும்
வாசலில் தும்பியுமாய்
கூடி வாழ்ந்த எங்களால்
இயற்கையை
காரணம் காட்டி
இவைகளைத்
தவிக்க விட்டுப் போக
முடியாது?

இப்போது
எதைப்பற்றியும் பேசாதீர்கள்
இது நிவாரணக் காலம்
என்பவர்களே,
நன்றி!

நீங்கள் எவ்வளவு தந்தாலும்
புயல்
அரசியலாய் அடிக்கிறது.
அரசியல்
புயலாய் நீடிக்கிறது.

இயற்கைக்கு மாறாய்
எப்போதும் நம்மை
வர்க்க அழுத்த தாழ்நிலையில்
வைத்திருக்கும்
அரசியலுக்கு
முக்கியமாக
ஒரு நிவாரணம்
தேவை என்பதை
இந்த சந்தர்ப்பத்திலாவது
நீங்கள் அறிவீர்களா!

-துரை. சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க