லைநகர் தில்லியின் காற்று மாசுபாடு அபாயகரமான எல்லைக் கோட்டைத் தொட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) 1600 உலக நகரங்களை உள்ளடக்கி நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பெருநகரங்களிலேயே ஆக மோசமான நிலையில் தில்லியின் காற்றுச் சூழல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மக்கள் காற்று மாசினால் இறந்து போகின்றனர் என்றும் காற்று மாசுபாடு தான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி நுரையீரல் பாதுகாப்பு மையம் (Lung Care Foundation) எனும் அரசுசாரா தொண்டு நிறுவனம் தில்லியில் மருத்துவர்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றிய அவ்வமைப்பின் நிறுவனரும் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருமான அரவந்த் குமார், தில்லியின் காற்று மாசுபாட்டின் விளைவு சராசரியாக நாளொன்றுக்கு 14ல் இருந்து 20 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு ஒப்பானது எனக் குறிப்பிட்டார்.

மேலும், அதே நிகழ்வின் போது சாதாரண நுரையீரல் ஒன்றின் படத்தையும் பாதிக்கப்பட்ட நுரையீரல் ஒன்றின் படத்தையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளில் தில்லியைச் சேர்ந்தவர்களின் நுரையீரலின் நிறம் மாறி வருவதைக் குறிப்பிட்டார். பொதுவாக புகைப் பழக்கம் உள்ளவர்களின் நுரையீரல்களில் தெரியும் கருப்புத் திட்டுக்கள் புகைப்பழக்கம் இல்லாதவர்களின் நுரையீரல்களிலும் தெரிவதாக அவர் அப்போது தெரிவித்தார்.

தில்லியின் காற்று மாசுபாடு அளவு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுவாக 101ல் இருந்து 200 புள்ளிகளாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 500 புள்ளிகள் வரை உயர்வதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காற்றில் உள்ள பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 துகள்களின் அளவு ஒரு க்யூபிக் மீட்டருக்கு 999 மைக்ரோ கிராம் அளவுக்கு இந்த மாதங்களில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதன் அனுமதிக்கப்பட்ட அளவு 60-ல் இருந்து 100 வரை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வருடத்தின் பிந்தைய 3 மாதங்களில் தில்லியின் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கான காரணமாக சூழலியல் ஆர்வலர்கள் குறிப்பிடுவது அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை. அதாவது இம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் மாதத்தின் முதலிரு வாரங்களில் ஏற்கனவே அறுவடையான நெற்பயிரின் மீதங்களை மீண்டும் சாகுபடி செய்வதற்கு முன் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அவ்வாறு கொளுத்தப்படும் போது எழும் புகை காற்றின் போக்கில் தில்லியின் மேல் கவிந்து அந்நகரின் காற்று மாசுபாட்டிற்கு காரணமாகி விடுகின்றது என்கின்றனர்.

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு மையத்தின் (Environment Pollution Control Authority (EPCA)) அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி பஞ்சாபில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர்களிலும், ஹரியாணாவில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர்களிலும் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. இவ்விரு மாநிலங்களிலும், நெல் அறுவடைக்குப் பின் மொத்தம் 32 மில்லியன் டன் பயிர்க் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளை எரிப்பது தில்லியின் காற்று மாசில் சுமார் 30 சதவீத அளவுக்கு பங்களிப்பு செய்வதாக கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அதே போல் தேசிய சூழற் பொறியியல் ஆராய்ச்சி மையம் (National Environment Engineering Research Institute) வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, தில்லியின் காற்றில் கலந்துள்ள பி.எம் 2.5 துகள்கள் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இருந்தே 60 சதவீதம் வருவதாகத் தெரிவிக்கின்றது.

இந்த விவரங்களை வைத்துக் கொண்டு சூழலியல்வாதிகளும், தில்லி ஆம் ஆத்மி கட்சியினரும் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் பஞ்சாப் ஹரியாணா மாநில விவசாயிகளை வில்லன்களாக்குகின்றன. மேலும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளும் ஆணைகளும் பயிர்க்கழிவுகளை எரிக்கத் தடை விதிக்கின்றன. ஹரியாணா மற்றும் பஞ்சாப் அரசுகள் பயிர்க் கழிவுகள் எரிப்பதற்கு தடை விதித்துள்ளதோடு, மீறி எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதமும் விதிக்கின்றன. ஆனால், உண்மை என்ன?

