ஜா புயல் பாதிப்பால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. சமீப ஆண்டுகளில் நடந்திராத இந்த பாதிப்பால் இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. அரசின் கணக்குப்படியே 63 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள், குடிசைகள் அழிந்து போயின.

தமிழக அரசு அறிவித்த ரூ.1000 கோடி தொகை டெல்டா மாவட்டங்களை அடைந்ததா, அடையவில்லையா என்பதை அங்கு நடக்கும் அன்றாட சாலை மறியல் போராட்டங்களில் இருந்தே அறியலாம். ஒரு வாரம் கடந்தும் குடிநீரோ,உணவோ, அடிப்படை வசதிகளோ அம்மக்களை எட்டவில்லை.

தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரணம் கேட்கும் தமிழகப் பேரிடர் எடப்பாடி

புயல் வீசி மூன்று நாட்களுக்குப் பிறகே முதலமைச்சர் எடப்பாடி குழுவினர் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டு அதையும் பாதியில் முடித்துக் கொண்டு திரும்பினர். பிறகு தில்லி சென்ற முதல்வர் சேத அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்துவிட்டு, ரூ.15,000 கோடி கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கோரினார்.

சேதங்களை பார்வையிட பாஜக அரசு ’மனமிரங்கி’ அனுப்பிய மத்தியக் குழுவினர் கடந்த வெள்ளியன்று (23.11.2018) சென்னை வந்து முதலில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினர். மத்தியக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார்?

மத்திய உள்துறை இணை செயலாளர் (நீதித்துறை) டேனியல் ரிச்சர்டு, மத்திய நிதித்துறை ஆலோசகர் (செலவினங்கள்) கவுல், மத்திய வேளாண்மைத் துறையின் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித் துறையின் முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வள ஆதாரத் துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோர் மோடி அரசு அனுப்பிய குழுவில் இடம்பெற்றார்கள். பெயர்களை வைத்துப் பார்க்கும் போது ஒருவர் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். மற்றவர்களுக்கு தமிழகத்தைப் பற்றியோ, டெல்டா மாவட்டங்களைப் பற்றியோ என்ன தெரியும்?

முதல் நாளில் புதுக்கோட்டை மாவட்டம், இரண்டாம் நாள் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை சென்று பார்த்தனர். கஜா புயல் எப்படி அதிவேகத்தில் கரையைக் கடந்ததோ அதே வேகத்தில் மத்தியக் குழுவினரும் ஒரு மாவட்டத்தில் ஓரிரண்டு இடங்களை மட்டுமே பார்த்தனர்.

புயலை விட வேகமாகப் பார்வையிடும் மத்தியக் குழு

மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டம் புலவன்காடு பகுதியில் பார்வையிட்ட போது சரோஜா என்ற பெண் மத்திய குழுவினரின் காலில் விழுந்து, தங்களுக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டு வர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி கதறி அழுததாக தந்தி முதலான ஊடகங்கள் செய்தி போடுகின்றன.

ஆனால் பல இடங்களில் மக்கள் மத்தியக் குழுவினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சாலை ஓரங்களில் சென்ற குழுவினர், கிராமங்களுக்குள் ஏன் வரவில்லை என மக்கள் ஆங்காங்கே தமது எதிர்ப்புகளை தெரிவித்திருக்கின்றனர். காரில் சென்றபடியே பார்ப்பதால் சேதம் குறித்து என்ன தெரியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கற்பகநாதர் குளம் கிராமத்தின் நிவாரண முகாமில் இருந்த மக்கள் மத்தியக் குழுவினர் தங்களைச் சந்திக்காமல் சென்றதை எதிர்த்து சாலை மறியல் செய்தனர். இன்று திங்கட்கிழமை (26.11.2018) இக்குழுவினர் நாகை மாவட்டம் செல்கின்றனர்.

மத்தியக் குழுவைச் சேர்ந்த டேனியல் ரிச்சர்ட் கூறும்போது, புயல் காரணமாக தஞ்சாவூரில் தென்னை மரங்கள் அதிக சேதமடைந்துள்ளன, மத்திய அரசிடம் அறிக்கை அளித்த பிறகு அரசு நிதி வழங்கும் என தெரிவித்திருக்கிறார்.

