சாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா புற்றுநோய் வருவதற்கான காரணத்தை ‘ஆராய்ந்து’ சொல்லியிருக்கிறார். அதாவது, முற்பிறவியில் செய்த பாவங்களால்தான் கேன்சர் வருகிறது என்கிறார் இவர்.  இந்துத்துவ புராண புரட்டுக்களை அறிவியலாகவும், தர்க்கரீதியில் நிரூபிக்க முடியாத ஒன்றைக் காரணமாகவும் சொல்வது இந்துத்துவ கும்பலுக்கு புதிதல்ல. ஆனாலும், ஒரு மாநில அரசின் சுகாதாரத் துறைக்கு பொறுப்பான ஒரு அமைச்சர் அறிவியலுக்கு புறம்பான கட்டுக்கதைகளை மேடைகளில் முழங்குவதை மேற்கத்திய ஊடகங்கள் காறித் துப்புகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு வரை காங்கிரசில் இருந்துவிட்டு பாஜகவுக்குத் தாவிய சர்மா, ”பெற்றோர் செய்த பாவங்களுக்காகவும் பிள்ளைகளை கேன்சர் தாக்கும் . இதுதான் தெய்வீக நீதி” என்று சொல்கிறார்.

புற்று நோய்க்குக் காரணமாக, அதிகப்படியான வேதியியல் ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் சேர்க்கப்படுவதையும், மரபுவழியாக புற்றுநோய் வருவதையும் சுட்டிக் காட்டுகின்றனர் அறிவியலாளர்கள். ஆனால் பாஜக அமைச்சரோ, புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய் தாக்கி அவதியுறும் நோயாளிகளையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்.

ஹிமாந்த பிஸ்வா சர்மா

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சர்மா, “நாம் பாவம் செய்யும்போது கடவுள் நமக்கு தண்டனை தருகிறார். சில சமயம் இளைஞர் ஒருவர் கேன்சரால் பாதிக்கப்படுவதையோ விபத்தில் அடிபடுவதையோ பார்க்கிறோம்.  நீங்கள் அவர்களுடைய பின்னணியை விசாரித்தீர்கள் என்றால் அதில் உள்ள ‘தெய்வீக நீதி’ உங்களுக்குப் புரியும். ஒன்றுமே செய்ய முடியாது. தெய்வீக நீதியை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

சர்மாவின் கூற்றுப்படி பார்த்தால் சுகாதாரத் துறையோ அதற்கொரு அமைச்சரோ தேவையில்லை. பாவம் செய்தவர்களுக்கு நோய் வரும்; மருந்து, மாத்திரை தேவையில்லை. நோயை நோயாளி அனுபவிக்க வேண்டும்.

ஆனால், நடைமுறை யதார்த்தம் வேறாக அல்லவா இருக்கிறது? இந்த எளிய உண்மையைக்கூட புரிந்துகொள்ள முடியாத கூமுட்டைகளாகத்தான் சங்கிகள் இருக்கிறார்கள்.

அமைச்சர் அதோடு நிற்கவில்லை, இளைஞர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை என்றபோதும் அவர்களுடைய முற்பிறவியில் அல்லது அவருடைய தாய்-தந்தை செய்த பாவங்களுக்கு இவர்கள் பலனை அனுபவித்தாக வேண்டும் என்கிறார்.

படிக்க:
♦ சங்கி நாராயணனை மங்கி-ஆக்கிய தோழர் மதிமாறன்
♦ ரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

அமைச்சர் சர்மாவின் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர் ஸ்மித்தா சர்மா தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் சர்மாவின் பேச்சு வெட்கக் கேடானது என்கிறார். கேன்சருக்கு தங்களுடைய உறவுகளை பலி கொடுத்த ஏராளமான குடும்பங்கள் சொல்லமுடியாத துயரை அனுபவிப்பதாகவும் எதிரிகளுக்குக்கூட இந்த நிலைமை வரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சுப்ரியா, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியாக இல்லாமல், பொறுப்பற்று நடந்துகொள்வதாக சர்மாவை சாடுகிறார்.  ‘கேன்சர் என்பது நோயாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது. உங்களுடைய இந்த பாவத்துக்கு எப்படி பரிகாரம் தேடப்போகிறீர்கள்?’ என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களிலும் எதிர்க்கட்சிகளிடம் வந்த எதிர்வினையை அடுத்து, நான் அப்படி சொல்லவில்லை என்கிறார் சர்மா.  நேர்மையுடன் வேலை பார்க்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுரை சொன்னேன்; அதைப்போய் தவறாக பேசலாமா என்கிறார் அமைச்சர்.  வழக்கமான சங்கிகள் பேசிவிட்டு, பிறகு பேசவேயில்லை என்கிற பிதற்றலைத்தான் அமைச்சர் சர்மாவும் சொல்கிறார்.

இந்தியாவில் புற்றுநோய் வளர்ந்து வரும் பிரச்சினை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பெண்களிடைய புற்றுநோய் அறிகுறிகள் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 2 ஆயிரம் பெண்கள் புற்றுநோய்க்கு உள்ளாவது கண்டறியப்படுவதாகவும் இதில் 60% பேர், நோயின் இறுதிகட்ட நிலையில் இருப்பதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.

இப்படியொரு சூழ்நிலையில்தான், முன்பு செய்த பாவங்களின் பலனாக புற்றுநோய் வருவதாக தத்துவ வியாக்கியானம் பேசுகிறார் பாஜக அமைச்சர்.

2 மறுமொழிகள்

  1. இவனெல்லாம் சுகாதார துறை அமைச்சர் ….

    நாளைக்கு காச நோய் வந்தால் கணேசனுக்கு பூ போடாதனால்தான் வந்தது என்று சொல்லுவார்கள்…. இந்திய சுகாதரத்திற்கே கேடான இவர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க