மேலே அளிக்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்தே கூட, தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் பிரதான காரணம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நகரமயமாக்கம், அதிகரித்து வரும் கார்கள் உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்களின் அதிகரிப்பு, ஆலைக் கழிவுகள் போன்றவை காற்று மாசுபாட்டிற்கும் இன்னபிற சூழலியல் மாசுபாட்டிற்கும் பிரதானமான காரணங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு அடுத்த இடத்தில் தான் ஹரியாணா – பஞ்சாப் விவசாயிகள் பயிர்க் கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது வருகின்றது. எனினும், அந்த இரண்டாம்பட்ச காரணத்தின் கர்த்தாக்களுக்கு ஏதும் சதி நோக்கங்கள் உள்ளனவா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர் ஒருவர், தடைகளை மீறியும் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது ஏன் என்பதைக் கண்டறிய நேரடியாக இம்மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளார். அவரிடம் பேசிய ஹரியாணாவைச் சேர்ந்த கேரதி லால் (65 வயது) என்கிற விவசாயி, முன்பெல்லாம் விவசாயக் கூலிகளை பணிக்கமர்த்தி பயிர்க் கழிவுகளை அகற்றியதாகவும், பின்னர் கூலி விவசாயிகளை அமர்த்திக் கொள்வது செலவு பிடிக்கக் கூடியதான போது இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டது என்கிறார். இயந்திரங்கள் அறுவடையான பயிர்களின் மேற்பகுதியை மட்டும் வெட்டி நீக்கக் கூடியதாகவும், அதன் அடிப்புறத்தைப் பிடுங்கி எடுக்கும் தன்மையில் இல்லாமலும் இருக்கின்றன. பயிர்க் கழிவுகளை வேரோடு பிடுங்கி அகற்றும் இயந்திரங்களின் விலையோ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை கூடியதாக இருக்கின்றது.

எனவே இருக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பீகார் – உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயக் கூலிகளாக பஞ்சாப் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களின் சம்பளங்களும் உயர்ந்து விட்டன. விவசாயக் கூலியாகச் செல்வதை விட நகர்ப்புறங்களில் கூலி வேலைகளில் ஈடுபடுவதால் அதிக சம்பளம் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலி வேலைகளைத் தவிர்க்கின்றனர்.

ஆக, வேறு வழியின்றி இருக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தியே பயிர்க் கழிவுகளை வேர்ப் பகுதிக்கு சற்று மேலாக வெட்டி நீக்குகின்றனர். இயந்திரங்களால் அகற்ற முடியாத பயிர்க் கழிவுகளின் அடிப் பகுதி மற்றும் வேர்ப் பகுதிகளை எரியூட்டுகின்றனர். ஆக விவசாயிகளைப் பொருத்த வரை பயிர்க் கழிவுகளை எரியூட்டி தில்லி வாழ் மேன்மக்களைக் கொன்றொழிக்க வேண்டும் என்கிற சதித் திட்டம் ஏதுமில்லை. நிலத்தை சாகுபடிக்குத் தயாரிப்பதற்கான செலவை ஈடுகட்டும் அளவுக்கு விவசாயம் இலாபகரமாக இல்லாததே முதன்மைக் காரணம்.

இதில் , ஹரியானா – பஞ்சாபில் இருந்து கிளம்பும் புகை விவசாயத்தை அழிவுக்குத் தள்ளும் பொருளாதார முடிவுகளை எடுக்கும் கோமான்கள் வீற்றிருக்கும் தில்லியைச் சூழ்வது ஒரு முரண் நகை. அல்லது கவித்துவ நீதி என்றும் சொல்லலாம்.

வினவு செய்திப் பிரிவு எனவே புகைமூட்டத்தில் இருந்து தில்லியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் விவசாயத்தை இலாபகரமான தொழிலாக உயர்த்துவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.

செய்தி ஆதாரம்:
‘Pollution in Delhi akin to smoking 15-20 cigarettes a day’
We didn’t start the fire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க