குழுவினரோடு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இத்தனை பேர் இருந்தும் இவர்கள் எப்படி சேத விவரங்களை கணக்கீடு செய்கிறார்கள்? திருவாரூர் மாவட்டம் கூப்பாச்சிக்கோட்டையில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்திருப்பதாக புதிய தலைமுறை செய்தி ஒன்று கூறுகிறது. ஒரு ஊரிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கை என்றால் எத்தனை ஊர்கள், கிராமங்கள், எத்தனை இலட்சம் தென்னை மரங்கள்? தென்னை மரங்களோடு தொடர்புடைய பல்வேறு தொழில்கள், முகவர்கள், வணிகர்கள், முன்பணம், கடன்கள், கூலித் தொழிலாளிகள் என்று இதன் பாதிப்பு பன்முக பரிமாணங்களோடு இருக்கிறது. ஒரு மரத்தை அகற்ற அரசு அறிவித்திருக்கும் ரூ.500 எந்த பயனுமளிக்காது என விவாயிகள் கூறுகின்றனர். 2019 துவக்கத்தில் வரும் இதுவரை இல்லாத முன்மாதிரியாக டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாது என்பதே விவசாயிகளின் சோகத்தை புரிந்து கொள்வதற்கு உதவும்.

காவிரி பிரச்சினை, அரசின் அலட்சியம் காரணமாக விவசாயிகள் பலர் தென்னை சாகுபடிக்கு மாறியிருந்தனர். அதன் மூலம் ஓரளவு நல்ல பணம் கிடைத்தது என்றாலும் இன்று அவர்கள் அத்தனை பேரும் ஒரே இரவில் ஏழைகளாக மாறிவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான திருச்செல்வம். கஜா புயலால் இவருக்குச் சொந்தமான தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை உள்ளிட்ட மரங்கள் முற்றிலும் அழிந்து போனது. இதை நம்பி பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயத்தை செய்து வந்தார். இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மரங்கள்தான் இவை.

இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமலும், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த இனி வழியில்லை என்று மனமுடைந்த திருச்செல்வம்  பூச்சி மருந்து அருந்தினார். இதையறிந்த அவரது குடும்பத்தார் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில்  மேல் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி 26-11-2018 அன்று உயிர் இழந்தார். இது இன்று வெளிவந்துள்ள செய்தி. இது போன்ற எண்ணற்ற உயிரிழப்புகள் டெல்டா முழுவது நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“90 சதவீதம் பாதிப்பை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புயலின் வேகமான தாக்குதலால் பல மரங்களின் தண்டு பகுதிகள் முறிந்துள்ளன. மேலும் இப்பகுதிகளில் மண் வளமும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. சமூகவலைத்தளங்களில் பரவும் செய்தி போல உடைந்த மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது” என்கிறார் தமிழக அரசின் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரான கார்த்திகேயன்.

இறுதியில் டெல்டாவை மீத்தேன் திட்டங்களுக்காக தாரை வார்க்கும் சதியில் அரசுகள் உள்ளதோ என்று விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சனி மாலையில் வந்த ஏழு பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் சடசடவென ஓரிரு பகுதிகளைப் பார்த்துவிட்டு இருட்டியதால் அன்றைய ‘ஆய்வை’ முடித்துக் கொண்டனர். ஒரு பகுதியில் அவர்கள் செலவிட்டது கால் மணிநேரம் கூட இல்லை.

இந்நிலையில் இந்த கனவான்கள் உள்பகுதிகளுக்கு வரமாட்டார்கள் என்று ஆங்காங்கே சாலையில் புகைப்படங்கள் வைத்து பாதிப்பை காட்டியிருக்கின்றனர். தில்லியிலிருந்து வந்தவர்கள் புகைப்படங்களை மட்டும் பார்க்கிறார்கள் என்றால் அதை தில்லியிலேயே பார்த்திருக்கலாமே?

நிவாரணம் பெற வேண்டுமென்றால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை கேட்கிறது அரசு. வீடுகளையே இழந்த மக்களிடம் இழப்பீட்டுக்கு அடையாள அட்டை கேட்கிறது இந்த ‘பொறுப்பான’ அரசு!

சேதத்தை தாமதமாக பார்வையிட வந்த நிபுணர் குழு அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது என்பது ஒரு யதார்த்தமென்றே வைப்போம். ஆனால் அனைத்து இடங்களின் பாதிப்பை அறிய இவர்களிடம் என்ன வழிமுறை உள்ளது? ஒரு கண்துடைப்பான இரக்கத்தை காட்டுவதற்கு நேரில் வந்தவர்கள், கண்துடைப்பான நிவாரணத் தொகையை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதைத் தாண்டி இந்த மத்தியக் குழுவால் என்ன பயன்?

புயல் அன்று கொன்றது. அரசு நின்று கொல்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க